20ஐ ஏற்க மாட்டோம் | தினகரன் வாரமஞ்சரி

20ஐ ஏற்க மாட்டோம்

கே: தேர்தல் முடிவுகளை     கூட்டமைப்பாக நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: - கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகின்ற போது இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் என்பது கூட்டமைப்பிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள்.  

குறிப்பாக கூட்டமைப்பில் இருக்கக் கூடிய சிலருடைய நடவடிக்கைகள் சொல்லாடல்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிருப்தியே கூட்டமைப்பின் பின்னடைவிற்கு மிக முக்கிய காணமெனக் கருதுகின்றேன்்.  

அதே நேரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ற ரீதியில் பார்த்தால் கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் சமமாகவே ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் கடந்த தேர்தலில்் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5ஆசனங்களைப் பெற்றது. இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமாக 5ஆசனங்களைப் பெற்றுள்ளன.  

கே: கூட்டமைப்பிற்கு ஆசனங்கள் குறைவடைய வேறு கட்சிகள் ஆசனங்கள்் பெற்றுக் கொண்டதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்: - யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டாலும் அதற்கு அப்பால் அரச கட்சிகளும் அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற கட்சிகளும் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன. அதிலும் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பை தவிர அரசிற்கு ஆதரவாக 5ஆசனங்கள்  பெறப்பட்டுள்ளன. 

இது அரசாங்கத்திற்கு பலத்தைத் தந்திருக்கின்றது. அதே நேரத்தில் தமிழத்் தரப்பாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கின்ற அமைப்பாக செயற்படுகின்ற கூட்டமைப்பிற்கு பாதிப்பு தான். ஏனெனில் தமிழர் தரப்பாக நாம் செயற்படுகின்ற போது எமது பலம் குறைவடைகின்றமை எமது அபிலாஷைகளை வென்றெடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். 

கே: இவ்வாறானதொரு நிலைமையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறாக அமையுமெனக் கருதுகின்றீர்கள்? 

பதில்: - நாட்டில் பலமான ஒரு அரசாங்கம் வந்திருக்கின்ற போது தமிழர் தரப்பில் இருந்தும் அரசின் சார்பாக தெரிவு செய்யப்பட்டு ஆதரவை வழங்குவது அரசாங்கம் தாம் நினைத்ததை விரும்பியதை செய்யலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். அது அவர்களுக்கு வசதியானதாகவும் இருக்கலாம். 

ஆனால் தமிழ் தரப்பாக நாம் செயற்படுகின்ற போது கூட்டமைப்பின் கருத்துக்களைக் கேட்கத் தேவையில்லை என்ற நிலையை அது ஏற்படுத்தலாம். அவ்வாறு பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டும் உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய தரப்பாக நாமே தொடர்ந்தும் செயற்படுவோம். அவ்வாறான எமது செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 

ஆகவே இன்றைய சூழலில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது. அதிலும் ஆகக் குறைந்தது பாராளுமன்றத்தில் ஒன்றிணையா விட்டாலும் ஒருமித்துச் செயற்பட வேண்டியது அவசியம். 

கே: தேர்தலுக்குப் பின்னராக கூட்டமைப்பின் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வாறான மாற்றங்கள் சாத்தியப்படுமா? 

பதில்: - கூட்டமைப்பின் பதவி நிலைகளிலுள்ளவர்களின் சில செயற்பாடுகளும் இந்த பின்னடைவிற்கு காரணமாக இருப்பதால் அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. ஆயினும் அதில் முக்கியமாக பதவி நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதைக் காட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள், சொல்லாடல்கள், கருத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம். 

பதவி நிலைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டுமானால் பதவி நிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும.் அதற்கான முயற்சி எடுக்கப்படுகிறது. அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.  

கே: அவ்வாறான மாற்றங்கள் ஏற்படாதவிடத்து கூட்டமைப்புக்குள்் மீண்டும் குழப்பங்கள் ஏற்படுமா? 

பதில்: கூட்டமைப்பாக நாங்கள் ஒருமித்து ஒன்றாக இணைந்த பயணிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக கட்சிக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மாற்றம் என்பது கூட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்வதாகவே அமைய வேண்டும். 

அதனடிப்படையில் ஒன்றாக ஒருமித்து பயணித்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். ஆகவே மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது மிக மிக அவசியமானது. ஆயினும் அவ்வாறான மாற்றங்களை செயற்படுத்தத் தவறினால் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமையை நிலைநாட்டுவது மிகக் கடினமாக இருக்குமென்றே கருதுகின்றேன்.  

கே: ஒற்றுமை வலியுறுத்தப்படுகின்ற நிலையில் கூட்டமைப்புடன் வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளை மீண்டும் இணைத்துக் கொள்ள பேச்சுக்கள் நடக்கின்றதா? 

பதில்: - அவ்வாறான பேச்சுக்கள் கூட்டமைப்பிற்குள் நடைபெறுகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனால் எங்களது கட்சி அப்படி எதனையும் செய்யவில்லை. ஆனால் ஒற்றுமைக்காக பகிரங்க அழைப்புக்கள் எல்லாம் விடுக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில் ஒற்றுமையாக வேலை செய்ய ஒன்றுபடுவது சம்பந்தமாக பேசப்படுகிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பது போலவே எனக்குத் தெரிகின்றது.  

கே: கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென மீண்டும் பங்காளிக் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைத்துள்ள நிலையில் அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? 

பதில்: - கூட்டமைப்பு பதியப்படாத காரணத்தினால் தான் இதுவரை காலமாக கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் இருந்து வந்தது. அது மாத்திரமல்லாமல் கூட்டமைப்பில் இருந்து விலகிய கட்சிகளும் தனிநபர்களும் கூட இதே காரணத்தைத்தான் முன்வைத்திருக்கின்றனர். குறிப்பாக கூட்டமைப்பிற்குள் கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால் தான் விலகியதாகவும் தெரிவக்கின்றனர். ஆகவே கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குழறுபடிகளுக்கு கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவது அவசிமானது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டால் அந்தப் பிரச்சினைகள் ஏற்படாதென்றே கருதுகின்றேன். அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது.  

தமிழர் தரப்பு பலமாக இருக்க வேண்டிய இந்தக் கால கட்டத்தில் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு ஒரே அமைப்பாக ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இணைத்துச் செயற்பட வேண்டும். அவ்வாறு கூட்டமைப்பு செயற்பட்டால் இலக்கை அடைவதற்கு மிக உறுதுணையாக இருக்குமென்று நம்புகிறேன்.  

கே: 20ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 

பதில்: - 19ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து கொண்டு வரப்படுகின்ற ஒரு திருத்தமாகவே 20ஆவது திருத்தம் அமைகின்றது. அதாவது ஐனாதிபதியின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் ஐனநாயகத்திற்கு விரோதமான ஒரு செயற்பாடாகவுமே நாம் பார்க்கின்றோம். 

நாட்டின் ஐனநாயகத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை நாங்கள் எதிர்க்கின்றோம். அந்த திருத்தம் பாராளுமன்றம் கொண்டு வரப்படுகின்ற போதும் அதற்கு நாங்கள் எமது ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளியிடுவோம்.  

கே: இந்த திருத்தத்திற்கு எதிராக கூட்டமைப்பு ஏதும் சட்ட நடவடிக்கை எடுக்குமா? 

பதில்: -20ஆவது திருத்தம் நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாம் கூறுவது போன்று ஏனைய கட்சிகள் பலவும் கூறுகின்றன. அதிலும் விசேசமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சிலரும் கூறுகின்றனர். அகவே இந்த திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் போதிய பலம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.  

அதேநேரம் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் சிலரும் இந்த திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஆதரவு எதிர் என பல கருத்துக்கள் தொடர்ந்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எது எப்படியென்றாலும் நாம் இதனை பாராளுமன்றில் எதிர்ப்போம். 

அதற்கு அப்பால் வெளியில் ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் நீதிமன்றம் செல்வதாகவே இருக்கும். ஆனால் இது தொடர்பில் நாம் இன்னும் சரியானதொரு முடிவை எடுக்கவில்லை. நாம் கட்சிக்குள் பேசி இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அறிவிப்போம்.

அதேநேரம் வேறுசிலர் நீதிமன்றம் போவதாகச் சொல்கின்றனர். ஆகவே நாங்களும் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவை எடுப்போம் என்றார்.   

எஸ்.நிதர்ஷன்
(பருத்தித்துறை விசேட நிரூபர்)

Comments