மீண்டும் உதயமாகிறதா இரும்புத்திரை? | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் உதயமாகிறதா இரும்புத்திரை?

கொவிட் -19பின்பான உலகளாவிய அரசியல் களம் வேறு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பது பலதடவை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனை நேரடியாக காணும் சூழல் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதாவது கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக உலக நாடுகள் எங்கும் இராணுவத்தினதும் சர்வாதிகாரத்தினதும் முகங்கள் வலுவான நிலையை எட்ட ஆரம்பித்திருந்தன. அதற்கு கொரோனா முக்கிய பங்கு வகித்திருந்தது. ஆட்சித்துறை மீதான நெருக்கடியும் ஆட்சியாளரது அரசியல் செயல்பாடுகளும் தவிர்க்க முடியாது பின் தள்ளப்பட்டதுடன் இராணுவமே தலைமை தாங்கும் சூழல் ஏற்பட்டிருந்தது. அத்தகைய இராணுவத்தின் பிரவேசம் படிப்படியாக பல அரசாங்கங்களின் இருப்பினை இலகுபடுத்திய போதும் அதன் மேலாதிக்கம் தவிர்க்க முடியாது மேலெழ ஆரம்பித்தது. அதே நேரம் பல ஆட்சியாளா்கள் இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு தமது அரசியல் அதிகாரத்திற்கான கால நீடிப்பினை ஏற்படுத்த முயன்றனர். இத்தகைய நகா்வுகளும் இராணுவத்திற்கு வாய்ப்பினையும் பலத்தையும் கொடுத்திருந்தது. அதனால் முடிந்த வாரம் பைலோரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினையும் ஆட்சி முறையின் போக்கினையும் இக்கட்டுரையில் அவதானிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

முதலாவது பெலாரஸ் குடியரசு என அழைக்கப்படும் பைலோரஷ்யா 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி அரசானது. இதன் கடந்த காலம் முழுவதும் சோசலிஸத்தாலும் சோவியத் யூனியனினாலும் தயாா் செய்யப்பட்ட தேசமாகும். அதாவது 1919இல் சோவியத்தின் செம்படை பெலாரஸ் கம்யூனிச ஆட்சியை நிறுவுவதாக அறிவித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனியின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியதுடன் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதில் பெருமளவான யூதர்களும் அடங்கியிருந்தனர். 1986களில் உக்ரைனில் ஏற்பட்ட சொ்னேபில் அணுக்கசிவினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய பிரதேசமாகவும் காணப்பட்டது. 1994இல் ஊழலை எதிர்க்கும் நோக்குடனும் விக்டர் யானுகோவை ஆட்சியிலிருந்து அகற்றவும் பேராடி ஆட்சியைப் பிடித்தவர் அலெக்ஸாண்டர்  லுகஜான்கோ. தொடர்ந்து 26வருடங்கள் ஆட்சியில் உள்ளார். கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற தோ்தலில் மீண்டும் 80சதவீத வாக்குகளால் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து ஏற்பட்ட குழப்பமே அந்த நாட்டின் அரசியலில் பெரும் நெருக்கடி ஏற்பட காரணமாகியது. 

அதாவது ஆளும் அரசியலில் மிக நீண்ட காலமாக ஆட்சியை தக்கவைத்துள்ள அலெஸ்சாண்டர் கிழக்கு ஐரோப்பாவின் இறுதிச் சர்வாதிகாரி  என்றும் கம்யூனிஸத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர் எனவும் அமெரிக்காவாலும் மேற்காலும் விமர்சிக்கப்படும் அலெஸ்சாணடர் தனது ஆட்சியை மேலும் ஐந்து வருடம் நீடிப்பதற்கான தேர்தலிலேயே நெருக்கடியில் சிக்கியுள்ளார். இவரை எதிர்த்து தேர்தலில் பேட்டியிட்ட வேட்பாளர் ஸ்வெட்லானா கானோஸ்காயாவுக்கு வெறும் 10சதவீத வாக்குகளே கிடைத்தது எனவும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சியானது தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை எனவும் எந்தவித கண்காணிப்பும் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டதோடு தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் தேர்தலை மீள நிகழ்த்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து போராடிவருகின்றன. எதிர்க்கட்சிகளது போராட்டத்தினை பெரும் இராணுவ பலத்தினால் அடக்கிவரும் அலெக்ஸாண்டர்  மனித உரிமை மீறல்களையும் மானிதாபிமானச் சட்டங்களையும் வெளிப்படையாக மீறி வருவதனை காணமுடிகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவது கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது சிறையில் அடைக்கப்படுவது என பல உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகின்றார். இவரது அரசு இராணுவத்தினால் பாதுகாக்கப்படுவதுடன் பிராந்திய ரீதியில் அதிக நெருக்கமான நாடாக ரஷ்யா விளங்குகிறது. 

அலெக்ஸாண்டரின் வெற்றியை அங்கீகரித்த நாடுகளில் ரஷ்யாவும் உக்ரைனும் மற்றைய மத்திய ஆசியக் குடியரசுகளுடன் சீனாவும் வரவேற்றுள்ளன.

அதேநேரம் மேற்கு நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ள இத் தேர்லால் ஐரோப்பிய யூனியன். அமெரிக்கா என்பன பொருளாதார தடையை ஏற்படுத்துமளவுக்கு அதனைப் பரிசீலித்து வருகின்றன. அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமையை பைலோ ரஷ்யா மதிக்க வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நியாயமாக நிழந்துள்ளதா என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக ஜோ்மனி அறிவித்துள்ளது. எதிர்ப்பாளர்களின் மீதான துன்புறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை என அறிவித்துள்ளார் ஐரோப்பிய யூனியன் தலைவர் தலைவர்  உர்சுவயற் டெர்லேயன். 

பைலோ ரஷ்யாவில் நிகழும் சித்திரவதை மற்றும் கொடூரமான மனிதாபிமானமற்ற இழிவான செயல்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன. அதனை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.

சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ தெரிவித்துள்ளார்.

இது வரையில் (21.08.2020) மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 30மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.  

இத்தகைய அரசியலுக்கு பின்னால் ரஷ்யாவின் ஆதரவு அலெக்ஸாண்டருக்கு தொடர்ந்து இருப்பதுடன் இராணுவ பொருளாதார நெருக்கம் உடைய நாடாக ரஷ்யா விளங்குகிறது கவனிக்கத்தக்கதாகும். ரஷ்யா, உக்ரையின், போலந்து, லத்வியா, ரலித்துவேனியா போன்ற நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள பைலோ ரஷ்யாவின் புவிசார் அரசியலால் நன்கு உள்வாங்கப்பட்ட நடாக விளங்குகிறது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினது அண்மைக்காலப் போக்குகளை அவதானிக்கும் போது அத்தகைய சாயலைக் கொண்ட நாடாக மாற்றும் நோக்குடன் அலெக்ஸாண்டர் காணப்படுகின்றார் புட்டின் அரசியலமைப்பு சர்வாதிகாரியாக காணப்படும் போது அலெஸாண்டர் நேரடியான சர்வாதிகாரியாக விளங்குகிறார் என்பது கவனிக்கத்தக்க விடயமாகும்.

புட்டினது நெருக்கமான உறவுள்ளதுடன் ரஷ்யாவின் அரசியல் கலாசார மரபுகள் அப்பிராந்திய அரசுகள் மீது ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே அலெக்ஸாண்டரை பாதுகாத்த ரஷ்யா தொடர்ந்தும் பாதுகாப்பதனை தவிர வேறு மார்க்கம் தெரியாதுள்ளது. 

அதே நேரம் மேற்குலகமும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவை எதிர்க்கும் மனோநிலையில் செயல்படுவதுடன் அலெக்ஸாண்டரை ரஷ்யாவின் நட்பு நாட்டு ஜனாதிபதி என்ற அடிப்படையிலும் இப்பிணக்கினை அதீத பிணக்காக மாற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது. பெலாரஸ் விவகாரத்தினை சா்வதேச விடயமாக்கி அதிலிருந்து ரஷ்யா சீனாவின் அரசியலை கையாள முனைகிறது.

அந்த நாட்டினதும் மக்களதும் பிணக்காக கருதும் நிலையை கடந்து ஐரோப்பிய யூனியனும் ஐ.நா சபையும் மேற்குலகத்திற்கு நிகரான அறிக்கை போரை நிகழ்த்தி வருகிறது. இது மேற்குலகத்திற்கு ஆதரவான அணுகுமுறையாக அமையுமே அன்றி பைலோ ரஷ்யாவின் மக்களது ஆட்சித்துறைக்கான மாற்றாக அமையப் போவதில்லை எனக்குறிப்பிடலாம். 

எனவே கொவிட் -19மீண்டும் ஒரு ஒரு கட்சி சர்வாதிகாரத்தை அல்லது இராணுவ அடக்குமுறை ஆட்சியை அல்லது இரும்புத்திரை அரசியல் அணுகுமுறையை அல்லது இராணுவ ஆட்சிமுறையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.

அதற்கான அணி நாடுகளது செயல்வடிவம் ஒன்றுக்கான தோற்றமாகவே சீனா ரஷ்யா போன்ற நாடுகளது அணுகுமுறையும் கிழக்கு மற்றும் மத்திய ஆசியக் குடியரசுகளது நடைமுறையும் காணப்படுகிறது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

 

 

 

Comments