தமிழ் மக்கள் இப்போது என்னை நம்புகின்றனர் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மக்கள் இப்போது என்னை நம்புகின்றனர்

தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்க வேண்டும் என்பதற்காக கிழக்குப் பிரிக்கப்படவில்லை. வெளிநாட்டுச் சதிகளால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. கிழக்கின் வளங்கள் இந்த அந்நிய சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவதை தடுக்கவே கிழக்கு பிரிக்கப்பட்டது என்கிறார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்.  தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலில் கிழக்கு பிரிக்கப்பட்டதாலேயே அதன் வளங்கள் பாதுகாக்கப்பட்டதாகக் கூறுகின்றார் அவர். அவரது நேர்காணலின் முழு விபரம்...

தேசிய காங்கிரஸ் இதுவரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிஅல்லது ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுடன் இணைந்தே போட்டியிட்டு வந்தது. இம்முறை மாத்திரம் ஏன் தனித்துப் போட்டியிடுகிறது.

அம்பாரை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களைநிறுத்துமாறு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன உடன்பட்டிருக்கவில்லை. இதனால் நாட்டின் சகல மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட முடிவெடுத்தோம். இதற்காக அந்தக் கட்சியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ உறவுகளை நாங்கள் முறித்துக் கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியுடனோ எந்த உறவுகளையும் எப்போதும் வைத்துக்கொள்ளவிரும்பாத நாம் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் பங்காளியாக இருந்தே சமூக அரசியலை முன்னெடுக்கவுள்ளோம்.

அம்பாரை மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் உள்ள நிலையில் மூன்று ஆசனங்களைக் கோரியதற்கான காரணத்தை தெளிவுபடுத்த முடியுமா?

இம்மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளுமே முஸ்லிம் வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ளன. இந்நியதிப்படி இம்மூன்றுதொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவே இக்கோரிக்கையை முன்வைத்தோம்.

ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தைப் பற்றி ஏனைய முஸ்லிம் தலைமைகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றன. அதிகளவான முஸ்லிம்களும் இந்தக் கட்சிகளையே ஆதரிக்கின்றனர். இந்நிலையில் உங்கள் தேசிய காங்கிரஸின் பதிலடி பிரச்சாரங்கள் எப்படியிருக்கும்?

உணர்ச்சிவசப்படுகின்ற சமூகமாக முஸ்லிம்கள் இருக்கும் வரைக்கும்தான் இந்தப் பிரச்சினையிருந்தது. இன்று இந்நிலைமைகள் அங்கு இல்லை. இதனால் ஏனைய முஸ்லிம் தலைமைகளின் வீறாப்பு வார்த்தைகள் மக்களைக் கவரப்போவதுமில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் இதில் தெளிவாக உள்ளனர். இதில் இன்னொன்றும் உள்ளது. அப்பாவி மக்களை வழி தவறவைக்கும் உணர்ச்சிப் பிரச்சாரங்களை இத்தலைமைகள் இனியாவது கைவிட வேண்டும். மக்களின் மத, கலாசார நம்பிக்கைகளைஉசுப்பேற்றி அரசியலுக்காக சமூகங்களை மோதவிடும் நிலைமைகள் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்தாக அமைந்து அழிவுகளையே ஏற்படுத்தியதையே நாம் இந்நாட்டில் படிப்பினையாகக் கண்டுவந்துள்ளதால், இவ்விடயத்தில் அரசியல் தலைமைகள் பொறுப்புடன் நடப்பது அவசியம்.

தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு பிரதான பங்களித்த சிறுபான்மைத் தலைவராக நீங்கள் பார்க்கப்படுகின்றீரகள், இதனால் தமிழ் மக்களின் ஆதரவு உங்களது கட்சிக்கு கிடைக்காதுள்ளதாகக் கூறப்படுகின்றதே!

தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்க வேண்டும் என்பதற்காக கிழக்குப் பிரிக்கப்படவில்லை, வெளிநாட்டுச் சக்திகளால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதால் இவ்விணைப்புக்கு உதவிய அந்நிய சக்திகளுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டிய கடமைப்பாட்டில் சில அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் இருந்தன. கிழக்கின் வளங்கள் இந்த அந்நிய சக்திகளால் கபளீகரம் செய்யப்படுவதையும் இந்தக் கைம்மாறுக் கடமையுள்ளோர்களால் தடுக்க முடியாதிருந்தது.

இதனால்தான் கிழக்கைப் பிரித்து, எமது இயற்கை வளங்களைப் பாதுகாக்க நேரிட்டது. மக்கள் இதை இன்று படிப்படியாக உணர்த்த தலைப்பட்டுள்ளனர். இதனால் எமது கட்சியின் தலைவாசலான கிழக்கு வாசலுக்கு இன்று அதிகமான தமிழர்கள் வருவதையும் காணமுடிகின்றது.

சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் தேசிய காங்கிரஸ், சகோதர சமூகங்களிலிருந்து ஒரு தமிழரையோ அல்லது சிங்களவரையோ, வேட்பாளராக நிறுத்தவில்லையே ஏன்?

மிக முக்கியமான கேள்வி இது. கிழக்கைப் பிரிக்கமுன்னின்று செயற்பட்டு தமிழர்களின் பெரும்பான்மைப் பலத்தை சிதைக்க நாங்கள் துணை நின்றதாக தமிழர்கள் மத்தியில் என்னைத் தவாறாகச் சில அரசியல்வாதிகள் சித்தரிக்கத் தொடங்கினர். இதற்குச் சில ஊடகங்களும் துணைநின்று செயற்பட்டதால், தமிழ் மக்கள் தெளிவு பெறாமல் தடுக்கப்பட்டனர்.

எனவே இவ்வுண்மை, அதாவது கிழக்குப் பிரிக்கப்பட்டதால் இங்கு வாழும் மூன்று சமூகங்களுக்கும் கிடைக்கும் அரசியல் அதிகாரங்கள் இங்குள்ள இயற்கை வளங்களை கிழக்கு மக்கள் அனுபவிக்கக் கிடைத்துள்ள சுதந்திரச் சூழல் என்பவற்றை இன்று மக்கள் உணர்ந்து விட்டனர். இதனால் எமது தமிழ் உடன்பிறப்புக்கள் என்னை நம்பியவர்களாகக் கிழக்கு வாசலுக்கு என்னைச் சந்திக்க வருகின்றமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் தேர்தல்களில்,  அது மாகாண சபையாக இருந்தாலும் கட்டாயம் தேசிய காங்கிரஸ் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தும்.

முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படைவாதம், மதவாதம் உள்ளதாகப் பேசப்படுவது பற்றி உங்கள் பார்வை என்ன?

இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்பது பொருள். இதை தினசரி உணர்வு ரீதியாக உணர்த்த வேண்டும் என்பதற்காகவே ஒருவரையொருவர் சந்திக்கின்றபோது முஸ்லிம்கள் சலாம் (அஸ்ஸலாமுஅலைக்கும்) சொல்லிக் கொள்கின்றனர். இதன் பொருள் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்ற அமைதிப் போக்கை உணர்த்தி ஊட்டுகிறது. இது இஸ்லாத்தில் வன்முறை, வன்செயல், இழிசெயல் என்பவை இல்லை என்பதற்கான அடிப்படைத் தத்துவங்களாகும். மதத்துக்காகவேனும் வன்முறையைக் கையிலெடுக்க இஸ்லாத்தில் இடமில்லை எனும்போது,

அரசியலுக்ககாவோ அல்லது அற்ப ஆதாயங்கள் எவற்றுக்குமோ வன்முறை பயன்படுத்தக் கூடாதென்கிறது இஸ்லாம். பொதுவாக மதங்கள் அனைத்தும் மனுதர்மத்தையே போதிக்கின்றன. இவ்வாறுள்ள நிலையில் எதையோ சாதிக்க வேண்டும் என்பதற்காக எதையுமே அறியாத அப்பாவிகளைக் குண்டுகளால் கொன்றொழித்து, புனித வணக்கஸ்தலங்களை இரத்தக் கறையாக்கிய காடையர்கள் சிலர், வேதங்களின்பேரால் வீரவசனம் பேசுவது வெறும் வேடிக்கையாகவே உள்ளது. இதற்காகத்தான் நாங்கள் புலிகளையும் எதிர்த்தோம். இந்தக் கொடூரங்களை தமிழர்கள் விரும்பவில்லை என்பதும் எமக்குத் தெரியும். அடக்குமுறைக்குள் மாட்டிக் கொண்டதால் அதர்மத்தை எதிர்த்துப் பேசுவதற்கு தமிழர்கள் அச்சப்பட்டனர். இதனால்தான் பயங்கரவாதம் ஒழியவேண்டும் என்றனர். ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னாலுள்ள அரசியலுட்பட அனைத்து சக்திகளும் அழிக்கப்பட வேண்டும்.

இந்தத் தாக்குதலின் தைரியத்தில் ஏதாவது சக்திகள் அடிப்படைவாதமாகத் தலையெடுக்குமென்றால் அவர்களும் அடியோடு அழிக்கப்படவேண்டும் என்பதுதான் தேசிய காங்கிரஸின் நிலைப்பாடு. இதற்கு தைரியமுள்ள அரசாங்கம் அவசியம். துணிச்சலுள்ள தலைமைகள் அவசியம். இவை இப்போது ராஜபக்ஷக்களிடமே உள்ளன.

இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவார்களென எதிர்பார்க்க முடியுமா? பெரும்பாலான முஸ்லிம் தலைமைகள் எதிரணியிலுள்ளனரே?

இதுதான் இங்குள்ள பிரச்சினை. பெரும்பாலான முஸ்லிம்கள் ராஜபக்ஷக்களை இருபது வருடங்களாக நிராகரித்து விட்டனர். இந்நிலையில் அவர்களுக்காகப் பரிந்துபேசுவதில் சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்தன.  இதற்காக முழு முஸ்லிம்களையும் குறைகூற முடியாது. முஸ்லிம் தலைமைகளின் உணர்ச்சி ஊட்டல்களும் கொதிநிலைகளும் தான் எமது மக்களை அரசியலில் வழி தவறவைத்தது. எனவே இம்முறையாவது படிப்பினைபெற்று தேசிய காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் அமோகமாக வாக்களிக்க வேண்டும். ராஜபக்ஷக்களின் வங்கியில் பத்தாயிரம் ரூபாவாவது வைப்பிலிடாமல் பத்து இலட்சம் ரூபாவை கடனாக எப்படி முஸ்லிம்கள் கேட்க முடியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடுகள் தென்னிலங்கை முஸ்லிம்களை சமூகப் பயப்படுத்தியுள்ளதாகக் கருதமுடியுமா? இக்கட்சியை ஸ்தாபித்த தலைவர் அஷ்ரஃப் பிற்பட்ட காலங்களில் இக்கட்சியைக் கைவிட்டு தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்தார்.

அரசியலில் அக்கறையற்றிருந்து எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்த முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்வதற்கே தலைவர் அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். இக்கட்சியை ஆரம்பித்து சுமார் பத்து வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் இதில் தெளிவடைந்தனர். இதற்குப் பின்னரும் சமூக அடையாளமுள்ள கட்சிகள் இன உறவைப் பாதுகாக்காதென்பதை உணர்ந்ததாலும் இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளும் அஷ்ரஃபைச் சிந்திக்க வைத்திருக்கும். இவரின் இந்தச் சிந்தனைகளே பிற்காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணியானது.

சிறுபான்மைச் சமூகங்களைப் பெரும்பான்மையாக ஒன்றிணைத்து அல்லது பிராந்தியக் கட்சிகளையும் பலப்படுத்தி சகல சமூகங்களின் பிரதிநிகளையும் ஒன்றிணைத்த அரசியல் பயணத்தில் ஜனநாயக அரசியலுக்கு வித்திடுவதுதான் தேசிய ஐக்கிய முன்னணியின் நோக்கமாக இருக்கும்.

ஏ.ஜீ.எம் தௌபீக்

Comments