வாக்கெடுப்பு எனும் பெயரில் வந்திருக்கும் வாய்ப்பு...! | தினகரன் வாரமஞ்சரி

வாக்கெடுப்பு எனும் பெயரில் வந்திருக்கும் வாய்ப்பு...!

'நாம் அளிக்கும் வாக்குகள் நமது  வாழ்க்கையை மட்டுமன்றி எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் சக்தியை கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு வாக்காளர்களினதும் சமூகப் பொறுப்பாகும்'

தனக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் வாக்கினை கொண்டு சரியான பிரதிநிதியை தெரிவு செய்வதன் மூலம் நாட்டுக்கு நல்லதை செய்யத்தக்க சாதகமான பங்களிப்பை வழங்குவதா அல்லது கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத, தகுதியற்ற ஏமாற்றுக்காரர்கள் தெரிவாக வழிவகுத்துவிட்டு தமக்கும்  நாட்டிற்கும் தீங்கை விளைவித்துக் கொள்வதா என்ற தீர்மானத்தை எடுக்கக்கூடிய அருமையான வாய்ப்பே இப்போது வாக்கெடுப்பு எனும் பெயரில் உங்கள் முன் வந்திருக்கின்றது. இதனை வாக்காளர்கள் என்ற வகையில் நீங்கள் எத்தனை சாதுர்யமாக பயன்படுத்திக்கொள்ளப் போகின்றீர்கள் என்பதிலேயே உங்களதும் உங்கள் தாய் நாட்டினதும் எதிர்காலம் தங்கியிருக்கின்றது.

நமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் வரலாறு காணாத வைரஸ் தொற்றுநோயினால் இயல்பு நிலையை இழந்து புதிய இயல்பு நிலைக்கு பழகிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நாட்டின் பொதுத் தேர்தலை நடத்துவது என்பது சவால்மிக்க ஒரு விடயமாகும்.

ஆகையால் அந்த சவால்களுக்கு மத்தியிலும் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பானது மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த ஒரு சிறந்த வெற்றியாகும்.

இவ்வெற்றியானது சற்று வித்தியாசமான பின்னணியில் பல்வேறு தடைகளைத் தாண்டி கிடைத்தது என்பதையும் அதனை உரிய முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

ஒரு நிலையான அரசாங்கத்தை அமைத்து முன்னுதாரணமான அரசியல் கலாச்சாரத்தை இந்நாட்டில் நிறுவுவதற்கு மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அருமையான வாய்ப்பு  அதிகாரப் போட்டி காரணமாக கைநழுவிப் போனதன் பின்னர் மீண்டும் இந்த நாட்டை ஒரு நிலையான அரசாங்கத்துடன் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்பதை வாக்காளர்கள் புரிந்து செயல்படுவதே சாலச்சிறந்தது.

ஏனெனில் எதிர்பாராத பாரிய பொருளாதார பிரச்சினைகளை உலகம் எதிர்நோக்கிவரும் இக்காலகட்டத்தில் அதனால் நமது நாட்டிற்கு ஏற்படக்கூடிய பல்வேறு சமூக, பொருளாதார தாக்கங்களை முன்கூட்டியே கண்டறிந்து நாட்டைக் காப்பாற்றத்தக்க உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றைய முக்கிய தேவையாகும்.  இதனை வெற்றி கொள்வதே இன்று  நாடு முகங்கொடுக்கும் மிகப்பெரிய சவாலாகும். எனவே நமது நாட்டை இந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான சாத்தியமான உத்திகளை கையாள வேண்டிய தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது. அதற்கான காத்திரமான வழிகாட்டலை வழங்கத்தக்க பிரதிநிதிகளை இத்தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

நாட்டைப் பற்றியோ நாட்டின் எதிர்காலம் பற்றியோ தூரநோக்கற்ற விதத்தில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட 19ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தினால் அரச தலைமைக்கும் அரச நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்நாடு சமூக, பொருளாதார சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லப்படுவதற்கு பதிலாக பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்ட 5 ஆண்டு காலத்தை கடந்து  மீண்டும் புதிய வேகத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருவதை  மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் வெறும் வாய்பேச்சுக்கள் மூலம்  நாட்டை இன்றிருக்கும்   நிலையிலிருந்து ஓர் அங்குலமேனும்  முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதே யதார்த்தமாகும்.

ஆகையால் ஆற்றல், அறிவு, செயற்திறன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி  நம் நாட்டை சமூக, பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடையச் செய்வதற்கான உண்மையான அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் உள்ளவர்களை தமது பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதற்கு வாக்காளர்கள் உறுதிபூண வேண்டும். நாட்டு மக்கள் அதனை சரிவர செய்யத் தவறும் பட்சத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதென்பது மீண்டும் ஒரு கனவாகவே அமைந்துவிடும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

இலங்கை நாட்டை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துவந்த பல்வேறு உலக நாடுகள் இன்று சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் பாரிய வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில் நமது நாடு தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருந்து வருவதற்கான முக்கிய காரணம் நாம் சரியான மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்காததேயாகும்.   நாட்டுப்பற்றாளர்களை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தொடர்ந்தும் மேடைப் பேச்சுக்களை நம்பி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ததன் விளைவே இதுவாகும்.

ஆகையால் அத்தவறை மீண்டும் செய்யாதிருப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இதனை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாடு கல்வி ரீதியில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாகவே கருதப்படுகின்றது. ஆயினும் அந்த வளர்ச்சியானது எந்தளவிற்கு அரசியல் அறிவாக வளர்ச்சியடைந்திருக்கின்றது என்ற விடயம் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

நமது நாட்டை விட பின்தங்கிய நிலையில் இருந்துவந்த சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இன்று அடைந்திருக்கும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது அந்த நாட்டு மக்கள் தமது நாட்டை உண்மையாக நேசிக்கும், நாட்டையும் மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற இலட்சியத்தையும் அதனை செயற்பாட்டு ரீதியில் சாதிக்கத்தக்க அறிவு, ஆற்றல், திறமை ஆகியவற்றையும் கொண்டிருந்த, இலஞ்ச, ஊழலுக்கு அடிபணியாத, தொலைநோக்கு மிக்க அரசியல்வாதிகளை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தமையேயாகும்.

ஆயினும் அதனுடன் ஒப்பு நோக்குகையில் நம் நாட்டு வாக்காளர்கள் பல தசாப்தங்களாக தொடர்ந்தும் வெறும் மேடைப் பேச்சுக்களை நம்பி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

ஆகையால் அந்த வரலாற்றுத் தவறை திருத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக இந்த பொதுத்தேர்தலை நமது வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நமது நாட்டின் முன்னேற்றமானது, பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் காணப்படுகின்ற இலஞ்ச, ஊழல்கள் காரணமாகவே தடைபட்டு இருக்கின்றது என்பதே தற்போதைய அரச தலைவரின் கருத்தாக இருக்கின்றது. ஆகையால் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு தாம் கொண்டிருக்கும் கொள்கைத் திட்டத்தினை செயற்படுத்தத்தக்க சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்து தாருங்கள் என்ற உருக்கமான வேண்டுகோளை ஜனாதிபதி அவர்கள் மிகத் தெளிவாக வலியுறுத்தி வந்திருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்றது முதல் இதுவரை அவர் மேற்கொண்டுவரும் சகல செயற்பாடுகளும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் நமது நாட்டின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருக்கின்றார் என்பதையே உணர்த்தி வருகின்றன.

இந்த நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேவையான தளபாடங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற கருத்தானது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது அர்ப்பணிப்பையே வெளிப்படுத்துகின்றது. பல தசாப்தங்களுக்கு முன் சகல அரச நிறுவனங்களுக்கும் தேவையான தளபாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையே இருந்துவந்தது.

அது இந்த நாட்டின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து வந்ததோடு பெருமளவு வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆயினும் கடந்த சில தசாப்தங்களாக வெளிநாட்டு உற்பத்தி மீது  மோகம் கொண்ட சுயநல அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட இலாபத்தை நோக்கமாகக் கொண்டு வெளிநாட்டு தளபாடங்களை அரச நிறுவனங்களுக்கு கொண்டு வந்ததன் விளைவாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன் அவர்களது பொருளாதாரமும் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இத்துறை மாத்திரமன்றி இந்த நாட்டின் பல்வேறு உள்நாட்டு உற்பத்திகளும் தொலைநோக்கற்ற அரசியல் தீர்மானங்களினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை கருத்தில் கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரச நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்திகளையே கண்டிப்பாக கொள்வனவு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கின்றார். இத்தகைய செயற்பாடுகள் கொள்கை ரீதியாக முன்னெடுக்கப்படுமாயின் நிச்சயம் அது நமது நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த காரணமாக அமையும்.

உலகப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் அதன் தாக்கம் நமது நாட்டிலும் ஏற்படும் என்பதை ஏற்கனவே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் நாம் நமது உள்நாட்டு உற்பத்திகளுக்கு இயன்றளவு வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதன் மூலமே நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இந்த உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை மக்களின் வாக்கைப் பெற்று நாடாளுமன்றம் செல்ல எதிர்பார்க்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் தமது உள்மனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நிகழ்கால சந்ததி, எதிர்கால சந்ததியைப் பற்றி எவ்வாறு சிந்தித்திருக்கின்றது? எவ்விதமான தீர்மானங்களை எடுத்திருக்கின்றது? என்பது ஒரு சமூகம் அல்லது நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியின் மூலமே உலகுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த உண்மையை உரிய முறையில் புரிந்து கொண்டு நாம் நமது எதிர்கால சந்ததியினருக்காக எதை செய்யப் போகின்றோம் என்பதை இன்று நாம் நமது பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக கொடுக்கும் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்தலாம்.  அப்படி பார்க்கும்போது இன்று நாம் அளிக்கும் வாக்குகள் நமது இன்றைய வாழ்க்கையை மட்டுமன்றி நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் சக்தியை கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு வாக்காளர்களினதும் சமூகப் பொறுப்பாகும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

ரவி ரத்னவேல்

Comments