ஆறுமுகன் இல்லாவிடினும் அவரது கொள்கையை CWC பின்பற்றும் | தினகரன் வாரமஞ்சரி

ஆறுமுகன் இல்லாவிடினும் அவரது கொள்கையை CWC பின்பற்றும்

ஆறுமுகன் தொண்டமான் இல்லாவிட்டாலும் அவரது கொள்கைகளின்படியே செயற்படுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று முன்தினம்

நடைபெற்ற அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இரங்கல் தெரிவிக்கும் அனுதாபம் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

அமரர் ஆறுமுகன் தொண்டமான் மக்களுக்காக தொழிற்சங்கம் மற்றும் அரசியல் ரீதியாக உண்மையாக செயற்பட்ட தலைவராவார். மக்கள் நலனை எண்ணி சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தை உருவாக்கியதுடன், அதன் ஊடாக தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தை அமைத்து இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். அதேபோன்று தொண்டமான் நோர்வுட் மைதானத்தை அமைத்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் செயற்பட்டிருந்தார்.    மலையகத்தில் 44பிரஜா சக்தி நிலைங்களை உருவாக்கியிருந்தார். நாம் இப்போதுதான் தொழில்நுட்பம் பற்றி பேசுகிறோம். ஆனால், அவர் அந்த காலத்திலேயே இதனை செய்து காட்டியுள்ளார். இன்று அனைவரும் ஆறுமுகன் தொண்டமான் பற்றியே பேசினர்.

அவரை அனைவரும் வேறு இடத்தில் வைத்துள்ளமை இதிலிருந்து விளங்குகிறது. இனம், மதம் பாராது சமமாக சேவைசெய்திருந்த காரணத்தால்தான் அவ்வாறு அவர்மீது மரியாதை வைத்துள்ளனர். என்னுடன் நேரம் செலவழிக்கவில்லையென எனது தந்தை மீது சற்று கோபம் இருந்தது. ஆனால், அவர் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளமையை பார்க்கும் போது அவையனைத்தும் நீங்கிவிட்டன.  

மலையக மக்களையும் இந்த சமுதாயத்தில் சம அந்தஸ்துக்கு கொண்டுவரவே அவர் செயற்பட்டிருந்தார்.  

ஆறுமுகன் தொண்டமானின் இறந்துள்ள போதிலும் அவரது கொள்கைகளை தொடர்ந்து நாம் அப்படியே செயற்படுத்துவோம். என்மீது ஒரு பாரம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு பார்க்கவில்லை. நான் முதல் பாராளுமன்ற அமர்வுக்கு வரும் போது அவர் இங்குதான் இருந்தார்.  

1,000 ரூபா தொடர்பில் இறுதியாக அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இறுதியில் அதனை நடைமுறப்படுத்த முடியவில்லை. அதனை தொடர்ச்சியாக முன்னெடுத்து சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம். அதேபோன்று மலையக பல்கலைக்கழகத்தையும் உறுதியாக அமைத்து அவர் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments