இ.தொ.கா.வும் அதன் மாடி வீட்டுத் திட்டமும் | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.கா.வும் அதன் மாடி வீட்டுத் திட்டமும்

'மாடிவீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் அன்று ஐ.நா. வீடு சம்பந்தமான  ஆய்வாளர் விதந்துரைத்த குறைபாடுகள் களையப்படுமா? முக்கியமாக ஒவ்வொரு  வீட்டுக்குமான இடவசதி விஸ்தரிக்கப்படுமா? மரணமடையும் தொழிலாளி ஒருவரின்  உடலை மரியாதைக்காக வைக்கக்கூடிய அளவுக்கு இடவசதி இல்லை என்ற சமாச்சாரம்  கவனத்துக்கு எடுக்கப்படுமா? இதனுடன் மலசலகூட வசதி நவீனத்துவ முறையில்  ஏற்படுத்தி தரப்படுமா?'

புதிய அரசாங்கத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமுதாய நலன்புரி இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து பெருந்தோட் டப் பகுதிகளில் தொடர் மாடி வரிசை வீடுகள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.  

மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து முடிந்தவரை அதனை செயல்படுத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம். இவர் மூலம் 9000வரையிலான தனிவீடுகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்திய அரசாங்கம் 4000வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பினையும் அவர் ஏற்றிருந்தார். எதிர்பார்த்த இலக்கினை இத்திட்டம் அடையவில்லை என்பது உண்மை. அதேநேரம் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கும் வீடுகள், பாதிவரை அமைக்கப்பட்டவை, அடிக்கல் நாட்டப்பட்டவை என்று நூற்றுக் கணக்கில் தேங்கி நிற்கின்றன.  

இந்நிலையில் மாடிவீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படுமாயின் எஞ்சியிருப்பவைகளின் கதி என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. தவிர, மாடிவீட்டுத் திட்டம் பொருத்தமாக இருக்குமா? என்னும் குழப்பமும் உள்ளது. முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.  

மாடி விட்டுத் திட்டம் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல என்பது அவரது வாதம். தவிர எஞ்சியிருக்கும் தனி வீட்டு வேலைகளை அரசாங்கத்திடம் நிதியை கோரி நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் புதிய இராஜாங்க அமைச்சருக்கு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.  

அவர் சுட்டிக்காட்டியுள்ள இரு விடயங்களுமே புறந்தள்ள முடியாதவை. ஆராயப்படவும் அவசியமான ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டியவை. பலரும் தனி வீடு பற்றி பேசியபொழுது இ.தொ.கா. மாடிவீடு பற்றியே பிரஸ்தாபித்து வந்திருக்கிறது. கடந்த தேர்தல் காலத்திலும் இம் மாடிவீட்டு திட்டத்தையே முன்வைத்தது. தவிர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவருமே இதே கொள்கையையே கொண்டிருக்கின்றனர்.  

2004இல் முதன் முதலாக மாடி வீடு முறைமை அமுலுக்கு வந்தது. அப்போதைய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானே அதனை முன்னெடுத்திருந்தார். அன்று ரணில் விக்ரமசிங்க பிரதமர். ஹட்டன் வனராஜா, லிந்துலை, ஹென்போல்ட், கரோலினா போன்ற தோட்டங்களில் மாதிரி மாடி வீடுகள் உருவாக்கம் பெற்றன. உடனடியாகவே இம்மாடி வீடுகள் திட்டத்துக்கு எதிர்ப்பும் எழாமல் இல்லை. சிவில் அமைப்புகள் இதில் கரிசனை காட்டின. விடயம் ஐ.நா.வரை போனது. ஐ.நா. விசேட ஆய்வாளர் மிலன் கோத்தாரி இலங்கை வந்து தொடர்மாடி வீடுகள் குறித்து ஆய்வு செய்தார்.  

அதன்படி லயன் வீடுகளுக்கு மாற்றாக இம்மாடி வீடுகள் அமைய மாட்டாது என்னும் அதிரடி அறிக்கையைச் சமர்ப்பித்தார். இவ் வீடமைப்புக்குப் பயன்படுத்தப்படும் இடப்பரப்பு எவ்விதத்திலும் போதுமானதல்ல என்பது அவரது அறிக்கையின் ஓர் அம்சம். அப்போதைய அரசாங்கம் வேறு வழியின்றி அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டு மாடிவீட்டுத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. அத்துடன் பெருந்தோட்ட வீடமைப்புக்காக 10பேர்ச்சஸ் காணி என்னும் கொள்கையையும் அறிவித்தது.  

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலும் ஆறுமுகன் தொண்டமானே அமைச்சரானார். அவர் மீண்டும் மாடி வீடமைக்கும் திட்டத்தைத் தொடர முனைந்தார். ஆனால் மக்கள் ஆதரவின்மையாலும் சிவில் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்களாலும் அதனை முன்னெடுக்க முடியாமல் போனது.  

இக்காலப்பகுதியிலேயே பெருந்தோட்டங்களில் தனி வீடு நிர்மாணம் பற்றிய விழிப்புணர்வு மேலோங்க ஆரம்பித்திருந்தது. லயன் வாழ்க்கை முறைமை என்பது ஒரு சாபக்கேடாகவே காணப்படுகிறது.  

ஓரு லயன் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7பேர் வாழவேண்டியுள்ளது. இத்தனைக்கும் ஒரு அறையின் நீலம் 12X10 (120சதுர அடி) என்ற அளவிலேயே காணப்படுகின்றது. பெற்றோர், சின்னஞ்சிறுசுகள், மழலைகள் கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், வயோதிபர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், திருமணம் முடித்த தம்பதியினர், திருமண வயதை எட்டிக் கொண்டிருப்பவர்கள், பருவமடைந்த, பருவமடையத் தயாராக உள்ள இளம் பெண்கள் என்று பல்வேறு நிலையில் உள்ளவர்கள் மிகச்சிறிய அறையில் வாழ்வது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கே புரியக்கூடிய தர்மசங்கட நிலைமையாகும். இதன் மூலம் ஐ.நா. பிரகடனத்தின் வாழ்விடம் சம்பந்தமான உறுப்புரை மீறப்படுகிறது.  

ஒவ்வொருவருக்கும் வீடு, உணவு, உடை, மருத்துவ வசதிகள் அத்தியாவசியம் என்று வலியுறுத்தப்படும்போது மலையகத்தைப் பொறுத்தவரை இந்த உரித்துடமை மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலக குடியிருப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1986ஆம் ஆண்டிலேயே அதற்கான பிரகடனம் ஐ.நாவால் வெளியிடப்பட்டது. வாழ்விடம் என்பது எனது உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஐ.நா. சாசனம் (25வது உறுப்புரிமை) இலங்கை அரசாங்கங்களால் பின்பற்றபட்டும் வருகின்றன. ஆனால் பெருந்தோட்ட மக்களுக்கான வாழ்விட வசதிகள் மட்டும் கண்டுக் கொள்ளப்படாமலே விடப்பட்டன. முன்பு தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருந்த லயன் நிர்வாகம் பின்னர் தோட்டக் கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தின் கீழ் வந்தது. எனினும் தோட்ட நிர்வாகமே அதன் மீது அதிகாரம் செலுத்துகின்றது என்பதே உண்மை.  

எனினும் கிராம வீடமைப்புத் திட்டங்களுக்காக தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு தோட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்கவே செய்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான தோட்டக் காணிகள் துண்டாடப்பட்டன. அவை சகல அடிப்படை வசதிகளுடன் சிங்கள கிராமங்களாக உருவாக்கப்பட்டன. எனினும் பிரேமதாசவின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மலையகம் கொண்டு வரப்படாமலே போனது. மலையக நகர பகுதிகளைச் சேர்ந்த 20குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் கிடைத்தன.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இவ்விடயத்தில் சிறிது அக்கறை கொண்டிருந்தார். 1994இல் பதவியேற்ற அவர் தோட்ட மக்களின் குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார். 7பேர்ச் காணி இலவசமாக வழங்கப்பட்டு அதில் வீடுகளை அமைத்துக் கொள்ளும் யோசனையை அவர் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டார். தோட்டப்புற வீடமைப்புப் பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமரர் பெ. சந்திரசேகரன் இதில் ஆர்வத்துடன் செயற்பட்டார். 20,000வீடுகள் என்பது இலக்கானாலும் கூட கட்டி முடிக்கப்பட்டவை 6000வீடுகள் மட்டுமே. இதற்காக 600ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இவை சுய உதவி வீடமைப்புத் திட்டம். 30,000ரூபா கடன் வழங்கப்பட்டது. 15வருடகாலத்தில் மீள் செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. இது பூர்த்தியானதும் காணிக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படுமென கூறப்பட்டது. ஆனால் கடன் மீள் செலுத்தல் முடிவடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை உறுதிப்பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.  

இதற்கு முன் 2010இல் ஆறுமுகன் தொண்டமான் 25தனி வீட்டுத் தொகுதிகளை கொட்டகலை பிரதேசத்தில் அமைத்துக் கொடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலில் ஈடுபட்டோரும் தொழிலாளர்களாக இல்லாதவர்களும் அங்கு வசிப்பது தொடர்பில் எவ்வித சட்டரீதியிலான ஏற்பாடுகளோ பாதுகாப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நாகரீக மாற்றங்களின் அடிப்படையில் தனி வீடு என்னும் கோரிக்கையானது வலுபெற்றுள்ளது. கொள்கை ரீதியில் பெரும்பான்மையின தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் வெளிப்படையானதும் சட்டரீதியானதுமான வீடமைப்புக் கொள்கைகள் உள்வாங்கப் படாமலே உள்ளது.  

இன்று தொடர்ச்சியாக பெருந்தோட்டப் பகுதிகளில் தீ விபத்துகள் இடம் பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. பாதுகாப்பற்ற தொடர் வரிசை வீடுகளே இவ்வாறு பற்றி எரிகின்றன. தொழிலாளர்கள் பாடுபட்டு சேர்த்த பாத்திர பண்டங்கள் பாழாகின்றன.  

இதனால் தனித்தனி வீடுகளின் தேவை குறித்து பலரும் விதந்துரைக்கவே செய்கின்றனர். இ.தொ.காவை பொறுத்தவரை மாடிவீட்டுத் திட்டத்தையே சாத்தியமானதாக கருதுகிறது. தவிர மாடி வீடு வரிசைகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் தயாராகவே இருக்கிறது.  

நாங்கள் வந்தால் மாடி வீடுகளைத் தான் அமைப்போம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்துகொண்டு தான் எங்களுக்கு வாக்களித்து வருகின்றார்கள். எனவே மாடிவீடுகளைத் தான் அமைப்போம் என இ.தொ.காவினர் நெஞ்சை நிமிர்த்திக்கூற முடியும். ஆனால் சில சங்கதிகளைத் தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கவே செய்கிறது.  

மாடிவீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வருமாயின் அன்று ஐ.நா. வீடு சம்பந்தமான ஆய்வாளர் விதந்துரைத்த குறைபாடுகள் களையப்படுமா? முக்கியமாக ஒவ்வொரு வீட்டுக்குமான இடவசதி விஸ்தரிக்கப்படுமா? மரணமடையும் தொழிலாளி ஒருவரின் உடலை மரியாதைக்காக வைக்கக் கூடிய அளவுக்கு இடவசதி இல்லை என்ற சமாச்சாரம் கவனத்துக்கு எடுக்கப்படுமா? இதனுடன் மலசலகூட வசதி நவீனத்துவ முறையில் ஏற்படுத்தி தரப்படுமா?  

ஏழு பேர்ச் காணி எந்த மூலைக்கு என்று ஏலவே த.மு. கூட்டணியை ஏளனம் செய்தது இ.தொ.கா. இப்பொழுது மாடிவீடமைப்புக்காக குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் படுத்தப்படும் இடப்பிரமாணம் பற்றி அறிந்துகொள்ள முடியுமா?  

இவை எதனையும் கணக்கில் எடுக்காமல் ஏற்கனவே மாடிவீடுகளை நிா்மாணித்த அதே முறைமையைத் தான் இனியும் பின்பற்றுவோம் என பிடிவாதம் பிடிக்கும் பட்ச த்தில் இந்த சிவில் அமைப்புகள் சீற்றம் கொள்ளுமா? ஐ.நா. வரை அலறிப்புடைத்துச் செல்லுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

ஆனால், சவால்களை மட்டுமன்றி பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இளம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இருக்கிறார் என்பது மட்டும் இப்போதைக்கு நிச்சயம்.   

பன். பாலா

             

Comments