புதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக!

அடுத்தவாரம் இதே நேரத்தில் இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். மக்களின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொண்டு தரப்பட்ட பொறுப்பை ஏற்று நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்பைச் செய்யவேண்டியது தெரிவு செய்யப்படப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.  

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தூங்கியே காலம் கழித்த உறுப்பினர்கள் குறித்து நாடு நன்கறியும். பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது உறுப்பினர்களின் பிரசன்னம் இன்மையால் வெறிச்சேடிப் போன சபா மண்டபத்தையும் அவ்வப்போது கண்டோம். மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளில் சிலர் பாராளுமன்றத்தில் வாயே திறக்காத சந்தர்ப்பங்களையும் கண்டோம். பாராளுமன்ற கலரியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அருவருக்கத்தக்க வகையில் தெருச்சண்டியர்கள் போல மேன்மைமிகு பாராளுமன்ற சபா மண்டபத்தில் கேவலமாக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தையும் அவதானித்தோம். ஹன்சாரட்டில் உள்ளடக்கமுடியாதவாறான அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களில் நாட்டின் அதியுன்னத சபையின் கெளரவத்தை காற்றிலேவிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களையும் பார்த்தோம்.  

அதேவேளை எவ்விதமான தூண்டுதல்கள் வந்தாலும் பாராளுமன்றத்தின் கெளரவத்தை விட்டுக்கொடுக்காமல் சாடவேண்டிய இடத்திலும் கூட மிக நாகரிகமான விதத்தில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கோண்டு தொழில்சார் அரசியல்வாதிகளாக நடந்துகொண்ட கனவான்களையும் இந்தநாடு கண்டது. பாராளுமன்றம் என்பது நாட்டின் முதன்மை இடம் மட்டுமன்றி மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இடமாகும். மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு அங்கு செல்பவர்கள் தமது கெளரவத்தையும் நம்மைத் தெரிவுசெய்த மக்களின் கெளரவத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவர்களது தலையாய கடமை.  

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சபையிலும் வேறு குழுக்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பயிற்சி வழங்கப்படுகிறது. பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து போதிய அறிவுறுத்தல்களும் அங்கே உள்ள உரிய அதிகாரிகளால் வழங்கப்படுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற காரணத்தால் உறுப்பினர் ஒருவர் அங்கே பேசும் விடயங்கள் குறித்து பெரும்பாலும் அவருக்கெதிராக சட்ட ரீதியில் செயற்பட முடியாது. இந்த விதிவிலக்கினை பயன்படுத்தி எதனையும் பேசலாம் என்று வாயைத்திறப்பது உறுப்பினர்களின் அறிவீனத்தையும் ஆளுமைக் குறைபாட்டையும் வெளிப்படுத்தும். இம்முறை புதியவர்கள் பலர் பாராளுமன்றத்திற்குச் செல்லக்கூடும். இந்த இளைஞர்கள் குழாம் முன்னேற்றகரமான புதிய ஒரு பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கலாம். உடனடியாக சாத்தியப்படாவிட்டாலும் படிப்படியாக முன்மாதிரியாகச் செயற்பாட்டின் ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கலாம்.  

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் அவசியமில்லை. இதனால் கட்சித்தலைமைகளால் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களுக்கே மக்கள் தமது புள்ளடியை இடவேண்டும். எனவே கட்சிகளே சரியான கல்வித்தகுதி சமூகப் பொறுப்புணர்வு போன்ற தகுதி விதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை முன்னிறுத்த வேண்டும். கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளருக்கே மக்களின் தெரிவு அமைவதால் வாக்காளர்களைப் பொறுத்தமட்டில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடாகவே அது அமையும்.  

இன்றைய சூழலில் இந்தத் தேர்தலானது நாம் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் துருவமயப்படுத்தப்பட்டுள்ள இலங்கைவாழ் மக்களின் ஏக்கங்களை வெளிப்படுத்தும் தேர்தல் முடிவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற முடிவுகள் அவை ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் பற்றி இப்போதே எதிர்வுகூற முடியாதாயினும் பதவிக்கு வரப்போகின்ற எந்த அரசாங்கமும் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களித்திருந்த போதிலும் நாட்டின் அனைத்து இன மொழி மதம் சார்ந்த மக்களையும் அரவணைத்துச் செல்லாவிடில் நாட்டின் நிலையான பொருளாதார மேம்பாட்டிற்கு அவசியமான அமைதியும் உறுதியும் கொண்ட புறச்சூழலை உருவாக்குவது சாத்தியமல்ல.  

பெரும்பான்மை சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லாவிடினும் அரசியல் பின்னூட்டல்களால் தவறுதலான தகவல்களாலும் வழிகாட்டல்களாலும் அவ்வாறு மாறக் கூடும். எண்ணிக்கையில் சிறிதாகவுள்ள தமது சகோதர இனங்கள் தமது தனித்தவத்தையும் சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள குரல் எழுப்பினால் அதனை இனவாதமாக சித்தரிக்கும் மனோ நிலையிலேயே தற்போதைய சூழல் பின்னப்பட்டுள்ளது. இப்போக்கு இன்னும் முனைப்படையக் கூடிய பின்புலங்கள் வலுவடைந்து செல்கின்றன. சர்வதேச ரீதியாகவும் இனவாத சிந்தனைகள் முனைப்படைந்து செல்வதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவதானிக்க முடிகிறது. இது உள்ளூர்வாசிகளுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடும்.  

சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரையில் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலைமையே அவதானிக்கப்படுகிறது. இருக்கிற கோவணத்தையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை என்ற மரத்தில் படரும் கொடிகளாகவோ ஒட்டுண்ணித் தாவரங்களாகவோ சகோதர இனங்களைக் கருதாமல் இந்நாட்டின் பெருமைமிகு பிரசைகளாக ஏனையவர்களைப் போலவே அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அவர்களை வளப்படுத்தி அரவணைத்துச் செல்லவேண்டியது தெரிவு செய்யப்படப்போகும் அரசாங்கத்தின் கடமையாகும். தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்கிவைக்க முடியாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் ஐனநாயக சுதந்திரம். அதில் தலையீடு செய்வதோ அதை அடிப்படையாக வைத்து அவர்களை ஒதுக்கிவைப்பதோ நாகரிகம் ஆகாது.  

'கோவிட் 19' இனால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இன ரீதியான மொழி ரீதியான மத ரீதியான வேறுபாடுகளை புறந்தள்ளி இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி தண்டவாளத்தில் மீளநிறுத்தி இயக்கிச் செல்வதற்கு எல்லாச் சமூகங்களின் ஒத்துழைப்பும் நாட்டிற்குத் தேவையாகும்.  

கடந்த இரு வருடங்களாக இலங்கையில் நிலவிய நிச்சயமற்ற அரசியல் சூழல் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வரலாம் என எதிரபார்க்கப்படுகிறது. நிச்சமற்ற அரசியல் சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதோ கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதோ சாத்தியப்படாது. சர்வதேச சூழலும் அதற்கு வாய்ப்பாக அமையாது.  

எனவே புதிய ஒரு அரசாங்கத்தின் கீழ் நிச்சயமற்ற நிலைமைகள் மாற்றமடைந்து அடுத்துவரும் காலப்பகுதியில் வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகளின் பின்னூட்டல்களோடு நாடு எதிர்நோக்கும் சவாலாகிய மெதுவடைந்த பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் செயல்பாட்டு நடைமுறைக்கு வரவேண்டும்.  வேலையின்மை உயர்ந்து செல்லும். விலைவாசிகள் சரிந்து செல்லும். மக்களின் வாழ்க்கைத்தரம்  சரிவடையும் செல்லும் வறுமைநிலை முட்டிச்செல்லும், கடன்சுமை, தேய்வடையும் நாணயப்பெறுமதி போன்றவற்றிற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.  

இம்முறை தேர்தல் வன்முறைகள் குறைந்திருக்கின்றன. கூச்சல்கள், கத்தல்கள், கோஷங்கள் குறைந்து ஊடகங்கள் வாயிலான தேர்தல் பிரசாரங்கள் மேற்குலக நாடுகளில் நடப்பதுபோல நடந்திருக்கின்றன. செலவுகளையும் நேர விரயத்தையும் குறைப்பதாக இது காணப்படுகிறது.  

தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இதே முன்மாதிரியைப் பின்பற்றி அநாவசிய, ஆடம்பர செலவினங்களை அமைச்சுக்கள் மற்றும் ஏனைய தாபனங்களையும் ஆளணியையும் நியமிக்கும் போதும் விளம்பர நோக்கத்திற்காக அரச உற்சவங்களை மேற்கோள்ளும் போதும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணத்தில் கணிசமான தொகையை மீதப்படுத்தலாம்.  

ஒரு புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்ததன் மூலம் சாதாரண குடிமகன் எதிர்பார்ப்பதெல்லாம் வன்முறைகளற்ற சுத்தமான சுற்றுச் சூழலைக் கொண்ட ஒரு அமைதியான இடத்தில் அடிப்படை வசதிகளைக் கொண்ட இருப்பிடத்தில் வாழும் அதேவேளை, தகுதிக்கேற்ற ஒரு தொழில் அதன் மூலம் குடும்பத்தை கொண்டுசெல்லப் போதுமான வருமானம் அத்துடன் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய வசதி, தான் விரும்பும் மொழியைப் பேசி மதத்தைப் பின்பற்றிதான் விரும்பும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று சமமாக மதிக்கப்படும் ஒரு வாழ்க்கையை வாழ அரசாங்கம் உறுதியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பே!  

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில் மக்கள் நலனுக்கான நிறுவன ரீதியான கட்டமைப்புகள் சுயாதீனமான அவற்றுக்குரிய அதிகாரங்களோடு இயங்குவது சர்வதேச ரீதியில் ஒரு நாட்டின் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே நாட்டின் கீர்த்தி நாமத்தை சர்வதேச மட்டத்தில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பும் புதிய அரசாங்கத்தைச் சாரும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி,

பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments