சிறிய விடயங்கள் பெரிதாகிய பொதுத்தேர்தல் பிரசாரங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

சிறிய விடயங்கள் பெரிதாகிய பொதுத்தேர்தல் பிரசாரங்கள்!

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தல் களம் கருத்துகளால் கனத்துப்போய் இருக்கிறது. வழக்கமான பரபரப்புகள் இல்லாத; சூடும் களையும் இல்லாத ஒரு பொதுத் தேர்தல் நடக்கிறதென்றால், அஃது இந்தத் தேர்தலாகத்தான் இருக்கும்.

பொலிஸ் பாதுகாப்புகளைவிடவும் சுகாதாரப் பாதுகாப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல் தேர்தலும் இதுதான். ஆனால், போட்டியிடும் வேட்பாளர்கள் சற்று மனக்கிலேசத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்குக் காரணம் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும். ஆதலால், கடந்த காலங்களில் வேட்பாளர்கள் தங்களின் விருப்பப்படி பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். இந்தத் தேர்தலில் ஒருபுறம் சமூக விலகலைப் பேணிக்கொண்டு பிரசாரம் செய்ய வேண்டும். மறுபுறம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இறுக்கமான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும். ஆணைக்குழுவின் தலைவரின் கிடுக்குப்பிடி வேண்டுமானால், இயல்பு நிலையில் நடக்கும் தேர்தலுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், ஒரு நெருககடியான காலகட்டத்தில் நடக்கும் தேர்தலில் ஆணைக்குழவின் தலைவரின் கெடுபிடிகள் அதனைவிடக் கொடுமை என்பதே வேட்பாளர்களின் ஆதங்கம்.

பொதுவாகக் கட்சி பேதங்கள் இன்றி அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் ஆணைக்குழவின் தலைவர் மீது கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்திருக்கிறார்கள். சட்டங்கள் இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆணைக்குழ தலைவருடைய செயற்பாடுகளைப் பார்த்தால், நாட்டின் தலைவர்களைவிடவும் அதிகாரமிக்கவராகத் தன்னைக் காட்டிக்கொள்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

ஏன் இந்தக் குற்றச்சாட்டு?

ஆணைக்குழவின் தலைவர் தங்களுக்குப் பிரசாரம் செய்வதற்கு வழிவிடுகிறார் இல்லை என்பதுதான் அது. வழிவிடுகிறார் இல்லை என்பது சரியா, பிரசாரம் செய்ய கருப்பொருள் இல்லையா? என்பதுதான் இன்றுள்ள கேள்வி!

பொதுத் தேர்தல் பிரசார மேடையில், மூன்று விடயங்கள் முக்கியமான பேசுபொருளாக உள்ளன. ஒன்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் கருத்து. அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியலில் ஈடுபட்டதால், சஜித் பிரேமதாச தோல்வியுற்றார் என்பது  ஹரினின் கருத்து. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பீடமே சஜித்தின் தோல்விக்குக் காரணம் என்பது பொதுவான கருத்து.

இரண்டாவது, புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணா அம்மான் சொன்ன கருத்து. ‘நான் கொரோனாவைவிடக் கொடியவன்தான். கொரோனா ஒன்பதுபேரைத்தான் கொன்றது, நான் ஒரே இரவில் மூவாயிரம் இராணுவத்தைக் கொன்றவன் என்று பேச்சோடு பேச்சாக சொன்ன விடயம். மூன்றாவது விடயம் ஓன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் கிரிக்கெட் ஊழல். இந்த விடயங்களை முதன்படுத்திப் பிரசாரம் செய்தால், நாட்டு மக்கள் வாக்களிப்பார்களா? இதுதான் இன்றுள்ள புரிந்துகொள்ள முடியாத சிக்கல்.

இந்த மூன்று விடயங்களிலும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விடயம் ஏதாவது இருக்கிறதா என்றால், இல்லை! காலங்கடந்துபோன விடயங்களைச் சொல்வதால் மக்கள் வாக்களிப்பார்களா? என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவே கேள்வி கேட்டிருக்கிறார்.

அண்மையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்துடன் இணையுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குப் பதில் அளித்த பிரதமர், ஆதரவளித்தால் நல்லதுதான். யாரும் ஆதரவும் அளிக்கலாம், எதிர்ப்பையும் காண்பிக்கலாம் என்று பதில் அளிக்கிறார். இஃது அரசியலா? அல்லது பழைய குப்பைகளைக் கிளறுவது அரசியலா? என்பதை எதிர்க் கட்சியினர் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆளுந்தரப்பினர் தங்களின் காய்நகர்த்தல்களைக் கச்சிதமாகச் செய்து வருகிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் ஆளுந்தரப்பினரையும் அடுத்தவர்களையும் குறைசொல்வதற்கே காலத்தை வீணடித்து வருகிறார்கள் என்றால் தவறிருக்காது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பிரசாரத்திற்காக அவர்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்தான் அவர்களுக்கு வாக்குகளை இழக்கச்செய்தனவே தவிர, ஆளுங்கட்சியோ மதத் தலைவர்களோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருணா அம்மானைப் பொறுத்தவரை ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 15 ஆயிரம்பேரில் ஒருவர். அவர் பிரிவினையைக் கைவிட்டுவிட்டுப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துகொண்டவர். ஆகவே, அவரின் கதையை விட்டுவிட்டு மக்களுக்கு வேறு கதையைச் சொல்லுங்கள் என்கிறார் பிரதமர். கிரிக்கெட் ஊழலும் ஆறிய கஞ்சி. அதனை யார்தான் சீண்டப்போகிறார்கள்? அதில் மக்களுக்கு என்னதான் நன்மை? இப்படிப் பார்க்கும்போது சிறுவிடயங்களை முதன்மைப்படுத்தும் முதலாவது பொதுத் தேர்தல் இது என்றால் மிகையில்லை.

Comments