உரிமைகளை வென்றெடுக்க மலையக தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? | தினகரன் வாரமஞ்சரி

உரிமைகளை வென்றெடுக்க மலையக தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

மலையக தமிழ் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இம்முறை புத்திசாலித்தனமாக வாக்களிக்காவிட்டால் அவர்களது தேவைகள் பூர்த்தியாகாமல் பின்னோக்கித் தள்ளப்படலாம். அதாவது இந்திய வம்சாவளி தமிழர்களாகிய அவர்கள் மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும் போது பாடசாலை அபிவிருத்தி, கல்வி, தொழில் வாய்ப்புகள், பொருளாதாரம், சுகாதார வசதிகள், பாதை அபிவிருத்தி போன்றவற்றில் பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகின்றனர் என்றால் மறுப்பதற்கு இல்லை. பெரும்பான்மை மக்களில் அதிகமானோர் கணவன் எதிர்க்கட்சியாக இருந்தால் மனைவி ஆளும் கட்சியிலிருந்து தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். ஏன் மக்கள் மட்டுமல்ல, பெரிய அரசியல்வாதிகளும் அவ்வாறே.  

ஏன் நாம் மட்டும் ஒரே கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமா? என்ற சிந்தனை தற்காலத்தில் அடிமட்ட மலையக மக்களின் உள்ளக்குமுறலாகவே இருக்கின்றது. அரசாங்கம் அறிவித்துள்ளதற்கு அமைய ஒரு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு 700 வேலைவாய்ப்புகள் 50 கிலோமீற்றர் நீளமான காப்பட் பாதைகள் மேலும் பல சலுகைகள் கிடைக்கப்பெற உள்ளது. எனவே இவற்றை அவர்களும் பெற்று பயன் பெறுவதா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து மேலும் எதிர்ப்புகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதா? என்று சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அதாவது ஆளும் கட்சியில் போட்டியிடும் எமது தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிப்பதன் மூலம் நாமும் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி எமது உரிமைகளை வென்றெடுக்கலாம்.  அவ்வாறு தமிழ் வேட்பாளர்கள் ஆளும் கட்சியில் போட்டியிடாத சந்தர்ப்பத்தில் குறிப்பாக இரத்தினபுரி வாழ் மக்கள் என்ன செய்யலாம்? எமது தொகுதியில் உள்ள ஒருவருக்கு எமது கோரிக்கைகளை முன் வைத்து வாக்களித்து மேலே கூறப்பட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதோடு எமது வாக்குகள் கணிசமான அளவு ஆளுங்கட்சிக்கு இடப்பட்டிருந்தால் மாத்திரமே அடுத்தடுத்து நடைபெறவிருக்கின்ற மாகாணசபை, உள்ளுராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியில் போட்டியிட தமிழ் உறுப்பினர்களுக்கும் இடம் கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

ஆட்சி பலம் இல்லாத கட்சிக்குள் நுழைந்து வாக்களிக்கும் மக்களின் அபிலாஷைகளை சிதைக்கும் செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தில் நிகழ்ந்தமை யாவரும் அறிந்த விடயமே. எனவே இதுவரைகாலம் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத போதும் எமது வாக்குகள் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அடையாளமற்ற மலையக சமூகத்தினராக நாம் தொடர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எமக்கான அபிவிருத்திகள் மந்தகதியிலேயே காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக ஏனைய சமூகத்தினரைப் போல் உரிமை பேசி காலத்தை வீணடிக்கும் நிலையிலிருந்து விடுபட்டு அபிவிருத்தியுடன் கூடிய உரிமையை பெற்றுக்கொள்வதற்கு புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும். நாம் முன்னேற வேண்டுமென்றால் எம் சமூகம் முதலில் முன்னேற வேண்டும் என்ற உயரிய சிந்தனை எம்மிடம் இருக்கவேண்டும். 

அண்மையில் தபால் மூலமானவாக்களிப்பு நிறைவடைந்தது.இதில் புத்திஜீவிகள் எந்தளவுக்கு சிந்தித்திருப்பார்கள் என்பதுதேர்தல் முடிவுகளின் போது எமக்கு தெரிய வரும். எனவே நாம் அதிகாரத்தில் அல்லது அமைச்சு பதவிகள்கூட பெற முடியாதவர்களுக்கு வாக்கினை பெற்றுக் கொடுப்பது எம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் நிலைக்கு ஒப்பாகும். ஆளும் கட்சியில் போட்டியிடும் பிரதிநிதிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் நாமும் அரசாங்கத்துடன் தான் இருக்கின்றோம் நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரத்தினபுரி மாவட்டத்திலும் இதனை நிரூபிக்க வேண்டியது அவசியமானதாகும். அளிக்கப்பட்ட தமிழ் வாக்குளின் எண்ணிக்கையிலிருந்து எதிர்க் கட்சி தமிழ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும் போது ஆளும் கட்சிக்கு தமிழ் வாக்காளர்கள் அளித்துள்ள வாக்குகளை ஓரளவு அண்ணளவாகக் கணிக்கக் கூடியதாக இருக்கும். எனவே ஆளும் கட்சிக்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது.

உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை, சொந்த காணியுடனான வீடமைப்புக்கள் இல்லாமை, பாதைகள் இருந்தும் போக்குவரத்து வசதிகள் இல்லாமை, வீடுகள் உடைந்து வீட்டுக்குள் வாழும்போதே வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் கொண்டிருக்கும் அவல நிலை, மலசல கூடங்கள் இல்லாத வீடுகள் என்பனவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கான தீர்வுதான் என்ன? எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வரும்வரை இவர்கள் இவ்வாறே வாழ்வதா? அல்லது அதனை மாற்றுவதா? உங்கள் உயரிய நோக்கம்இவர்களுக்கு சேவை செய்வதென்றால் வெற்றிபெறும் சாத்தியமுள்ள கட்சிக்கு வாக்களிக்கும் படி மக்களுக்கு கூறுங்கள். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று எமது அப்பாவி மக்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொடுத்து அவர்களின் முன்னேற்றத்தை தடுக்காதீர்கள். தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல சிங்கள கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை கல்வி, சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக மேற்கொண்டு நாடு முழுவதும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே தான் கிராம மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கின்றனர். இவ்வாறான நிலை எமது சமூத்தினர் மத்தியில் உருவாக வேண்டும். மலையக சமூகம் விழிப்படைவதோடு தன்னிறைவான அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்கு இத்தேர்தலை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மலையக பிரியன்

Comments