ஒரு சமூகத்தை விடுதலை நோக்கி வழிநடத்திய தொண்டமான் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு சமூகத்தை விடுதலை நோக்கி வழிநடத்திய தொண்டமான்

'ஆளுமை என்பது பல்வகை சிறப்பினை ஏகத்துவமாக்கிக் கொண்டு செயற்படும் ஒரு  ஆற்றல். இந்த ஆளுமை என்ற பதத்துக்கு அடையாளமாக விளங்கியவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான். இந்திய வம்சாவளித் தமிழரின் பிந்திய  மாற்றங்களில் எல்லாம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அரசியல்  சமூகம் பொருளாதாரம் என சகலதுறைகளிலும் சாணக்கியமிக்க தலைமைத்துவம் ஏற்று  தன்னை அர்ப்பணித்து ஆற்றுப்படுத்தியவர்'

1987ஆம் ஆண்டு. அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாபெரும் பாரதி விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. பாடசாலை நிர்வாகத்தின் பங்களிப்போடு இந்த முழுநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவர் மூத்த பத்திரிகையாளர்   சவரிமுத்து தேவதாஸ்.  தற்போது இவர் இ.தொ.காவின் ஊடகப் பிரிவு இணைப்பாளர். 

பாரதி விழாவுக்கு தலைமை தாங்கியவர் அப்போதைய பாடசாலை அதிபர் எஸ். நடராஜன். நாடு முழுவதும் பரந்து வாழ்ந்த,  வாழும் பிரபல எழுத்தாளர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி பிரமிக்கச் செய்தார் சவரிமுத்து தேவதாஸ். அந்தனி ஜீவா, கலைவாதி கலீல், அமரர் தேவதாசன் ஜெயசிங், மாத்தளை வடிவேலன், சு. முரளீதரன், குறிஞ்சித் தென்னவன், அமரர் பசறையூர் வேலாயுதம், அமரர் சாரல்நாடன், மேமன்கவி, தமிழோவியன், அமரர் மல்லிகை சி. குமார், எஸ்.எம். பாரூக் (பண்ணாமத்துக் கவிராயர்), இரா. கோபால் என ஏராளமான படைப்பிலக்கியவாதிகள் முகாமிட்டிருந்தது மறக்கமுடியாத அனுபவம். பன்முகத் திறமைவாய்ந்த மலையக கலைஞர்கள் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.  

பாரதி விழாவின் பிரதம அதிதி அப்போதைய அமைச்சர் இ.தொ.கா. தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான். அவர் விழா அரங்கிற்கு விஜயம் செய்தபோது நேரம் இரவு எட்டாகியிருந்தது. கூட்டமான கூட்டம். அவர் பேசுவதற்கு முன் அண்ணன் அந்தனிஜீவா படைப்பாளிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பகிரங்கமாக முன்வைத்து கருத்துரைத்தார். குறிப்பாக நூல்கள் வெளியிடுவதிலும் அதை விற்பனை செய்வதிலும் காணப்படும் அசெளகரியங்கள் குறித்து மூத்த கலைஞர் அந்தனி ஜீவா ஆவேசமாக குரல் கொடுத்தார்.  

பிரதம அதிதி என்ற வகையில் இறுதியாக ஒலிவாங்கி முன்வந்தார் செளமியமூர்த்தி தொண்டமான். எடுத்த எடுப்பிலேயே அவர் அந்தனி ஜீவாவின் ஆதங்கத்துக்கு ஆறுதல் சொல்ல தலைப்பட்ட பண்பு எம்மை கவர்ந்தது. எழுத்தாளர்கள் எல்லாம் எம்மோடு சேருங்களேன் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்றேன் என்று செளமியமூர்த்தி அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பில் படைப்பாளிகள் யாருக்கும் உடன்பாடு இல்லாதது வேறுவிடயம். ஆனால் அதில் ஓர் அரவணைப்பு தெரிந்தது. அது எமக்கு பிடித்தமாகவும் பட்டது. தவிர பீடிகை வைத்துப்பேசாமல், பொய்யுரைகளை வெளிப்படுத்தாமல், சந்தர்ப்பத்துக்கேற்ப சங்கதிகளை அவிழ்த்து விடாமல் அவர் பேசியமை ஆளுமை நிறைந்த ஒரு தலைமைக்கு அடையாளமாக விளங்கியது.  

அன்றே அவரை நாம் முதன்முதலாக சந்திக்கிறோம். பார்த்த சில மணிநேரங்களிலேயே அவர் எமது மனப்பதிவுக்குள்ளாகிறார்.  ஆளுமை என்பது பல்வகை சிறப்பினை ஏகத்துவமாக்கிக் கொண்டு செயற்படும் ஒரு ஆற்றல். இந்த ஆளுமை என்ற பதத்துக்கு அடையாளமாக விளங்கியவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான்.

இந்திய வம்சாவளித் தமிழரின் பிந்திய மாற்றங்களில் எல்லாம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அரசியல் சமூகம் பொருளாதாரம் என சகலதுறைகளிலும் சாணக்கியமிக்க தலைமைத்துவம் ஏற்று தன்னை அர்ப்பணித்து ஆற்றுப்படுத்தியவர். அவர் 1913ஆம் ஆண்டு தென் இந்தியாவின் புதுக்கோட்டையில் பிறந்த அவர் தனது 11வயதில் இலங்கை வருகிறார். கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் கற்கிறார். அக்காலக்கட்டத்திலேயே அவரது வாழ்வியலில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. அண்ணல் காந்தி இலங்கை விஜயம் செய்ததுதான் அது. மகாத்மா காந்தியின் உரை உள்வாங்கிக் கெண்டது அவரை. சொந்தமாக  இருந்த தேயிலைத் தோட்டத்தினை நிர்வாகம் செய்தாலும் அவர் மனத்தாகம் முழுவதும் மலையக மக்களின் நிலை பற்றியதாகவே பற்றுக்கொண்டிருந்தது.  

இதற்கு வடிகால் திறக்கப்பட்டது போல 1934ஆம் ஆண்டு ஜவகர்லால் நேருவின் ஆலோசணைக்கேற்ப உதயமான இலங்கை இந்திய காங்கிரஸின் கம்பளை கிளைக்கு தலைவராக்கப்பட்டார் அவர். அது வரலாற்றுப் பதிவு. எழுச்சிமிக்க தலைமையொன்றின் தோற்றுவாய். அதன் நீட்சியாய் 1947ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத்  தெரிவானார்.  

அப்போது தான் அவரின் போராட்ட வாழ்வுக்கு முதல் தடம் பதிக்கப்பட்டது. டி.எஸ் சேனநாயக்கா அரசு மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்க புரட்சிக்கொடி ஏந்தினார் அவர். 1952இல் குடியுரிமைப் போராட்டம் சத்யாக்கிரக வடிவம் பெற சாத்வீகமாக அதனை நடத்தி முடித்தார். இதன் பின்னர் இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெற்றது மாற்றம். அதன் தலைவராக அமரர் தொண்டமான் கண்டார் ஏற்றம். இது இன்னுமொரு வரலாற்றுப் தோற்றம்.  

1956ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதியாகத் தெரிவாகி 1978ஆண்டுவரை அதனைத் தொடர்ந்தார். அவர் தேசிய ரீதியில் மதிக்கப்பட்ட  ஒருவராக விளங்கினார். 1960களில் தனிச்சிங்கள மொழி சட்டம் வந்தது. அதை எதிர்த்து தந்தை செல்வா போராட்டம் நடத்தியபோது சிறிதும் தயக்கமின்றி தானும் பங்கேற்று இன உணர்வை நிரூபித்தார். அதேபோல தமது சமூகத்துக்கு ஏற்புடையதல்ல என்று தோன்றிய விடயங்களில் தமது கருத்தை பகிரங்கமாக சொல்லத் தயங்கியவர் அல்ல அவர்.  

அவரின் கனவான் அரசியலுக்கு நல்லதொரு உதாரணம் இது. அது 1977ஆம் ஆண்டு நடந்தது. பொதுத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு கட்சி அடைந்தது படுதோல்வி. ஐ.தே.க. கொண்டது பெருவெற்றி. அதேபோல தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமோகமாக வென்றது. இதனால் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு வந்தது.  

அத்தருணத்தில் மூத்த தலைவராக திகழ்ந்தவர் அமரர் தொண்டமான். தமிழர் உரிமைக்கான போராட்டங்களில் தயங்காமல் பங்கேற்பவர் என்ற ரீதியில் அமரர் தொண்டமானுக்கே வந்தது அழைப்பு. அரசியலை பிழைப்பாக எண்ணாத அந்தப் பெருந்தகை தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்கு அப்பதவி எந்த வகையிலும் உதவியாக இருக்காது என்று மறுத்தார்.  

இதே காலகட்டத்தில் கிராமிய கைத்தொழில் அமைச்சராக பெரும்பணி புரிந்தார். குறிப்பாக மலையக பாடசாலைகளின் அபிவிருத்தியில் சுவீடன் நாட்டு சீடா நிறுவனத்தின் பங்களிப்பு இற்றைவரை இடம்பெற அடித்தளம் இட்டவரே இவர்தான். விகிதாசார தேர்தல் முறைக்கு வித்திட இவரின் நிதானமான காய்நகர்த்தல்களே காரணமென்பது பலருக்குத் தெரியாது. இன்று 7பேர்ச் காணி என்ற தொனி எழ அச்சாரமிட்டவர் அமரர் தொண்டமான்தான். அவர் துணிச்சலான தலைவராகத் திகழ்ந்தார். அது மட்டுமின்றி மலையகத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூத்த பிள்ளையாக கருதப்பட்டார். இன்றும் பல மலையக வீடுகளில் அவர் நிழல்படம் தொங்கும் ஞாபகச் சின்னமாக. விட்டுக்கொடுக்காத போக்கு, காட்டிக் கொடுக்காத அணுகுமுறை, தலைவணங்காத தனித்துவம் அவரை பிற இன தலைவர்களையும் பிரமிக்கச் செய்தது.  

தேசிய பிரச்சினை என்றாலும் அவரிடம் பேசிய பின்னரே அடுத்தக்கட்ட நகர்வுக்கு அடியெடுக்கும் பழக்கத்தை அனைத்தின தலைமைக்கும் ஏற்படுத்தியிருந்தது. இதுவொன்றே அவரின் ஆளுமைக்கு ஆதாரம். டி.எஸ். சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, ஆர். பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்கா போன்ற சிங்கள தேசிய தலைமைகளால் அர்த்தபுஷ்டியுடன் நோக்கப்பட்டவர் அன்னார். தமிழ்த் தேசிய தலைவர்கள் அவரின் துணிச்சலான அரசியல் நகர்வுகளை தமக்கு ஆதர்ஷமாக ஆக்கிக் கொண்டதும் உண்டு.  

அவரின் முடிவு அதிரடியானதாகவே எப்பொழுதும் அமையும். மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டம் என்று ஆரம்பமாகிவிட்டால் என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஐயா என்ற பதட்டம் முழு நாட்டையும் முக்கி எடுக்கும். அவர் பயணித்த ஒவ்வொரு வழியும் போராட்டக்களம். அவர் பாவித்த ஒவ்வொரு வார்த்தையும் அன்று தொழிலாளர்களுக்குப் பலம். அவரின் நாவசைவு, விழி ஒளிர்வு, விரல் சுட்டு எல்லாவற்றுக்குமே கட்டுப்படும் ஒரு படையணியாக அவர் மக்களை வசீகரித்திருத்தார். யாரையும் ஒருமையாக விளிப்பதன் மூலம் யாவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வினை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது.

இது எந்தவொரு சமூகத் தலைவரும் இந்த நாட்டில் பெற்றிடாத பேறு. அவருக்கென்று ஒரு கொள்கை இருந்தது. அரசியல் நெறி இருந்தது. இறுதிவரை அதை இறுகப் பற்றியிருந்தார். அவரின் மனமுருக செய்யப்பட்ட அரசியல் தாஜாக்கள் எதுவுமே அவரை அண்டமுடியவில்லை. அதனால் அவரால் நேர்மையாய் தடைகளைத் தாண்டமுடிந்தது.  

அவர் 1999ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி அமரர் ஆகும்வரை சாதுர்யமான தலைவராக இருந்து வந்தார். 86வருடங்கள் வாழ்ந்த அவர் 21வருடங்கள் அமைச்சாரக ஆக்கப்பணி புரிந்தார். அவரின் சேவைக்குக் கிடைத்த அரச கெளரவம் இன்றும் பழைய பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சிலையாக காட்சியளிக்கின்றது.

அவரின் கனவுகளான பல அபிவிருத்தித் திட்டங்களே இன்று மலையகமெங்கும் அவரின் தலைமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.  

அமரர் தொண்டமான் மலையகத்தின் மீட்சிக்கு வழி செய்தவர். ஆட்சிக்கு அடிகோலியவர். அதை நீட்சியாகக் கொண்டு செல்லும் தேவை இன்று மலையகத்தின் புதிய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளது. அவர் சம்பந்தமான தேடல்கள் எதிர்கால மலையகத்தின் எழுச்சிக்கு அத்தியாவசியமானது.  

இன்று அவரது 107ஆவது ஜனன தினம். இதனையிட்டு கொழும்பு செளமிய பவனில் அன்னாரது வரலாற்று தடம் சார்ந்த ஆவணத்தொகுப்புகள் அடங்கிய கண்காட்சி, காணொளி காட்சி என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல மாதங்களாக முயன்று பல்வேறு தகவல்களைத் தேடி தொகுத்து மலையக மக்களின் மாபெரும் தலைவனுக்கு மதிப்பார்ந்த மரியாதையை வழங்கி வைக்க முனைந்துள்ள நண்பரும் மூத்த ஊடகவியலாளருமான சவரிமுத்து தேவதாஸ் பாராட்டுக்குரியவரே! ஏனெனில் இது காலத்துக்கு ஏற்ற ஒரு பணி. குறிப்பாக மலையக இளைய தலைமுறை அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் ஆளுமையின் அடையாளங்களை த மக்குள் சுதந்தரித்துக் கொள்ள அரிய சந்தர்ப்பம். இதனைப் பயன்படுத்திக் கொள்வதும் பரவச்செய்வதும் கூட சமூகம் சார்ந்த பாரிய பங்களிப்பாகவே இருக்கப் போகிறது.  

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிகழ்வினை ஆரம்பித்து வைக்கிறார். இ.தொ.கா. நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஷ்வரன் (பா.உ), பிரதித் தலைவர் அனுஷா சிவராஜா உள்ளிட்ட இ.தொ.கா. பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.    

பன்.  பாலா 

Comments