ஒருங்கிணைந்த கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

ஒருங்கிணைந்த கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியம்

அரசாங்கம் ஒன்றரை லட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பட்டதாரிகள் 50ஆயிரம்பேர். இன்னுமொரு பத்தாயிரம்பேர் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏனையோர் கல்வித்தரம், வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் அடிமட்டத்தில் உள்ளோராகும். அதாவது இதுவரையில் அரச உத்தியோகம் எதையும் பெறாத குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி உதவியைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த ஒரு லட்சம் பேரும். வேலைவாய்ப்பைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். 

இளைய தலைமுறையினருடைய வேலையில்லாப் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வுதான். அதாவது அவர்களுடைய வாழ்க்கைக்கு இது மிகப்பெரியதொரு வரப்பிரசாதம். ஏனென்றால் வேலை என்பதே வாழ்க்கைக்கான அடித்தளம். ஆதாரம். நம்பிக்கை. வலு. இதைப் புதிய அரசாங்கம் வழங்குவது அதனுடைய மதிப்பைச் சற்று உயர்த்தும். 

ஆனால், இதைத்தான் அரசாங்கம் செய்ய வேண்டும் என்றில்லை. அதாவது வேலையற்றிருப்போருக்கான வேலை வாய்ப்பை வழங்குவது அரசாங்கத்துக்கு மட்டுமேயான பொறுப்பல்ல. அதுவும் அரசாங்கத்தின் நிர்வாக அடுக்குகளிலேயே பணியைப் பகிர்வது நல்லதுமல்ல. அது ஒரு சுமையாகவே மாறக்கூடிய அபாயத்தை உண்டாக்கி விடும். 

பதிலாக நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதாரக் கொள்கையைச் சரியாக வகுத்துக் கொண்டால் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். அதுவே சரியானது. குறிப்பாக உற்பத்திசார் பொருளாதாரச் சிந்தனை இதற்கு மிகச் சிறப்பாக இருக்கும். இலங்கை ஒரு விவசாய நாடு என்ற அடிப்படையில் விவசாயத்தை நவீனப்படுத்துவது. விவசாயப் பொருட்களை புதிய சந்தைக்கு ஏற்ப மறுவடிவாக்கம் (Post Production) செய்வது. இதற்கமைய விவாசயத் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தி இந்தத் துறையை நவீனமாக்கம் செய்வது ஒன்று. அடுத்தது, நாட்டிலுள்ள கடல் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வது. வளமான கடலால் சூழப்பட்ட தீவு என்ற வகையில் இலங்கை மிகச் செழிப்பான பொருளாதாரத்தையும் மிகக் கூடுதலான வேலை வாய்ப்புகளையும் பெறக் கூடியதாக இருக்கும். இதற்கமைய கல்விக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, அரசியல் நடைமுறைகளை உருவாக்கிக்கொள்ளலாம். 

இப்படித்தான் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையிலும். தென்னை, தேயிலை, ரப்பர், மரமுந்திரிகை போன்றவற்றில் விரிவாக்கமும் நவீனத்துவமும் தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்துவம் போது பல லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்குச்சென்றே வேலை தேடுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகள் தொடக்கம் மலேசியா, சிங்கப்பூர் வரையில் பல நாடுகளில் நமது ஆற்றல் மிக்க இளைய தலைமுறையிரின் ஆற்றலும் செலவழிக்கப்படுகிறது. அங்கே அடித்துக் கொடுத்து விட்டு களைப்போடு முதுமையடைந்து வீடு திரும்புகிறார்கள். இதை நாடு திரும்புவதாக எடுத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே இவர்களையெல்லாம் அவர்களுடைய இளமையில் எங்கள் நாட்டில், எங்கள் சூழலில் வைத்துப் பயன்படுத்திக் கொள்வதே எமது நாட்டுக்குச் சிறப்பும் நல்லதுமாகும். இதைக் குறித்து அரசாங்கம் கடுமையாகச் சிந்திக்க வேண்டும். இதைப்பற்றி வேறு சிலருக்கு வேறு விதமான அபிப்பிராயம் இருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரையில், வெளிநாட்டில் வேலை செய்வதன் மூலம் நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறதே. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா என்றே கேட்பார்கள். அந்தப் பிச்சைக் காசை விட சொந்த நாட்டில் உற்பத்தித்துறையை விரிவாக்கம் செய்து உழைப்பதே சிறப்பு. இந்த உழைப்பென்பது இளைய தலைமுறையின் அறிவு, ஆற்றல், ஆளுமை, முயற்சி, திறன் போன்றவற்றை எல்லாம் நமக்கான உற்பத்திகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தேசப் பொருளாதாரக் கட்டுமானத்தை நிர்மாணிப்பதாகும்..  

இதுவே நாட்டைப் பொருளாதார ரீதியிலும் சமூக அடிப்படையிலும் வளர்க்கும். ஆற்றல் வெளிப்பாட்டுக்கும் ஆளுமைப் பரிணமிப்புக்கும் கூடுதல் வாய்ப்பை அளிக்கும். இதையே வளர்ச்சியடைந்த நாடுகள் செயற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் அந்த இடத்தைப் பெற்றது தங்களுடைய பொருளாதாரக் கொள்கையினாலும் ஜனநாயகச் செழுமையினாலும் பன்மைத்துவச் செழிப்பினாலுமே. 

இன்று வளர்ச்சியடைந்த நாடுகளின் பெரும் செல்வம் என்பது அவை கொண்டிருக்கும் ஜனநாயகச் சிறப்பும் பன்மைத்துவச் செழிப்புமே. இவை இரண்டுமே புதிய புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடமளிப்பதுடன், அவற்றைப் பிரயோகப்படுத்தி வெற்றியைக் காண்பதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன. மேலும் ஊக்கிகளாகவும் உள்ளன. 

எனவே இதைப்பற்றிச் சிந்திப்பதே இன்றைய தேவையாகும். இந்தப் புதிய அரசாங்கம் பல புதிய மாற்றங்களை, வளர்ச்சிகளை எட்டுவதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்று புரிந்து கொண்டு, அதற்கமையச் செயற்படுவது அவசியமாகும். அரச உத்தியோகத்துக்குள் மட்டும் வேலை வாய்ப்பை வழங்குவதைப் பற்றி அரசாங்கம் தொடர்ந்தும் சிந்திக்குமாக இருந்தால் அது நாட்டுக்கு பெரும் சுமையாகவே அமையும். அதனால் நாட்டில் எந்தப் பெரிய மாற்றங்களையும் உருவாக்க முடியாது. பதிலாக அரச நிர்வாகம் மேலும் சீரழியக் கூடிய நிலையே உருவாகும். பொருளாதார விருத்திக்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிவிடும். ஊழலும் செயலின்மையும் கூட வளரலாம். 

அரச உத்தியோகம் என்பது மக்களுடைய வரிப்பணத்தில் இயக்கப்படுவதாகும். மக்களுக்கான நிர்வாக ஒழுங்குபடுத்தல்கள், தேவைகள் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்வதற்கான கட்டமைப்பை நிர்வகிக்கும் ஆளணியாகும். இது ஒரு எல்லை வரையில் இருப்பதே சிறப்பு. மக்களுக்கான சேவைகளும் அப்படித்தான். மருத்துவம் கல்வி போன்றவை இலங்கையில் இலவசச் சேவையின் மூலமாகக் கிடைப்பன என்பதால் இந்தத் துறையில் சற்று அதிகமானவர்கள் வேலை வாய்ப்பைப் பெறலாம். ஏனைய வேலைகளுக்கு அளவுக்கதிகமான ஆளணி இருந்தால் அது ஏற்கனவே இருக்கின்ற செயற்பாட்டுப் பொறிமுறையையே பலவீனப்படுத்தி விடும். 

அளவுக்கு அதிகமான ஆளணிச் சேர்க்கை என்பது நிர்வாகத்தை நீர்த்துப் போகவே வைக்கும். 

ஏற்கனவே அரச உத்தியோகங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலருக்குப் பொருத்தமான வேலைகள் இல்லை. பல திணைக்களங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு எந்த வேலையைப் பகிர்ந்து கொடுப்பது என்று தெரியாத நிலையில் அதிகாரிகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றனர். தவிர, வேலைக்குறைவினால் பலரும் சோம்பியவாறே பணியிடங்களில் உள்ளனர். பலர் பணி நேரத்தில் பயனற்ற விதமாகவும் நடந்து கொள்கின்றனர். சிலர் பணி நேரங்களிலிருந்து வெளியேறி வேறு வேலைகளில் ஈடுபடுவதும் உண்டு. எவ்வளவு நேரம்தான் ஒன்றுமே செய்யாமல் சும்மா வெறுமனே கதிரையில் குந்திக் கொண்டிருக்கிறது என்பதால் ஏற்படுகிறது இந்த நிலை. 

இதற்குக் கடுமையான சட்டங்களைப் போட்டுக் கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனை முட்டாள்தனமானது. அப்படிச் செய்தால் அது அவர்களைச் சிறையில் வைத்திருப்பதற்கு நிகரானது. எதையும் செய்வதற்கின்றி ஓரிடத்தில் வைத்திருப்பதென்பது சிறையன்றி வேறென்ன? 

பட்டம் பெற்றவர்களுக்கு அரசாங்கமே வேலை வாயப்பை வழங்க வேண்டும் என்ற நிலையினால், அப்படிச் சொல்லி நடத்தப்படும் போராட்டங்களினால் வேலை கிடைப்பதற்கு முன்பு வேலையற்ற பட்டதாரிகளாக இருப்போர், உத்தியோகம் (பதவி) கிடைத்த பின்னர் வேலையில்லாத பட்டதாரிகளாக இருக்கிறார்கள்.

இவர்களில் யாரும் தமக்கு வேலை பகிர்ந்து தரப்படவில்லை. அப்படிப் பகிர்ந்து தருவதற்கான வேலைகளும் பணி ஒழுங்குமுறையும் இல்லை என்று கூடச் சொல்ல மாட்டார்கள். மாகாணசபைக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார்கள். 

ஏதோ சம்பளம் வருகிறது. மாதம் ஓடுகிறது. வேறென்ன வேண்டும் எனற மாதிரியே உள்ளனர். இவர்கள் வேறு யாருமல்ல. இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர். வருங்கால சிற்பிகள். 

இந்த இடத்தில் ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லலாம். காலையில் தொலைபேசியில் அழைத்தபோது ஒரு இளைய உத்தியோகத்தர் சொன்னார், “இப்ப Office க்குப் போறதுக்காக வெளிக்கிட்டுக் கொண்டிருக்கிறன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. அங்க Office க்குப் போனதுக்குப் பிறகு சும்மாதான் இருப்பன். அப்ப அழைக்கிறேன்” என்று. 

அதாவது, அவர் வீட்டிலிருக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று ஆறுதலாகப் பேசமுடியாதிருக்கிறார். அலுவலகத்தில் எத்தனை தொலைபேசி அழைப்பிலும் சாவகாசமாகப் பேசலாம். இது எதைக் காட்டுகிறது? அரச நிர்வாகம் சீர்கெட்டிருக்கிறது அல்ல பலவீனமாக உள்ளது என்பதைத்தானே! 

இந்த நிலையானது படித்த, இளைய தலைமுறையைப் பாழாக்குவதன்றி வேறென்ன? 

இதேவேளை கல்வித் தகைமை குறைந்த, பொருளாதார நிலையில் பின்தங்கியோரில் ஒரு லட்சம் பேரை அரச உத்தியோகத்தில் அரசாங்கம் இணைப்பது ஓரளவுக்கு நல்ல திட்டம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏறக்குறைய இதே போன்ற ஒரு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவும் அறிமுகப்படுத்தியிருந்தார். 

இதன் மூலம் இந்தத் தரப்பைச் சேர்ந்தோர் வெளி ஊடாட்டத்திற்கும் சமூக ஈடேற்றத்துக்கும் உள்ளாகக் கூடிய வாய்ப்புண்டு. இந்தக் குடும்பங்களிலும் ஒரு அரச உத்தியோகம் கிடைத்தவர் இருக்கிறார் என்ற அடையாளம் ஏற்படும். சரியான சமூகப்பொருளாதாரக் கண்ணோட்டமுள்ளவர்கள் இப்படிச் சொன்னால் சிரிப்பார்கள். ஆனால் இலங்கையின் மரபுசார் சமூக பொருளாதாரச் சூழலில் வைத்தே இதை நான் குறிப்பிடுகிறேன்.

இது ஒரு தவிர்க்க முடியாத நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த வாய்ப்பின் மூலம் கல்வி, பொருளாதாரம், சமூக நிலை போன்றவற்றில் இந்தக் குடும்பங்கள் அல்லது இந்தத் தரப்பினர் உயரவும் வாய்ப்புண்டு. மீளவும் குறிப்பிடுகிறேன், இது சரியான சமூகப் பொருளாதார முறையியல் என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் இலங்கைச் சூழலில் இது ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். 

புதிய ஜனாதிபதி பல விடயங்களில் ஒரு வேறு பட்ட தன்மைகளை உருவாக்கும் முனைப்போடுள்ளார் எனத் தெரிகிறது. அந்த வகையிலேயே இவற்றிலெல்லாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இயங்குகிறார் போலத் தெரிகிறது. இதற்கமைய ஒழுங்குமுறைகளையும், சட்டங்களையும் அறிமுகப்படுத்துவதுடன், அதற்கான திட்டத்தில் ஒன்றாகவே இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் எனக் கருதக்கூடியதாக உள்ளது. 

ஜனாதிபதியின் நாட்டிற்கான பொருளாதார ஊக்குவிப்பு அறிக்கைகள் நம்பிக்கை ஊட்டுமளவுக்கு அவை நடைமுறையில் பயன் விளைக்க வேண்டும். எந்தத் திட்டங்களுக்கும் பொறுப்புணர்வுடன் மக்களும் ஓரளவு ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே,

அமைக்கப்படும் திட்டங்கள் பயன்தரக் கூடியதாக அமுல்படுத்தப்படும். 

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தைக் கட்டாயமாக நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். போதைப்பொருள் பாவனை என்பது எமது நாட்டில் மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது. போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இளைய தலைமுறையினரே. இவர்களே நாட்டின் எதிர்காலச் சொத்து. இந்தத் தொகை ஏறக்குறைய 20லட்சத்துக்கு மேல் என்கின்றன அச்சமூட்டும் தகவல்கள். ஆகவே வேலை வாய்ப்பை வழங்குவதை விடவும் முக்கியமானது, போதைப்பொருளைத் தடுப்பதும் அதனோடு இணைந்திருப்போரை அதிலிருந்து விடுவிப்பதுமாகும். 

ஆகவே ஒருங்கிணைந்த கூட்டு வேலைத்திட்டத்தின்மூலமே இந்த விடயங்கள் கையாளப்பட வேண்டும். 

கருணாகரன்

Comments