பிளவுபட்டுள்ள கட்சிகளும் பொதுத் தேர்தல் காட்சிகளும் | தினகரன் வாரமஞ்சரி

பிளவுபட்டுள்ள கட்சிகளும் பொதுத் தேர்தல் காட்சிகளும்

இலங்கை பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரலாற்றில், பிரதான அரசியல் கட்சிகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து களமிறங்கியிருக்கும் ஒரு தேர்தல் என்றால், அஃது இதுவாகத்தான் இருக்கும். 

தமிழ்க் கட்சிகளிடையேதான் ஒற்றுமை இல்லை என்ற ஒரு பொதுவான கருத்தியல் நிலவியபோதிலும், நாட்டின் பழம்பெரும் பெரும்பான்மை பெரிய கட்சிகளிலேயே இன்று ஒற்றுமை இல்லாத நிலை வலுவடைந்திருக்கிறது. 

அந்த வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகளும் இலங்கை அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. அவை இன்று சிறு சிறு கட்சிகளாகப் பிளவுபட்டுப் பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றன.  

பொதுவாகக் கட்சிகளில் பிளவு ஏற்படுவதற்குப் பிரதான காரணம், அடுத்தடுத்த பதவி நிலைகளில் உள்ளவர்களும் திறமை மிகுந்தவர்களாகவும் தலைமைத்துவத்திற்கு மாறான கருத்தியலை, கொள்கையைக் கொண்டவர்களாகவும் மிளிரும் பட்சத்தில் அந்தக் கட்சியில் ஒரு பிளவு நிச்சயம் ஏற்படும். அவ்வாறு பிரிந்து செல்பவர்கள் வேறு கட்சிகளில் சேர்வதற்குப் பதிலாகப் புதிய கட்சிகளை உருவாக்குவார்கள். 

இலங்கை சம சமாஜக் கட்சி இலங்கையின் பழம்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் ஏனைய இரு கட்சிகளைப்போன்று அந்தக் கட்சியால் வளர முடியவில்லை. இருந்தாலும் அந்தக் கட்சியில் இருந்த சிலர் பிரிந்துசென்று புதிய கட்சியை உருவாக்கினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு என்று சொல்வதைவிட, அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களைத் தவிர, அக்கட்சி பெருவாரியாக உறுப்பினர்களைக்ெகாண்டிராததால், அக்கட்சி பெயரளவில் தனது இருப்பைத் தக்கவைத்துக்ெகாண்டிருக்கிறது. 

தவிரவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யிலும் ஆரம்பத்தில் பிளவு ஏற்பட்டது. என்றாலும், அது தனது சுயத்தை இழந்துவிடாமல், ஜேவிபியாகவே இன்னும் அரசியல் களத்தில் இருந்துகொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில்தான் இப்போது ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் பிளவுகள் ஏற்பட்டு, இன்று அந்தக் கட்சிகள் நான்கு பிரிவுகளாகத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன. இதில் விசேடம் என்னவென்றால், ஐக்கிய தேசிய கட்சியில் பிளவு ஏற்பட்டாலும், அந்தக் கட்சியை மேவும் அளவிற்கு அதிலிருந்து பிரிந்தவர்களால், இன்னொரு கட்சியை உருவாக்க முடியவில்லை. இன்னும் விரிவாகச் சொன்னால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அல்லது மாற்று அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் குறுகிய காலத்தில் மிகப் பிரமாண்டமான கட்சியாக வளர்த்தெடுத்து வெற்றி கண்டதைப்போன்று, சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகய (ஐக்கிய மக்கள் சக்தி) வெற்றியைத் தொடுமா என்பது கேள்விக்குறியே! 

ஆரம்ப காலத்தில் கொள்கை மாறுபாட்டினாலும் கருத்து முரண்பாட்டினாலும் கட்சிகள் பிளவுகளைச் சந்தித்திருந்தாலும், அண்மைய காலங்களில் தலைமைத்துவ போட்டியின் காரணமாகக் கட்சிகள் நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு முற்றிலும் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்படும் கருத்துகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ஆகவே, இந்தத் தேர்தலில் இவ்வாறு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துள்ள கட்சிகள் எதனைச் சாதிக்கப்போகின்றன? என்பதுதான் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ள ​கேள்வி. இந்தச் சூழலில் மக்கள் கொள்கைக்கு வாக்களிப்பதா, தலைமைக்கு வாக்களிப்பதா? என்ற முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணற வேண்டிய நிலையை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. இந்த இக்கட்டிலிருந்து வாக்காளர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளைச் சார்ந்த விடயமாகும். 

இந்தச் சூழல் பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாத்திரமன்றித் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் காணப்படவே செய்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் இந்தச் சிக்கல் காணப்பட்டாலும், அவர்கள் மக்களைக் கவர்வதற்கான செயற்பாடுகளைக் கச்சிதமாகவே மேற்கொண்டு வருகிறார்கள். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து சிலர் பிரிந்து சென்று புதிய கூட்டணிகளை உருவாக்கிக் களமிறங்கியிருக்கிறார்கள். அதேநேரம், தமிழ்த் தரப்பின் அரசியல் செல்நெறி காலாகாலமாக முரண்பாட்டு அரசியலாகக் காணப்பட்டாலும் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலிருந்து அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் காத்திரமான நடவடிக்ைக எதனையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டைச் சம்பாதித்துக்ெகாண்டிருக்கிறது. 

எனினும், இந்தத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாராக இருக்கும் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார் எனக் கூட்டமைப்பு அறிவித்திருப்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தேர்தலில் எளிதாக முடிவெடுக்கும் நிலையைத் தோற்றுவிக்கும் எனலாம். 

Comments