"தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்க மாட்டார்!" | தினகரன் வாரமஞ்சரி

"தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்க மாட்டார்!"

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு முதன் முறையாக இளமையான ஒரு தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. பெண்களுக்கு 35 சதவீதம் ஒதுக்கினோம். இளைஞர் அணியை சீரமைத்தோம். அது மக்களுக்கும் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இளைஞர் அணியினூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ளோம். தேர்தல் காலங்களில் போஸ்டர் ஒட்டவும், சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவதற்காகவும் இளைஞர் அணியை நாம் உருவாக்கவில்லை. சமூக உணர்வுள்ள இளைஞர்களை உருவாக்குவதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோக்கமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்ச்சங்க ரீதியில் மலையக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. அதன்காரணமாகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அது தன் கம்பீரத்தையும் முக்கியத்துவத்தையும் என்றைக்கும் இழந்ததில்லை. இந்த நாட்டின் அரசியல் தலைவர்களான அனைவரிடமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் மிக உயர்ந்த நன்மதிப்பு தொடர்ச்சியாக இருந்துவருகிறது. இதற்கு காரணம் காங்கிரசின் முடிவுகள் அனைத்தும் கொள்கை ரீதியானதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருந்து வருவதேயாகும். அதனால் எவரிடமும் தலைநிமிர்ந்து தைரியமாக பேசக்கூடிய வல்லமை காங்கிரசிற்கு மட்டுமே உண்டு. எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரசஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மலையக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.இ.தொ.கா.வின் சேவை மலையக மக்களுக்கு என்றும் தேவை எனவே தொடர்ந்து மலையக மக்களுக்காக இ.தொ.காவின் மக்கள் பணி தொடரும். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின்போது பல வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். இதனை பாராளுமன்ற தேர்தலின் பின்னர் படிப்படியாக நிறைவேற்றுவோம். பல மடங்கு சேவைகள் செய்ய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கின்றது.

கே: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 5 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதே வெற்றி எவ்வாறு அமையும்? 

கண்டி, பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். எமது மக்கள் மீது எமக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது.கொத்மலை, அம்பகமுவ பிரதேசங்களை இரண்டாக பிரித்து அங்கு பொதுவேட்பாளருடன் மேலும் இரண்டு வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல நுவரெலியா, வலப்பனை, அங்குராங்கெத்த பகுதிகளில் பொதுவேட்பாளருடன் இரண்டு வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக நுவரெலியா மாவட்டத்தில் ஐவர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதில் பொதுவேட்பாளர் ஒருவர். எனவே மக்களுடைய எண்ணிக்கையை இரண்டு பக்கமும் கணிப்பிட்டு பார்க்கும்போது மக்கள் சரியான முறையில் வாக்களிப்பார்களாயின் ஐந்து பேரும் வெற்றி பெற முடியும். 

கே: மலையகத்தில் அதிகமான படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர். பலர் தொழில் வாய்ப்புகளை தேடி தலைநகருக்கு செல்கின்றனர். ஆகவே அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் உங்களிடம் உள்ளனவா?  

ஆம், மலையகத்தில் படித்த இளைஞர்களாக இருக்கட்டும் சுயதொழில் செய்யும் இளைஞர்களாக இருக்கட்டும் அவர்களை ஊக்குவித்தலே எமது நோக்கம். எமது இளைஞர் யுவதிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்கள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு தொழில் செய்வதற்காக கொழும்பு மற்றும் வெளிநாடுகளை நோக்கி செல்கின்றனர். நான் ஒவ்வொரு மேடையில் பேசும்போதும் நமது சொந்த ஊரில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். என்பதை வலியுறுத்துவேன். எனவே சுற்றுலா சம்பந்தமான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க இருக்கின்றேன். தகவல் தொடர்பாடல் கற்கை நிலையங்களை மலையகத்தில் உருவாக்கி பயிற்சிகளை வழங்கி அதனூடாக தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளேன். வெளிநாடுகளில் எமது இளைஞர்களில் 70 வீதமானோர் ஹோட்டல்களில்தான் வேலை செய்கின்றனர். 30 வீதமானோரே உயர்பதவிகள் வகிக்கின்றனர். ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நிலையங்களை இங்கு அமைத்து பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைத்து தொழில் வழங்கப்பட்டது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்து அதில் விவசாயம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதனை நிச்சயமாக விரைவில் நிறைவேற்றுவோம். 

கே: தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மீண்டும் மலையகத்திற்கு கிடைக்குமா? 

அதைப்பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பேசவேண்டும். மலையக மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தினூடாக சேவை செய்ய வேண்டும். யார் உண்மையாக மக்களுக்கு சேவையாற்றினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாபெரும் ஸ்தாபனம். ஐயாவும் சரி அப்பாவும் சரிஇ அமைச்சு பதவி கேட்டு போனதில்லை. பதவிதான் நம்மைத் தேடி வரும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பதவிக்காக யாரிடமும் மண்டியிட்டதில்லை. 

கே: சந்தா பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும் என செந்தில் தொண்டமான் கூறியிருந்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தோம் அது உண்மைதானா? 

இல்லை. செந்தில் தொண்டமான் சொன்ன விடயமொன்று. ஆனால் ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி வேறு. எனது மாமாவின் கனவு சந்தா இல்லாத தொழிற்சங்கம் ஒன்றை எதிர்காலத்தில் நடத்த வேண்டும் என்பதாகும். எனது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்ப்பார்ப்பு சந்தா இல்லாது ஒரு தொழிற்ச்சங்கத்தை எதிர்காலத்தில் நடத்தவேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு காலத்தில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் சந்தா கணக்குகளை வெளிப்படுத்துவார். அதேபோல அப்பாவும் நினைத்திருந்த விடயம் சந்தாவை நிறுத்தி கணக்குகளை காட்ட வேண்டும் எனபதாகும். நாங்கள் சந்தா பணத்தை கொள்ளையடிப்பதாக பலர் கூறி வருகின்றனர்.  எமது தலைமை காரியாலயம் கொழும்பிலே இருக்கின்றது. அதனை அபிவிருத்தி செய்து அதில் வரும் வருமானத்தை எமது 48 கிளைக் காரியாலயங்களின் இருக்கின்றது. செலவுகளுக்கு ஓதுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சில தோட்டங்களில் தொடர் வேலைநிறுத்தங்கள் நடக்கும் போது தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றோம். பெருந்தோட்டங்களுடன் பேசக்கூடிய சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இருக்கின்றது. கொவிட் 19 கோரோனா வைரஸ் பரவும் ஆரம்பித்தவுடன் முதலாவதாக சந்தா அறவீட்டை நிறுத்தியது இ.தொ.காவே! நாங்கள் நிறுத்திய பின்னரே ஏனையோரும் நிறுத்தினார்கள். 

கே: பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளவு உயர்வு நிச்சயமாகக் கிடைக்குமா? 

நிச்சயமாகக் கிடைக்கும்.  அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் எனக் கூறியமையினால் நாம்அன்று கையொப்பமிடவில்லை. இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்தக் கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தைப் போலத்தான் தற்போதும் செயற்பட முற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இலாபப் பங்கீட்டை வழங்கும் வகையில் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமையைக் கருதியே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடைசியாக நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. கம்பனிகளும் சாதகமான பதிலை வழங்கியுள்ளன. எவ்வாறான சலுகைகள் வேண்டும் என கம்பனிகள் தமது யோசனைகளை முன்வைத்த பின்னர் அவற்றை அரசாங்கம் செயற்படுத்தும். அதன்பின்னர் சம்பள உயர்வு கிடைத்துவிடும். எனவே, ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி. அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது. தொழிற்சங்கத்துறையில் அனுபவம் இல்லாதவர்களே வீண் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். கடந்தமுறை 500 ரூபாவாக இருந்த அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாக்கினோம். அதாவது கூட்டு ஒப்பந்த வரலாற்றில் அடிப்படைச்சம்பளம் 40 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் அதுவாகும். இனியும் சம்பள உயர்வு தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படமாட்டாது என்றே நினைக்கின்றேன். ஏனெனில் பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இலாபத்தை பகிரும் முறை பற்றி கலந்துரையாடப்பட்டு வருகின்றது. எமது மக்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். 

கே: பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அமைச்சு பதவி கட்சியில் யாருக்கு வழங்கப்படும்? 

அது அப்போது பேசி தீர்மானிக்கப்படும். அமைச்சு பதவிஇலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இந்தியவம்சாவளி மக்களின் ஒரே பிரதிநிதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது அரசாங்கத்திற்கு தெரியும். எனவே பலமான ஒரு அமைச்சு பதவி இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கிடைக்கும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2 அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுக்கள், 6 பாராளுமன்ற உறுப்பினர்கள்,இதில் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர் ஒருவரும் இருந்தார். இவர்கள் அனைவரும் சேர்ந்து மலையகத்திற்கு செய்த அபிவிருத்தி என்ன? பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபா சம்பள அதிகரிப்பை கூட இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே! 

கே: அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் அங்கு ஏற்ப்பட்டுள்ள தலைவர் வெற்றிடத்திற்கு யார் நியமிக்கபட அதிக வாயப்புகள் இருக்கின்றன? 

அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு சாதாரண மனிதர் கிடையாது. ஒரு துணிச்சல் மிக்க, சாணக்கியம் மிகுந்த தலைவன். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாணக்கியம் மிகுந்தவை. அவ்வாறான ஒரு தலைவனின் இடத்தை நிரப்புவது இலகுவான காரியம் அல்ல. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேசிய சபை மறுபடியும் கூடி சரியான முடிவெடுக்கும் 

கே: தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஊடகங்களுக்கும் இடையே எப்போதும் ஒரு முரண்பாடு இருந்த வண்ணமே இருக்கும் எனப் பல விமர்சனங்கள் உண்டு. உங்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு எப்படியிருக்கப்போகிறது? 

அமரர் ஆறுமுகன் தொண்டமான் என்பவரும் ஒரு சாதாரண மனிதர்தான். அவர் என்றுமே ஊடகங்களை விமர்சித்தது கிடையாது. அவர் ஊடகவிலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் நல்ல உறவை பேணி வந்தவர். சில ஊடகங்கள்தான் அமரர் ஆறுமுகன் தொண்டமானையும் அவரின் குடும்பத்தார் மீதும் பல பொய்யான வதந்திகளை செய்திகளாக பரப்பின. ஒவ்வொன்றுக்கும் ஒரு அணுகுமுறை உள்ளது. சில ஊடகங்கள் குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றன. நாங்கள் ஊடகங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 

கே: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உங்கள் குடும்ப சொத்தா என பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றதே அதைப்பற்றி உங்களுடைய கருத்தென்ன? 

ஆம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பமதான். கட்டுக்கோப்பான ஒரு குடும்பம். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை ஒரு கட்டுக்கோப்புடன் காத்துவந்தார். எனவே இ.தொ.கா ஒரு அழகான குடும்பம். இனிவருங்காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறிச் செல்வோருக்கு மீண்டும் உள்ளே வர அனுமதி இல்லை.

எல்லோரும் வந்துபோக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு பஸ் தரிப்பிடம் அல்ல. என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். இறக்குமதி செய்ய நான் என்ன மாடா? என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்வேன். நான் மலையகத்தை சேர்ந்த இளைஞன்.  கருப்பையா கங்காணியின் கொள்ளுப் பேரன். சிலர் நம்மிடையே பிரிவினையை ஏற்ப்படுத்த முனைகின்றனர். நான் பதவிக்காக ஆசைப்படுபவன் இல்லை. பதவிகள் நம்மை தேடி வர வேண்டும். பதவிகளை தேடி நாம் போகக் கூடாது. 5 வருடங்கள் எதிர்கட்சியிலே இருந்து கொண்டு மலையகத்தை ஆட்டிப்படைத்தவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான். அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட அமரர் ஆறுமுகன் தொண்டமானைக் கண்டு பயந்து நடுங்கினார்கள்.

நேர்கண்டவர்: தலவாக்கலை பி.கேதீஸ்

Comments