மூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம் | தினகரன் வாரமஞ்சரி

மூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம்

இன்னும் மூன்று நாட்களில் பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் 06.08.2020 மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி எப்படி இருக்கப்போகிறது? யாருடைய கைகளில் இருக்கப்போகிறது? எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடியவர்கள் யார்? யாருக்கு வெற்றி? யாருக்குத் தோல்வி? மக்கள் எத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்கள்? மக்களுடைய எதிர்பார்ப்பும் எண்ணமும் என்ன என்பதெல்லாம் தெரிந்து விடும்.

ஆகவே அடுத்துள்ள மூன்று நாட்களுக்கிடையிலான தேர்தல் பரபரப்பிலும் பதற்றத்திலும் மக்களும் வேட்பாளர்களும் அரசியல் அவதானிகளும் உள்ளனர். ஏன் வெளியுலகமும் இந்தத் தேர்தலைக் குறித்து அவதானித்துக் கொண்டுதானிருக்கிறது. பூகோள அரசியல் தேவையும் யதார்த்தமும் அப்படி.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த மூன்று நாட்களுக்கிடையில் நடக்கப்போகும் அந்த அதிசயங்கள் எப்படியிருக்கும்? என்பதே எல்லோருடைய தலையிலும் ஏறியிருக்கும் கேள்வியாகும்.

தாங்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம். எந்தத் தரப்பின் வெற்றியை விரும்புகிறோம் என்று மக்கள் தீர்மானித்தாலும் தேர்தல் முடிவுகள் எல்லாம் அதன்படி அமைந்து விடுவதில்லை. அது பல சிடுக்குகளும் சூட்சுமங்களும் நிறைந்தது. அவை எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் சிதைத்து விடக்கூடியன.

இப்போதுள்ள கள யதார்த்தத்தின்படி மிகச் சவாலான ஒரு நிலையில்தான் வடக்குக் கிழக்கின் தேர்தல் யதார்த்தமும் தேர்தல் முடிவுகளும் இருக்கப்போகின்றன. தேர்தலுக்கு முன்பே இந்தக் கவலையும் துயர நிலையும் காணப்பட்டது.

2009 இல் 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து, சிதைந்து தனக்கெதிராகவே பல தரப்புகளை – போட்டியாளர்களை உருவாக்கி விட்டுள்ளது. “தலைவர் பிரபாகரன் எதிரும் புதிருமாக இருந்தவர்களை ஒருங்கிணைத்து 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்டமைப்பாகக் கூட்டமைப்பை சம்பந்தனின் கைகளில் விட்டுச் சென்றார். சம்பந்தனோ இன்று எல்லாவற்றையும் உடைத்துச் சிதைத்து விட்டு தன்னுடைய வெற்றியே நிச்சயமற்ற நிலையில் இருக்கிறார்” என விடுலைப்புலிகளின் மூத்தபோராளியாக இருந்த ஒருவர் துக்கம் தோயச் சொன்னார்.

ஏறக்குறைய இதே தவறையே முஸ்லிம் காங்கிரசும் செய்திருக்கிறது. தலைவர் அஷ்ரப் தொடங்கிய இடம் எங்கோ. இப்போது ஹக்கீம் நிற்கும் இடம் வேறு எங்கோ என. இதனால் முஸ்லிம் காங்கிரசுக்கெதிராக அல்லது போட்டியாக பல தரப்புகள் இன்றுள்ளன.

அரசியற் கட்சிகளின் நீண்டகால வரலாற்றில் இவ்வாறான உடைவுகளும் வெளியேற்றங்களும் நிகழ்வது வழமை. அல்லது தவிர்க்க முடியாது. ஆனால் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மிகமிக நெருக்கடியைச் சந்தித்திருக்கும் ஒரு வரலாற்றுச் சூழலில் அவற்றுள் மேலும் மேலும் பிளவுகளும் உடைவுகளும் நிகழ்வதென்பது சனவிரோதமானது. முட்டாள்தனமானது. பொறுப்பற்றது. ஆனாலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான பொறுப்பை கூட்டமைப்பின் தலைமையும் முஸ்லிம் கொங்கிரஸின் தலைமையும் ஏற்றே ஆக வேண்டும்.

ஜனநாயக முறைப்படி பல தரப்புகள் போட்டியிடுவதும் பல்வேறு அணிகள் களமிறங்குவதும் ஒரு வகையில் சிறப்பே. அப்பொழுதுதான் வளர்ச்சி ஏற்படும். வரலாற்று விதியின் போக்கில் தேக்கம், தவறான சூழலில் இந்த நிலை நிகழ்ந்தே தீரும். என்றாலும் அவை உட்பகை, சமூகச் சிதைவைக் கொண்டிருக்கக் கூடாது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சில நல்ல விளைவுகளும் நிகழக்கூடும். அப்படி ஏதும் நிகழ்ந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

இப்போது தென்படுகின்ற நிலைமைகளின்படி திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகும் நிலையே உண்டு. இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புண்டு. இந்தச் சூழலில் பிளவு படாத ஒருமித்த வாக்களிப்புக்கான சூழலே பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும். இந்தத் தடவை நிலைமை வேறாக உள்ளது.

திருகோணமலையில் வலுவானதொரு போட்டிச் சூழல் காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் பெரும் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நகர்ப்புறத்தில் எப்படியும் சம்பந்தனை வெற்றியடையச் செய்ய வேண்டும். இறுதிச் சந்தர்ப்பத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால், நகருக்கு வெளியே நிலைமை வேறு. அங்கே மீன் சின்னத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் ரூபனை வெற்றியடைச் செய்ய வேண்டும் என்ற முனைப்புக் காணப்படுகிறது. இந்தப் பிரதேசங்களில் ரூபனுடைய பணிகள் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. இதனால் ரூபனுக்கும் இந்தப் பகுதி மக்களுக்கும் இடையிலான உறவும் நெருக்கமும் கூடுதலாக உண்டு. நகரத்தில் சம்பந்தனுக்குப் போட்டியாக கஜேந்திரகுமார் அணியின் சைக்கிள் சின்னமும் உண்டு. ஆகவே சம்பந்தன் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார். கூட்டமைப்பில் மட்டுமல்ல, தமிழ் அரசியலில் மட்டுமல்ல, தன்னுடைய சொந்த மாவட்டத்திலும் இன்று கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் சம்பந்தன்.

ஆனால், இந்தளவு நெருக்கடி முஸ்லிம் தரப்பில் இல்லை என்பது சற்று ஆறுதலான விசயம். அங்கே ஒரு ஒருங்கிணைவுண்டு. அதாவது முஸ்லிம் பிரதிநிதித்துவம் எப்படியாவது காப்பாற்றப்பட்டு விடும்.

திருகோணமலையைப்போலவே அம்பாறையிலும் கூட்டமைப்பு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு தடவை தன்னுடைய உறுப்பினரான பியசேன என்பவரைக் கூட்டமைப்பு இழந்திருந்தது. கூட்டமைப்பை விட்டுப் பியசேன வெளியேறி அரசாங்கத் தரப்போடு இணைந்தார். இவ்வாறு அரசுடன் இணைந்து செயற்பட்டதில் பியசேனதான் முதல் ஆளும் கடைசி ஆளுமல்ல. ஏற்கனவே செல்லையா இராசதுரை தொடக்கம் அண்மையில் அரசுக்கு ஆதரவாக மாறிய தங்கேஸ்வரி, வியாழேந்திரன் வரையில் பலருண்டு. இதற்கான காரணங்களும் உண்டு, வடக்கின் யார்த்தம் வேறு. கிழக்கின் யதார்த்தம் வேறு. ஆகவே ஒரு பொது அளவீட்டின்படி எதையும் தீர்மானிக்க முடியாது.

கிழக்கின் அரசியல் யதார்த்தம் முற்றிலும் வேறானது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான அணுகுமுறையும் வேலைத்திட்டங்களும் வேறாக இருக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கக்கூடிய நிலையில் எந்தத்தமிழ்க்கட்சியும் இல்லை. இதனால் அம்பாறையில் இந்தத்தடவை பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. அங்கே விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியான கருணா களமிறங்கியுள்ளார்.

கருணாவின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றவர்களில் பலரும் கருணா அம்பாறையில் வெற்றியடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தவர்களாக இருந்து தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்கள் கூட கருணாவின் வெற்றி அவசியமானது என்கிறார்கள். இவ்வளவுக்கும் கருணாவின் அரசியலுக்கும் இவர்களுக்குமிடையில் எதிர்ரெதிர் நிலைப்பாடே உண்டு. ஆனாலும் இவர்கள் கருணாவின் வெற்றியை விரும்புகின்றனர். இதற்குக் காரணம் அம்பாறையைக் காப்பாற்றக் கூடியவர் கருணாவே என்றிருக்கும் நம்பிக்கையே.

கருணாவோ ஆயுதந்தாங்கிய போராளியாக இப்பொழுதில்லை. தளபதி என்ற அடையாளம் காலாவதியாகிப்போன ஒன்று. என்றபோதும் கருணாவிடமுள்ள பிரதேசப் பற்றும் அங்குள்ள மக்கள் மீதான கரிசனையும் அம்பாறைக்கு கருணா வேண்டும் என்பதை வலிறுத்துகின்றன என்கின்றனர் இவர்கள்.

கருணாவுக்குப் போட்டியாளராக நிற்பவர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கோடீஸ்வரன். ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் கோடீஸ்வரன். பெயருக்கு ஏற்றமாதிரி இந்தத் தேர்தலில் தாராளமாகச் செலவு செய்து தேர்தலை எதிர்கொள்கிறார் கோடீஸ்வரன் என்றொரு தகவலும் உண்டு. ஏனென்றால், இது அவருக்கும் கூட்டமைப்புக்கும் வாழ்வா என்ற சவாலை ஏற்படுத்தியிருக்கும் களம்.

இந்த இருவருக்கிடையிலான கடும் போட்டியில் வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்பதை விட இருவருக்குமே கிடைக்காது விட்டால், அதனுடைய விளைவு எப்படியாக இருக்கும்? என்ற கவலையே அம்பாறையைக் குறித்துச் சிந்திக்கும் தமிழர்களின் மத்தியில் உண்டு.

இதேவேளை கருணாவோ முஸ்லிம் வெறுப்பை உச்சத்தில் கொண்டிருக்கிறார். இது அங்கே சமூக அமைதிக்கு எதிரான ஒன்று.

இதனால் முஸ்லிம்களில் ஒரு சாரார் கோடீஸ்வரனுக்கு வாக்களிக்கக்கூடும் என்ற நிலையும் உண்டு. இதேவேளை அம்பாறையில் முஸ்லிம்களின் அரசியல் வலுவைச் சிதையை விடக்கூடாது என்ற எண்ணம் முஸ்லிம்களிடத்தில் இருக்கிறது. கிழக்கில் முஸ்லிம்களுக்குச் சவாலான களம் அம்பாறையே. இங்கேதான் முஸ்லிம் சமூகம் அதிகமதிகம் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

இவ்வாறான ஒரு நெருக்கடிச் சூழலில் தமிழர்களும் முஸ்லிம்களும் எப்படி திருகோணமலையையும் அம்பாறையையும் காப்பாற்றப்போகிறார்கள்? அதாவது இரண்டு நெருக்கடிக் களத்தையும் வெற்றி கொள்வதற்காக எத்தகைய பொறிமுறைகளை இரண்டு சமூகங்களும் வைத்துள்ளன? இதைப்பற்றிய புரிதல் இந்த இரண்டு சமூகங்களின் அரசியல் தலைமைகளுக்குண்டா?

இன்னும் மூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம் – உண்மை என்னவாக இருக்கப்போகிறது?

கருணாகரன்

Comments