இரண்டாம் கட்ட கொரோனாவை சமாளிப்பது சாத்தியமே | தினகரன் வாரமஞ்சரி

இரண்டாம் கட்ட கொரோனாவை சமாளிப்பது சாத்தியமே

விஞ்ஞான வெற்றியின் உச்சத்தை அடைந்தவன் என்ற மமதையுடன் தம்மை மிஞ்ச எவரும் இல்லை என்பதால் இந்த உலகை ஆட்டிப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயந்திர மனிதனாக இயங்கிக்கொண்டிருந்த மனிதன், இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் எதையுமே சாதிக்க முடியாத ஒரு அப்பாவியாக இன்று வீட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாறு முடங்கிக் கிடக்கும் இக் காலமானது மணித்தியாலங்களைக் கடந்து மாதங்களாக மாறி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்தையும் அறிந்தவன் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த மனிதன் இன்று தமக்குத் தாமே வாய்ப்பூட்டு போட்டுக்கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றான்.

கொரோனா தொற்றுநோயின் முதலாம் கட்டம் முடிவடைவதற்குள் அதன் இரண்டாம் கட்டம் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றது. கொரோனாவின் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக கையாண்டு உலகின் நற்பெயருக்கு ஆளான நாம், இன்று அதன் இரண்டாம் கட்டத்தைக் கண்டு மீண்டும் அச்சமடைந்து இருக்கின்றோம் என்றால் அது மிகையாகாது.

நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக நாட்டை முடக்கிவைத்து நாட்டின் பொருளாதாரத்தை செயலிழக்க வைப்பதென்பது இயலாத காரியமாகும். அதனாலேயே அரசாங்கம் நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் சமூக, பொருளாதார செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியினை வழங்கியது. ஆயினும் அவ்வாறு வழங்கப்பட்ட சுதந்திரத்தை நாட்டு மக்கள் என்ற வகையில் நாம் பொறுப்புணர்வுடன் உபயோகப்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்று எம் முன் எழுந்திருக்கின்றது. 

சிறிதுகாலம் ஓய்ந்திருந்த கொரோனா பற்றிய பேச்சு சமூகத்தில் இன்று மீண்டும் மேலெழுந்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆங்காங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டு வருவதே அதற்கு காரணமாகும். இதனையடுத்து அரசாங்கம் மீண்டும் முழுமூச்சுடன் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கின்றது. 

எவ்வித பாரபட்சமும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளை ஆட்டம் காண வைத்திருக்கும் தொற்றுநோயின் தன்மையை அறிந்து அரசாங்கம் தன்னாலான சகல முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதுடன், மக்களின் வாழ்க்கை, மாணவர்களின் கல்வி, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை செயலிழக்க விடாது தக்கவைத்துக் கொள்வதற்கு தம்மாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அவ்வாறு மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்ட அரசு, பொதுமக்கள் சுகாதாரத் துறையினரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிபுணர்களும் வழங்கும் அறிவுரைகளை மிகச் சிறந்த முறையில் பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தை மட்டுமே எதிர்பார்த்தது.  

இருப்பினும் நம்மவர்கள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் சுகாதாரத் துறையினர் வழங்கிய அறிவுரைகளை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே இன்று மீண்டும் நாட்டினுள் ஆங்காங்கே கொரோனா தொற்றுநோய் தலைதூக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.  

அதன் ஆரம்ப கட்டமாகவே சுமார் 90 நாட்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அவசர அவசரமாக மீண்டும் மூடப்பட்டிருப்பதுடன் பாடசாலை மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றனர். அத்தோடு கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடு தொடர்பான விசேட செயலணி மீண்டும் அரச தலைவரின் தலைமையில் கூடி முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி மிக ஆழமாக கலந்துரையாடி இருப்பதுடன் முக்கியமான தீர்மானங்களையும் எட்டியிருக்கின்றது. 

இந்தப் பின்னணியிலேயே தற்போது மீண்டும் நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் அதிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எவ்வித குறைபாடுகளும் இன்றி முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் மக்கள் முன் வைத்திருக்கின்றனர். 

அதற்கமைய மீண்டும் நோயாளிகளை கண்டறியும் சுகாதார பரிசோதனைகள் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படுகின்ற அதேவேளை, அதற்கான பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க வேண்டியது பொதுமக்களின் சமூகப் பொறுப்பாகும். அவ்வாறு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் நோய் பரவுவதை நிச்சயம் தடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகையால் பொது மக்களாகிய நாம் நமது பூரண ஒத்துழைப்பினை இவ்வேளையில் அரச செயற்பாடுகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. 

போதைப்பொருளுக்கு அடிமையாகிய சிலர் இயல்பு நிலைமைக்கு முற்றிலும் மாறாக நடந்து கொண்ட பின்னணியில் அவர்களிடமிருந்து பாதுகாப்புத் துறையினருக்கு மிக வேகமாக பரவும் நிலைமை ஏற்பட்டமையே நமது நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா நோய்த்தொற்று பெருமளவில் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆயினும் மிக நேர்த்தியான செயற்பாடுகளை கடைப்பிடித்த அரசாங்கம் நோயினால் பாதிக்கப்பட்ட படைவீரர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொடுத்து சுமார் 1000 கடற்படை வீரர்களை நோயிலிருந்து பாதுகாத்து கொண்டதுடன் பாதுகாப்பு துறையினரின் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கு பெற்றுக்கொண்டது. 

கொரோனா தடுப்பு தொடர்பாக இலங்கை அரசு கடைப்பிடித்த மிக காத்திரமான, முன்மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் உலகம் போற்றும் வகையில் அமைந்திருந்தன என்பதை நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு முற்றாக நோயிலிருந்து அவர்களை குணப்படுத்தி மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கான ஒரு சிறந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாகவே உலக நாடுகள் ஆரம்ப கட்டத்தில் தொற்றுநோய் காரணமாக தத்தளித்துக் கொண்டிருக்கையில் நமது நாட்டில் நோய் பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டதோடு மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடிந்தது.  

ஆரம்ப காலத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிறுவப்படுவதை எதிர்த்து அடிப்படையற்ற விதத்திலான பல்வேறு எதிர்ப்புகளை மக்கள் ஏற்படுத்தினர். ஆயினும் தொற்றுநோயின் தாக்கம் பற்றிய விளைவுகளை முன்கூட்டியே அறிந்த அரசு எதிர்ப்புகளை பொருட்படுத்தாது இந்நாட்டில் இதுவரை சுமார் 70 தனிமைப்படுத்தும் நிலையங்களை நிறுவி பராமரித்து வருகின்றது. அதன் காரணமாகவே கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 16 ஆயிரத்திற்கும் அதிகமான நம்மவர்களை மீண்டும் இந்நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து தனிமைப்படுத்தி, கண்காணித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைக்கக்கூடிய நிலைமை இன்று கிடைத்திருக்கின்றது. சுமார் 74 நாடுகளிலிருந்து அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

அந்தவகையில் மீண்டும் நமது நாட்டில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்திருக்கும் பின்னணியில் குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையாகி, அத்தோடு கொரோனா நோயினாலும் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மிக நுட்பமாக கையாள்வதன் மூலம் அவர்களிடமிருந்து சமூகத்திற்கு நோய் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அறிவுரையை ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியிருக்கின்றார். அத்தோடு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியிருப்பவர்கள் கொரோனா நோயினாலும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பின் அவர்கள் நோயிலிருந்து முற்றாக குணமடையும் வரை அவர்களுடனான நெருங்கிய தொடர்புகளை துண்டித்துக் கொள்வதே அவர்களது உறவினர்கள் சமூகத்துக்கு செய்கின்ற மிகச் சிறந்த தொண்டாக அமையும். 

தொற்றுநோய் பரவுவதை கண்டறியும் வகையிலான பிசிஆர் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுகாதார தரப்பினருக்கு பணிப்புரை விடுத்திருப்பதோடு, மறுபுறத்தில் சுகாதாரத் துறையினர், இராணுவம், பொலிஸார் ஆகியோருடன் இணைந்து தொற்றுநோய் தொடர்பு கொத்தணிகளை இனங்காண்பதற்காக அரச புலனாய்வுத் துறை களமிறக்கப்பட்டு அவர்களின் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நோயாளர்கள் சமூகத்தில் மென்மேலும் நடமாடுவதைத் தடுத்து அவர்களை வெகுவிரைவாக இனங்கண்டு தனிமைப்படுத்தி தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மீண்டும் முடக்கி விடப்பட்டிருக்கின்றது  

அத்தோடு இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முதலாவது விடயம் யாதெனில் கொரோனா என்பது நமது நாட்டுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அச்சுறுத்தலாக அமைந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ள அதேவேளை, நோயை தடுத்து நிறுத்துவதற்கான எவ்விதமான உறுதியான மருந்து வகைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதாகும். ஆகையால் அமெரிக்க வல்லரசு தொற்றுநோய் காரணமாக செய்வதறியாது நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை அடைந்திருக்கும் பின்னணியில் நமது நாட்டை போன்ற பொருளாதார ரீதியிலும் சுகாதார ரீதியிலும் இன்னும் முன்னேற்றம் அடைந்துவரும் ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதுடன் நோய் வராமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பின்பற்றி, அரசு மற்றும் சுகாதாரத் துறையினரின் அறிவுரைகளை நூற்றுக்கு நூறு சதவீதம் செயற்படுவதன் மூலமே நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ரவி ரத்னவேல்

Comments