கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

2011-- – 6, 106 

2012- – 8, 504 

2013- – 11, 489 

2014- – 11, 100 

2015- – 11, 212 

2016- – 9, 535 

2017-– 9, 202 

2018 – -9, 266 

2019- – 21, 845 – (30.09.2019வரை) 

இது என்ன கணக்கு? எதற்காக? இலேசில் யூகிக்க இயலாது - நானே தெரிவிக்கின்றேன். 

நாட்டின் நாலா பாகங்களிலுமிருந்தும் 2011–- 2019ஒன்பது ஆண்டு காலப்பகுதியில் கிடைத்த சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளின் தொகை இது 79, 259! 

இந்தாண்டு 5,000தாண்டிவிட்டது!  

மொத்தம் 84, 259 -

அட கேவலமே! ஆனாலும் 37, 186முறைப்பாடுகளுக்கு நீதிமன்றங்களில் தீர்வாம். இன்னும், 42, 073தொகைக்குத் தீர்வில்லையாம். (ஆதாரம்: கணக்காய்வாளர் திணைக்கள ஆதார பூர்வ அறிக்கை) வெட்கம், கூச்சம் காரணமாக முறைப்பாடுகள் செய்யாத தொகை வேறு தனி! 

2011லிருந்தே இந்த விவரம் தரப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளின் நிலையை அவசர கோலத்தில் பெற இயலவில்லை.  

எவ்வாறாயினதும், 2002- ஆண்டில் ஒரு மேலோட்டமான கணக்கின் படி 692மட்டுமே! இருபது ஆண்டுகளில் தான் அதிகரிப்பு. அசுர மிருக வெறி. 

நமதருமைப் பிள்ளைச் செல்வங்களுக்கு நடப்பது என்ன? நாடும், நாமும் எதை நோக்கிப் பயணம். 

பிரபல ஆங்கில நாளேடு ‘டெய்லி மிரர், 04/21-– 08-– 2020இரு இதழ்களில் இந்தக் கேவலம் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறது. 

'Crime of child sexual abuse' – என்ற தலைப்பில் அலசப்பட்டிருக்கிற கட்டுரை 1998ல் ஏற்படுத்தப்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) 22ஆண்டுகளாகியும் ‘முடக்கு வாதம்’ பிடித்த நிலையில் மெது மெதுவாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. அச்சபையின் முக்கியப் பதவிகள் வெற்றிடமாக இருப்பதாகவும் குறிக்கிறது. ஆகவே துஷ்பிரயோக முறைப்பாடுகளைக் கேட்பாரில்லை. 

தேசியப் பொலிஸ் கமிஷன் தலைவரும், சமூகவியல் பேராசிரியருமான சிறீ ஹெட்டிகே, “கல்வித் திட்டத்தில் கோளாறு இருக்கிறது. நம் பிள்ளைகளுக்கு முன்பள்ளி கல்விப் போதனைகளிலும் ஆரம்பப் பாடசாலைக்கல்வி மட்டத்திலும் துஷ்பிரயோக அபாயமணியை அடித்துக் காட்டி விட வேண்டும்” என்றார். 

மற்றுமொரு புத்திஜீவி தடயவியல், சட்டம் சார் உளவியலாளர் திருமதி ரணீஷா டீ சில்வா, 

‘பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதைப் புரிய வைக்க சிறுவர்களுக்குப் பாலியல் போதிக்க வேண்டும் என எடுத்துரைக்கிறார். 

இலங்கையில் தினமும் ஒரு சிறுவன் தகாத பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படுகிறான். 

பெரும்பாலான பையன்களைச் சீரழிப்பது உறவினர்களும் அண்டை அயலார்களும். 

வயது கடந்த பெண்களும் சிறுவர்களைக் கெடுப்பதில் வல்லவர்கள். 

சிறுவர்களாக இருக்கும் பொழுது சீரழிந்தவர்கள் வாலிப வயதடைந்ததும் சிறியவர்களையே தேடுகிறார்கள். 

ஆசியா வீக் என்ற பிரபலமான சஞ்சிகை, இலங்கையிலே சிறுவர் சீரழிவு அதிகமெனக் குறித்துள்ளது. 

பாலியல் நோய் சிகிச்சை நிலையங்களுக்கு வருவோரில் பலரும் சிறுவயதில் வியாதியை (எச்ஐவி எயிட்ஸ்) பெற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். அதிலும் பெண்கள் 40சதவிகிதம். 

இவ்வாறான சிறுவர் சீரழிவுகளை அவ்வப்போது வெளிச்சப்படுத்தி பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை வழங்குவதில் நமது மூத்த நாளேடான ‘தினகரன்’ முன்னோடியாகத் திகழ்வதைத் தன்னடக்கத்துடன் குறிக்க வேண்டியுள்ளது. 

இந்த வகையில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னரான (2002) ஒரு ‘தினகரன்’ கட்டுரை என் சேகரிப்பில்! அந்த ஆகஸ்ட் 04ஆம் நாள் ‘தினகரன்’ ஏட்டில் புத்தளப் பகுதி மண் (மதுரங்குளி?), மர்லின் மரிக்கார் தினகரன் நிருபர் நிலையில் (இப்போது துணை ஆசிரியர்) "நம்பிக்கைக்குரிய நண்பர்கள் கூட உங்கள் குழந்தைகளுக்குக் குற்றமிழைக்கலாம்” என்றொரு அற்புதமான ஆய்வுக் கட்டுரையை ஆலோசனைகளுடன் வழங்கியிருக்கிறார். அப்படியே மறுபிரசுரம் செய்யவே ஆசையோ! ஆசை! ஆனால் இடப்பஞ்சம் இடறு! இடறு! 

மேலும், சென்ற வார மஞ்சரியில் கூட, (23.08.2020) ஒரு நங்கை ‘சிவகுமார் திவியா’ என்பவர், “அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்– எவ்வாறு தடுக்கப் போகின்றோம்?” எனப் பெரும் வினா எழுப்பி ஒரு முழுப்பக்கத்தில் பல அரிய தகவல்களையும் விவரங்களையும் வழங்கியிருக்கிறார். வாசிக்கத் தவறியவர்கள் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடப் பார்த்திடலே அவசியம்.

இன்றைய இனிப்பு, இப்பொழுது நீங்கள் விழுங்கிய படுபயங்கர கசப்பு வில்லைகளின் ‘காட்டத்தை’க் குறைக்கக் கூடியதான ஓர் இனிப்பு! 

அதுவும் ‘புது முகமாகப் பலராலும் அறியப்பட்டுக் கொண்டிருக்கிற நீதி அமைச்சர் அலி சப்ரி வழங்கியிருப்பதை அப்படியே அளித்து விடுகிறேன் உங்கள் சுவைக்கு! 

விசேட நீதிமன்றம் 

நீதி அமைச்சர் 

அலி சப்ரி அறிவிப்பு 

“சிறுவர்களுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தேவையேற்படின் விசேட நீதிமன்றமொன்றை அமைச்சரவையின் அனுமதியுடன் ஸ்தாபிக்க முடியும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

“தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற சில விடயங்களை தொடர்ந்து மறைத்து வைக்க முடியாது. அவை மிகவும் முக்கியமான பிரச்சினைகளாக உரு வெடுத்துள்ளன. 

சிறுவர்கள் சிறு பருவத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களுக்கு முகங்கொடுப்பார்களாயின் அதனால் ஏற்படும் பாதிப்பு அவர்களது வாழ்நாள் முழுவதும் காணப்படும். எனவே நாம் எவ்வாறேனும் இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க வேண்டும். 

நன்றி, மிக நன்றி அமைச்சர் அலிசப்ரி! இனிப்பிலும் இனிப்பான செய்தி வழங்கி விட்டீர்கள்! முனைந்து முன்னெடுத்துச் செல்லுங்கள். எங்கள் இளந்தளிர்களை பட்டுப் போகாமல் பாதுகாத்திடுங்கள். 

இதுவும் ‘நீதி’யுடன் தொடர்புடைய ஓர் இனிப்பே!  

இலங்கை வரலாற்றில் 36ஆண்டுகளுக்குமுன் 1984லில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் மகனாக சுப்பையா சர்வானந்தா! வடபுல மண்ணின் மைந்தரான அவர் பிறந்தது பெப். 22, 1923. ஆரம்பக்கல்வியை சண்முகானந்த வித்தியாசாலையில் துவங்கி, ஆங்கிலக் கல்வியை ஊர்காற்றுறை அர்ச். அந்தோனியார் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்றார். அவரது 18ஆம் அகவையில் சட்டப் படிப்பை ஆரம்பிப்பதற்கு மைத்துனர் முறையான என். நடராஜா கியூ.சி. பெரிதும் உற்சாகமும் ஊக்கமும் அளித்தார்.  

சட்டத்தரணியாகச் சித்திபெற்ற பிறகு, உயர் நீதிமன்ற, மேன் முறையீட்டு வழக்குகளில் நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் எழுப்பிக் கொண்டே, லண்டன் எல்.எல்.பி பரீட்சைக்குத் தோற்றி அட்வகேட்டாகப் பரிணமித்தார். 

சட்டத் துறையில் நல்ல செல்வாக்கும் நன் மதிப்பும் பெற்றுக் கொண்ட அவரைத் தேடி அகவை 61ல் (1984) அதியுயர் பிரதம நீதியரசர் பதவி வந்தது. 

அந்த வகையில், இலங்கை அன்னை நீதித்துறையின் தலைமகனாக முதலாவது தமிழ் மகனைப் பெற்றெடுத்தார். மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து (1988) முதலாவது மேல்மாகாண ஆளுநர் பதவியும் ஓடி வந்தது! 

இதில் 94வரையில் ஆறு ஆண்டுகள் சேவையாற்றியது கொழும்பு மாவட்ட பல்லின மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! 

71அகவைகளைக் கடந்த பிறகு புகலிடம் விரும்பி, அவுஸ்திரேயாவைத் தேர்ந்தெடுத்து இலங்கையிலிருந்து விடைபெற்றார். தன் 84ஆம் அகவையில் 2007ஜனவரி 10ல் அந்த மண்ணில் ஓய்வுறக்கம் பெற்றார். ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஓர் ஆணுமாக இரு செல்வங்களை அடைந்திருந்தார்.  

இன்றோ அவர் தமிழ் மக்கள் மத்தியில் மறக்கப்பட்ட பாத்திரம்! 

Comments