தமிழர் அரசியலில் புதிய நிலைப்பாடுகளுக்கான சாத்தியங்களை உருவாக்காது | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் அரசியலில் புதிய நிலைப்பாடுகளுக்கான சாத்தியங்களை உருவாக்காது

“தமிழரின் வாக்குகள் சிதையக் கூடிய ஒரு ஆபத்தான நிலையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் களம் உள்ளது” என்ற கவலையோடிருக்கும் சிலரைக் காணமுடிகிறது. “ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு மிஞ்சியிருக்கும் ஒரே அரசியல் ஆயுதமும் அரசியல் நம்பிக்கையும் தேர்தல்தான். அதிலும் பாராளுமன்றத் தேர்தல் முக்கியமானது. அதுவே பாராளுமன்றத்திலும் வெளியுலகிலும் இனப்பிரச்சினை – தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் விவகாரங்களை எடுத்துச் செல்வதற்கான ஒரே வழி. அதுவும் சிதைந்து போனால் நிலைமை மேலும் மோசமாகி விடும்” என்பதே இவர்களுடைய கவலைக்கான அடிப்படைக் காரணம். 

ஒரு கோணத்தில் பார்க்கும்போது இந்தக் கவலை நியாயமானதே. ஆனால், இதற்கு மறு கோணங்களும் உண்டு. அல்லது இதையும் சேர்த்து ஏனைய கோணங்களையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

முதலில் இவ்வாறான ஒரு நிலைமை ஏன் வந்தது? இதற்கு யார் பொறுப்பு? 

கூட்டமைப்பின் அரசியல் தவறுகளே இதற்குக் காரணம். 2009 க்குப் பின்னர் தமிழ்ச்சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் கூட்டமைப்பே இருந்தது. மக்கள் அதற்கே ஆணையை வழங்கியிருந்தனர். இந்த ஆணைக்குத் தகுந்த மாதிரித் தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை கூட்டமைப்பு வகுத்துச் செயற்படவில்லை. அதாவது சரியான தலைமைத்துவத்தை அது வழங்கவில்லை. இந்தத் தலைமைத்துவக் குறைபாடே கூட்டமைப்பிலிருந்து பலரையும் வெளியேற வைத்தது. கூட்டமைப்பின் சிதைவும் அதனுடைய நம்பகத்தன்மையில் ஏற்பட்ட சந்தேகமுமே இன்று மக்களை தேர்தல் தெரிவில் ஆர்வமின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசியலில் அவநம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. 

இதெல்லாமே இன்று தமிழர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது. இதில் கூட்டமைப்போடு அதைக் கடந்த காலத்தில் ஆதரித்து நின்ற சக்திகளுக்கும் பொறுப்புண்டு. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஊடகங்கள், பத்தி எழுத்தாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சில புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திலுள்ள சில அமைப்புகள், குறிப்பிட்டளவான புத்திஜீவிகள் என்போர் இதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

இவர்கள் கடந்த காலத்தில் கூட்டமைப்பைச் சரியாக நெறிப்படுத்தியிருந்தால் இப்போது கூட்டமைப்பும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்காது. தமிழ்ச்சமூகமும் கையறு நிலைக்குள்ளாகியிருக்காது. பதிலாக இவர்கள் எல்லோரும் அதைப் பாதுகாப்பதிலும் நியாயப்படுத்துவதிலுமே ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

இந்தப் பத்தியாளர் உட்பட மிகச் சிலரே கூட்டமைப்பின் அரசியல் தவறுகளைத் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியவாறு விமர்சித்து வந்தனர். இதைத் தடுப்பதற்கு ஏராளமான நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் கருத்துகளை முன்வைப்பதற்கான களமே இவர்களுக்கு மூடப்பட்டது. 

ஆனால், இதெல்லாவற்றையும் கடந்து இன்று யதார்த்தம் பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கிறது. அதாவது காலம் தன்னைச் சரியாக நிரூபித்து நிற்கிறது. 

இப்பொழுது என்ன செய்வது? 

இப்போது தமிழ்ச் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சன விகிதாசாரம், அரசியல் என அனைத்துமே சரிவைச் சந்தித்த நிலையில் உள்ளன. அதாவது தமிழ்ச்சமூகம் மிகப் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.  இதை எப்படி எதிர்கொள்வது? என்பதே இன்றுள்ள மிகப் பெரிய கேள்வியாகும். 

இதை எந்தத் தரப்புப் புரிந்து கொண்டு செயற்படுகிறது? அல்லது தமிழ்ச்சமூகம் இதை எவ்வாறு புரிந்து கொண்டு செயற்படப்போகிறது? இந்தக் கேள்விகளுக்கான விடையிலேயே தமிழ்ச்சமூகத்தின் எதிர்கால இருப்பும் அரசியலும் தங்கியுள்ளது. 

எனவே பலவீனப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தைப் பலப்படுத்தி ஸ்திரப்படுத்துவதிலேயே தமிழ்ச்சமூகம் தன்னைத் தக்க வைத்து முன்கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும். 

இப்போது நம்முன்னே உள்ள பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் போருக்கு முந்திய மனநிலை, போரினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு, அதன் வழியான எதிர்ப்புணர்வு அல்லது பழிவாங்கும் மனநிலை, அதை மையப்படுத்திய சிந்தனையிலேய தம்மைக் கட்டமைத்துள்ளன. 

தமிழ் மக்களில் பலரும் கூட இதே நிலையிலேயே உள்ளனர். 

குறிப்பாகப் புலம்பெயர்ந்தோரில் பலரும் இந்த மனநிலை, இந்தச் சிந்தனையோடுதான் உள்ளனர். 

இது பிரச்சினையின் ஆழத்துள் நம்மை வைத்திருக்கிறதே தவிர, பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கான வழியைக் காண்பதிலிருந்து தவிர்த்து விடுகிறது. 

ஆனால், யதார்த்தமும் உண்மையும் இதிலிருந்து நம்மை விடுவிக்கவே கோருகின்றன. அதாவது போருக்குப் பிந்திய அரசியலை (Postwar Political) முன்னெடுக்குமாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது. சர்வதேச சமூகமும் போருக்குப் பிந்திய யதார்த்தம், போருக்குப் பிந்திய சூழலைக் கவனத்திற் கொண்ட அரசியலை முன்னெடுக்குமாறே வலியுறுத்துகின்றன. 

அப்படியென்றால் என்ன செய்வது? 

தமிழ்ச்சமூகத்தில் படித்த, சிந்திக்கக் கூடிய ஒரு தரப்பினர் போருக்குப் பிந்திய சூழலைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய அரசியல் தரப்பினரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஒரு தரப்பினரும் உள்ளனர். 

ஆனால், இவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் இன்னும் அழுத்தமாக வெளிப்படுத்தி நிற்க முடியவில்லை. இதற்கு முன்சொன்ன தரப்புகளின் போருக்கு முந்திய, போர்க்காலப்பாதிப்பு மனநிலை தடையாக இருக்கிறது. 

என்பதால்தான் எதையும் வெளிப்படையாகப் பேசி நிற்கக் கூடிய சூழல் உருவாகவில்லை. இதுதான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் குழப்பத்திற்குள்ளாகியமைக்கான பிரதான காரணமாகும்.  கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் கூட இந்தக் குழப்பம், இந்த இழுபறி, இந்தத் தடுமாற்றம், இந்தப் பலவீனம் போன்றவற்றின் விளைவுகளில் இருந்தே உருவாகியது. 

அதாவது இதையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொள்ளக் கூடிய திராணி பலருக்கும் இல்லாதிருப்பதே அடிப்படைப் பிரச்சினையாகும்.  ஆகவே இதைப் புரிந்து கொண்டு செயற்படாத வரையில் இந்தக் குழப்பம், இந்தத் தடுமாற்றம், இந்தச் சிதைவு நிலையே காணப்படும். – நீடிக்கும். 

அப்படியென்றால் என்ன செய்வது என்ற கேள்வி மீண்டும் எழுந்து நிற்கிறது. 

தமிழ்ச்சமூகம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டும் சுத்திகரித்துக் கொண்டும் நிமிர்ந்து எழாத வரையில் அது தன்னுடைய பலவீனங்களைக் களைய வழியில்லை. இது சிங்கள அதிகாரத் தரப்புக்கே வாய்ப்பை வழங்கும். இதுவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இது சர்வதேச சமூகத்தை தமிழ்ச்சமூகத்திடமிருந்து தூர விலக்கப்போகிறது. 

ஏறக்குறைய இன்று சர்வதேச சமூகம் தமிழ்ச்சமூகத்திடமிருந்து தூர விலகிய நிலையிலேயே உள்ளது. 

இதையெல்லாம் இப்பொழுது பேசிக்கொண்டிக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இதைப் பற்றிப் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை என்று பலரும் கூறலாம். இதை இப்போதைக்குச் சீர்ப்படுத்த முடியாது. இதற்குக் கால அவகாசம் வேணும். அதற்கு முன் நாம் இப்பொழுது தேர்தலை எப்படி எதிர்கொள்வது? எப்படியான தீர்மானத்தை எடுப்பது என்றும் அவர்கள் கூறலாம். 

அப்படியென்றால் அவ்வப்போது வரும் தலையிடி, காய்ச்சலுக்கு உடனடிப் பரிகாரம் காண முற்படுவதைப்போல பனடோலைத்தான் போட்டுக் கொள்ள முடியும். அது ஒரு தற்காலிக நிவாரணியே தவிர, நிரந்தர நிவாரணியல்ல. இதுவே உண்மை.  தமிழர்களின் பிரச்சினையே மிகப் பெரியது. ஆழமான பிரச்சினை. பெரிய நோய். 

இதற்கு அறுவைச் சிகிச்சையே தேவை. அதற்கான தயாரிப்பும் துணிச்சலான நடவடிக்கையுமே வேண்டும். 

இல்லையென்றால் நோய் முற்றி ஆளையே – சமூகத்தையே பலியிட்டு விடும். ஏறக்குறைய இந்தக் கட்டத்தில்தான் இன்று தமிழ்ச்சமூகம் உள்ளது. இதற்கான குணங்குறியே அது சந்தித்து நிற்கும் அத்தனை நெருக்கடிகளுமாகும். 

இதை ஓரளவு புரிந்து கொண்டவர்களே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்க முற்பட்டனர். ஆனால், அவர்களும் அடிப்படையில் மீளவும் தவறிழைத்தனர். அதாவது அவர்களும் போருக்கு முந்திய – போர்க்காலப் பாதிப்பு மனநிலையையே கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்களால் எந்தப் புதியவைகளையும் உருவாக்கி நகர முடியவில்லை. மீளவும் தவறான தெரிவுகளில் சிக்கினர். 

இதை விடச் சற்று வேறுபட்ட நிலையில் கிழக்கில் உள்ள சில தரப்பினர் சிந்தித்தனர். ஆனால், அவர்களாலும் அந்தப் புதிய நிலையை வளர்த்தெடுக்க முற்படவில்லை. அவர்கள் தேர்தல் அரசியலுக்குள் நுழைய முற்பட்டுச் சிதைந்து விட்டனர். 

மன்னாரிலும் கிளிநொச்சியிலும் சிலர் இதைக்குறித்த மென்புரிதலோடு கிளம்பினர். அவர்களாலும் ஒரு சக்தியாக உருப்பெற முடியவில்லை. பதிலாக அவர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் சக்திகளுக்குள்ளேயே வழிகளைக் காண முற்படுகின்றனர். இதில் மன்னாரில் உள்ள தரப்பு அப்படியே கரைந்து விட்டது. கிளிநொச்சியில் இது சற்றுத் தெம்புடன் உள்ளது. ஆனால், கிளிநொச்சியில் மட்டும் சிந்தித்து ஆகப்போவதொன்றும் இல்லை. ஏனெனில் தேர்தல் அரசியலில் கிளிநொச்சி மட்டும் எதையும் தீர்மானிக்கக் கூடிய நிலைக்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை. அதனுடைய சனத்தொகையும் தேர்தல் மாவட்டம் என்ற வகையில் அது யாழ்ப்பாணத்தோடு இணைந்தே இருக்க வேண்டியதும் இதற்குப் பாதகமானது. அல்லது சாத்தியக் குறைவானது. 

எனவே தமிழ் அரசியலானது எந்தப் புதிய நிலைகளையும் எடுப்பதற்கான சாத்தியங்கள் இப்போதைக்கு இல்லை. என்பதால் இந்தத் தேர்தலானது, எந்தப் புதிதையும் தமிழ்ச்சமூகத்துக்குத் தராத ஒன்றாகவே இருக்கப்போகிறது. 

ஆனால், ஒன்று, கடந்த தேர்தல்களின்போது ஒன்று திரண்டு, ஒரே அடையாளமாக தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பை நிறுவியதனாலும் பயன் எதையும் பெறாததை விடவும் இந்தப் பல முனையாளர்களின் தெரிவு சில நற்பயன்களைத் தரக்கூடும். அது போட்டி அரசியலின் விளைவில் உருவாகக்கூடிய சிறிய சாதகங்களே தவிர, பெரிய அரசியல் அடைதல்களாக இருக்காது.

கருணாகரன்

Comments