கிளர்ச்சியின் பின்னரேயே சாமானியரைப் பற்றி அரசுகள் சிந்திக்கத் தலைப்பட்டன | தினகரன் வாரமஞ்சரி

கிளர்ச்சியின் பின்னரேயே சாமானியரைப் பற்றி அரசுகள் சிந்திக்கத் தலைப்பட்டன

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தன் 1970-_77ஏழாண்டு கால ஆட்சியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். கச்சதீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டது. காணி உச்ச வரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒருவர் 50ஏக்கர் காணிக்கு மேல் சொந்தமாக வைத்திருக்க முடியாது என்றது இச் சட்டம். இச் சட்டத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டு அரசுடமையாயின. இதன் மூலம் பல தொழிலாளர்கள் தொழில் இழந்து வீதிக்கு வந்தனர். தோட்ட நிர்வாகங்கள் முற்றிலும் அரச நிறுவனங்களாயின ஜனவசம, உசவசம, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் கீழ் தோட்டங்கள் வந்ததால் பாரம்பரிய தோட்ட நிர்வாகமுறைகள் மாற்றம் கண்டன. அரச துறைகளுக்கு அரசியல் ரீதியாக ‘துண்டு சீட்டு’கள் மூலம் ஆள் நிரப்புவது போல பொருத்தமற்றவர்களையும் பெருந்தோட்ட நிர்வாகத்துறையில் நுழைந்தனர். நிர்வாகம் சீர்கெட்டது. பல தோட்டங்கள் படிப்படியாக நஷ்டத்தை நோக்கி நகர்ந்தன. இதே சமயம் ஏராளமான பெருந்தோட்டக் காணிகள் சிங்களக் கிராமவாசிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. 

ஸ்ரீமாவோ ஆட்சியில் இருந்தபோது பல்கலைக்கழகத்துக்கான மாணவர் தெரிவு உயர்தர பரீட்சைகளில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களின் தகுதி தீர்மானிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்த நடைமுறையில் நன்கு கற்கக் கூடிய மாணவர்கள், உயர் குடும்பத்து மாணவர்கள், வசதியான பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியதோடு படித்து பட்டங்களும் பெற்றனர். அப்போது வளங்கள் குறைவான பாடசாலைகளே அதிகம். திறமையானவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி வாய்ப்பு என்ற கல்விக் கொள்கையால் வசதியான திறமை மிக்க சிங்கள மாணவர்களும், கற்கையில் ஆர்வமும் திறமையும் கொண்ட வடபுலத்து மாணவர்களுமே அதிக பலன் அனுபவிக்க கிராமத்து சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசம் பெரும்பாலும் கனவாகவே இருந்தது. 

தென்னிலங்கை கிராம இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிட்டாமை. பல்கலைக்கழகம் செல்ல முடியாமை, வாழ்க்கையில் முன்னேற முடியாமை போன்ற காரணங்களே அவர்களைப் போராட்ட பாதை நோக்கி திசை திருப்புகின்றன என்பதையும் இந்நிலையை சரி செய்யாவிட்டால் மற்றொரு ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதையும் ஸ்ரீமா உணர்ந்து கொண்டார். அதன் விளைவாகவே தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. ஒரு மாணவர் எவ்வளவு தான் கெட்டிக்காரராகவும் பல்கலைக்கழக நுழைவுக்கான போதிய தராதரம் கொண்டவராக இருந்தாலும் ஒரு கோட்டா முறையின் கீழேயே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இம் முறையின் கீழ், அவர்களைவிடக் குறைவான புள்ளிகள் பெற்ற, ஆங்கில மொழி தெரியாத கிராம மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. இலவச பாடசாலைக்கல்வி நாடெங்கிலும் ஒரே சமமானதாக இல்லாததால் போதிய கல்வித்தரம் இல்லாத பாடசாலை மாணவர்களில் திறமைசாலிகளான மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கல்விக் கொள்கை ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனால் அடிப்படையில் அது சரியான கொள்கையாகவே பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இத் தரப்படுத்தல் முறை நடைமுறைக்கு வர 1971கிளர்ச்சியே காரணமாக இருந்தது.  

இத் தரப்படுத்தலால் வடபுலத்து தமிழ் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏனெனில் திறமை அடிப்படையில் தெரிவு என்ற முறையால் ஏராளமான தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிட்டியது. அது மட்டுப்படுத்தப்பட்டதால் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கின. விரக்தியடைந்த இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகள் பக்கமாக செல்ல ஆரம்பித்தனர். 

தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறுவதைத் தடைசெய்யும். ஸ்ரீமாவின் ஒரு உத்தி, வடக்கில் தமிழ்த் தீவிரவாதம் வளர்வதற்கு கால்கோளானது அரசியல் விசித்திரங்களில் ஒன்று, 

1971ஏப்ரல் கிளர்ச்சி நடைபெற்றபோது இலங்கையில் ஏழுலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தெருவோர மதகுகளில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். ஜே.வி.பி. கிளர்ச்ச்சிக்கு அதுவும் ஒரு காரணமானது. வறுமை, விரக்தி, வேலைவாய்ப்பின்மை, சமத்துவம் பேணாத சட்டங்களும் நீதியும் மக்களைக் குறிப்பாக இளைஞர்களை கண்மூடித்தனமான தீவிரவாதத்தின் பால் தள்ளி விடுகின்றது என்பது உலகளாவிய நிதர்சனம். 

வடக்கு கிழக்கில் இளைஞர்கள் உரிமைப் போராட்டங்களில் ஈடுபட இவை காரணமாகின. எனினும் அரசாங்கம் தொடர்ந்தும் இழைத்துவந்த தவறுகளினால் 1987 – 89களில் மீண்டும் தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். 1971கிளர்ச்சி எவ்வளவு தவறாகவும் பலவீனமாகவும் கட்டமைக்கப்பட்டு தோல்வி கண்டது என்பது தொடர்பாகவும் அதன் தலைவர்கள் புரட்சியை வழி நடந்தும் தகுதியற்றவர்கள் என்பதையும் பத்திரிகைகள், நூல்கள், பேருரைகள் மூலமெல்லாம் அறிந்திருந்த போதிலும் மீண்டும் விஜயவீரவின் தலைமையில் ஒன்றிணைந்து ஆயுத போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை தூக்கி எறிவதற்கு சிங்கள இளைஞர்கள் தயாரானார்கள் என்றால் அதற்கான இயல்பான காரணங்கள் எவை என்பதை அதற்கு பின்வந்த அரசுகள் ஆராய்ந்திருக்க வேண்டும். 

1987காலப்பகுதியில் ஐந்து லட்சும் பேர்தொழில் இன்றி வெட்டியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். இவர்களில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரம் சித்திபெற்ற இளைஞர்களும் அடக்கம். 1989ஆயுத எழுச்சியைக் கையாள அன்றைய கே.ஆர். அரசு திணறியது. ஒரு துண்டுக் கடிதத்தின் மூலம் கொழும்பு நகரக் கடைகளை ஜே.வி.பி. அடைக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் ஜே.ஆர்.அரசு செயலற்றுப் போனது. அவர் நினைத்திருந்தால் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக நீடித்திருக்க முடியும். எனினும் அவர் விட்டத் தவறுகள், தவறான முடிவுகள் அவர் கழுத்தை நெறிக்கவும், பிரேமதாசவிடம் எதிர்காலத்தை ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். 

ஆயுத கிளர்ச்சி மூலம் தனி நாட்டைத் தட்டிப் பறித்துக் கொள்ளலாம் என்ற வழி முறையை வடக்கு தமிழ்த் தீவிரவாதிகளுக்கு கற்றுக்கொடுத்தது. ஜே.வி.பிதான் ஜே.வி.பியைப் போல்லலாது அவ்வியக்கங்கள் பெருவளர்ச்சி பெற்ற போதிலும் 71ஒரு நாள் புரட்சிக்கு என்ன நடந்ததோ அதுவே 30ஆண்டுகளின் பின்னரும் தமிழ்த் தீவிரவாதத்துக்கும் நடைபெற்றது.  

1962ஆம் ஆண்டு இலங்கை இராணுவமும் பொலிசும் அதாவது இவற்றின் உயர் அதிகாரிகள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசைக் கவிழ்க்க எடுத்த முயற்சி – இலங்கையின் முதலாவது சதிப் புரட்சியாகும். இதுவும் தோல்வி அடைந்தது. அது வெற்றியளித்திருந்தால் அது முதலாளித்துவத்தின் சதிப்புரட்சியாக இருந்திருக்கும். ஸ்ரீமாவோ ஏற்படுத்த விரும்பிய சோஷலிசம் சார்ந்த மாற்றங்களை விரும்பாததாலேயே அவர்கள் திருமதி பண்டாரநாயக்காவை தூக்கி எறிய – சிறையில் தள்ள – முயன்றனர். இரண்டாவது 1971கம்யூனிச ஒரு நாள் ஆயுத புரட்சி. அதுவும் ஸ்ரீமாவைத் தூக்கி எறியும் முயற்சிதான். அதன் பின்னர் ஐ.தே.க அரசை தூக்கி எறியும் 1989ஜே.வி.பி புரட்சி. நாட்டையே நடு நடுங்க வைத்த இந்த ஆயுத போராட்டமும் அரசாங்கத்தின் ஈவு இரக்கமற்ற கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற திருப்பித் தாக்கும் உத்தியால் நிலைகுநைது போனது. இதற்கிடையே தனிநாடு கேட்டு விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுத போராட்டமும் பல்வேறு நாடுகளின் உதவியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை வாசகர்கள் அறிந்ததே. 

உயர் கல்வி என்றால் பல்கலைக்கழகம் சென்றாக வேண்டும் என்ற நிலை இன்றில்லை. பல்வகையான துறைகளும், கற்கை நெறிகளும், தனியார்த்துறை தொழில் வாய்ப்புகளும் கூடவே சுயதொழில் வாய்ப்புகளும் வந்து விட்டன. தொழில் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. 1989ஆயுத கிளர்ச்சியின் பின்னர் 200ஆடைத் தொழிற்சாலைகளை நாடெங்கும் நிறுவும் பிரமாண்டமான வேலைத்திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச கொண்டுவந்தார். இவற்றின் மூலம் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். படித்தவர்களையும், ஆங்கிலம் கற்றவர்களையும், வசதியான குடும்பங்களையும் முன்நிறுத்தி அரசுகள் ஒரு காலத்தில் திட்டங்களை செயல்படுத்தின. ஜே.வி.பி. கிளர்ச்சியின் பின்னர் அரசின் இக் கண்ணோட்டம் மாறியது. 

ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொண்ட இவ்விரு தென்னிலங்கை கிளர்ச்சிகளால் அரசுகளைத் தூக்கி எறிய முடியாமற் போனாலும், இப் புரட்சிகள் ஏற்படுத்த விரும்பிய பல விடயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஜே.வி.பியும் தன்னை வெகுவாக மாற்றிக்கொண்டு ஜனநாயக வழிமுறைக்கு வந்துவிட்டது. வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக ரோஹண விஜேவீர காலத்திலும் அதன் பின்னர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பியிலும் தெளிவான ஒரு கொள்கை இருக்கவில்லை. சுயநிர்ணய உரிமை வழங்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்த அவர் பின்னர் அரசியலுக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரத்தேவை இல்லை என்றும் இடைவிடா யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் உறுதியாக பேசத் தொடங்கினார். ஜே.வி.பியிடமிருந்து தமிழர்கள் முற்றிலும் விலகி நிற்க இவர் காரணமானார். 

அவர் ஜே.வி.பியை விட்டு விலகிச் சென்ற பின்னரேயே ஜே.வி.பியிடமிருந்து தமிழர்கள் தொடர்பாக உறுதியான நிலைப்பாடுகள் ஏற்படத் தொடங்கின. ஜே.வி.பி தனிநாட்டுக்கோரிக்கையை மட்டுமே நிராகரிக்கிறது. வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்துக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டேயாக வேண்டும் என்பதில் ஜே.வி.பிக்கு எந்த மயக்கமும் இல்லை. ஜே.வி.பி ஒரு காலத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. வடக்கு கிழக்கு தமிழர்களைப் பற்றியும் கூட. ஆனால் ஹெக்டர் கொப்பேகடுவ ஒரு சமயத்தில், தொண்டமானைத் தூக்கி கடலில் எறிவேன் என்பது போலவும், கே.எம்.பி. ராஜரட்ண போல், தமிழர்களின் தோலை உரித்து செருப்பு தைப்பேன் என்பதாகவும் இனவாதம் பேசியதே இல்லை. 

இன்றைய ஜே.வி.பி வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் அவை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தையும் தெட்டத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. பெருந்தோட்ட தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளில் உற்ற தோழனாகவே செயல்பட விரும்புகிறது. நாம் தான் அக்கட்சியை புரிந்துகொள்கிறோம் இல்லை. 

அருள் சத்தியநாதன் 

Comments