மனோ தொடர்பாக விடுத்த அறிக்கை; TNA யின் முடிவல்ல | தினகரன் வாரமஞ்சரி

மனோ தொடர்பாக விடுத்த அறிக்கை; TNA யின் முடிவல்ல

மனோ கணேசனை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது கொழும்புத் தமிழர்களின் கடமையென்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருப்பது கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தல்ல என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,   வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் செறிந்து வாழ்வதனால் அவர்கள் தமிழ்க் கட்சிகளை பிரதிநித்துவப் படுத்துகின்ற தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள்.  

ஆனால் கொழும்பு மாவட்ட நிலவரம் அவ்வாறானதல்ல. இதற்கு நேர்மாறானது. காரணம் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் வாழுகின்ற மாவட்டம். அங்கு வசிக்கின்ற சிங்கள மக்கள் சிங்கள தேசியக் கட்சிகளுக்கே தமது வாக்குக்களை வழங்குவார்கள்.  

ஆகவே, அங்கு இருக்கின்ற தமிழர்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது தமது விருப்பு வாக்குகளை மனோ கணேசனுக்கு வழங்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த ஆணையை விட பல மடங்கான ஆணையை வழங்க வேண்டிய கடமை உள்ளது. இந்த ஜனநாயகக் கடமையை இந்த காலத்தின் கட்டளையை கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்  

இது தொடர்பில் எமது ஊடகவியலாளர் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் கே.வி.தவராசாவிடம் தொலைபேசியில் வினவியிருந்தார்.  

இதற்குப் பதில் வழங்கிய அவர்,  

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கருத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினது கருத்தோ அல்லது தமிழரசுக் கட்சியின் கருத்தோ அல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்தாகும்.  

எதிர்காலத்தில் இது தொடர்பாக ஏதேனும் முடிவெடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். 

Comments