கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

ஒரு பல்கலை வித்தகனின் பிறப்பு 1937,  பெப். 08. சாதாரணக் கட்டடக் கலைஞர் “ஹமீட் பாஸ்” என்பவரின் மூத்த மகன். அனைவரையும் பிரியும் போது அகவை எண்பது (2017ஓகஸ்ட் 29).  

அந்த மனிதனுக்கு முதன் முதல் கிடைத்த தொழில் வாய்ப்பு சிங்களத் தட்டெழுத்தாளரப் பதவியும் அடுத்து சுருக்கெழுத்தாளர் பதவி நல்ல வானொலிக் கலைஞன், நாடக எழுத்தாளன் மேடை நடிகன், தினகரன் நுகேகொடைப் பகுதி நிருபர். துடுப்பாட்ட வர்ணனையாளன். மும்மொழிப் பேச்சாளன். அரசியல்வாதி, ஆன்மிகவாதி. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், பலஸ்தீனப் பாவப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த முஸ்லிம் உம்மா”! 

அனைத்திலும் அதிவிசேடமாக 1991மார்ச் 12ல் "வாழ்வோரை வாழ்த்தும்" விழா ஆரம்பித்து அன்றைய பிரதமர் டீ.பீ. விஜேதுங்க, கலாசார அமைச்சர் லொக்குபண்டார ஆகியோரைப் பிரதம அதிதிகளாக சமுகமளிக்க வைத்து 28முஸ்லிம் ஆளுமைகளுக்கு கௌரவப் பட்டங்களும், பொற்கிழிகளும் வழங்கச் செய்து அடுத்தடுத்த ஆண்டுகளில், 92ல் 29, 93ல் 35, 94ல் 40என 132பல்துறையாளார்களையும் அரச மட்டத்தில் பாராட்டி சீராட்டி வரலாறு படைத்த ஒரு சாமான்யர்! மேற்குறிப்பிட்ட தொகையினரில் தினகரன் பிரதம ஆசிரியர் அமரர் சிவகுருநாதனும், ரேடியோ சிலோன் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்த சரத் விமலவீரவும் உள்ளடங்குவர்.  

இப்படிப்பட்ட சேவையாளன் கல்வி கற்ற கொழும்பு, ஸாஹிராக் கல்லூரியில் அவருடன் முதலாம் வகுப்பிலிருந்து க. பொ. த. வரை ஒன்றிணைந்திருந்த ஒருவன் இந்தப் பத்தி எழுத்தாளன் நானும் கடந்த மாதம் ஓகஸ்ட் 29ல் ஏ.எச்.எம். அஸ்வர் என்ற புகழாடைகள், பொல்லடிகள் இரண்டையும் அவ்வப்போது பெற்று மகிழ்ந்திட்டவரின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.  

ஏற்கெனவே தெரிவித்தவாறு அவரை நுகேகொடை நிருபராகக் கொண்டிருந்த மூத்த தினகரன் நாளேடு ஓகஸ்ட் 29, சனி, 25ஆம் பக்கத்தில் துணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் பங்களிப்பில் ஓர் அற்புதமான நிகழ்ந்தன. நினைத்தல் அஞ்சலி கட்டுரையை வழங்கியிருந்தது.  

தொடர்ந்து மறுநாள் (30.08.2020) கொழும்பு நாராஹேன்பிட்டி தொடர் அடுக்ககத்தில் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனத்தில் முன்னணியின் தலைவர் லுக்மான் ஷகாப்தீன் தலைமையில் நடந்தது.  

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எதிர்கால சவூதி அரேபியத் தூதர் உமர் காமில் கலந்துகொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் என். எம். ஷஹீட், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர்களான என்.எம். அமீன், ரஷீத் எம். இம்தியாஸ், பி.எம். பாறுக், செயலாளர் அஹமட் முனவ்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது அஸ்வர் தொடர்பான நினைவுரையை முன்னாள் தூதுவர் ஒமர் காமில் வழங்கினார். அத்துடன், மர்ஹும் அஸ்வரின் சேவைகளைப் பாராட்டியும் அவரின் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்திற்காகவும் விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன் -

 வசதி குறைந்த மாணவர்களுக்கு உபகார நிதிகளும் அளிக்கப்பட்டன. பால்ய பள்ளித் தோழனின் நினைவில் சாமானியனான நான் பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தேன்.  

உடனடியாக அன்றைய மாலைப் பொழுதிலேயே ‘நல்ல சாத்தானும் (சைத்தான்) கெட்ட சாத்தானும் ஒட்டி உறவாடும்’ ‘முகநூல்’ என்கிற பக்கத்தில் ஒருவரது புழுதி வாரிக் கொட்டல்  

‘இன்று ஒரு நினைவுதின நிகழ்வில் வசமாக மாட்டிக்கொண்டேன். அஸ்வர் செய்த சமூகப் பணிகள் ஏதாவது இருந்தால் சொல்லித் தாங்களேன்! எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லையே...? தெரிந்த தெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒரு கவுண்டமணி, செந்தில், வடிவேலுவாக இருந்தார் என்பதே....!" 

உடனே அவரது மு.நூ. நண்பர்  எம்.எச்.எம். நௌபல் என்பவரின் இடுகை “வாழ்வோரை வாழ்த்தினார். அதன் பின்னர் வாழ்த்தியோரையே மீண்டும் வாழ்த்தினார்.  

இதற்குப் புழுதிவாரிக் கொட்ட ஆரம்பித்தவரின் மறுபதில்!

ஆமாமா! அதுகள் நெனைவிருக்கு. அதுகளாலே சமூகத்திற்கு என்ன பலன் கிடைத்தது? எல்லாம் ஊத்தைக் குப்பைகள்! அந்தாள் சிலருக்குக் குடுத்திட்டுப் போயிருக்கிற பட்டங்களைப் பார்த்தா சிரிப்புத் தாங்க முடியல்ல....!"  

“மஹீஸ்” என்ற மற்றொருவர் “அதைத் தவிர அவர் எதுவும் செய்தாரா? அதனால் சமூகத்திற்கு ஏதும் பயனுண்டா? எனப் பேரிடி கேள்வி பெயரும் ஊரும் உண்மையானதா என்பதில் சந்தேகம்.  

இதில் எனது பணிவான கருத்து:  

பயன் உண்டா என்பது பொருத்தமான கேள்வியல்ல. “ஏதாவதொரு துறையில் ஒன்றைச் செய்திருப்பதற்குப் பின் தான் இப்படியான புகழாடைகள். பொற்கிழிகள் அளித்துக் கௌரவிப்பது என்பது. இது உலக வழக்கு. ஒருவகை சமூக நன்றிக் கடன். அத்தோடு, அவர்கள் வாழும் பொழுதே வாழ்த்திச் சிறப்பிப்பதுவும்  

மேலும் புழுதி வாரிக்கொட்டும் முகநூல் ‘முகமூடி மனிதன், எல்லாருமே ஊத்தைக் குப்பைகள் எனக்கூசாமல் பதிவிடுகிறானே, அப்படியானால் 132பேருமா?  

வாழ்த்தப் பெற்றவர்களில் தற்சமயம் வாழ்வோரை சற்றே மறந்துவிட்டு, ஓய்வுறக்கத்திலிருப்போரில் முக்கிய சிலரை மட்டும் (முழுப் பட்டியலுக்கும் இடப்பஞ்சம்) இங்கே தருகின்றேன். இவர்கள் ஊத்தைக் குப்பைகளா? இவர்களுக்குக் கௌரவும் அளித்ததற்காக அஸ்வரைத் தூற்ற வேண்டுமா?  

புலவர்மணி ஷரீபுத்தீன், திக்குவல்லை எம்.ஏ. முஹம்மது, கல்ஹின்னை சுபைர், மொகிதீன் பேக்,  மௌலவி சைபுத்தீன் ஸாஹிப், வித்துவான் ரகுமான், இளங்கீரன் சுபைர், தமிழறிஞர் கமால்தீன், ---------- அப்துல் கபூர் (வானொலி வித்தகர்), ஆய்வாளர் ஏ.எம். சமீம், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன்.  

முகநூல் முட்டாள்களே,

உங்கள் முகமூடிகள் அவ்வப்போது கழற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும் என் பத்தியிலே!  

இனிப்பு

ஒரு நீண்ட கட்டுரையை சிறிய பத்தி எழுத்துப் பகுதியில் எப்படி இனிப்பாக சேர்ப்பது என்ற சிந்தனையில் சில நாட்கள் உறக்கம் கலைந்தது.  

ஏனென்றால், தென்னிலங்கை, மாத்தறைப் பகுதி கிராமமொன்றில் வாழ்ந்த நிலபுலனற்ற கூலி விவசாயியின் மகனொருவர், சிறுவயதில் போதிய போசாக்கின்றி சோகை, வலிப்புப் போன்ற உபாதைகளுக்குள்ளானவர், ஏழெட்டுத் தரங்களுக்கு மேல் கல்வியைத் தொடர இயலாத் துர்ப்பாக்கிய சாலி, ஆனால் நூலார்வமும் வாசிப்பு வெளியும் மிகுந்தவர்! 

அந்த இளைஞன் கொழும்புப் பிரதான பகுதிகளிலொன்றான மருதானை – மாளிகாகந்தை பிரதேசத்திற்கு வந்து சேர்கிறான்.  

சிறு அச்சகமொன்றில் பல்வகைப் புத்தகங்களையும், பற்று வரவுப் பேரேடுகளையும் நூல் கோர்த்துக் கட்டும் வேலை. “புத்தகம் கட்டும் புத்திசாலி” என அதி விரைவுப் புகழ்!  

“சதா சர்வ காலமும் புத்தகங்கள் கட்டிக் கொண்டிருக்காமல் நீங்களே புத்தகம் வெளியிடுங்கள்” என்ற பலரின் உந்துதலில் ஆரம்பித்தது ஒரே அறையில் “கொடகே புத்தக”க்கடை.  

70களில் ஐந்து நூல்களை மட்டும் சுயமாக வெளியிடும் ஆளுமை. 97களில் 400. 86முதல் சாகித்ய விருது நூல்களை வெளியிடும் பெரும் நிறுவனமாகத் தோற்றம்!  

அந்த ஜேம்ஸ் அப்புஹாமியின் புதல்வன் சிறிசுமண கொடகே என்ற மாமனிதனை இன்று தமிழ் இலக்கிய நெஞ்சங்களும், வாசகர்களும் அறிவர்.  

தமிழை – அதுவும் இலக்கியத்துறை மேம்பாட்டை – நினைத்தே பார்க்கவேண்டிய தேவையற்ற ஒரு சிங்களச் சமூகத்தவர் நினைத்தார்.  

நம் ‘மேமன்கவி’ தனதருமைப் பதிவொன்றில் வழங்கியுள்ள ஒரு சிறு பகுதியைப் பகிர்கின்றேன்.  

‘இன்றையப் பொழுதுகளில் சிங்கள – தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களை அதிகமான அளவில் வெளியிட்ட நிறுவனமாக கொடகேயின் நிறுவனமே திகழ்கின்றது.

 ஈரினத்தார்களின் புரிந்துணர்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் இலக்கிய வழிப் பணியின் முதல் கட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துவிட்டார்”  

2000ஆண்டில் நிறுவப்பட்ட அந்த உறவுப் பாலம், இப்பொழுது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மிக உறுதி. மிகமிக உறுதி.  

வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆண்டு தோறும் சிறந்த நூல்கள் தெரிவு, நூலுருவம் பெறாத இலக்கியப் பிரதிகள் தேர்வு, மூத்த எழுத்தாளர் கௌரவிப்பு என சிங்கள மொழி எழுத்தாளர்களின் அளவுக்கு தமிழ் கலை இலக்கியவாதிகளுக்கும் ஒரே மேடையில் புகழாடைகள், பொற்கிழிகள்.  

கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது  

2009 : டொமினிக் ஜீவா,

கவிஞர் ஏ. இக்பால்,

திருமதி கோகிலா மகேந்திரன்.

2010 : பேராசிரியர் கா. சிவத்தம்பி,

2011 : திருமதி அன்னலஷ்மி இராஜதுரை,

 2012 :  தெளிவத்தை ஜோசப்,

 2013 :  கே.எஸ். சிவகுமாரன்,

2014 : பேராசிரியர் சி. மௌனகுரு,

2015 : நந்தினி சேவியர்.  

2016 : பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். ஃபாறூக்,

2017 : சாந்தன்,

 2018 : காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,

 2019 : திருமதி பத்மா சோமகாந்தன்,

 2020 : தமிழ்மாமணி எஸ். முத்துமீரான்.  

கொடகே மூத்த எழுத்தாளர் கௌரவிப்பு  

2014 : திருமதி பத்மா சோமகாந்தன்,

2015 : மணிப்புலவர் மருதார் ஏ. மஜீத், திருமதி அன்னலஷ்மி இராஜதுரை,

2016 : அந்தனி ஜீவா, கவிஞர் மேமன் கவி,

2017 : திருமதி சரோஜிதேவி அருணாசலம்,  தி. ஞானசேகரன், கவிஞர் அல்-அசூமத், 2018 : மு. சிவலிங்கம், திருமதி புர்கான் பீ. இப்திகார்,  தம்பு சிவா, 2019 – 2020ஆண்டுகளுக்கு விவரம் கிடைக்கப்பெறவில்லை!  

நாவல், சிறுகதை, கவிதை, முதல் நூல் பிரிவுகளில் 2009லிருந்து 2017வரையில் பரிசில்கள் பெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் மொத்தம் 40.  

2018 – 19 – 20கால விவரங்கள் பெற முடியவில்லை.  

நூல் வடிவம் பெறா கையெழுத்துப் படைப்புகளில் 2015 – 2018காலப் பகுதியில் மொத்தம் 09. (2019 – 20களின் விவரங்கள் பெற முடியவில்லை)  

இந்த இனிப்புகளைச் சிறப்பாக வழங்க தகவல்கள் தந்துதவிய மூத்த எழுத்தாளார் திக்குவல்லை கமால், கலைஞர் – கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் ஆகியோருக்கு நான் நன்றிக்கடன்பட்டவன்)  

2020க்கான “கொடகே சாகித்திய விழா எதிர்வரும் 10ஆம் நாள் கோலாகலமாகக் கொழும்பில்!)  

Comments