தென்னிலங்கையின் தெரிவில் தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..! | தினகரன் வாரமஞ்சரி

தென்னிலங்கையின் தெரிவில் தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..!

தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி, சவால்களுக்கும் உள்ளாகப் போகின்றன. சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சிக்குள் வாழும் இப்பகுதி முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள், ஏனைய சமூகங்கள் மத்தியில் சர்ச்சை, சந்தேகங்களை ஏற்படுத்தாதிருக்க வேண்டும். இதுதான் இப்பிரதேசத்தின் இன்றைய தேவையுமாகும். இருபது இலட்சம் முஸ்லிம்களில் சுமார் 13 இலட்சம் பேர் வாழும் இந்தப் பிரதேசம் (தென்னிலங்கை), பொதுவாக முஸ்லிம் தனித்துவ அரசியலுடன் இயங்கிச் செல்ல முடியாத இயல்பு நிலையிலுள்ளது. இதனால்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தென்னிலங்கை முஸ்லிம்களை தனித்துவ அரசியலில் விழிப்பூட்டுவது பற்றி பெருமளவு அக்கறையற்றிருந்தது. 

இன அடையாள அரசியலுக்குள் உள்வாங்கப்படுமளவிற்கு தென்னிலங்கைத் தளத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழவுமில்லை, மட்டுமன்றி இவர்களின் ஒரிரு வாழ்வியல் நிலங்கள் தனி அடையாளமாகத் தென்பட்டாலும் சிங்களப் பெருந்தேசியத்துக்குள் இவை பெரும், தொடர் பரப்பாகவும் இல்லை. இதனால் இவர்களுக்கு இணக்க அரசியலே பொருத்தப்பாடாகி வருகிறது. அதற்காக ஏனைய பிரதேச முஸ்லிம்கள் ‘பிரிவினை கோருகிறார்கள்’ என்ற பொருளும் இல்லை. அடையாள அரசியலுக்கான சனச் செறிவு, அதிகார நிர்வாகங்களுக்கான நிலப்பரப்பு, கலாசாரத் தனித்துவங்களுக்கான கூட்டிணைவு வாழ்வு தென்னிலங்கையில் இல்லாதுள்ளதையே குறிப்பிடுகிறோம். 

ஆனால், புலிகளின் தோல்விக்குப் பின்னரான இன்றைய நிலைமையில் பொதுவாக உரிமை, அடையாள, தனித்துவ அரசியல் வீரியம், வேகம் குறைந்துள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர். சிங்களப் பெருந்தேசியத்தின் எழுச்சி இவ்வாறான கருதுகோளை ஏற்படுத்தியிருந்தாலும் சிறுபான்மையினரின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படக் கூடாதென்ற நிலைப்பாட்டிலே தனித்துவ தலைமைகள் உள்ளன. எனினும், இதை மக்களிடம் கூறி, சமூகத்தை ஒன்றுபடுத்தும் விடயங்கள், கோஷங்கள், நடைமுறைகள், நிபந்தனைகளில் நிதானம் தேவைப்படுகிறது. 'அம்பாறையை முஸ்லிம்கள் கோரினர், வடக்கை தமிழர்கள் கோரினர். இவற்றை வழங்காததற்காகவே 2015 இல் பழிவாங்கப்பட்டோம்'. இதுதான் சிங்களப் பெருந்தேசியத்தை விழிப்பூட்டிய, இன்னும் விழிப்பூட்டும் எழுச்சிப் பிரச்சாரம். 

தென்னிலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அரசியல் அடையாளத்தை விடவும் அபிவிருத்தி அரசியலே முதன்மைப்படுகிறது. இந்தத் தூர நோக்கில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்க்கட்சி அரசியல், 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆளுங்கட்சி சார்ந்ததாக மாறத் தொடங்கியதோ தெரியாது. இதில் சில வேளைகளில் எதிர்க்கட்சியில் இருக்க நேரிட்டாலும் பின்னர், ஆளுங்கட்சியில் அமரும் வரலாறுகள்தான் தொடர்கின்றன. ஆனால், நாட்டில் குறிப்பாக தென்னிலங்கை அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதல், இங்குள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதை முஸ்லிம் தலைமைகள் உணராமலுமில்லை. “என்ன செய்வது அரசனுக்கு அஞ்சி ஆண்டவனைக் கோவிப்பதா? புருஷனுக்கு அஞ்சி பிள்ளைகளைக் கைவிடுவதா?” என்ற நிலைப்பாட்டில், அரசியல் செய்யும் நிலைமைக்கு தென்னிலங்கை முஸ்லிம் தளம் தள்ளப்பட்டுள்ளது. 

அரசுக்கு விசுவாசமான முஸ்லிம் அமைப்புக்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் என்போர் ஒப்பீட்டளவில், முஸ்லிம் தனித்துவ தலைமைகளை விடப் பலம் குன்றிக் காணப்பட்டாலும், அவர்களுக்குள்ள அதிகாரப் பின்புலங்கள் முஸ்லிம்களைத் தடுமாறச் செய்கிறது. இந்தத் தடுமாற்றம் வாக்குப் பெட்டிக்குள் விழுமா? இது காலம் சொல்ல வேண்டிய பதில். ஆத்மீக உணர்வு, நம்பிக்கை, செயற்பாடுகளில் மிகக் கடுமையாகக் கட்டுண்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் சில எதிர்பார்ப்புக்கள், இந்த அரசாங்கத்தில் பொருட்படுத்தப்படவில்லை என்பதைத் தூக்கிப்பிடித்துத்தான், ஐக்கிய மக்கள் சக்திக்கு முஸ்லிம் வாக்குகள் திருப்பப்படவுள்ளன. ஆனால், இவ்விடயத்தில் முஸ்லிம் தனித்துவ தலைமைகள் பக்குவப் போக்குகளைக் கையாள வேண்டியுள்ளது. 

மொட்டு அணியிலுள்ள முஸ்லிம் தரப்புக்கள், இனியும் அரசை விரோதித்து, எதிர்த்து இன்னும் நிலைமைகளைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதென எச்சரித்து வருகின்றன. இதில் எதைப் புரிந்துகொள்வது என்பதில் தென்னிலங்கை முஸ்லிம்கள் மிக ஆழமாகச் சிந்திக்கின்றனர். மொரட்டுவைப் பாலத்திலிருந்து மொனராகலை வரை விரியும் சிங்களச் சீமையும், களனிப் பாலத்தில் தொடங்கி பொலன்னறுவை வரை தொடரும் சிங்கள நிலத் தொடர்ச்சியும், இவற்றுக்கு மையமாகச் செல்லும் மலையகம் உட்பட கண்டியக் கலாசாரச் சூழல்களையும் முஸ்லிம்கள் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பெருமண்ணின் பெரும்பான்மை ஆசைகளுக்கு குறுக்காக நிற்பது, தங்களைக் குறிவைக்கலாமென்ற அச்சத்திலுள்ள முஸ்லிம்களும், எதுவாயினும் பரம்பரை, பாரம்பரிய அரசியல்தான் என்ற சிலரின் பிடிவாதங்களிலும்தான், இந்த தென்னிலங்கை முஸ்லிம் களம் இன்று வரை நகருகிறது. 

இன்றைய சூழலில் உரிமை, அபிவிருத்திகளுடன் சமூகங்களை ஒற்றுமையாக வாழ வைப்பதும், புதிய அரசியல் பெறுமானங்களாக பரிணமிக்கின்றது. மேலும், இதிலும் தனித்துவம் விரும்பும் எதிரணி இதற்கு நிகரான செயற்பாடுகள், வேலைத் திட்டங்களூடாகவே களமிறங்க வேண்டுமே தவிர, இனச்சாயம், மதக்குரோதங்களூடாக இப்பணிகளை மழுங்கடிக்க முனைவது, தெற்கின் பெருந்தேசியத்தை மீண்டும் சீண்டுவதற்கான அடித்தளங்களாக அமையும் ஆபத்துக்களே உள்ளன. 

 உரிமை, உறவு, உணர்வுக்கான அரசியல் சிந்தனைகளைத் தோற்கடிக்க முடியாதென்பது, இந்த அரசாங்கத்திற்கும் தெரியும். இதனால்தான், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பிரிதலின்றிய இணக்கப்பாடுகளில் தீர்த்துவைக்க அரசு அழைப்பு விடுக்கின்றது. எனவே, சாதிக்கச் சாத்தியமானவைகளில் சாமர்த்தியமாகவும், சாத்தியமற்றவைகளில் சார்ந்து செல்வதும்தான், சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள தேவைகளாகவுள்ளன. இந்தத் தேவைகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரை, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபட்டதாகவே இருக்கப்போகிறது. 

இந்திய அமைதிப்படை நாட்டை விட்டு வெளியேறுவதில், முஸ்லிம்களுக்கு இருந்த இரட்டை நிலைப்பாடுகளுக்கு ஒத்ததாகவே இது இருக்கிறது. அமைதிப்படையின்  வெளியேற்றத்தை தென்னிலங்கை முஸ்லிம்கள் விரும்பியது, பெருந்தேசியத்தின் இணக்கத்திற்காக, அதேவேளை கிழக்கு முஸ்லிம்கள் விரும்பாதிருந்தது வட, கிழக்கின் பாதுகாப்பிற்காக என்பதையும் மனதிற்கொள்ள வேண்டியுள்ளது. 

மேலும், கிழக்கில் முஸ்லிம்களுக்காக கோரப்படும் நிர்வாக மாவட்டம், தனியலகுக் கோரிக்கைகள், ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழலில் தெற்கு முஸ்லிம்களை அச்சத்தோடும், தயக்கத்துடனும் பார்க்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. இதுவும் ஒரே சமூகத்தின் தவிர்க்க முடியாத புறக்காரணங்களாகவே நோக்கப்படுகின்றது. 

சுஐப் எம்.காசிம்

Comments