சொந்தக் காணியில் பயிர்செய்து வசதியாக வாழும் கலஹா அம்பலமான தோட்டத் தொழிலாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

சொந்தக் காணியில் பயிர்செய்து வசதியாக வாழும் கலஹா அம்பலமான தோட்டத் தொழிலாளர்கள்

வைப்பக படம்

கலஹா அம்பலமான தோட்டம் மூடப்பட்டு 20 வருடங்களாகின்றன. ஜனவசம எனப்படும் அரச. மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை நிர்வாகத்தின் கீழ் இருந்த இத்தோட்டம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தோட்டம் மூடப்பட்டது. சுமார் 300குடும்பங்கள் இங்கே வாழ்ந்தனர். தோட்டம் மூடுப்படும்போது தோட்டத்தில் வேலைசெய்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் அரை ஏக்கர் நிலம் நட்டஈடாக வழங்கப்பட்டது. வாரத்தில் இரண்டு நாட்கள் கூட வேலை கிடைக்காது ஏழ்மையில் வாழ்ந்த இந்த அம்பலமான மக்கள் இன்று தேயிலை தோட்ட எஜமான்களாக உள்ளனர்.  

காணிகள் வழங்கப்பட்டு 15 வருட காலப்பகுதியில். புதிதாக தேயிலை நட்டு வீடுகள் கட்டி அடிமை வாழ்வில் இருந்து விடுபட்டு உரிமைகளுடன் வாழ்கின்றனர். வீட்டுவளவுக்கு வேலி அமைத்து பாரதி சொன்னதுபோல் முற்றத்தில் தென்னை, வாழை நட்டு சிறிய, பெரிய வீட்டுத்தோட்டம் போட்டு பிள்ளைகள் விளையாட முற்றம் அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர் கலஹா அம்பலமான தோட்ட மக்கள். தேயிலைச் செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக வாழை, இஞ்சி, மஞ்சள் ஏன் வெனிலா கூட பயிரிட்டுள்ளனர். எம்மக்களுக்கு காணிக்கிடைத்தால் எப்படியெல்லாம் சிறப்புற வாழமுடியும் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துகாட்டாக உள்ளனர்.  

பாதையோரம் காணி கிடைத்தவர்கள் அடுக்கு மாடி கடை, வீடு கட்டி மாற்றான் மெச்சும் வண்ணம் வாழ்கின்றனர். போய்ப்பாருங்கள், பொய்யல்ல, இது மெய்தான்!  

இங்கு சென்று இரண்டொருவரிடம் காதோடு காதாக கதை கொடுத்தேன். பழநிவேல் ஆறு அடி உயரமானவர். அறுபது வயது. தமிழனுக்கே உரித்தான மீசையுடன் தேயிலைச் செடிகளுக்கு மேல் வளர்ந்திருந்த கொடிகளை பிடுங்கிக்கொண்டிருந்தபோது அவரை இடைமறித்தேன். அவர் பேசத் தொடங்கினார்.  

நான் தோட்டக் கமிட்டித் தலைவராக முப்பது வருடங்களுக்கு மேல் இருந்து பொதுச்சேவை செய்தவன். இந்தக்காணியை பெற்றுக்கொள்ள நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று பரிகாரம் கிடைத்திருக்கிறது.  

அன்றும் புல்வெட்டினோம். இன்றும் புல்வெட்டுகிறோம் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம், அன்று அடுத்தவன் காணியில் புல் வெட்டியதும் இன்று எங்கள் காணியில் எப்போ வேணுமானாலும் புல் வெட்டுவது... இன்று இருட்டும் வரையும் வேலைசெய்வோம்.. என்று சொல்லி முடித்தார். அவருடைய அக்காவும் அந்தக் காணியில் வேலை செய்துகொண்டு என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது  

பழனிவேலின் மருமகன், அப்போது ஒன்பது மணி தேனீர் கொண்டு வந்தார். மூவரும் மரத்தடியில் அமர்ந்து வழமையான ரொட்டியை சாப்பிட்டனர். தேனீர் குடித்தனர். நானும் கொஞ்சம் சாயம் வாங்கிக் குடித்தேன்.  

"இப்படியெல்லாம் எங்களுக்கு சொந்தக்காணி கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. கடைசி காலத்திலாவது சந்தோசமாக இருக்கக் கிடைத்ததே" என்று கூறி அவர் பெருமூச்செறிந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்று சிறிது தூரம் ஒற்றையடிப் பாதையில் நடந்தேன். அங்கு ஒருவர் வாழைக்கு மண் அணைத்து கொண்டிருந்தார்.  

அவரிடம் கதைத்தேன். சந்தோசத்துடன் தனது சொந்தக் காணியில் வேலைசெய்வதாக கூறினார். இவருடைய வீடு வேறிடத்திலும் காணி வேரிடத்திலும் இருக்கிறது.  

வாழையெல்லாம் பெரியபெரிய தார் போட்டு இருக்கே களவு போகாதா? என அவரிடம் கேட்டேன். "களவு ஏதும்போகாது... தோட்டம் மூடமுன் ஒருசின்ன தார்கூட வைக்க முடியாது. ஏன் கோழிகூட வளர்க்க முடியாது. இப்ப களவு இல்ல. வேலைசெய்திட்டு மண்வெட்டி போன்ற ஆயுதங்களை கொட்டில்ல வச்சிட்டுபோவோம். எல்லாரும் அப்படிதான். அடுத்தவன் வேலை பாக்க இப்ப யாருக்கும் நேரம் இல்ல. இருக்கிற ஒவ்வொரு நிமிசத்தையும் பயன்படுத்தி பலன் பார்க்கிறோம்.  

நம்ம சொந்த காணி, சொந்த வேலை. சில நாள் கொட்டில்லேயே தங்கிடுவேன். எனக்கு மனசுல இன்றைக்கு பன்றி வரும் என்று தோன்றினால் அன்னைக்கு கொட்டில்ல தங்கிடுவேன்" என்று சொன்னார் அவர்.    அந்த காலத்துல டொயிலட் ஒன்னு கட்டவிட்டாங்களா... இன்னைக்கு சொந்தக் காணி என்பதால் பேங்ல லோன் வாங்க முடியுது. மாதம் இருபத்திநான்கு, இருபத்தி ஏழு ஆயிரம் கொழுந்துல கிடைக்கும். வெளியில வேலைக்கும் போவோம். இங்கேயும் வேலைவரும். நிம்மதியான வாழ்க்கை.    பக்கத்துல்ல உள்ள கலஹா குறூப் 1500 ஏக்கர் தோட்டம். தெல்தோட்ட குறூப் 500ஏக்கர். கிரேட்வெளி, பொகப்பிட்டி எல்லாம் பிரிக்க இருந்த காணிதான். கிட்டத்தட்ட 3000 தொழிலாளிகள் இருந்தோம். எங்க அம்பலமான தோட்டத்துக்கு மட்டுமே காணி கிடைச்சிது.  

சுமார் 172 பேருக்கு காணி பகிர்ந்து கொடுத்தாங்க.  

இன்னைக்கு மற்ற தோட்டங்கள் எல்லாம் காடு மண்டிக் கிடக்கிறது. தோட்டத்திலையும் முப்பது நாப்பது பேர்தான் வேல. கிழமையில இரண்டு நாள்தான் வேலை தருவாங்க.

அன்னைக்கு அந்த தோட்டக் கமிட்டித் தலைவர்மார் தோட்டங்களைப் பிரித்து கொடுப்பதற்கு ஒத்துவரவில்லை. 3000பேருக்கு அரை ஏக்கர்படி காணி கிடைத்திருந்தால் 1500 ஏக்கர் காணி நம்ம ஆட்களுக்கு கிடைத்திருக்கும். ஆளுக்கு கெடச்சி இருக்கும் 3000குடும்பம் கரையேறியிருக்கும்!" என்றார் அவர்.   அந்தத் தோட்டங்களின் காணிகள் கூறுபோடப்பட்டுள்ளன. இப்பவும் காணி இருக்கு. இப்போதாவது இருக்கும் காணியை சிலராவது வாங்கி பயன்பெறலாம்" என அவர் யோசனையும் சொன்னார்.  

இப்படிப் பேசிக் கொண்டிருந்தவர் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார்.  

"என்னா அப்போ கூட்டம் கூட்டமா சேர்ந்தே வேலைக்குப் போவோம்.   வாழ்ராசா, கவாத்துசாமி, ரோதமுணி இப்படி வருசா வருசம் ஆடு, கோழி வெட்டி கொண்டாடுவோம். சின்ன சத்தம் போட்டா கூட்டம் கூடிடும். இப்போ இந்த புது வாழ்க்கையில் அதெல்லாம் கொஞ்ம் குறைவு.

மொத்தத்தில நேரத்த வீணடிக்க இப்போ மனசு வரலை. லைப்ஸ்டைலே மாறிபோச்சி. காணி என்னமோ அரை ஏக்கர்தான். சிலர் கெட்டிக்காரத் தனத்தில் பல ஏக்கர் காணிக்கு சொந்தக்காரராகிட்டாங்க.   

அரச காணி பிடிச்சி தேயிலை போட்டாங்க அப்பறம் என்ன, அது அவுங்க காணிதானே! இப்படி பலர் இருக்க, கிடைச்ச காணிய வித்தவங்களும் வீதிக்கு வந்தவங்களும் உண்டு. போட்ட எல்லா விதையுமா முளைக்குது? ஒட்டு மொத்தமா சொன்னா நாம் அனைவருமே சிறுதேயிலை தோட்டகாரனா ஆகணும்.  

அன்னைக்கு தோட்டத்த பிரிக்கிறான், தோட்டத்த மூடுறான் என்று கோசமிட்டு குழப்பம் விளைவித்தவர்கள் இன்று நான் சொந்தக் காணிக்காரன் என்று மார்தட்டி மகிழ்கின்றனர். இன்று நாட்டில் உள்ள பதினைந்து இலட்சம் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களில் நாங்களும் இருக்கிறோம் என்பதே பெருமைதானே!" என்று சொல்லி உடல் சிலிர்க்கிறார்.

உண்மைதானே!

தெல்தோட்டை நவராஜா

Comments