உற்பத்தியை திட்டமிடாமல் இறக்குமதிக்கு தடை | தினகரன் வாரமஞ்சரி

உற்பத்தியை திட்டமிடாமல் இறக்குமதிக்கு தடை

இல்லத்தரசிகள் மஞ்சள் தூள் இல்லாமல் சமையல் செய்ய பழகி விட்டார்கள். பருப்பு சமைக்கும் போது சிறிதளவு மஞ்சள் தூள் சேர்ப்போம். மரக்கறியிலுள்ள கறையை போக்க மஞ்சள் தூள் போட்டு கழுவவேண்டும் என அனைவரும் அறிவார்கள். 

சில மாதங்களாக சந்தையில் மஞ்சள் இல்லை. நாடு பூராகவும் மஞ்சளுக்கு பற்றாக்குறை உள்ளதோடு உற்பத்தி செய்யப்படும் சிறிதளவு மஞ்சளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. மஞ்சள் இறக்குமதியையும் மீள் ஏற்றுமதியையும் அரசு தடைசெய்துள்ளது. அத்துடன் ஒரு கிலோ மஞ்சளின் சில்லறை விலையை எழுநூற்றி ஐம்பது ரூபாவாக நிர்ணயித்துள்ளது. மஞ்சள் இந்நாட்டு மக்களுடைய அத்தியாவசியமான மசாலா பொருளல்ல என அதிகாரிகள் எண்ணுவதாக தோன்றுகின்றது. மஞ்சள் உணவு தயாரிப்புக்கு மாத்திரம் பயன்படும் ஒன்றல்ல. ஆயுர்வேதத்தில் பெறுமதி வாய்ந்த மருந்தாகும். இந்து பக்தர்களுக்கு மஞ்சள் நீர் தெளித்தல் கலாசார அம்சமாகும். கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. உயர்வு தாழ்வு பேதமின்றி, மத அடிப்படையின்றி அனைவரும் மஞ்சளை பயன்படுத்துகின்றார்கள். அதனால் மாதக்கணக்காக மஞ்சளுக்கு ஏற்படுள்ள தட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாதிருப்பது சிறந்த நிலைமையல்ல. 

நாட்டுக்கு இறக்குமதி செலவு பற்றிய பிரச்சினையுண்டு. அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது அப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாகும். இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மஞ்சள், கராம்பு மற்றும் மிளகு போன்ற மசாலா பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதோடு அது ஒரு வியாபாரமாக காணப்பட்டது. மீள் ஏற்றுமதியில் நிகழும் மோசடியும் நாட்டிற்குள் கொண்டு வரும் அளவும் இந்நாட்டு விவசாயிகளுக்கு பிரச்சினையாக இருந்ததோடு விவசாயிகளின் எதிர்ப்பும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைமையாக காணப்பட்டது. அந்நிய செலாவணி தட்டுப்பாடும் இறக்குமதி தொடர்பாக விவசாயிகளின் எதிர்ப்பும் இந்நாட்டு மொத்த பாவனையாளர்களுக்கும் பிரச்சினையாகவுள்ளது. விலையை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அநியாயமாக லாபமீட்டும் இடைத் தரகர்களை கட்டுப்படுத்த முடியாமலும் உள்ளது. 

அரசின் கொள்கை முடிவுகளின் படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான முடிவுகளை மாற்றுவது பிரச்சினையான விடயமல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும் வருடமொன்றுக்கு இந்நாட்டுக்கு தேவையான மஞ்சளின் அளவு அண்ணளவாக ஏழாயிரம் மெற்றிக் தொன்னாகும்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாயிரம் மெற்றிக் தொன்னாகும். மஞ்சள் பயிரிட்டு அறுவடையை பெற ஒன்பது மாதங்களாகும். அறுவடை செய்யப்பட்ட பின்னர் அதனை உலர வைக்கவும் சிறிது காலம் தேவைப்படும். இந்தியா மஞ்சளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது. உலக தேவையில் எண்பது வீதத்தை அந்நாடே வழங்குகின்றது. 

அறிக்கைகளின்படி 2014 - -2018 காலப்பகுதியில் அமெரிக்காவின் மஞ்சள் இறக்குமதி மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மஞ்சள் சேர்த்த தேனீர் பானம் பிரபலமடைந்தமையாககும் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பாரியளவில் மஞ்சள் பற்றி ஆய்வுகளை நடத்தியுள்ளன. அவற்றின் அறிக்கைகளின்படி மஞ்சள் உற்பத்திக்கு தொடர் சந்தை வாய்ப்புகள் காணப்படுகின்றது. உணவு மற்றும் பானங்களுக்கு மாத்திரமல்ல அழகுக்கலை தேவைகளுக்காகவும் புதிதாக மஞ்சளுக்கான  கேள்வி அதிகரித்துள்ளது. மஞ்சள் தட்டுப்பாட்டை பற்றி மாத்திரமல்ல எதிர்காலத்தில் ஏற்படவுள்ள கேள்விக்காகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

மஞ்சள் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதோடு இந்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு மஞ்சளை பயிரிடமுடியும். உயர் தரத்திலான விதை கிழங்குகளை வழங்க வேண்டும். விவசாயிகளை இணைத்து பாரியளவில் உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அது தனியார் வர்த்தகமாக வளர்ச்சியடைய  முடியும். சம்பிரதாய பயிர்ச்செய்கையை விட மாற்றுக் கோணத்தில் பயிச்செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவதைத் தூண்ட வேண்டும் அத்துடன் பயிர் செய்யப்படாத அரச காணிகளை விவசாயிகளுக்கோ விவசாய அமைப்புகளுக்கோ பகிர்ந்தளிக்கலாம். இது ஊக்குவிப்பாகும். இவ்வாறாக  மஞ்சள் இறக்குமதியை தடை செய்தது பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகளை எண்ணாது, திட்டமிடாமல் முடிவெடுப்பது நல்லதல்ல என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.  

Comments