சட்டவிரோத மஞ்சள் கடத்தலை தடுப்பது எவ்வாறு? | தினகரன் வாரமஞ்சரி

சட்டவிரோத மஞ்சள் கடத்தலை தடுப்பது எவ்வாறு?

நாட்டில் ஏற்பட்ட 'கொரோனா' தொற்றின் தாக்கத்தை தொடர்ந்து இலங்கையில் அண்மைக் காலமாக மஞ்சள் தூளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டோர், இந்தியாவில் இருந்து கஞ்சா, ஹெரோயின் மற்றும் பீடி இலைகளை சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வருவது போன்று தற்போது மூடை மூடையாக மஞ்சள் கட்டிகளையும் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் மற்றும் மாவட்டத்தின் ஏனைய கடற்பிராந்தியங்கள் ஊடாக மன்னார் மாவட்டத்திற்கு கடத்தி வருகின்றனர்.

மன்னாரில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு மஞ்சள் கட்டிகள் மூடை மூடையாக கொண்டு செல்லும் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற போதும் சட்டத்தின் முன் அவர்கள் மாட்டிக்கொள்ளும் நிலையும் தொடர்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் மஞ்சள் தூள் ஒரு கிலோ 4ஆயிரம் ரூபாய் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை சில வர்த்தக நிலையங்களில் மறை முகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்போது இந்தியாவில் இருந்து மன்னார் கடற்பிராந்தியங்கள் ஊடாக கடத்தி வரப்படுகின்ற மஞ்சள் கட்டி மூடைகள் கடற்படையிடம் சிக்கிக்கொள்ளுகின்றது.

இவை உள்ளூர் பெறுமதியில் பல கோடிகள் தேறும். அரசாங்கம் கிலோவுக்கு 750ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ள போதிலும், சுமார் 5000ரூபாய் வரை இந்த மஞ்சள் கட்டிகள் மறைமுகமாக விற்கப்படுகின்றன.

கடற்படையினருக்கு கிடைக்கின்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கடற்கரை பகுதிகளில் இருந்து குறித்த மஞ்சள் கட்டி மூடைகள் தொடர்ந்தும் மீட்கப்படுகின்றன.

அல்லது கடத்தல் காரர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளுவதற்காக கடலில் மஞ்சள் மூடைகளை மிதக்க விட்டுச் செல்லுகின்றனர்.

 கடற்கரையில் இருந்து மஞ்சள் மூடைகளை கொண்டு செல்லும் போதும் கடற்படையினர் மற்றும் பொலிஸாரிடம் மாட்டிக் கொள்ளுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மஞ்சள் கடத்தல் காரர்கள் மற்றும் உதவியாளர்கள் சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொள்ளுகின்றனர்.

கொரோனா' வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலில் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக இலங்கையில் வாகனங்கள் உட்பட பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மஞ்சள் மற்றும் ஏலம், மிளகு, கராம்பு உள்ளிட்ட வாசனைத் திரவியங்களின் இறக்குமதிக்கும் கடந்த ஆண்டின் இறுதியில் தடை விதித்த அரசாங்கம், அவற்றின் உற்பத்தியை உள்ளூரில் ஊக்குவிக்கப்போவதாக கூறியது.

இறக்குமதித் தடைக்கு முன்னர் இலங்கை தன் மஞ்சள் தேவைக்கு இந்தியாவிலேயே முழுமையாக தங்கியிருந்தது.

ஆனால் சிறிதளவாக உள்ள உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு அடைய முடியும் என்று அரசு நம்புகின்றது.

அதற்காக 100கிராமங்களில் மஞ்சள் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த இறக்குமதி தடையால் இப்போது சட்ட விரோத மஞ்சள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தற்போது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள் சந்தைக்கு வந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மக்களை எச்சரித்துள்ளதோடு, மஞ்சள் கொள்வனவு செய்கின்ற போது மக்களை விழிர்ப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், அதிக அளவு மஞ்சள் தூளினை நாளாந்தம் உணவுடன் பயன்படுத்தும் பழக்கம் இலங்கை மக்களிடம் காணப்படுகின்றது.

அதனை ஒரு வியாபார நோக்காகக் கொண்டு இன்றைய காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து மஞ்சள் கட்டிகள் அதிக அளவில் தலைமன்னார் கடற்பரப்பு உட்பட மாவட்டத்தின் ஏனைய கடற்பிராந்தியம், மற்றும் புத்தளம் கடற்பரப்பு ஊடாக மன்னார் மாவட்டத்திற்கும், ஏனைய இடங்களுக்கும் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் இலங்கை நாட்டின் சுகாதார நிைலமையும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மஞ்சள் தூளின் இறக்குமதி தடுக்கப்பட்ட நிலையில், மஞ்சளின் உள்ளூர் உற்பத்தி தன்னிறைவு அடையும் வரை, மஞ்சள் தூளின் விலை யேற்றத்தையும் சட்ட விரோத கடத்தல்களையும் தடுப்பது மிகவும் சவாலான விடயமாக அமையும் என்பதே உண்மை.

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் குறூப் நிருபர்

Comments