கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கடுமையான கசப்பு வில்லை ஒன்றை வழங்கப்போகின்றேன். 

“ஒரு கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக

அழிந்து கொண்டிருக்கிறது!?” 

எந்த நாட்டில் என்போருக்குப் பதில் இந்த நாட்டில் தான்! இந்த இலங்கையில்தான்! கிழக்கில்! அதுவும் தென் கிழக்கில் அங்கே ஒரு முஸ்லிம் கிராமத்தை நோக்கி இந்த அவலம்.

அம்பாறை மாவட்டமாகப் பரிணமி த்துள்ள பகுதியில், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில் பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், வரிபத்தாஞ்சேனை, பொத்துவில் ஆகியவற்றிலேயே முஸ்லிம் சமூகம் செறிந்து வாழ்கின்றது. 

மேற்கண்ட ஊர்களில் ஒன்றுதான் அழிவை நோக்கி! அந்த, ஊரை நினைக்கையில், எனக்கு இந்திய சாகித்ய விருதாளர், பேரெழுத்தாளர், தோப்பில் முகம்மது மீரான், அவர் பிறந்த மண்ணை வைத்துப் படைத்திட்ட ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ ஒப்பற்ற சிருஷ்டியே நெஞ்சின் அலைகளாய் அலைக்கழிக்கின்றன. 

நான் பளிச்சிடவைத்துப் பரிதாபப்பட வைக்கப்போகும் கிராமத்திலும் தோப்பில் முகம்மது மீரானின் அடிச்சுவட்டில் மூன்று நாவல்கள் படைத்து, அவற்றில் இரண்டுக்கு விருதுகள் பெற்ற ஒரு வாலிபப் பிள்ளையும் வாழ்கிறார். 

ஊரையும் அவரையும் அடையாளப்படுத்திவிடுவேன், இன்னும் ஒரு நிமிடத்தில். அதற்குள் கிழக்கிலங்கைப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறுபதிவு! 

அந்தப் பதிவுங் கூட எனதன்று. முதுபெரும் பன்னூலாசிரியரும், முன் பட்டியலில் உள்ள ஊர்களில் ஒன்றான நிந்தவூர் எழுத்து முத்துமான முத்து மீரான் தனது ஆய்வு நூலொன்றில் வழங்கியிருப்பது இப்படி:  

* கிழக்கிலங்கையில் வாழும் கிராமப்புற முஸ்லிம்கள் தங்கள் ஜீவாதாரத் தொழில்களாக விவசாயத்தையும் மீன்பிடித்தலையும், பாய், பெட்டி, உமல் இழைத்தலையுமே பிரதான தொழில்களாகச் செய்து வந்தனர். இயற்கையோடு ஒன்றித்து அதன் இனிய தாலாட்டுக்கு இயைந்த அமைதியான வாழ்க்கையை அனுபவித்து வந்த இம்மக்கள் தாங்கள் செய்து வந்த தொழில்களை மிகவும் கண்ணியமாக மதித்து வாழ்ந்தனர். நீரும், நிலமும், வயலும், வனமும், வானும், கடலும் இவற்றில் வாழும் சீவராசிகளும், பட்சிகளும் இவர்களுடைய இயற்கை வாழ்விற்கு சதா துணைபுரிந்து கொண்டிருந்தன. இத்தொழில்களை இவர்கள் தங்களுடைய வாழ்வியலுக்காகவே செய்தனர். அன்று இவர்கள் வர்த்தக நோக்கில், இத் தொழில்களைச் செய்யவில்லை. எளிமையும், இரசனையும், எழிலார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் உள்ள தொழில்களாகவே இவைகள் இருந்தன. இத்தொழில்கள் தங்களை வாழவைக்கும் இறைவனின் நன்கொடைகளாகவே கருதினர். 

-“கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரங்களும்” பக் 30-31 (2013) 

இந்தப் பின்னணியில் தன் மண்ணை வைத்து மூன்று நாவல்கள் படைத்திட்ட அந்த வாலிபப் பிள்ளையின் நாவலொன்றைப் புரட்டினால் அவரது கிராமம் பற்றி உருகிக் கரைவதை பல இடங்களில் காணலாம். நம் நெஞ்சங்களிலும் உதிரம் கொட்டத் துவங்குகிறது. 

“எனது மண்ணின் கண்ணீர்க்கதை” என்று ஆரம்பித்து அவர் பதித்திருப்பவை. 

எனது மண்ணின் கண்ணீர்க்கதை 

‘இயற்கை வளங்களினால் அழகுபெற்று வந்தாரை வாழவைக்கும் சிங்கார ஊர் ஒலுவில்’ என்று எம் முன்னோர்களால் புகழப்பட்ட ஒலுவில் எங்கள் கிராமம், எங்கள் மண், இன்று அழுது அழுது கண்ணீர் வடிக்கிறது. தன் கனவு கலைந்த நிலையில் ஏமாந்து கரைகிறது. 

‘தோறாப்பாடு’ இந்த ஊரின் பெருங்கனவு. தோறாப்பாடு பிடித்து செல்வம் கொழித்த ஊர் இது.

துறைமுக நிர்மாணமும் அதனால் உண்டான ஓயாத கடலரிப்பும் அதிகளவான எங்கள் நிலங்களை விழுங்கிவிட்டன. வளங்களை அழித்துவிட்டன. மீன்பிடிக்கு உலைவைத்துவிட்டது. போராட்டங்களும் அமைதிப்பேரணிகளும் செவிடன் காதில் ஊதிய சங்கோசையாகிவிட்டது. ஆதலால் இந்தக் கிராமத்தின் அழுகை, புலம்பல், ஏக்கம் ஏமாற்றம், எனது மூன்றாவது நாவலாக எழுந்து வருகிறது. 

தோறாப்பாடு பிடித்த கடலிடத்தில் கற்பாறைகள் கொட்டிக்கிடக்கும் சோகக் கதை இது. 

விடிவு தேடும் ஒலுவில் மக்களின் உணர்வொலி இது. 

இப்போது புரிந்திருக்கும் கிராமத்தின் பெயர் எதுவென்பது! தன் ஒலுவில் மண்ணின் அவலத்தை எழுத்திலே நிலையாகப்பதித்திட்ட படைப்பாளர் ஜே. வஹாப்தீன் ஒரு பட்டதாரி ஆசிரியர், நாவலாசிரியர், கவிஞர் என்பதுடன் ஒலிபரப்பாளர் (பிறை பண்பலை) 

அவரது ‘தோறாப்பாடு’ நாவலின் 189பக்கங்களில், தானும் தன் கிராமமும் அழிந்து கொண்டிருப்பதை ஆதாரமாகப் பதித்திருக்கிறார். 

ஏற்கனவே, தன் முதல் நாவல் ‘கலவங்கட்டிகள்’ மூலம் ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போதும், சுனாமிப் பேரழிவின் போதும் ஒலுவில் அடைந்த அவலத்தை வெளிச்சமிட்டிருக்கிறார்.  

மற்றுமொருவர், அவர் மேனாள் மொழித்துறைத்தலைவராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றியவர், பேராசிரியர் செ. யோகராசா, ஒலுவில் அவலம் பற்றிப் பதிவிட்டுள்ளதும் நெஞ்சிலிட்ட முள்ளாகத் தைக்கக் கூடியது. 

‘முஸ்லிம் மக்களது மறைந்த தேசியத் தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அரசியல் தொலைநோக்குடனும் சாணக்கியத்துடனும் செயற்பட்டு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் ஒன்று அமைப்பதில் நாட்டங்கொண்டார். செயற்பட்டார், துறைமுகம் ஒன்றை அமைப்பதில் வெற்றி கண்டார். சத்திரசிகிச்சையில் வெற்றி பெற்றாரே தவிர (கப்பல்களின் வரவு செலவு என்ற) நோயாளிக்கு உயிர்கொடுக்க அவரால் இயலவில்லை. 

கப்பல்களின் போக்குவரத்தால் இப்பிரதேசப் பொருளாதாரம் வளம்பெறும் என்ற கனவு நனவாகவில்லை. மீன்பிடித்தொழில் ஈடுபடும் ஒலுவில் பிரதேச மக்களது பொருளாதார நிலை முன்னரைவிட மோசமாகியது. 

ஒலுவில் துறைமுகம் கட்டப்பட்டபோது மண் தோண்டப்பட்டமையால் தினமும் கடலரிப்பு ஏற்பட்டது. தென்னைகள் பாறி விழுந்தன. நிலம் விழுங்கப்பட்டது. ‘கரைவலை’ அள்ளுப்பட்டு மாயவலை வந்து சேர்ந்தது. கற்குவியல்கள் மீன்பிடிப் படகுகளைச் சிதைத்தன. ஆக, மீன்பிடித்தலினூடாக தினமும் வந்துசேர்ந்த வருமானம் காவுகொள்ளப்பட்டது. 

தினமும் உருவாகிய பேரவல அலைகளில் மீன்பிடித் தொழிலாளர்கள் மட்டுமன்றி, முதலாளிகளும் மூழ்கினர். அலைகளுக்கு ஓய்வு கிடைக்கவே இல்லை. வர்க்கபேதமின்றி ஒலுவில் பிரதேச முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் கடலில் மூழ்கினர்’. 

- ஆக மொத்தத்தில் இந்த 2020ல் மற்றொரு புதிய ஆட்சி மலர்ந்துள்ள நேரத்தில், கிழக்கிலங்கையின் அரசியல் சுழற்சியில் பழைய முகங்களுடன் புதிய முகங்களும் காட்சி கொடுக்கிற காலகட்டத்தில், ஒலுவில் கொஞ்சம் கொஞ்சமாக அழிவிலிருந்து தப்பி ‘கரைசேருமா’ என்பதைக் காலமகள் நமக்குக் காட்டுவாளாக. 

அதுவரை, ஒரு கால ஒலுவில் கடற்கரையிலிருந்து கடலில் அக்கரை போனோர் நாவுகளில் நாளில் ஒரு தடவையாவது ஒலித்த இந்தப் பாடலை அசைபோடுவோம். ஆதங்கம் தணிவோம். 

ஐயோடா வலை... 

ஆடோடா... வலை... 

சாலுவ காட்றான் தண்டயல்... 

சள்ளயிம் தள்ளிற்ரான் தண்டயல்... 

அள்ளி இழுங்கடா தம்பிகாள்... 

அல்லாவும் தந்திற்ரான் ஏழைக்கு... 

புள்ளுமடிக்கிது பாருடா... 

பொத்தி இழுங்கடா சள்ளய... 

வெள்ளி தெரியிது பாருடா... 

வெற்றி நமக்கினு அள்ளுடா... 

குடல் கொதிக்கிது... பாருடா... 

சுறுக்கா இழுங்கடா சள்ளய... 

மடிதாங்கி கொண்டாடா மம்மதோ... 

மலபோல வருகிது மீன்மடி... 

ஏலேலோ வலை... 

பாடல் உதவி:

மீ இஸ்மாலெப்பை

(கரைத்தண்டயல்), நிந்தவூர்  

(பன்னூலாசிரியர் எஸ். முத்து மீரான் நூலில் காணப்படுவது அவருக்கும் நன்றி).  

“தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால் ஒவ்வொருவரும் அப்துர் றஹீம் எழுதிய நூல்களைக் கட்டாயம் படியுங்கள்” எனத் தமிழக முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணாதுரை எம்.ஏ. பகிரங்கமாக ஒருவரைச் சுட்டிக்காட்டினார். 

அந்த ஒருவர் எம்.ஆர்.எம். அப்துர் றஹீம். இன்று இருப்பாராயின் அகவை 98! (27.04.1922) 

தமிழில் முதன் முதல் சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கை தரும் வாழ்வியல் நூல்களை அறிமுகப்படுத்திய முன்னோடி அவர். சுமார் 65ஆண்டுகளுக்குமுன் தன் பணியை ஆரம்பித்தவர் விட்டுச் சென்றிருக்கும் ஒரு சிறுபட்டியல் இது. 

வாழ்க்கையில் வெற்றி – வாழ்வைத் துவங்கு- வாழ்வது ஒரு கலை - வாழ்வின் ஒளிப்பாதை -வாழ்வின் வழித்துணை- விடாமுயற்சி வெற்றிக்கு வழி - வியாபாரம் செய்வது எப்படி? விளக் கேற்றும் விளக்கு - வெற்றியின் இரகசியம் – வெற்றியும் மகிழ்ச்சியும் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்டவை.  

இந்த வகையில், வடபுல யாழ். மண்ணின் மைந்தர்கள் ‘வாழ்க்கையில் வெற்றி’ ‘வாழ்வது ஒரு கலை’ இரண்டையும் பலதடவை படித்தவர்கள், பாடம் செய்தவர்கள்! (வாழ்க்கையில் வெற்றி’ இதுவரையில் 20க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளைக் கண்டுள்ளது’  

60களின் ஆரம்பத்தில், சுமார் 38ஆம் அகவையில் அவரது இலங்கைப் பயணம் பத்து நாட்கள் வரையில். 

நமது மூத்த ‘தினகரன்’ நாளேடு, ஒரு துணைத்தலையங்கமே எழுதி பெரியதொரு கௌரவத்தை முன்பக்கத்தில் வழங்கியது. (நான் அப்போது வத்தளை நிருபர்). 

ஓர் இலங்கை வரவேற்புக் கூட்டத்தில் பேசி முடித்ததும், ஓடிப் போய் வாசகர் ஒருவர் கட்டித்தழுவி முத்துமாரி பொழிந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. 

அவர்தம் ஒப்பற்ற ‘இளமையும் கடமையும் அறிவார்ந்த நூலில் இளைய தலைமுறைகள் குறித்து ஆதங்கப்பட்டுப் பதிந்திருப்பவை அச் சொட்டாக இந்த 2020லும் பொருந்துவது அதிசயத்திலும் அதிசயம்!

Comments