இனவாதமாக எவராவது செயற்படின் நேரடியாக என்னிடம் தெரிவியுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இனவாதமாக எவராவது செயற்படின் நேரடியாக என்னிடம் தெரிவியுங்கள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாக செயற்பட்டது கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது அரசாங்க தரப்பில் இருந்து அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இனவாதமாக செயல்பட்டால் எனக்கு நேரடியாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அறியத்தரலாம் எனவும் தெரிவித்தார். இத்தகைய இனரீதியான  ஒடுக்குமுறை சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால் அதனை முறியடிப்பதற்கு தான் 24 மணித்தியாலமும் தயாராக இருப்பதாகவும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இடம்பெற நிச்சயமாக இடம் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுடன் மிக நெருக்கமாக பழகுவதற்கு தேவையான சகல விதமான உபாயங்களையும் கையாண்டு வருகின்றது.  தமிழ், முஸ்லிம் மக்களை அவர்கள் சார்ந்த சில கட்சிகள் தமது சுயநல தேவைகளுக்காக இதுவரை காலமும் பிரித்து வைத்து தமது தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இனிவரும் காலங்களில் அதற்கு இடம்இருக்காது.

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் தற்போது  தமிழ், முஸ்லிம் மக்களுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் நான் கடந்த பல வருடங்களாக இந்த அரசாங்கத்தில் அமைச்சராக, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த தலைமைகள் எப்போதும் செயல்பட்டது கிடையாது என்பதை உறுதிபட தெரிவிக்கின்றேன்.

சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களது சுய இலாபங்களுக்காக இவ்வாறு நடந்து கொள்வது அரசாங்கத்தின் மீது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

ஆனால் இப்போது அவ்வாறான செயல்கள் சகல மட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன.எனவே எதிர்காலங்களில் சிறுபான்மை மக்கள் மீது எவராவது இனவாதமாக செயற்பட்டால் நேரடியாக எனக்கு தெரிவிக்கலாம். நான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Comments