ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு...!: கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள்; நியூ பீகொக் வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு...!: கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள்; நியூ பீகொக் வீடமைப்புத் திட்டம்

கண்டி மாவட்டத்தின் உடப்பலாத்த பிரதேச சபைக்குட்பட்ட  புசல்லாவ நயாபனவில் அமைந்துள்ளது நியூ பீகொக்  தோட்டம்.

இங்கே மண்சரிவு, இயற்கை அனர்த்தத்துக்கு உள்ளான இரண்டாம் இலக்க குடியிருப்புகளைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கென  1988ம் ஆண்டு வீட்டுத்திட்டம் ஒன்று  வரையப்பட்டு 2000ம் ஆண்டளவில்  வீட்டுத்திட்ட கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  இது நடந்து இருபது வருடங்கள்  கடந்துவிட்டன.  வீட்டுத்திட்டம்தான்  இன்றைக்கும்  அரைகுறையைத் தாண்டவில்லை.  அரைகுறையாக கட்டப்பட்ட இவ் வீடுகளில் மக்கள் தமது சொந்தப் பணத்தை செலவிட்டு திருத்தங்களைச் செய்து குடியேறியுள்ளனர். 

இவ்வாறு குடியேறியுள்ள 15குடும்பங்களும்  யன்னல் கதவுகள் இல்லாத வீடுகளிலேயே வசிக்கின்றனர்.  ஆடு, மாடு, நகை என்பனவற்றை விற்று வீடுகளை தம்மால் முடிந்தமட்டும் திருத்திக்கொண்டு வசிக்கிறார்கள்.   32வீடுகள்  கட்டுப்பட வேண்டிய இத்திட்டத்தில் ஒரு வீடேனும்  முற்றாக  கட்டி முடிக்கப்படவில்லை.   குடிநீர் வசதி, மின்சார வசதி பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை.

மக்களின் பணத்தினால் கட்டப்பட்ட இந்த வீட்டுத்திட்டம் மண்ணாகக் கிடக்கிறது.  மாதமொன்றுக்கு  640ரூபா  என்ற வீதத்தில்  180மாதங்கள்   அறவிட வேண்டிய நிலையில் தொழிலாளிகளிடம் இருந்து 670ரூபா அறவிடப்படுகிறது. இதில் மூன்று மடங்கு பணத்தை தொழிலாளர்கள் செலுத்தியுள்ளபோதும் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இடைநடுவில்  கைவிடப்பட்டுள்ளது. டிரஸ்டும், தேசிய சேமிப்பு வங்கியும் தோட்ட நிர்வாகமும் இணைந்தே இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுத்தன.

ஏழு பேர்ச் நிலப்பகுதியில் கட்டப்பட்ட முப்பத்தி இரண்டு வீடுகளில்   அத்திவரதத்துடன் கைவிடப்பட்ட வீடுகளும் உண்டு.  இதன் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள  பொருட்கள்  தரம் குறைந்தனவாக   உள்ளன.   சிமெந்து கற்கள் கிரவல் மணல் கலந்து செய்யப்பட்டவை என தொழிலாளர்கள் கூறுகின்றனர். கற்களை கைவிரல்களால் நொறுக்கியும் காட்டுகிறார்கள். இது தொடர்பாக  தாம் செல்லாத காரியாலயம் இல்லை.  சொல்லாத அதிகாரிகள் இல்லை. இதுவரை  பயன்தான் இல்லை என்கின்றனர் இங்கு வசிக்கும் அப்பாவிக் குடும்பத்தினர்.

இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான்  இவ்வீட்டுத் திட்டம் தொடர்பான ஆவணங்களைப் பார்த்து உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 இவ் வீட்டுத் திட்டத்துக்கு  உயிர்கொடுத்து முழுமைபெறச் செய்ய முன்வர வேண்டும். 

ஏனெனில்  இவ்வீட்டுக்கான செலவின் ஒரு பகுதியை அவர்கள் தமது வருமானத்தில்  இருந்து செலவு செய்திருப்பதால்,  ஜீவன் தொண்டமான் இவ்விவகாரத்தை, அலட்சியத்தால் தூக்கி வீசப்பட்ட இத்திட்டத்தை அப்பாவி மக்களுக்கான ஒரு குடியிருப்பு திட்டத்தை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இது இக் குடும்பங்களின் கோரிக்கை, எதிர்பார்ப்பு, பிரார்த்தனை.

நவராஜா
படங்கள்: தெல்தொட்ட தினகரன் நிருபர்

 

Comments