களனி ரஜமஹா விஹாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் | தினகரன் வாரமஞ்சரி

களனி ரஜமஹா விஹாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில்

இலங்கையின் 25ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவு ள்ளார். இதற்கான சம்பிரதாயப் பூர்வமான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் களனி ரஜமஹா விகாரையில் செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை 8.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவார். கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 145 ஆசனங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றிருந்தது. இதனால் மீண்டும் மஹிந்த ராஜபக்சவே பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார். அவர் நான்காவது தடவையாக பிரதமராக இன்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். 

தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று தடவைகள் பிரதமராக கடமையாற்றியுள்ளார். முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார். 

இன்று சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ச இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார். 

2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். 

 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதிமுதல் 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதிவரை முதல் முறையாக இலங்கையின் பிரதமராக செயற்பட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார்.   2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருந்ததுடன், இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பெற்றுள்ளதால் இன்றும் மீண்டும் 25ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்கிறார். 

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பன்நாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments