வாக்குறுதி அரசியலும் நடைமுறைச்சாத்தியமும் | தினகரன் வாரமஞ்சரி

வாக்குறுதி அரசியலும் நடைமுறைச்சாத்தியமும்

பொதுத் தேர்தல் மேடைகள் தூள் பறக்கும் அளவிற்கு வாக்குறுதிகளும் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் வந்தால், ஆனையைப் பூனையாக்குவோம்; பூனையை ஆனையாக்கும் என்ற அளவிற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதி மழையில் வாக்காளர்களை நனைத்து வருகிறார்கள்.

கடந்த கொவிட் 19 முழு முடக்கத்தின்போது எல்லோரும் வீட்டில் இருந்தோம், மின்சாரப் பாவனையும் அதிகமாக இருந்தது. இதனால், மின்சாரப் பட்டியல் எகிறியிருக்கிறது. அநேகருக்கு மும்மடங்குக் கட்டணம். மார்ச், ஏப்ரல், மே மாதப் பட்டியலைப் பார்த்ததும் சிலருக்கு மயக்கம் வரும் நிலைக்குக் கட்டண அதிகரிப்பு. வேறு வழியில்லாமல் சிலர் கட்டணத்தைச் செலுத்தியும் இருக்கலாம். இன்னும் சிலர் என்ன செய்வது என்றறியாது இன்னமும் சிந்தித்துக்கொண்டும் இருக்கலாம். அலுவலகங்களில் சிலருக்கு இதுதான் அரட்டைக்கான தலைப்பாகக்கூட இருக்கும்.  

இரண்டாயிரம் வரை கட்டணம் செலுத்தியவர்களுக்கு இந்த மூன்று மாதங்களுக்கு 20 ஆயிரம் கட்டணம் வந்திருந்தால், எப்படி ஆசுவாசமாக இருக்க முடியும்.  

இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு யோசனை சொல்லியிருந்தார். அதாவது தாங்கள் பதவிக்கு வந்தால், ஓகஸ்ட் மாதத்திற்கான பட்டியலை மட்டும் செலுத்தலாம் என்றார். ஆனால், ஓகஸ்ட் மாதம் எவ்வளவு கட்டணம் வரும் என்று யாருக்குத் தெரியும்? சஜித் பிரேமதாசவுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. அவர் உரத்தை இனாமாகத் தருகிறேன். மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன். என்று சொல்லிக்கொண்டு போகிறார். ஒட்டுமொத்தமாக இதனையெல்லாம் பார்க்கின்றபோது ஆட்சியில் இல்லாமலேயே சலுகை அரசியல் நடத்துவதையே எடுத்துக்காட்டுகிறது. இதைத்தான் வாயால் வடை சுடுவது என்பார்கள். இன்னொருபுறம் பதவிக்கு வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் எத்தனை ஆயிரத்தையும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கலாம். எத்தனை ஆயிரத்தை வேண்டுமானாலும் நட்டப்பட்டுக்கொள்வதாகச் சொல்லலாம். சென்ற முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கவில்லையா? வராதவர்கள் எத்தனை ஆயிரத்தைக் கொடுப்பதாகச் சொன்னால்தான் என்ன? பொய் சொல்வதில் எதற்குத்தான் கருமித்தனம் என்று இன்று வாக்காளர்கள் கிண்டல் செய்யும் நிலைதான் தேர்தல் களத்தில் கதையாக இருக்கிறது.  

உண்மையில், நம் நாட்டுக்கு இப்போது தேவையாக இருப்பது வாக்குறுதியன்றி நடைமுறைச்சாத்தியமான நடவடிக்கையே. வாக்குறுதிகளை நம்பி நம்பியே தமிழ் மக்களின் வாழ்க்கை கூன் விழுந்து போயிருக்கிறது. ஆகவே, இந்தத் தடவையாவது செயற்படுத்தக்கூடிய தீர்வுகளைப் படிப்படியாகப் பெற்றுக்கொண்டு அரசியல் செல்நெறியை நகர்த்திச் செல்ல வேண்டும் என்று கடந்த வாரமும் வலியுறுத்தியிருந்தோம்.  

தேசிய பிரச்சினைகளை யதார்த்தமாகத் தீர்க்கும் வல்லமை ராஜபக்‌ஷ தலைவர்களுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. இதனை அரசியல் புகழ்ச்சியாகக் கருதுவோர் அவ்வாறு கருதிக்கொண்டாலும், நடைமுறையில் இந்த உண்மையை எவராலும் மனசாட்சியின்படி மறுக்க முடியாது.  

மீண்டும் மின்சாரப் பட்டியல் சிக்கலுக்கு வருவோமானால், கடந்த மார்ச், ஏப்ரல் மே மாதங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. வந்தால் செய்வோம் என்பதைவிடச் செய்துகாட்டுகிறோம் என்பதாக அரசாங்கத்தின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.  

அதாவது, அநேகருக்கு பெப்ரவரி மாதத்தைவிடப் பெருந்தொகை (மும்மடங்கு) கட்டணம் அதனையடுத்த மூன்று மாதங்களுக்கும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது பெப்ரவரியில் 1500 ரூபாய் கட்டணம் என்றால், மார்ச் மாதத்திற்கான கட்டணம் ஐயாயிரம் அல்லது நாலாயிரம் என வந்திருக்கிறது. ஏப்ரல், மே மாதங்களுக்கான பட்டியலும் அவ்வாறுதான். இந்தக் காலப் பகுதியில் மின்வாசிப்பாளர்கள் வீடுகளுக்கு வரவில்லை. ஆகையால், மின்சார சபை கண்ணை மூடிக்கொண்டு கற்பனையில் கட்டணத்தை அறவிட்டுப் பட்டியலை வீடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. அதனால், எந்தத் தொகையாக இருந்தாலும் பரவாயில்லை. பெப்ரவரியில் எந்தத் தொகையைச் செலுத்தினீர்களோ, அதே தொகையையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துங்கள் என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்திருக்கிறார். அதுவும் கட்டணத்தைச் செலுத்த இரண்டு மாதகால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையில் கலந்துரையாடி அரசாங்கம் எடுத்த முடிவுதான் இது. இதுதான் சாத்தியமானது. இதனால், இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் 300 கோடி ரூபாய் நட்டத்தையும் அரசாங்கம் ஏற்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.  

அதேநேரம், அதிகரித்து வந்த தொகையை ஏற்கனவே செலுத்தியிருந்தால், அஃது இனிவரும் காலத்தில் கழித்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதி அரசியல் நடத்துவதைவிட இந்த நடைமுறைச் சாத்தியமான, மக்களின் கண்ணுக்குத் தெரியும் நலன்கள்தான் மக்களால் ஈர்க்கப்படும்.  

இதேபோன்று ஏனைய எல்லா விடயங்களிலும் மக்களின் மனத்தை நாடி பிடித்தறிந்து நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! 

Comments