மலையகத்தில் குறை கூறும் அரசியல் வேண்டாம் குறை தீர்க்கும் அரசியலே வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் குறை கூறும் அரசியல் வேண்டாம் குறை தீர்க்கும் அரசியலே வேண்டும்!

மலையகத்தில் காலம் காலமாக அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை கூறியே அரசியல் செய்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் மக்களை இலகுவாக ஏமாற்றி வந்திருப்பதாகவே கடந்த கால அனுபவங்கள் காணப்படுகின்றன. இன்னமும் இது தொடருமேயானால் மலையகம் இன்னும் பலதசாப்தங்களுக்கு மாறாது என்பதே உண்மை. எனவே இந்த குறைகூறும் அரசியலை விடுத்து சிறந்த திட்டங்களை திட்டமிட்டு முன் வைத்து அரசியலினை முன்னெடுப்பதன் மூலம் மாத்திரம் தான் எதிர்கால சமூகத்தின் வாழ்க்கை சுபீட்சைமடையும். மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் பலர் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதே வாடிக்கை. ஆரம்ப காலத்தில் தோட்ட வீடு, வளவு சொந்தம் என்றார்கள், அரசவேலை வாய்ப்பு என்றார்கள், மலையக பல்கலைக்கழகம் என்றார்கள், ஒரு லட்சம் தனிவீடு என்றார்கள், ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு சம்பளம் என்றார்கள், பலதொழில்சாலைகள் உருவாக்குவோம் என்றும் தோட்ட சொந்தக்காரர்களாக்குவோம் என்றும் சொன்னார்கள். இப்படி இவர்களால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றால் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

ஆகவே மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு இணங்க மலையத்தில் வாழும் மக்களும் அரசியல் தலைவர்களும் மாற்றம் பெறவேண்டும். இன்று அதற்கான காலம் கனிந்துள்ளது என்றே கூற வேண்டும். ஏனென்றால் தேர்தல் காலங்களிலும் அதற்கு வெளியிலும் முன்வைத்த கோரிக்கைகளில் எத்தனை சதவீதத்தினை நிறைவேற்றியிருக்கிறோம். என்பதனை மலையக அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடன் தமது இதயத்தினை தட்டிக்கேட்க வேண்டும் என மலையக இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் வளமிக்க மாவட்டத்தில் வாழ்ந்தும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சமூகம் இது. இதற்கு சிறந்த உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தினை எடுத்துக்கொள்ளலாம். இலங்கையின் வளம்கொழிக்கும் மாவட்டம் என்றால் அது நுவரெலியா மாவட்டம் தான் இந்த மாவட்டத்திலிருந்துதான் இந்த நாட்டிக்கு தேவையான  பெரும்பாலான மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அவற்றிக்கு தேவையான நீர்த்தேக்கங்கள் இந்த மாவட்டதிலேயே அமைந்துள்ளது. ஆனால் இதில் நாம் எத்தனை மலையக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம்? இங்கெல்லாம் கூலித்தொழிலாளியில் இருந்து உயரதிகாரி வரை வெளியிலிருந்து வந்தவர்கள் சில இடங்களில் காவலாளி கூட வெளியிலிருந்து வந்தவர்களே.

எமது பிரதேசத்தின் வளம் சுரண்டப்படுகிறது என்று எமக்கு தெரிந்திருந்தும். நாம் எதுவும் செய்யவில்லை. மாறாகபோராட்டங்களை முன்னெடுத்து அரசியலையும் பெயரையும் மாத்திரம் தக்கவைத்துக்கொள்கிறோம்.'சிலோன் டீ’யை உலகத்துக்குத் தரும் தொழிலாளர் படை இங்கிருந்தும் உலக சந்தையில் கேள்வி, இருந்தும் வறுமையில் வாடும் தொழிலாளர் சமூகம் இதுவே!ஆங்கிலேயர்காலத்திலிருந்து இன்று வரை தேயிலைக்கு பெயர் ​ெபற்ற இடம் மலையகம் ஆனால் இதனைகாப்பதற்கு நாம் என்ன செய்துள்ளோம்? தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளோமா? அல்லது போதியளவு சம்பளம் பெற்றுக்கொடுத்துள்ளோமா? தேயிலையின்மூலம் மாற்றுத்தொழில்களை உருவாக்கி தந்துள்ளோமா? எதுவேமே இல்லை. நாட்டின் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் போது கணிசமான அளவு பெருந்தோட்டங்களை விருத்தி செய்வதற்கான திட்டங்களை யாவது முன்னெடுத்துள்ளோமா? இன்று 78சதவீதம் சிறு தேயிலைதோட்டங்கள் உருவாகும் வரை இருந்து விட்டு இப்போது இதனை காக்கமுன்வருவதனால் என்ன பயன் என்றே கேட்க தோன்றுகிறது. சரி பரவாயில்லை. அவற்றை மறந்து விட்டாலும் கூட இங்கிருந்து உற்பத்தியாகும் தேயிலைபொதியிடுவது, வடிவமைப்பது, ஏற்றுமதி செய்வது, உள்ளிட்ட எத்தனையோ நிறுவனங்கள் கொழும்பில் தான் உள்ளன. ஏற்றுமதியாளர்களும் கொழும்பில் தான் உள்ளனர். இந் நிறுவனங்களில் எத்தனை பேர் மலையகம் சார்ந்தவர்கள்? அத்தகைய நிறுவனங்களை நுவரெலியா, ஹட்டனில் உருவாக்கி இருந்தால் எத்தனையோ குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்குமே!  

தொழிற்சாலைகள் சுய தொழில் பேட்டைகளாக மாற்றம் 

தொழிற்சாலைகள் சுய தொழில் பேட்டைகளாக மாற்றம் பெற வேண்டும். இன்று நாடு முழுவதும் பல்வேறு சுய தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால்கம்பனிகள் பொறுபேற்ற பின் எத்தனையோ தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதில் நாம் எத்தனையோ சுயதொழில் வாய்ப்புக்களை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகளில் சிறந்த மாற்றுத் தொழில்களை ஆரம்பித்திருக்கலாம். ஆடைத் தொழிற்சாலைகள், உதிரிப்பாக உற்பத்தி, குளிர்பான, உற்பத்தி நிலையங்கள் என்பனவற்றை இங்கே ஆரம்பித்திருக்கலாம். குறைந்தபட்சமாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பு பண்ணைகளாக மாற்றி அமைத்திருக்கலாம். ஆனால் இன்று அவை துருப்பிடித்து இடித்து போகும்நிலையை அடைந்து வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் தொழில்களையும் இழந்துள்ளனர். ஆனால் நாம் என்ன செய்தோம் என்பது தான் கேள்வி,மலையகப் பகுதியில் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்து புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Comments