தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை பலி கொடுக்கும் தலைமைகள்!! | தினகரன் வாரமஞ்சரி

தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை பலி கொடுக்கும் தலைமைகள்!!

முள்ளிவாய்க்காலில் புலிகள் அழிக்கப்படுவதற்கு, பல வருடங்களுக்கு முன்னமே புலிகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் மேற்கொண்டிருந்தன. புலம்பெயர் தேசங்களில் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டதுடன் அதன் செயற்பாட்டாளர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் புலிகள் குறைந்தபட்ச தீர்வுக்கு சம்மதிக்க வேண்டும் என்பதுடன் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பதில் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் உறுதியாக இருந்தன. 

இந்த சர்வதேசத்தின் உலக ஒழுங்கை இந்தியா உட்பட புலிகள் சரிவர புரிந்து கொண்டார்களா? அல்லது பிடிவாதத்துடன் போரிட்டு அழிந்தார்களா? என்பதை எவரும் சொல்லவில்லை, சொல்வதற்கு யாரும் உயிருடன் இல்லை. வன்னியில் புலிகள் அழிக்கப்பட்டதுடன் புலம்பெயர் தேசங்களில் செயற்பட்டு வந்த அமைப்புக்களும் காணாமல் போயின. 

புலிகளை நம்பி செயற்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் நடுத் தெருவில் கைவிடப்பட்டனர். போர்ச் சூழலில் அனுபவித்த கொடுமைகளைவிட நாளாந்த வாழ்வியலில் கொடுமைகளையும், துன்பங்களையும் அனுபவித்ததுடன், யுத்தத்தின் கூர்மையின் வடுக்களையும் தாங்கி நிற்கின்றனர் தமிழ் மக்கள். இப்போது தமிழ் மக்களுக்கு அவலங்களும், தியாகமும், பயங்கரமும், கண்ணீரும், முள்ளிவாய்க்காலில் உறவுகளின் சாம்பலும்தான் மிச்சமாக இருக்கிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் அழிவுக்கு பின்னும் பாடம் கற்றுக் கொள்ளாமல் தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகத்தை முன்னெடுக்க தொடங்கியது. தமிழ் மிதவாத தலைமைகள் புலிகளின் அழிவுக்கு பின்னரான காலத்தில் தமிழ் மக்களின் காவலர்களாக தங்களை காட்டிக் கொண்டதுடன் பெரும் எண்ணிக்கையில் பாராளுமன்ற ஆசனங்களை பெற்று இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர். 

புலிகளுக்கு அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களின் காவலர்களாக தங்களை காட்டிகொள்ள முயற்சித்த போதும், தனித்துவமான அரசியல் பாதை இல்லாததால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஆதரவை கூட்டமைப்பினரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை, 

ஓன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வரைபுக்குள் சமஸ்டி ஒழிந்துள்ளது, தமிழர்களுக்கு தீபாவளிக்குள் அரசியல் தீர்வு, சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது, சர்வதேச விசாரணை வரும், இதயத்திற்கும் இதயத்திற்குமான ஒப்பந்தம் செய்துள்ளோம் தீர்வு நிச்சயம் என ஒவ்வொரு தேர்தல்களிலும் பூச்சாண்டி காட்டிய தமிழ் தேசிய அரசியல் தலைமைகளின்  முகத்தை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். 

பகிர்ந்தும் இசைபடவும் வாழ்ந்த தமிழ் சமூகம்,   பொருளாதார வளர்ச்சியுடனான அரசியல் செயற்பாட்டை நோக்கி மக்களை நகர்த்த முடியாத தனித்துவ அரசியல் இல்லாத நிலையில் தங்கள் தேவைகளுக்கு கையேந்தும் சமூகமாக, கண்ணியம் இழந்த சமூகமாக மாறிப்போனது. 

யுத்தத்தின் பின்னர் தமிழர் அரசியல் தலைமைகள் தங்கள் நலன்களை தமிழ் தேசியத்தின் பெயரால் பாதுகாக்க போராடி வந்தனரே ஒழிய அரசியல் ரீதியாகவும், பொருளாதா ரீதியாகவும் வறுமைக்குள் சென்று கொண்டிருக்கும் தமிழ் மக்களையும், தமிழர் சமூகத்தில் இருக்கும் முரண்பாடுகளையும் களைவதற்கும் எந்தவித நடவடிக்ைக கைளையும் எடுக்கவில்லை. அபிவிருத்திகளை செய்வதற்கான சமாந்திரமான திட்டங்கள் ஏதும் இல்லத தமிழ் அரசியல் பரப்பானது தமிழ் தேசியம் என்ற போர்வையில் சூனியம் மிக்க அரசியல் பரப்பாகவே காணப்பட்டது. 

இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அனைத்து இராஜதந்திர முறைமைகளையும் தமிழ்த் தலைமைகள் கையாண்டதுடன் எதற்கெடுத்தாலும் சர்வதேசம் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்ற வெற்று உணர்ச்சி அரசியலே இவர்களை இயக்கிக் கொண்டிருந்தது. 

சர்வதேச தலையீட்டை இலங்கையில் கோருவதும், இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை வரும், சர்வதேசம் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதெல்லாம் ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை என்பதை சர்வதேச நாடுகளினதும், ஐக்கிய நாடுகள் அமையத்தின் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அவதானித்து வந்த மக்கள் புரிந்து கொண்டதுடன் தமிழர் தலைமைகள் தங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதையும் உணர்ந்துகொண்டனர். 

தமிழ் மக்களை நோக்கி  வாக்கு அரசியல் எவ்வாறு தமிழர் தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டதோ அதேபோல் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாத மதவாத அரசியல் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழ், சிங்கள,  முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மேலாதிக்கமானது ஒரு கருத்தியலாக வெளிக்கிளம்புகின்றது. சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்காமல் சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகளின் இன மேலாதிக்க கருத்துக்களை குறிக்கின்றதோ அதே போன்றதுதான் தமிழ் முஸ்லிம் மேலாதிக்கமும். 

இந்த மேலாதிக்க சக்திகள் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது ஆதிக்க சக்திகளாக அகலக்கால் பதித்து நிற்கும் ஒரு குறிப்பிட்ட மேட்டுக்குடியினருக்கான அரசியல் பொருளாதாரத்தை நலனாகக் கொண்டு உருவாக்கப்படும் சிந்தனையுருவாக்கமே அவர்களின் தேசியமாக இருக்கின்றது என்பதனை விளங்கிக் கொள்ளலாம். 

அந்தவகையில் தமிழர் தரப்பில் 1970ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஆதிக்க சாதியை ஆதரிப்பவர்களாகவும், பிரதேச வாதிகளாகவும், ஏகாதிபத்திய நாடுகளின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது தமிழர்களின் வேதனையான வரலாறு. 

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையிலிருக்கும் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமை போன்றன தமிழ் தேசியம் பேசும் தலைமைகளின் வங்குரோத்து அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இலங்கையில் மேற்குலக நாடுகள் தங்களுக்கு ஏற்றாற்போல் அரசியலை உருவாக்குகின்றன அல்லது அரசியல் தலைமைகளை மாற்றுகின்றன. உதாரணமாக 2015இல் அப்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்ததும் பிரபாகரனை அழித்ததும் இந்த மேற்குலக நாடுகள் தான். இலங்கையில் மாத்திரமல்ல மேற்குலக வல்லாதிக்க சக்திகள் எங்கெல்லாம் தமக்கு எதிரான ஆட்சி நடக்கிறதோ அல்லது தமது நலனுக்கு எதிராக செயற்படும் நாட்டுத் தலைவர்களை குற்றவாளி, பயங்கரவாதி என குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அழிக்கத் தவறுவதில்லை இவ்வாறாக அழிக்கப்பட்ட ஒரு தலைவனாக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூ​ைசனைக் குறிப்பிடலாம். 

புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்ற விருப்பம் முற்றாக மேற்கு நாடுகளுக்கு இருந்ததாக கூறிவிட முடியாது.  இலங்கை அரசின் மீது மனித உரிமைகள் என்ற அழுத்த கயிற்றை மிகவும் நெகிழ்ச்சியாக பிடித்து வைத்தள்ளது ஐ.நா. அந்த கயிறானது ஒன்றும் தூக்கு கயிறு அல்ல. 

மக்கள் நலன்சார்ந்த திட்டங்களையும், தமிழ் மக்களின் சமகால அரசியல் பிரச்சினைகளையும் முன்னெடுக்க முடியாத ஒருவர், இலங்கை நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்து தமிழ் இளைஞர்களுக்கு எதிராக தீர்ப்புக்களை வழங்கிய நீதிபதி, தமிழ் தலைமைகளின் மேலாதிக்க நலன்களை பேணுபவர் தமிழ் தேசியவாதியாக தன்னை காட்டிக்கொண்டு தமிழரின் தொன்மை பற்றிப் பேசி தமிழ் மக்களுக்கு எதிரான புயலை கிளப்பி விட்டுள்ளார். 

இவரின் இந்த செயற்பாடானது வடக்கு கிழக்கு தமிழர் உட்பட மலையகத் தமிழர்களையும் பாதிக்கும் விடயம் என்பதுடன் இவர் யாருக்கு எதிராக தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள் என பேசி இனவாத பிரச்சினையை கிளப்பினாரோ, அவர் பாராளுமன்றத்தில் குறித்த சிங்கள தலைவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வார், அப்பாவி சிங்கள, தமிழர்கள் மத்தியில் கலவரங்களும் மோதல்களும்  பேரவலங்களும் ஏற்படும் அதை மூலதனமாக்கும் அரசியல்வாதிகள் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவர்களாக வலம் வருவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சிங்கள தலைவர்களோ, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களோ எப்போதுமே பாதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கான அரச பாதுகாப்புக்கள், விருந்தோம்பல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். 

இவ்வாறானவர்களே துரதிர்ஷ்டவசமாக எமக்கு தேசியத்தை போதிக்கின்றனர். 

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து 70வருடங்கள் கடந்துவிட்டது. இரண்டு தலை முறைகளை தாண்டி ஆயுதப் போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நீண்ட நெடிய காலப்பகுதியில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், அனுபவங்களின் ஊடாக வடக்கு கிழக்கின் இன்றைய தலைமுறை இளைஞர்கள் ஆயதப் போராட்டத்தை நிராகரித்து நிற்கிறார்கள், இன்னொரு அழிவு யுத்தத்திற்கு தமிழ் இளைஞர்கள் தயாராக இல்லை, சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் ஆயுத போராட்டத்திற்கு எதிராக மாறியிருக்கும் நிலையில் தமிழ் தேசிய தலைமைகள் உணர்ச்சி அரசியல் செய்வதற்காக மீண்டும் போர் வெடிக்கும் என கொக்கரித்து வருகின்றார்கள். 

பிரிவினைக் கோரிக்கைகள் எமது மக்களை அழித்தொழிக்கும் அது மலையக மக்களையும், முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்பதை கடந்தகால அனுபங்கள் எமக்கு கற்றுத்தந்துள்ளது. எதிர்கால அரசியலை திட்டமிடுவதற்கும் மதிப்பிடுவதற்கும் நிகழ்கால அரசியலை தமிழர்கள் சரிவர புரிந்தவர்களாக இருக்க வேண்டும். இன்று சிறுபான்மை இனங்களின் அரசியல் போக்கு பல கட்சிகளாகவும் அமைப்புக்களாகவும், சாதியாகவும், பிரதேச வாதமாகவும், மதரீதியாகவும் சிதறடிக்கப்பட்டிருக்கும் அதேவேளை ெதற்கில் கட்சிகள் ஒன்றிணைந்து பலமடைந்து வந்துள்ளன. 

சிறுபான்மை இனங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட  திட்டமிட்ட குடியேற்றங்கள், தமிழர் பகுதிகளில் பாராளுமன்ற ஆசனங்களை குறைத்தல், தமிழ் மொழியை இருட்டடிப்பு செய்தல், தமிழர் பகுதிகளில் இரவோடு இரவாக திடீரென முளைக்கும் சிலைகள் என பல்வேறு வழிகளில் ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றது. 

இவை தமிழர் தரப்புக்களால் பாராளுமன்றத்தில் பேசப்படவேண்டும், சிறுபான்மை இனங்களை பிரதிநிதிப்படுத்தும் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக திரட்சி கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை இனங்கள் தங்களை  தற்காத்துக்கொள்ள முடியும். 

இலங்கையில் அரசியல் சாசனத்தினூடாகவே ஆட்சிமுறைமை இருக்கின்றது. சிறுபான்மை மக்களிடம் வாக்குபலம் இருக்கின்றது அது இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவே இன்னும் உள்ளது. இதுதான் இப்போதைய அவசிய தேவையாக இருக்கின்றது. 

தமிழ் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை ஒருபுறம் ஒதுக்கி, ஆதிக்க சக்திகளின் நலன்களை முன்னிலைப்படுத்துவது அல்ல. ஆதிக்க மேட்டுக்குடிகளின் கோரிக்கைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பது தேசியமல்ல. மாறாக பெரும்பான்மையாக வாழும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அவர்களுடைய அரசியல் பொருளாதார பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியமாகும். தேசியம் என்பது ஒரு சொல்லாடல் அல்லாமல் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்க வேண்டும். 

குறிப்பாக தமிழர்களிடையே கசப்புக்களும், துரோகங்களும் அரசியல் பகைமைகளும், கருத்து வேற்றுமைகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்து தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு எதிர்காலத்தில் புரிந்துணர்வுடன் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும். இது மட்டுமே தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறவும், இருப்பை காப்பாற்றுவதற்குமான ஒரே வழி  சிறுபான்மை மக்களின் தலைவர்கள் பகைமையை மறந்து ஒன்று சேர்வதன் ஊடாகவே இந்த அழிவிலிருந்து சிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியும் 

தமிழ் தேசியமானது அனைத்து மக்களின் பிரச்சனைகளை உள்வாங்கி தன்னை முற்போக்கான ஒரு தேசியமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு  சாத்தியமாகாத பட்சத்தில் தமிழ் தேசியம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவதோடு நாமெல்லாம் ஓரினம் எனும் கூட்டுணர்வு எப்போதும் ஏற்படாது. 

எம்.ஜி.ரெட்னகாந்தன்

Comments