ஏகோபித்த ஆதரவின் பலனாக பூத்திருக்கும் தாமரை மொட்டு..! | தினகரன் வாரமஞ்சரி

ஏகோபித்த ஆதரவின் பலனாக பூத்திருக்கும் தாமரை மொட்டு..!

ஒட்டுமொத்த உலகமும் இயல்பு வாழ்க்கையை இழந்து சகஜ நிலைமைக்கு திரும்ப திண்டாடிக் கொண்டிருக்கும் பின்னணியில் கொரோனா தொற்றுநோய் நாட்டு மக்கள் மத்தியில் பரவி நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் உத்திகளை கையாண்டு மக்களையும் நாட்டையும் காப்பாற்றிய நாடு என்ற நற்பெயரை பெற்றிருந்த இலங்கை, இன்று பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்புடன் மிக நேர்த்தியான முறையில் பொதுத் தேர்தலை நடாத்தி முடித்த நாடு என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலைமை ஏற்படுவதற்கான முதன்மை காரணம் தொலைநோக்கு மிக்க அரசியல்

தலைமைத்துவமே ஆகுமென துறைசார் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

பல்வேறு தடைகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு தகுந்த தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளையில் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்திய பக்கச்சார்பற்ற செயற்பாடு சுதந்திரமான, நேர்மையான, வன்முறைகளற்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. தாம் ஒரு கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதிலும் எதிர்கட்சிகள் மீது சேறு பூசும் வழமையான நம் நாட்டு அரசியல் பிரசார உத்திக்கு பதிலாக நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் திறமைசாலிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்து தமது கட்சி சார்ந்தவர்களையும் அப்பாதையில் பயணிக்க செய்ததன் மூலமே  பொதுத் தேர்தலை நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடத்தி முடித்து தேர்தல் கலாச்சாரத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கின்றது.

இலங்கை வாழ் பெரும்பான்மை மக்களும் மற்றவரை மதிக்கும் இந்த அரசியல் கலாச்சாரம் நம் நாட்டிலும் ஏற்படாதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதனை உணர்ந்து அரசியல் தலைவர்களும் சாதாரண பொதுமக்களை விட ஒரு படி முன்நின்று செயற்படுவார்களாயின் அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமையும். 

நம் நாட்டு அரசியல் வரலாற்றில் புதிய இரு அரசியல் கட்சிகளுக்கு நாடாளும் சந்தர்ப்பத்தையும் எதிர்கட்சியாக செயற்படுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்தவாறு முடிவடைந்திருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் நாட்டின் எதிர்காலத்தை சாதகமானதாக அமைத்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கின்றது என்பதே அரசியல் விற்பன்னர்களின் கருத்தாக இருக்கின்றது.

1977ஆம் ஆண்டு அறுதிப் பெரும்பான்மை பெற்று பலமான அரசாங்கத்தை அமைத்து 17 வருடங்களுக்கு மேலாக நீடித்த ஆட்சிக்காலத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1994ஆம் ஆண்டு தோல்வி அடைந்ததிலிருந்து இதுவரை காலமும் அறுதிப் பெரும்பான்மை மிக்க நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பின்றி மற்றவர்களின் தயவில் தங்கியிருக்க நேர்ந்த ஊசலாடும் அரசாங்கங்களே அமைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலைமையை சில அரசியல் விமர்சகர்கள் நாய் வாலை ஆட்டுவதற்கு பதிலாக நாயை வாலாட்டி வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றே கூறி வந்தார்கள். ஆயினும் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றப்பட்டு அறுதிப் பெரும்பான்மை மிக்க ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்திருக்கின்றது. உண்மையிலேயே இந்த வாய்ப்பானது இலங்கை நாடு பல தசாப்தங்களாக முகங்கொடுத்து வந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே அமைகின்றது.

இலங்கை அரசியலில் இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பின்னணியில் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறிய தொன் ஸ்டீவன் சேனாநாயக்கவினால் 1946ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது. சில வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்து வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. பல தசாப்தங்களின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த மஹிந்த ராஜபக்ஷவினால் 2019ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன எனும் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகள் வெற்றி வாகை சூடி புதிய அரசை அமைப்பது நாட்டில் பழக்கத்தில் இருந்து வந்த ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. அதன்போது அரசாங்கத்தை அமைத்து பலமான அரசியல் கட்சியாக இருந்து வந்த ஆளுங்கட்சி படுபாதாளத்தில் தள்ளப்படுவது இந்த நாட்டில் வரலாறு கண்ட ஒரு உண்மையாகவே இருந்து வருகின்றது. அந்தவகையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மாபெரும் இரு கட்சிகளும் இன்று இருந்த இடம் தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது புதிதாக அமைக்கப்பட்ட பொதுஜன பெரமுன மொத்த வாக்குகளில் 59 சதவீதத்தைப் பெற்று 145 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 23 சதவீத வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களையும் தனதாக்கிக் கொள்ளும்போது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தை மாத்திரம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. 

கடந்த பொதுத் தேர்தலானது இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு தேர்தலாகவே அமைந்திருந்தது. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான பலமான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்ததோடு நீண்ட காலமாக இருந்து வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையே நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. மக்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கோஷத்துடன் அதுவரை செயலில் இருந்த அரசியல்யாப்பில் புதிய சீர்திருத்தத்தை இணைக்கும் வகையில் 19ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆயினும் அந்த சீர்திருத்தமானது நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான இழுபறி நிலையை ஏற்படுத்தியதுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியதால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதே பெரும் போராட்டமாக மாறியது. சுருங்கச் சொல்வதாயின் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒரு உயர் பதவிக்கான நியமனங்களை மாற்றுவதற்கும் வாபஸ் பெறுவதற்கும் அதிகாரமற்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்த நிலைமையானது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பெரும் தடையாக அமைந்ததோடு, நாட்டை பின்னோக்கி தள்ளி நாட்டின் செயற்பாடுகளை சீர்குலைக்கும் முக்கிய காரணியாக அமைந்தது. இதனால் 2020ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலானது 19ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு தேர்தலாகவே பொதுஜன பெரமுன கட்சியினால் இத்தேர்தல் கருத்தில் கொள்ளப்பட்டது. அதற்கமைய நாட்டை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பாராளுமன்ற பலத்தை மக்கள் ஈட்டித்தர வேண்டும் என்ற கோஷத்தை முன்வைக்கும் வகையிலேயே அக்கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அவர்களின் அப் பிரசார நடவடிக்கைகளுக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கின்றது.                     

அரசாங்கத்தின் செயற்பாடுகளை சாதுவாக விமர்சிப்பதற்கு அப்பால் சென்று பாரிய மக்கள் எதிர்ப்பை திரட்டத்தக்க பலமிக்க எதிர்க்கட்சி ஒன்று அமையாத பின்னணியில் பொதுஜன பெரமுன கட்சியினால் அவர்களது ஆதரவாளர்களுடன் அமைக்கப்படும் அரசாங்கமானது மிக இலகுவாக நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான களம் தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது என்பதே இப்போதைய அரசியல் யதார்த்தமாக தென்படுகின்றது.

நடந்து முடிந்த இந்த தேர்தல் முடிவுகள் குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சியின் குறிப்பிடத்தக்க புதுமுகங்களை பாராளுமன்றத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. நம் நாட்டு அரசியல் கலாச்சாரத்தில் கலந்திருக்கும் இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை அகற்றி மக்கள் நேய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பை பலப்படுத்த  இந்த புதுமுகங்கள் உறுதுணையாக அமையும் என்பதே நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதன் விளைவாக பல்துறைசார் விற்பன்னர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பெருமளவு புதுமுகங்களுக்கு மக்களின் விருப்பு வாக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. ஒருவகையில் பல தசாப்தங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த போதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கத் தவறிய பழைய மக்கள் பிரதிநிதிகளை அகற்றி அதற்கு பதிலாக புதுமுகங்களை உள்வாங்கச் செய்ய மக்கள் எடுத்திருக்கும் தீர்மானமானது நாட்டின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கின்றது. அத்தோடு அது புதிய தலைமுறையை சேர்ந்தோரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கும் அரசியல் மீது கூடுதல் ஆர்வம் செலுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடும்.

நாட்டுக்கு சாதகமான முறையில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் பின்னணியில் நீண்ட காலமாக இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அங்கத்தவர்களை கொண்ட அமைச்சரவை அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் காலதாமதமின்றி புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும். துறைசார் வல்லுநர்களை கொண்டு உருவாக்கப்படும் அமைச்சரவை மூலம் நாட்டினதும் மக்களினதும் நீண்ட காலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நாட்டுக்கும் மக்களுக்கும் சுபீட்சமான எதிர்காலம் உருவாக வேண்டும் என்பதே இத்தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களினதும் எதிர்பார்ப்பாகும் என்பதை புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முழு உலகமும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் நமது நாட்டுக்கு அப்பொருளாதார பின்னடைவு ஏற்படாது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான நடவடிக்கைகள் புதிய பாராளுமன்றத்தில் தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக நிச்சயம் நிறைவு பெறும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை புரிந்து செயற்படுவதன் மூலமே அடுத்த தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமாக அமையும் என்பதை இப்புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் உணர்ந்து கொள்வது சாலச் சிறந்ததாகும்.

ரவி ரத்னவேல்

Comments