ஜனநாயகக் கடமைக்கு இன்னமும் மூன்றே தினங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஜனநாயகக் கடமைக்கு இன்னமும் மூன்றே தினங்கள்

ஒவ்வொரு பிரஜையும் அரசியலில் பற்கேற்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் ஜனநாயக உரிமையைப் பிரயோகிப்பதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. வாக்குரிமை மூலம் இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் இலங்கையின் 16,263,885வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  

கொவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள், சுகாதார விதிமுறைகளுக்கமைவாகவே தேர்தல் பரப்புரைகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. இன்று நள்ளிரவுடன் முற்றுப்பெறவுள்ள தேர்தல் பிரசாரப் பணிகள், கூட்டங்களில் மக்கள் 50 பேரோ அல்லது 100 பேரோ மட்டுமே பங்குபற்றலாம் என விதிக்கப்பட்ட தடைகள் துண்டுப்பிரசுர விநியோகத்துக்கு விதிக்கபட்ட கட்டுப்பாடுகள், கூட்டங்களில் சமூக இடைவெளி பேணல், சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் என்பனவற்றால் சோபையிழந்து போயின. தொலைக்காட்சிகளில் காரசாரமான விவாதங்கள், தேரதல் பரப்புரைக் கூட்ட ஒளிபரப்புகள் இடம்பெற்றாலும், கொவிட் அச்சுறுத்தல் பொதுத் தேரதல் வாக்களிப்பை பாதிக்கலாம் என்ற அச்சம் பரவலாகவே நிலவுகின்றது.  

கொவிட் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் பொருளாதார சீர்குலைவுகளையும் ஏற்படுத்தியதோடல்லாமல், மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையையும் பறித்திருக்கின்றது.  

அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தலுக்கான மாநில மட்ட ஆரம்ப வாக்குப்பதிவுகளை சில மாநிலங்களில் ஒத்தி வைத்தது. இத்தாலி, மசிடோனியா, சேர்பியா, ஸ்பெயின், ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளிலும் தேர்தல்கள் பிற்போடப்பட்டன.  

சில நாடுகளில் ஆளும் தரப்பு, தன்னை பலப்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற கொவிட் அச்சுறுத்தலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இலங்கை அரசோ மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 மற்றும் ஜுன் 20 என குறிக்கப்பட்ட இரண்டு தினங்களிலும் தேர்தலை நடத்தமுடியாமல் ஒத்தி வைக்கப்பட்டாலும் மீண்டும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என உறுதியாக அறிவித்தது. காரணம் அரசு மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கு மதிப்பளித்தமைதான்.  

உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில்தான் வாக்களிப்பதற்கான தகுதிகளாக பாலினம், சொத்து, கல்வித் தகுதி போன்றவை இன்னமும் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதே பொதுவான நிலையாகும். பல போராட்டங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் வென்றெடுக்கப்பட்ட வாக்குரிமையின் பலத்தை மக்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையென்பதே பல ஆய்வாளர்களின் கருத்து.  

கடந்த கால அரசுகளின் திறமையின்மை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பன தேர்தல்கள் பற்றிய நம்பிக்கையீனத்தையும் சலிப்பையுமே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் கொவிட் அச்சமும் மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வத்தை குறைத்திருக்கின்றது என்பது உண்மையானாலும் இம் மனப்பாங்கு களையப்பட வேண்டும்.  

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக தேவையில்லாமல் வீட்டுக்கு வெளியே செல்லவேண்டாம் என மக்கள் எமது சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர். எனவே வயோதிபர்கள் இந்த அச்சத்தின் மத்தியில் வாக்களிக்கச் செல்ல ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களும் பாதுகாப்பாக வாக்களித்துச் செல்லலாம் என்ற உறுதிப்பாட்டை தேர்தல் ஆணைக்குழு தந்துள்ளது.  

தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்தது முதல் வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணுதல் உட்பட அனைத்துச் செயற்பாடுகளின் போதும் கடைப்பிக்கப்படுவதற்கான சுகாதார விதிமுறைகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதிமுறைகளுக்கமைவான தேர்தல் ஒத்திகைகளும் ஏற்கனவே வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் முகக் கவசமின்றி யாரும் நடமாட முடியாது. சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். அதாவது ஒவ்வொருவருக்கிடையிலும் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியாவது பேணப்பட வேண்டும். வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வோர் தங்கள் கைகளைக் கழுவுவதோடு தொற்று நீக்கிகளும் வைக்கப்பட வேண்டும். இவ்விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.  

கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தை விடுத்து மக்கள் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே கொரோனா அச்சமின்றி தகுதியுடைய சகலரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.  

நூறு சதவீத வாக்குப் பதிவு இடம்பெறும் போதுதான் முழுமையான ஜனநாயகம் நம்மை வந்தடைகின்றது எனும் உண்மையை நாம் என்று விளங்கிக் கொள்ளப்போகின்றோம்? 

எமது வாக்குரிமையைப பயன்படுத்துவதன் மூலம் சிறந்த ஜனநாயத்தை நிலைநாட்டுவதற்கான தொடக்கப்புள்ளியாக நாம் ஏன் இருக்கக்கூடாது? 

சிறந்ததோர் ஆட்சியை நிறுவுவதற்கான திறவுகோல் எமது விரல்நுனியில் இருக்கையில் பின்னிற்பானேன்?    

Comments