நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல | தினகரன் வாரமஞ்சரி

நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல

தேசிய நல்லிணக்கத்தின் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்கலாம். தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலோ, அல்லது அடிமைத்தனமான அரசியலோ அல்ல. தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை அரசாங்கத்தின் ஊடாகவே, பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா. அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுக்கவில்லை என்றார். இது அவரது செவ்வியின் முழு வடிவம்...

கே: ஈபிடிபி வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிட ஏன் தீர்மானித்தது? 

பதில்: மக்களுடைய கோரிக்கை அது. மக்களுடைய தேவை அது. 

கே: இம்முறை தேர்தலில் 7ஆசனங்களுக்காக நிறைய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன இது ஆரோக்கியமானதா? 

பதில்: ஒரு ஜனநாயகத்தில் ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதுதான் நாங்கள் நீண்டகாலமாக சொல்லிவருகின்ற விடயம். 

கே: இதுவரைக்கும் கூட்டமைப்பை விமர்சித்து வந்த ஊடகங்கள் மீண்டும் வழமை போல தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. தமிழர்கள் ஒற்றுமையாக வாக்களிப்பது என்பது வீட்டுச் சின்னத்துக்குத்தானே? 

பதில்: ஒற்றுமை என்பதைவிட அதிகமாக வாக்களிப்பது என்று கூறலாம். வரலாற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த வரலாற்றில் யாரால் சரியான வழியைக் காட்டமுடியும். யாரால் மக்களைப் பாதுகாக்க முடியும் யாரால் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்று பார்த்ததுதான் அவர்கள் அந்தத் தீர்மானம் எடுக்கவேண்டும். ஒரு அரசியல் தலைமை என்பது மக்களையும் பாதுகாத்து தங்களையும் பாதுகாக்க வேண்டும். தங்களையும் பாதுகாக்க முடியாமல் மக்களையும் பாதுகாக்க முடியாத ஒரு தலைமையை ஏற்றுக் கொள்ளமுடியாது. 

கே: மக்கள் உண்மையில் கூட்டமைப்பு கூறும் சமஷ்டி, இணைந்த வட, கிழக்கில் ஆர்வம் கொண்டிருக்கிறார்களா? 

பதில்: வட்டுக் கோட்டை  தீர்மானம் என்று சொல்லும் போது கூட அவர்களுக்கு எந்தகொள்கைகளும் இருக்கவில்லை. அக்கறையும் இருக்கவில்லை வேலைத் திட்டமும் இல்லை அதேபோன்றுதான் தற்போதும்.  

கே: மத்தியில் உள்ள அரசாங்கங்களை எதிர்த்து வாக்களிக்கப் பழக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் அரசை ஆதரிக்கும் உங்கள் கட்சிக்கான வெற்றிவாய்ப்பு எந்தளவில் உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்கள்? 

பதில்: இம்முறை மாற்றம் இருக்கின்றது என நினைக்கின்றேன். நெல்லிக்காய் மூட்டைபோல எல்லோரும் சேர்ந்து போனார்கள். ஆனால் அந்த மூட்டை உடைந்து காய்கள் சிதறுவதைப்போல அவர்கள் தற்போது உள்ளனர். இதனைப் பார்க்கும்போது ஏனையவர்கள் விளங்கிக் கொள்வார்கள என நினைக்கின்றேன். 

கே: இந்த அரசு தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வழங்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? 

பதில்: அரசு வழங்குமா இல்லையா என்பதைவிட நாங்கள் அதனைப்பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். அதற்காகதான் மக்களிடம் நாங்கள் கேட்கின்றோம், எங்களைப் பலப்படுத்துமாறு. ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று நாங்கள் சொல்லப் போவதில்லை. மக்களுக்கு எதைச்சொல்கின்றேனோ அதைத்தான் நான் செய்வேன். மக்களுடைய நியாமான கோரிக்கைகளை நாங்கள் தீர்ப்போம். அவற்றுக்குரிய  தீர்வைவைக் கொடுப்போம்.  

கே: அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்களா? 

பதில்: அந்த நம்பிக்கையில் தான் அரசியலில் இருக்கின்றோம். இது எங்களுடைய அனுபவம். 

கே: இது வரைகாலமும் தேர்தல் கலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முகங்கொடுக்காத எதிர்ப்பை இம்முறை எதிர்கொள்கிறது. இம்முறை அது ஏனைய கட்சிக்களுக்கு சாதகமாக அமையுமா?  

பதில்: மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிகின்றது. ஏனென்றால் எங்கள் கூட்டங்களுக்கு வருபவர்கள் எல்லோரும் இம்முறை மாற்றம் வரவேண்டும் என்று உரத்துச் சொல்கிறார்கள். நீங்கள் தான் மாற்றுக் கருத்தையும், மாற்றுவேலைத் திட்டத்தையும் வைத்திருக்கின்றீர்கள். அந்தவகையில் நாங்கள் உங்களுக்குதான் ஆதரவளிப்போம் என்றுசொல்லி இருக்கிறார்கள்.   

கே: கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது. சமகால அரசியல் நிலைவரத்தின் படி ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்திருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் மத்தியில்  கூட்டமைப்பு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும்?  

பதில்: தற்போது இருக்கின்ற ஆட்சிதான் தொடரும் என்பது பதியப்பட்ட ஒரு வரலாறு. அந்த வகையில் தங்களுடைய இருப்பைப் பாதுகாத்துகொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமில்லை எல்லா தமிழ் தரப்பினரும் ஆட்சியாளர்களுடன் கதைப்பற்கு தயார் என்பதை சொல்லி வருகின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் வேறுபடுகிறோம். தேசிய நல்லிணக்கத்தினூடாகத்தான் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றுதான் நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகின்றோம். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்புவோம் என்று சொன்னவர்கள் திடீர் என்று என்ன மாற்றம் ஏற்பட்டதோ தெரியவில்லை, தாங்கள் இந்த அரசாங்கத்துடன் கதைப்பதற்கு தயார் என்று சொல்கின்றார்கள். இதனை அவர்கள் ஆரம்பத்தில் செய்திருந்தால் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது என நான் நினைக்கின்றேன்.  

கே: அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தால் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வீர்கள்? இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விடுதலை பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

பதில்: அரசியல் உரிமை, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தர எங்களுக்கு போதிய அரசியல் பலம் கிடைத்தால் போதும் என்று நாங்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகின்றோம். எங்களுக்குக் கிடைத்த அரசியல் பலத்தை வைத்துத்தான் இவ்வளவு காலமும் செய்திருக்கின்றோம். சந்திரிக்கா அம்மையாருடைய காலகட்டத்தில் ஒரு அற்புதமான தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவந்தோம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க் கட்சியுடன் ேசர்ந்து எதிர்த்து எரித்தது. அதன் பிறகு, 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணசபையின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு, அரசு முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் பாராளுமன்றத்தில் 50 பேரின் ஆதரவைத் திரட்டி, எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம்.  

அதேபோன்று, அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைகளாக இருக்கட்டும், கடந்தகால நல்லாட்சியை தாங்கள் தான் கொண்டு வந்ததாகவும் கூறினார்கள். அந்த ஆட்சிக்கு வாக்களித்தால், காணி விடுவிப்பு,வேலைவாய்ப்பு, என நிறைய விடயங்களை நிறைவேற்றுவதாகவும் சொன்னார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. 

நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தை ஆதரித்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வளவோ செய்திருக்கலாம். நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில், அவர்கள் தங்களது பொக்கற்றை நிரப்பிக்கொண்டார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்ததாக பதிவுகள் இல்லை. 

கே: ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிக்கை விட்டிருந்தீர்கள். தமிழ் மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் ஜனாதிபதியிடம் எவ்வாறு உதவிகளைக் கோருவது, என்று, அதற்காக உங்களுக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு செய்தால் தான் தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை உரிமையாக கேட்டு வாங்கமுடியும் என்றும் சொன்னீர்கள். பொதுத் தேர்தலில் நீங்கள் அமோக வெற்றி பெற்றால், உங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? 

பதில்: எமக்குரிய அந்தப் பலம் கிடைக்குமாயின், அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள வைப்போம். இந்த அரசாங்கம் தான் தொடரப் போகின்றது. அதுதான் தென்னிலங்கையின் யதார்த்த நிலைமை. அதில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று, நாங்கள் முற்கூட்டியே சொன்னோம். இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷதான் வெற்றிபெற்று வரப் போகின்றார். அவருடைய வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக, அதை எங்களுடைய வெற்றியாக மாற்றிக் கொள்வதன் ஊடாக, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று சொன்னோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் சொன்ன கருத்துக்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவில்லை. ஆனால், இனிமேல் அவ்வாறு நடக்காது என எண்ணுகின்றேன். அதைநம்பி மக்கள் எங்களுக்கு அதிகமான வாக்குகளையும்,அதிகமான ஆசனங்களையும் தருவார்கள் என நான் நம்புகின்றேன். 

கே: அதற்கு தென்னிலங்கை மக்கள் இணங்குவார்களா? 

பதில்: தேசிய நல்லிணக்கம் என்பது வலுவாக இருக்கும். தேசிய நல்லிணக்கம் எப்போதும் தென்னிலங்கையுடன் இருக்கும். தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலோ, அல்லது அடிமைத்தனமான அரசியலோ அல்ல. நாங்கள் நாங்களாக இருந்துகொண்டு, எமது அரசியல் பலத்தில் இருந்துகொண்டு, அரசாங்கத்துடன், கலந்துரையாடி எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது. 

கே: வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் நீங்கள் எத்தனை ஆசனங்களைப் பெறமுடியுமென எதிர்பார்க்கின்றீர்கள்? 

பதில்: வட, கிழக்கில் 5 அல்லது 6 ஆசனங்களை எதிர்பார்க்கின்றோம். எனக்கு 5 அல்லது 6 ஆசனங்கள் போதும், கரைக்கிறவன் கரைத்தால், கல்லும் கரையும் என்பார்கள். அந்தவகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியுமென நம்புகின்றேன். 

கே: எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? 

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில ஆசனங்களைப் பெறக் கூடும். முற்றுமுழுதாக அவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. மக்களின் வாக்குகள் இவர்களுக்குள் பிரியப் போகின்றது.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அவநம்பிக்கை கொண்ட மக்கள், ஒரு மாற்றுக் கட்சியைத் தான் தெரிவு செய்வார்கள். 

மக்கள் தமக்கு நல்லது நடக்கவேண்டும். கெளரவமான, ஒளிமயமான வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்று எண்ணினால் எமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நினைக்கின்றேன். ஆகையினால், தற்போது கிடைக்கவுள்ள சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். 

சுமித்தி தங்கராசா

Comments