வரலாற்றுச் சவாலாக வந்திருக்கும் பொதுத் தேர்தல்...! | தினகரன் வாரமஞ்சரி

வரலாற்றுச் சவாலாக வந்திருக்கும் பொதுத் தேர்தல்...!

ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான கட்டமைப்பு அந்நாட்டின் நாடாளுமன்றமேயாகும். அதனாலேயே பாராளுமன்ற ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் எத்தகைய தடைகள் ஏற்பட்ட போதிலும் அவற்றையும் தாண்டி நாடாளுமன்றத் தேர்தலை உரிய வேளையில் நடத்தி நாட்டு மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதை விட சவால்மிக்க ஒரு விடயமாகும். இது நமது நாடு அச்சவாலை சந்திக்கத் தயாராகும் தருணமாகும். நாம் எவ்வாறு அந்த  சவாலுக்கு முகங்கொடுக்கப் போகின்றோம் என்பதிலேயே நம் நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

நமது நாட்டில் பொதுத்தேர்தல் என்பது ஆயிரமாயிரம் மக்களை ஒன்றுகூட்டி பிரசாரம் நடத்தும் அரசியல் கலாசாரமாகவே இன்னும் இருந்து வருகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிவரும் இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிக வேகமாக நோய் பரவ இத்தகைய மக்கள் ஒன்றுகூடல்கள் காரணமாக அமையக்கூடும் என்ற ஐயப்பாடு நிலவி வருகின்றது.

இந்தப் பின்னணியில், கொரோனா தொற்றுநோய் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஒரு சில நாடுகளே பொதுத்தேர்தலை நடத்தி அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டதால் அதன்மூலம் மக்கள் மத்தியில் தொற்றுநோய் பரவ விடாது சாதனை படைத்திருக்கின்றன. 

இந்த வெற்றியானது மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதால் தொற்றுநோய் எனும் தடையைத் தாண்டி இந்நாட்டிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக எத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும் அவற்றை சமாளித்து புத்திசாதுரியமாக பொதுத்தேர்தலை நடத்தி முடித்து அதன்மூலம் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிர்வாகத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற குரல் எமது நாட்டிலும் மேலெழ ஆரம்பித்தது.

இதன் காரணமாகவே தேர்தல் வரலாற்றில் மக்கள் ஒருபோதும் சந்தித்திராத பாரிய இயற்கை அனர்த்தமாக தலைதூக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சத்துக்கு மத்தியிலும் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்ற உறுதிப்பாடு அரசியல் வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டது. அதற்கு இந்நாட்டின் அரசியல் சமூகம் ஏற்படுத்திய உந்துதலும் காரணமாக அமைந்தது.   அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பொதுத்தேர்தல் பற்றிய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சற்று மந்தநிலையை அடைந்திருந்தபோதிலும் தொற்றுநோய் பற்றிய பயம் படிப்படியாக தளர ஆரம்பித்ததால் தேர்தல் நடவடிக்கைகளும் சூடுபிடிக்க ஆரம்பித்ததோடு தற்போது தேர்தல் பிரசாரப் பணிகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கின்றன. இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது மக்கள் மத்தியிலும் தேர்தல் பிரசாரப் பணிகளிலும் ஒருவித பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ள உறுதியான உத்தரவாதம் காரணமாக தேர்தல் பிரசாரப் பணிகள் தொடர்பில் ஏற்பட்ட அச்சம் தற்போது ஒரளவு தணிந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றமையும் அதன்போது அவர் நடந்து கொள்கின்ற விதமும் மக்கள் மத்தியில் நிலவிய அச்சத்தை அகற்றி அவர்களை தேர்தல் பிரசாரப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வைத்திருக்கின்றது. வழக்கம் போல் நம் நாட்டு அரசியல் பிரசார மேடையில் சேறு பூசுதல் என்ற உத்தி கையாளப்பட்டு வருகின்ற பின்னணியிலும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது ஜனாதிபதி தேர்தல் பிரசார பணிகளின்போது கையாண்ட பிரசார உத்தியை அவரது கட்சியைச் சார்ந்தவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தினை மிகத் தெளிவாக வெளியிட்டிருக்கின்றார். அதாவது எதிர்த்தரப்பினர் மீதும் தமது தரப்பினர் மத்தியிலும் சேறு பூசுதல் தரக்குறைவான செயலாகும் என்பதால் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.  

மக்கள் தாம் தெரிவு செய்யும் தமது பிரதிநிதிகளின் அறிவு, ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதனடிப்படையிலேயே வேட்பாளர்களை தமது பிரதிநிதிகளாக மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதுமே ஜனாதிபதியின் கருத்தாக இருக்கின்றது. இதனாலேயே மற்றவர் மீது சேறு பூசுவதற்குப் பதிலாக தமக்கு வாய்ப்புக் கிடைக்கப்பெறும் பட்சத்தில் தம்மை தெரிவு செய்த மக்களுக்காக தம்மால் எவ்வாறான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதை பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டுமென தனது கட்சி அங்கத்தவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் மிகக் காத்திரமான பங்களிப்பினை வழங்கினார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அவர் கடமையாற்றிய காலத்தில் நகர அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதனை செயற்பாட்டு ரீதியாகவே செய்து காட்டியிருக்கிறார் என்பதால் அவரால் இந்த நாட்டை அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள். அந்தவகையிலேயே அவரது பிரசார பணிகளில் பங்கேற்று வருகின்ற பொதுமக்கள் இம்முறை அவரிடம் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்து இருக்கின்றார்கள்.

குறிப்பாக இந்த நாட்டில் எவரும் எதிர்பாராத விதத்தில் கொரோனா தொற்றுநோய் வெகுசீக்கிரமாக பரவுவதற்கு காரணமாக அமைந்தது போதைப்பொருளுக்கு அடிமையாகிய சிலரின் அசட்டுத்தனமான செயற்பாடுகளே என்பதை அறிந்த பொதுமக்கள் போதைப்பொருளின் தாக்கம் எந்நேரத்திலும் சமூகத்தின் மீது ஏற்படலாம் என்ற உண்மையினை தற்போது மிகத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை காலமும் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகுவதனால் குறிப்பிட்ட அந்த நபரும் அவர் சார்ந்த சமூகம் மாத்திரமே பாதிக்கப்படுகின்றது என்ற எண்ணமே பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

ஆயினும் போதைப்பொருள் உபயோகம் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மீதும் எதிர்பாராத விதத்தில் பாரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமையலாம் என்ற பாரிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த மேற்குறிப்பிட்ட சம்பவமே காரணமாக அமைந்திருக்கின்றது.

இதனாலேயே இந்த நாட்டிலிருந்து போதைப்பொருள் உபயோகத்தை முற்றாக அகற்றி, குறிப்பாக இளைஞர் சமூகத்தினை போதைப்பொருளில் இருந்து விடுவித்துத் தரவேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையை பொதுமக்கள் ஜனாதிபதியிடம்  முன்வைத்திருக்கிறார்கள். அக்கோரிக்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதி, நிச்சயமாக இந்த நாட்டிலிருந்து போதைப்பொருள் வியாபாரம் மற்றும் உபயோகம் ஆகியவை ஒழித்துக் கட்டப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார்.

அதற்கமைய போதைப்பொருள் தேடுதல்கள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் ஆகியவற்றை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் விளைவாகவே குறிப்பாக சில சிறைச்சாலை அதிகாரிகள் எந்த விதத்தில் தமது சுயலாபத்திற்காக பாதாள உலக செயற்பாடுகளுக்கு ஒத்தாசையாக இருந்திருக்கின்றார்கள் என்ற தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்திருக்கும் இத்தகவல்கள் இந்த நாட்டில் பாதாள உலக செயற்பாடுகள் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கின்றது, அத்தோடு போதைப்பொருள் வியாபாரம் எந்த அளவிற்கு அதனுடன் பின்னிப்பிணைந்து இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது. இதுவே இம்முறை ஜனாதிபதி அவர்களிடம் பொதுமக்கள் போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவத்தை கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கின்றது.

நாளுக்கு நாள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் இந்நாட்டின் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதோடு அதனால் பலவிதமான சமூக சீரழிவுகளுக்கு தளம் அமைத்து கொடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக நவீன தொடர்பாடல் உத்திகளை பயன்படுத்தி இளைஞர்களையும் யுவதிகளையும் விருந்துபசாரம், களியாட்டம் ஆகியவற்றின்  பால் ஈர்த்து அதன்மூலமாக அவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடுகளை சில சமூக விரோத சக்திகள் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றமை அண்மைக்காலமாக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் மிகப் பெரிய சமூக சீரழிவுக்கு காரணமாக அமைந்திருக்கும் போதைப்பொருள் பாவனை சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்முறை பொதுத்தேர்தலின் போது ஒரு முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றதை கவனிக்கக்கூடியதாக இருக்கின்றது.

எவ்வாறாயினும் உலக சுகாதார அமைப்பே மக்களை தனிமைப்படுத்துதல், சமூக செயற்பாடுகளை முடக்குதல் ஆகியன மூலம் தொற்றுநோய் மென்மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதை தவிர இந்நோயினை முற்றாக ஒழிப்பதற்கான எவ்வித காத்திரமான மருந்து வகைகளும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் பின்னணியில் நமது நாட்டில் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலானது ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் சவால்மிக்க ஒரு விடயமாகும் என்பதனை பொதுமக்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் உணர்ந்து சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.  ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்நாட்டில் பரவ ஆரம்பித்த முதல் சுற்றின்போது அதனை மிக நேர்த்தியாக கையாண்டு மக்களையும் நாட்டையும் அழிவிலிருந்து பாதுகாத்த ஒரு முன்மாதிரியான நாடாகவே நமது நாடு ஏனைய உலக நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது நீண்ட நாட்களுக்குப் பின்  மிகுந்த அர்ப்பணிப்பின் பேரில் நமது நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற நற்பெயராகும். இந்நற்பெயரை தேர்தல் நிமித்தம் கெடுத்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

ஆகையால் எதிர்வரும் பொதுத்தேர்தலை மிக நேர்த்தியாக நடத்தி முடிப்பதற்கான சகல ஒத்துழைப்பினையும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினாலும் சுகாதார துறையினாலும் அவ்வப்போது விடுக்கப்படுகின்ற சகல அறிவுறுத்தல்களையும் மிகச் சிறந்த முறையில் பேணி நாட்டின் நற்பெயரையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு நம்மவர் மத்தியில் இருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இப்பொதுத்தேர்தலை உபயோகப்படுத்திக் கொள்ள அனைவரும் உறுதிபூண வேண்டும்.

ரவி ரத்னவேல்

Comments