புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் தேவை | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் தேவை

நாட்டுக்குப் புதிய ஓர் அரசியல் கலாசாரத்திற்கான தேவை நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வழங்கிய ஆணையின்படி அந்தப் பணியை முதன்மையானதாகக் கருதி செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், பொருளாதார மறுமலர்ச்சிக்கும் வறுமை ஒழிப்புக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். 

இந்தப் பணியின் முதற்கட்டமாக அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளைக் களைவதற்கு நடவடிக்ைக எடுக்கப்படுகிறது. இந்தத் திருத்தமானது நாட்டைச் சரியான பாதையில் முன்கொண்டு செல்வதற்குத் தடையாக இருப்பதாகப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். 19ஆவது திருத்தத்தின் குறைகளை நீக்குவதற்கு 20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதுடன் அதன் தொடர்ச்சியாக ஈராண்டு காலத்தில் நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஒரு முரண்பாட்டுடன்கூடிய அதிகாரப் பகிர்வு முன்னிலைப்படுத்தப்பட்டதால், நாட்டின் தலைமைத்துவம் இரு தரப்புக்குமிடையே பிரிந்துகிடக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கும் ஒரு போட்டி மனப்பான்மைக்கும் வித்திட்டிருக்கிறது. இது நாட்டு நிர்வாகத்திற்கு மாத்திரமன்றித் தேசிய பாதுகாப்பிற்கும் இடையூறை ஏற்படுத்தியிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்ைகயைச் செயற்படுத்தாமல் தவிர்ப்பதற்கு வழிகோலியதும் இந்தப் 19ஆவது திருத்தம் என்று இப்போது வியாக்கியானம் சொல்கிறார்கள். 

பத்தொன்பதைக் கொண்டு வருவதற்கு முன்னின்று பாடுபட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், இந்தத் திருத்தம் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனினும், அதில் சில குறைபாடுகள் உள்ளனவென்று ஒப்புக்கொண்டிருக்கிறார். சட்டங்கள் இயற்றும்போது அதன் பிரதிகூலங்கள் புரியாவிடினும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் போதுதான், அதிலுள்ள சாதக பாதகங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. அந்த வகையில் சுமந்திரன் கூறியிருக்கும் கருத்தினை, பத்தொன்பதாவதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக்ெகாண்டிருப்பவர்களின் ஒட்டுமொத்த அபிப்பிராயமாகவே கருத வேண்டியிருக்கிறது. ஆகவே, தேர்தல் சமயத்தில் பொதுஜன பெரமுன மக்கள் மத்தியில் முன்வைத்த பிரேரணைக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல், அந்த முன்னெடுப்புகளுக்குக் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துப் பக்கபலமாகச் செயற்பட வேண்டியதே எதிர்க்கட்சிகளுக்கு இன்றுள்ள பொறுப்பாகும்.

இருபதாவது திருத்தச் சட்டமூலம் ஒருபுறம் முன்வைக்கப்பட்டாலும், இரண்டாண்டு காலத்தில், புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இந்தப் புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்காகக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிவிப்புக்குப் பின்னர் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சுதந்திரக் கட்சியைப் பின்பற்றி எத்தனை அரசியல் கட்சிகள் தங்களது ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளனவோ தெரியாது. ஆனால், 1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை வரைவதற்குத் தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்கவில்லை என்பது தமிழர் தரப்பின் நீண்டகால கருத்தாக இருக்கிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பில் தமிழர் தரப்பு, தமிழ் பேசும் முஸ்லிம் தரப்புகளின் ஆலோசனைகளும் இடம்பெறச் செய்ய வேண்டியது அந்தந்தக் கட்சி சார்ந்தோரின் பொறுப்பாகும். தேசிய அரசியலில் இருந்து சிறுபான்மை மக்கள், அதிலும் விசேடமாகத் தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதால், இனிவரும் காலத்தில் எதுவும் நடக்கப் போவதில்லை. தற்போதைய அரசியலமைப்பின் குறைபாடுகள் காரணமாகவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறவில்லை; நிறைவேற்றப்படவில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டு. ஆகவே, தற்போது உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சகல இன மக்களினதும் அரசியல் உரிமைகள்; அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதாகவே உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டிலிருந்து பத்தொன்பது தடவை திருத்தப்பட்டும், இந்த அரசியலமைப்பினால், நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. ஆகவே, இதனை மாற்றி நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில், நாட்டின் தேசிய அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப சிறுபான்மையின மக்களும் அந்த மாற்றத்துடன் பயணித்துத் தமது அபிலாஷைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கடந்த 7-0 ஆண்டுகளுக்கும் மேலாகக் காலத்தை விணடித்ததைப்போலல்லாது கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும்! இதுவே, காலத்தின் கட்டாயமுமாகும்.

Comments