தங்க விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்த தங்கத்தின் மீதான வரி நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

தங்க விற்பனையாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்த தங்கத்தின் மீதான வரி நீக்கம்

இலங்கை அரசாங்கம் தங்க இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த 15சதவீத இறக்குமதித் தீர்வையை அண்மையில் நீக்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துச் சென்றதன் விளைவாக இலங்கையிலும் அதன் விலை உச்சத்தைத் தொட்டது. இவ்விலை அதிகரிப்பின் காரணமாக    தங்க ஆபரண விற்பனையில் சடுதியான ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது.  

இலங்கையில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் இந்தியா,   ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் தங்கச் சந்தைகளின் செல்வாக்கும் உண்டு.  தங்கத்தின் விலை அதிகரித்துச் சென்றபோது தங்க ஆபரண விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் விற்பனையாளர்கள் ஊக நோக்கத்தில் (speculative purpose) தொழிற்பட்டதனால் தங்கம் விற்கப்படாவிட்டாலும்   விலை அதிகரிப்பு காரணமாக கையிருப்பிலுள்ள   தங்கத்தின் பணப்பெறுமதி அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கையுடன் இருந்தனர்.  

தற்போது அரசாங்கம் தங்க இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த தீர்வையை முன்னறிவிப்பின்றி  திடீரென நீக்கிவிட்டமையானது தங்க விற்பனையாளருக்கு எதிர்பாரா அதிர்ச்சியையும் அழுத்தத்தையும் தந்திருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாக தங்கம் உள்ளபடியால் திருமணம் போன்ற முக்கிய சடங்குகளின் போது தங்கத்தைக் கொள்வனவு செய்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் சடுதியான விலையேற்றம் வறிய மற்றும் மத்தியதர வர்க்கத்தினரை வெகுவாகப் பாதித்தது. தற்போது இறக்குமதித் தீர்வையின் நீக்கம் காரணமாக இலங்கையின் தங்கவிலை, வரி நீக்கப்பட்டதால்  அதே 15சதவீதத்தினால்    குறைவடைய வேண்டுமென பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண   ஒரு இறக்குமதிப் பொருள் தொடர்பில் தீர்வை நீக்கமானது தீர்வையின் அளவினால் உள்ளூர் விலைகளைக் குறைக்க வேண்டும். 

அவ்வாறு நிகழவேண்டுமாயின் இறக்குமதியின் மீது வேறு தொகை  சார்ந்த தடைகள் (quantitative barriers) இருக்கக்கூடாது. ஆனால் இலங்கைக்குள் தங்கத்தை இறக்குமதி செய்வதில் தொகை சார்ந்த நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன.

எனவே   தீர்வைக் குறைப்பின் முழுப்பயனும் நுகர்வோரை தானாகச் சென்றடைய வாய்ப்பில்லை. அத்துடன் செட்டியார் தெரு வட்டாரங்களின் துலங்கல்களின் படி முன்னைய தீர்வை வீதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கக் கையிருப்புகள் முடிவடையும் வரை விலைக்குறைப்பு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்துவது வியாபாரிகளை நட்டமடையச் செய்யலாம். 

அரசாங்கம் தங்கம் மீதான இறக்குமதி தீர்வை நீக்கத்தை அறிவித்தபோது உள்ளூர் ஆபரண உற்பத்தியாளருக்கு ஊக்குவிப்பு வழங்கும் நோக்கிலேயே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தங்கச்சந்தை முகவர்கள் எதிர்பாராவிதமாக ஆச்சரியமூட்டும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதனால் ஓரிரு மாதங்களின் பின்னரே அதன் தாக்கம் முழுமையாக உணரப்படலாம்.   

எவ்வாறாயினும் உள்ளூர் தங்க வியாபாரிகளால் நீண்டகாலத்திற்கு தங்க விலைகளைத் தொடர்ந்தும் வைத்திருப்பது சாத்தியமில்லை. உலக சந்தையிலுள்ள   ஊக வணிகர்களின் கருத்துக்களின் படி தங்கத்தின் தற்போதைய அதிகரித்த விலைப்போக்கு ஏற்கெனவே உச்சத்தைத் தொட்டுவிட்டு வந்துள்ளபடியினால் இதைவிட மேல்நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியம் இந்தச் சுற்றில் இல்லை எனக் கூறுகின்றனர்.  

எனவே அடுத்துவரும் மாதங்களில் தங்கத்தின் விலை குறைவடையும் சாத்தியங்கள் ஏராளமாக உள்ளன. எனவே ஒருபுறம் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள    தீர்வை நீக்கத்துடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியும் சேர்ந்து இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தங்க விலைகளை கீழ்நோக்கி நகர்த்தும் என நம்பலாம்.  

கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்ந்து சென்றமைக்கு தெளிவான சில காரணங்கள் உள்ளன. முதலாவது உலக நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மெதுவடைவு. குறிப்பாக வேகம் குறைந்து பொருளாதாரங்கள் மெதுவடையும் போது பெற்றோலியத்தின் கேள்வி குறைவடைந்து அதன் விலைகள் வீழ்ச்சியடையும். பெற்றோலியத்தின் விலை கடந்த 10வருடங்களில் இல்லாதபடி மிகக் குறைந்த விலைகளைத் தொட்டுவிட்டு வந்தது. ஆயினும் அவ்விலை வீழ்ச்சியின் நன்மையை இலங்கையர்கள் இதுவரை பெற அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

உலக   பெற்றோலிய விலை வீழ்ச்சியின் காரணமாக பெற்றோலியத்துறை மீது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்,  தங்கத்தை நோக்கி நகர்ந்தன. மறுபுறம் கோவிட் 19நோயைத் தொடர்ந்து. அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமாக தளம்பல்களுக்கு உட்பட்டது. எனவே உலக அந்நியச் செலாவணி வர்த்தகச் சந்தையிலும் மெதுவடைவு அவதானிக்கப்பட்டது. உலகப் பொருளாதார மெதுவடைதல் மற்றும் கோவிட் 19நோய்த்தாக்கம் ஏற்பட்டதன் பின்னர் உலக நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை உதைத்து ஸ்டார்ட் (kick start) செய்யும் நோக்கில் விரிவாக்க பணக்கொள்கை நடவடிக்கையாக தத்தமது நாடுகளின் உள்ளூர் வட்டிவீதங்களைக் குறைத்தன. சிலவேளைகளில் இந்த மெய்வட்டிவீதங்கள் (மெய்வட்டி வீதமானது சாதாரணமாக நாம் அவதானிக்கும் வட்டி வீதமாகிய பெயரளவு வட்டி வீதத்திலிருந்து பண வீக்கவீதத்தை கழித்துப் பெறப்படும் வட்டி வீதமாகும்) எதிர்க்கணியமாக இருந்தன. பணவீக்கமானது வட்டி வீதத்தைவிட உயர்வாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.  

உதாரணமாக, நமது சேமிப்புக்கணக்கில் இருக்கும் மீதித் தொகைக்கு 5சதவீத வருடாந்த வட்டி வழங்கப்படுவதாகக் கொள்வோம். குறித்த வருடத்தில் விலை மட்டங்கள் அதிகரித்துச் செல்லும் சதவீதம் (அதாவது பணவீக்க வீதம்) 7வீதமாக இருப்பதாகவும் கருதினால் மெய்வட்டி வீதமானது எதிர்க்கணிய 2சதவீதமாகும்.

சுருக்கமாகச் சொன்னால் 100ருபாவை முதலீடு செய்தால் வருட இறுதியில் 5ருபா வருவாய் கிடைக்கும்.  அதேவேளை முதலீடு செய்த 100ரூபாவின் பெறுமதி வருட இறுதியில் பணவீக்கம் காரணமாக 7ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருக்கும். 5ரூபா வட்டி உழைக்கப்பட்டாலும் முதலீட்டின் பெறுமதி 7வீதத்தினால் குறைவதனால் முதலீட்டாளர் தேறிய ரீதியில் 2சதவீத நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்நிலையில் வட்டியை ஈட்டித்தரும் சொத்துக்களில் (திறைசேரி உண்டியல்கள் திறைசேரி பிணையங்கள் போன்றன) முதலீடுகளை மேற்கொள்வதானது போட்ட முதலுக்கே ஆப்பு வைக்கும் நடவடிக்கையாக அமையும்.  

ஒருபுறம் சர்வதேச பொருட் சந்தையில் (international commodity market) பெற்றோலியம் போன்ற பண்டங்களின் விலை வீழ்ச்சி மறுபுறம் பணக்கொள்கை மாறியதால்  வட்டிவீதத்தில் ஏற்படுத்தப்பட்ட வீழ்ச்சி, அத்துடன் படிப்படியாக அதிகரித்துச் செல்லும் உள்நாட்டுப் பணவீக்கப் போக்குகள் என்பன ஒன்றிணைந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பான மாற்று முதலீட்டு வாய்ப்புகளை நாடத் தூண்டியுள்ளது.

இவ்வாறான நிச்சயமற்ற பொருளாதார சூழல்களின் போது ஏற்படும் இடரபாயங்களுக்கு ஈடுகொடுக்கும் பாதுகாப்பான முதலீட்டுக் கருவியாக தங்கம் செயற்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் ஏனைய மாற்று முதலீட்டு வாய்ப்புகளிலிருந்து தங்கத்தை நோக்கி தமது முதலீடுகளை திருப்பி விட்டமை தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் சடுதியாக அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாகும்.  

இலங்கையிலும் கூட அண்மையில் அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க வட்டி வீதங்களை பெருமளவில் குறைத்துள்ளமையையும் அதன் காரணமாக நிலையான சொத்துக்கள் மற்றும் நெடுவாழ்வுப் பொருள்களான வாகனங்கள் போன்றவற்றின் மீதான இலங்கை மக்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

ஆயினும் முதலீட்டு நோக்கத்திற்கான இலங்கையில் தங்கத்தை கொள்வனவு செய்வோரின் சதவீதம் குறைவென்றே கூறலாம். சர்வதேச சந்தையில் ஏற்படும் விலையதிகரிப்பு இலங்கையின் தங்க விலைகளிலும் தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்க இயலாது. ஆயினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் தங்கத்தின் விலை ஒப்பீட்டு ரீதியில் சற்றுக் குறைவென்றே கூறலாம்.  

கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலப் பகுதியில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்தே இலங்கையின் தங்க இறக்குமதிகள் மீது 15சதவீத இறக்குமதித் தீர்வை விதிக்கப்பட்டது.

இப்போது அது நீக்கப்பட்டமை உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நீண்டகால நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடும் ஆயினும் அதனால் ஏற்படும் உடனடித்தாக்கங்கள் ஏற்படுத்தும் சந்தைப் பாதிப்புகள் குறித்தும் கவனமெடுத்துச் செய்திருந்தால் நல்லது.   

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments