'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாரம்...' | தினகரன் வாரமஞ்சரி

'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாரம்...'

தமிழில் அழகான பழமொழி ஒன்று உண்டு 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி' என்பது போல் ஆகியுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரனின் பாராளுமன்ற கன்னியுரை.  

இலங்கையில் நடைபெற்ற 2020பாராளுமன்றத் தேர்தலானது குறுந் தமிழ் தேசிய பிற்போக்காளர்களுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரன் தனது பாராளுமன்ற கன்னியுரையில் தமிழ் மொழியானது உலகத்தின் தொன்மையான மொழியாகும். இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்றும் அதற்கு ஆயிரம் ஆயிரம் சான்றுகள் காணப்படுவதாகவும், தெரிவித்த கருத்தானது பேரினவாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குறுந் தமிழ் தேசிய வாதிகளுக்கு  புல்லரிப்புபை ஏற்பட்டுத்தியுள்ளது.  

இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 60வருடங்களாக பாராளுமன்றத்தில் தமிழ் தேசியவாதிகளால் இவ்வாறான 'புளுதிகிளப்பும்' பேச்சுக்கள் கீறல் விழுந்த பழைய றெக்கோட் மாதிரி ஒலித்துகொண்டே வருகின்றது.  

வடக்கில் மாகாணசபையில் முதலமைச்சராக இருந்து அதை நிர்வாகிக்க தெரியாத ஒருவர், வடக்கில் அடித்தட்டு மக்களின் எந்த பிரச்சினையையும் தீர்த்து வைக்க முடியாத ஒருவர், உதாரணமாக இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வீட்டுத்திட்டங்களை கூட ஏழை மக்களுக்கு சரியான முறையில் வழங்க முடியாதவர், வடக்கில் மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதற்கு காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர், விக்கினேஸ்வரன்.  முதலமைச்சராக இருந்த காலத்தில் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் கடந்த நான்கு வருடங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை இவ்வாறாக பல வினைத்திறனற்ற முன்னுதாரணங்களை கொண்ட முன்னாள் முதலமைச்சரின் வாய் வீச்சைப்பார்த்து மெய்சிலிர்க்கிறது ஒரு கூட்டம்.  

எழுதிக் கொடுத்ததை எடுத்து வந்து வாசிக்கும் ஒருவர், சிங்கத்தின் கோட்டைக்குள் நின்று கர்ச்சிக்கின்றார், சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழீழத்தை பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கிறது ஒரு கூட்டம்.  

இது எவ்வாறு இருக்கிறது எனில் வழி தவறிய மந்தைகளாய் அலையும் தமிழ் மக்களுக்கு கானல் நீரை காட்டி அங்கு சென்று தாகம் தீர்த்து கொள்ளுங்கள் என மந்தைகளை ஆனந்தமாய் அனுப்பி வைப்பதுபோல் தோன்றுகின்றது.  

சிங்கள மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஏற்படுத்தப்பட்ட முற்று முழுதான சிங்கள அரசின் இனவாதத்தை முன்னாள் வடக்கு முதலமைச்சர் எண்ணெய் ஊற்றி வளர்த்து விட்டுள்ளார் என்பதுடன் தமிழ் மக்களை பெரும் அபாயத்திற்குள் தள்ளி விட்டுள்ளார்.    தமிழர்களுடைய வரலாறுகள் தெரியாதவர்களல்ல சிங்களவவர்கள். தமிழர்களும், கல்தோன்றா மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடி, உலகத்திற்கு அர்த்த சாஸ்திரத்தை கற்றுக்கொடுத்த மூத்த குடி, கப்பல் ஓட்டிய தமிழன், பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் கலவரத்தை தூண்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் டி.எஸ்.சேனநாயக்கா, டி.எஸ்.விஜயவர்த்தனா, டொக்டர் நொய்சர் பெரோ, ஈ.டி.த.சில்வா, ஆர்.டயஸ். பண்டாரநாயக்கா பேன்ற சிங்கள அரசியல் தலைவர்களை பிரிட்டிஸ்காரரினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து சேர் பொன் இராமநாதன் பிரிட்டன் நாடு சென்று மகாராணியிடம் போராடி சிங்கள தலைவர்களை காப்பாற்றினார் என்பதெல்லாம் தெரிந்ததுதான்.

குறுந்தேசியம் பேசும் தமிழ் தலைவர்களிடம் அரசியல் இராஜதந்திரம் இல்லாமையால் எல்லாத்தையும் பறிகொடுத்து பரதேசிகளாக உலகமெல்லாம் திரிகிறார்கள் தமிழர்கள்.  

சிங்கள அரசு எதிர்பார்த்த விடயங்களை தமிழ் தலைமைகள் மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தமிழ் இனவாதம் பேசப்படுகின்றது என கூக்குரலிடுகின்றார்கள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள இலங்கை அரசு சிறுபான்மை மக்களுக்கு ஒரு குறைந்த விடயத்தையாவது நிறைவேற்ற வேண்டும் சர்வதேச சமூகத்திற்கு நல்லிணக்கத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கூட தமிழ் தலைவர்களின் பேச்சு இன்று இல்லாமல் செய்துள்ளது.  

இலங்கை வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் மற்றும் சிறைச்சாலை படுகொலைகள் போன்றவற்றிற்கு தமிழ் மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.

அதே போல் வடக்கு கிழக்கில் பாராளுமன்ற கதிரைகளுக்கு ஆசைப்பட்ட கட்சிகள் இனவாத மற்றும் மதவாத கருத்துக்களை மக்கள் முன் வைத்து தமது ஆசன கனவுகளை நனவாக்கின. இது இலங்கை வரலற்றில் ஒரு சாபக்கேடான அரசியல்.  

அந்தவகையில் விக்கினேஸ்வரனின் தமிழர்கள் இலங்கையின் ஆதிக்குடிகள் என்ற பேச்சானது ஒரு ஆபத்து நிறைந்த போக்கையும் சிங்களவர் தமிழர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையும் உருவாக்கியுள்ளது.  

ஒரு சிறிய அரசியல் எதிர்பார்ப்போடு தமிழ் மக்களால் பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்ட விக்கினேஸ்வரனின் பேச்சானது தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.  

தமிழ் என்ற சொல்லுக்குள் தமிழர்களும், முஸ்லிம்களும், ஆதிக்குடியினரும், மலையகத்தமிழர்களும் இணைந்து அதாவது 90வீதத்திற்கு மேற்பட்டோர் வடக்கு கிழக்கில் பேசுகின்ற மொழி தமிழ் என்பதனாலேயே தமிழர் தாயகம் என அழைக்கப்படுகின்றது.  

சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இனவாத அரசியல் அல்லாமல்  வினைத்திறன் மிகு அரசியலை முன்னெடுக்க வேண்டும் அது அவ்வளவு இலகுவானது அல்ல. தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழ்கின்ற தாய் நாடு இலங்கை.  

ஆகவே இலங்கை தேசிய ரீதியில் நல்லிணக்கம் கொண்ட ஒரு தேசமாக கட்டமைக்கப்பட வேண்டும்.  

தமிழ் மக்கள் மீது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை யுத்தம் 2009ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவரகளின் பிரச்சினை, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்  தமிழ் மக்களுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் எண்பதினாயிரம் விதைவைகள் பிரச்சினை என்பன தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கும் நிலையில் இவற்றை மறக்கடிக்கும் அல்லது நீர்த்துபோகச் செய்யும் முகமாக புது பிரச்சினை ஒன்றை தேசிய ரீதியில் கிளப்பி விட்டுள்ளார் விக்கினேஸ்வரன்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தமிழர்களின் போராட்ட வரலாறோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர். மக்கள் போராட்டங்களில் பங்கு கொள்ளாத ஒருவர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ள முடியாத மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஒரு நீதியரசர், தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்தி இலங்கையில் அரசியல் செய்ய நினைக்கும் வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கமைப்பில் எழுதிக்கொடுத்ததை அப்படியே பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் விக்கினேஸ்வரன் ஐயா.  

இலங்கையில் தமிழ் மக்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். அதே போல் இலங்கை தேசத்தில் உள்ள ஏனைய மக்களின் பண்பாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்,  இலங்கையில் வாழும் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தவமான கலாசாரங்கள் உண்டென்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓவ்வொரு இனமும் இலங்கை தேசியத்தின் கீழ் தங்கள் அரசியல் பண்பாட்டு பொருளாதார விடயங்களை தீர்மானிக்கும் அலகைப் பெறும் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணம் செய்த அரசியல் பாதை மக்களை அரசியல் சூனியத்திற்குள் தள்ளியுள்ளது. வடக்கு கிழக்கில் ஆதிக்க சாதிய சக்திகளாக செயற்பட்டு அரசியல் செய்துவந்த தமிழ் தலைமைகள் தமது சுயநல அரசியல் காரணமாக காணாமல் போயுள்ளன.  

சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது என்பதுடன் இனப்படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றமும் தண்டிக்காது என்பது இலங்கையின்  சட்டங்களை கரைத்து குடித்த விக்கினேஸ்வரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும், சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் நன்றாகவே தெரியும். தெரிந்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்திற்கான சர்வஜன வாக்ககெடுப்பு என்றெல்லாம் தமிழ் மக்களிடம் கதை விட்டு வாக்குகளை பெற்று தங்கள் இராஜதந்திர நகர்வுகளை வெற்றிகரமாக செய்துள்ளனர். இப்போது அது பற்றிப்  பேசுவதை கொஞ்சம் குறைத்துள்ளனர். அடுத்த தேர்தலில் மீண்டும் பேசக்கூடும்.  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தமிழ் மக்களால் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. அத்துடன் தமிழ் அரசியல் பரப்பில் தமிழ் தேசிய தலைமைகளை நிராகரித்த மக்கள் 2020பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் தடுமாற்றத்தை எதிர் நோக்கியிருந்தனர்.  

குறைந்தளவு அபாயமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர்த்து வாக்களித்திருந்தனர். பாராளுமன்றத்தில் தமிழ் தலைமைகளின் வங்குரோத்து அரசியல் மற்றும் உசுப்பேத்தும் பேச்சுக்கள் வெறும் வாய் சப்பிய சிங்கள பேரினவாதிகளுக்கு பலகாரம் எடுத்துக் கொடுத்த கதையாகிவிட்டுள்ளது.   நாடாளுமன்ற தேர்தல்கள் மூலமாகவே சிறுபான்மையினர் தங்கள் இருப்புக்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.  

எதிர்வரும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் தேசிய தலைமைகள் முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து பரந்துபட்ட முறையில் தேர்தல்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.  

தமிழ் முஸ்லிம் மக்களை ஒருங்கிணைத்து முன்செல்லக்கூடிய ஒரு முற்போக்கு சக்தியுடன் சேர்ந்து பயணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும், அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் வடக்கு, கிழக்கில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் என்பதுடன், மோசமானவர்கள் ஆட்சிக்குள் நுழைவதற்கான புறவாசல் தவிர்க்கப்பட்டு பெரும் அபாயம் தடுக்கப்படும்.  

 தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது பிற்போக்கு சிந்தனைக்குள் தன்னை குறுக்கிக் கொள்ளாது. வடக்கு கிழக்கிலுள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சிகள், மற்றும் முற்போக்கு   சிந்தனை கொண்ட சிறிய கட்சிகளையும் இணைத்து விட்டுக் கொடுப்புடன் ஓரணிக்குள்  திரளவேண்டும்.  

இலங்கையில் அனைத்து சிறுபான்மை கட்சிகளும் தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்றன. இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுத்திருக்கின்றன, புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை அவர்கள் ஓரணியில் திரள வேண்டும். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறுபான்மை இனங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண முன்வர வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை கட்சிகள் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக மாறுவதன் மூலம் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ, இலங்கை அரசாங்கத்தின் கொள்கையிலோ மாற்றத்தை கொண்டுவர முடியும்.  ஆகவே இவ்வாறான அக்கபூர்வமான செயற்பாடுகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் வெறும் வாய்ச்சவாடல்கள் மூலம் மக்களை உசுப்பேற்ற நினைப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதுடன் தமிழ் மக்களுக்கான குழியை தமிழ் தேசியவாதிகளே தோண்டினார்கள் என்பதை வரலாறு பதிவு செய்யும்.  

எம்.ஜி.ரெட்ன காந்தன்

Comments