இலட்சியப் பயணத்திற்காக | தினகரன் வாரமஞ்சரி

இலட்சியப் பயணத்திற்காக

விரித்துப்பரப்பிய வெண் தாளாய்
உலகப் பரப்பில்
ஊன்றுகிறது; என்பேனா முனை
ஓர் முனையாய்...
கட்டாந்தரையில் கசியும்
சேற்று நீர்; மையாகி,
ஒட்டுக்களையும், உதவாப்
பீடை, களை, களையும் என்
பேனாமுனைக் கலப்பையால்
பிசிறி, உழுது, தேனாக்கும் ஒரு
தெய்வீகப் படையலுக்குள்
ஒத்திகை பார்க்கும் ஓர் உத்தமனாய்
மாரி, கோடை, என்றில்லாது
வருடம் பூராகவும்
ஆரவாரம் இல்லாத
அசத்தல் போகங்களாய்
ஆவணக் கணக்கில்...
களைநீக்கிய நெல்மணிகளின்
முத்துக்கள் புத்தக ஆவணமாய்
புஸ்பிக்கையில், பேனாக்கலப்பை
தோள் குலுக்கி நிற்கிறது
வாள் ஏந்திய ஒரு
போர் வீரனைப் போல
மேடு பள்ளம் அறவேஇல்லாத
சம வெளிப்பாதையில்
குறுக்கீடு செய்யும்
குருட்டுப் பூனைகளுக்கு
ஏர் முனை மட்டுமன்றி
போர்முனையாகவும்
புத்திபுகட்டும் என்பேனாமுனை
கடைத்தெடுத்த அரிவாளாக,
மலைக்குமேலும் மாடேத்தலாம்
பாலை வெளியைப்
பசுமையாக்கும் பயணம்
முட்டையில் மயிர்பிடுங்கும்
நிலை என்ன? இது
நாய்வாலை நிமிர்த்த எடுக்கும்
நரகாசுரன் பயணத்தில்
கச்சிதமாகக் காய் நகர்த்தும்
என் பேனா...
எவ்வளவோ நெளிவு சுழிவுகளையும்
எதிர்கொண்டு, சமாளித்து,
சமூகவலைப்பின்னலில்...
சமாதியாகிக்கிடக்கும்
இடக்கு முடக்குகளை
இல்லாமற் செய்வதற்கான
இலட்சியப் பயணத்திற்காக
உழுது கொண்டிருக்கிறது
உலகப் பரப்பை
என்னையும் சேர்த்து...
இத்தோடு பல ஆண்டுகளாக
 
சாய்ந்தமருதூர், கே.எம். அஸீஸ்

Comments