கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

மனித சமூகத்தை இல்லாதொழிக்க வந்த ஒரு கிருமி போல், இயற்கையும் தன் பங்குக்கு கடல் சீற்றம் என்றும், பேய்க்காற்று என்றும், நிலச்சரிவென்றும் ‘படம் காட்டுவது’ நியதியாகப் போய்விட்ட நிலையில், கடல் சூழ் நம் தீவில் நமது வாழ்க்கை ‘நித்திய கண்டம்’ பூரண ஆயுசு!  

குறிப்பிடப்பட்ட மூன்று பயங்கரங்களிலிருந்து பாதுகாப்புப் பெற, சமூக உணர்வாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய நெஞ்சங்கள் அபாயச் சங்கு ஊதினாலும், எச்சரிக்கை மணி ஒலித்தாலும் ஒற்றுமைப்படாத மக்களும் பிரிந்து நின்று பழகிப் போன அரசியல் தலைமைகளும் எந்தவித உணர்வும் இல்லாமல் கொண்டாட்டம், கோலாகலம் என தினமொரு ஊர்வலம் அதேபாதையில் (அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அதே ஊரில்)   பாருங்கள், கிழக்கிலங்கை அம்பாறை, மாவட்ட அழகிய ஒலுவில் கிராமத்திற்கு நடக்கப்போகும் அழிவைக் குறித்த ஒரு கசப்பு வில்லையை 23/08/2020இதே பக்கத்தில் விழுங்கச் செய்தேன்.  

கிட்டத்தட்ட இருபது நாட்கள் முழுசாகப் போயும் ஒரு சிறு எதிரொலி கூடக் கேட்கவில்லை. பெரும்பாலானோர் கள்ள மெளனிகளா? 

ஓர் ஒலுவில் ஓலம், அவலம் இப்படியென்றால், இன்னொரு கிராமமும் ஜோடியாக இணையும் துயரச் செய்தி அம்பாறை மாவட்டத்திலிருந்து, 

அதனால் இரண்டாம் முறையும் கசப்பு வில்லை. 

கடந்த 06/09/2020ல் இருபத்து நான்கு வயது இளம் வாலிபத்து ‘தினக்குரல்’ ஒரு ‘சமூகப்பார்வை’ பார்த்து சஞ்சலமிட்டுள்ளது. 

பார்வை பார்த்த செ. துஜியந்தன் என்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளருக்கு நன்றி பகர்ந்து சில துளித் தகவல்கள். 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் இல்மனைற் மணல் அகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. 

இல்மனைற் அகழ்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் திருக்கோவில் என்றொரு கிராமம் இருந்ததா? என்பதற்கான அடையாளங்கள் இல்லாமல் போகும் நிலையேயுள்ளது. நடிகர் அஜீத்தின் 'சிற்றிசன்' படத்தில் அத்திப்பட்டி என்றொரு கிராமம் காணாமல் போனதைப்போன்ற நிலையே இங்கும் ஏற்படலாம். 

திருக்கோவில் பிரதேச மக்கள் மீன்பிடி, விவசாயம், தென்னை மரங்கள் மூலம் தேங்காய் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரம் இவற்றிலேதான் தங்கியுள்ளது. இங்குதான் வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கடற்கரை ஓரத்தில் இருப்பதினாலும் தற்போது அங்கு வேகமாக இடம்பெற்றுவரும் கடலரிப்பினாலும் அவ்வாலயம் அழிந்துவிடுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொற்றிக் கொண்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் கமலராஜனிடம் கேட்டபோது. 

"அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பினால் ஒலுவில், நிந்தவூர், கல்முனை, திருக்கோவில் எனப் பல கிராமங்கள் காவுகொள்ளப்படுவதை தடுக்க முடியாது போய்விடும். தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்காது இன்னும் இருபது வருடங்களில் வருகின்ற சந்ததிக்கு நாம் எதனை விட்டுச் செல்லப்போகின்றோம் எனப்பாருங்கள்.

இயற்கையை சீண்டாமல் வாழுவோம் 

இயற்கை எம்மை சீண்டாமலும் வாழுவோம்" என்கிறார்.

ஆகமொத்தத்தில், வாராவாரம் கொழும்பிலிருந்து நமது அழகிய கிராமங்கள் அழிவதை நிறுத்த கசப்புவில்லைகள் அனுப்பிவைக்க வேண்டிய அவசியமில்லை. (மாத்திரைகளின் விலைகள் வேறு எகிறிப் போயிருக்கின்றன.) 

செயல்படவேண்டிய செயல்வீரர்கள் கிழக்கிலேயே அனைத்துத் துறைகளிலும் உள்ளனர். அவர்கள் வீறுகொண்டு எழட்டும். 

எவ்வாறாயினும் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் கமலராஜன் பெயரிட்டுள்ள, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், திருக்கோவில் அழிந்துவிடுமாயின் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள என் போன்ற மூத்த பேனா முனைக்காரர்களால் முடியாமல் போகும்.

எனக்கு ஒரு சிறு ஆறுதல் செய்தியும் கிடைத்துள்ளது அபிமானிகளே!

அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான, எச்.எம்.எம். ஹாரீஸ், பைசால் காசிம் ஆகியோர் தீர்க்கமான தீர்வொன்றைக் காண, கரையோரப் பாதுகாப்பு, கரையோர வளங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பணிப்பாளர்கள், அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்களாம். கிழக்கில் அவர்கள் மட்டுமா பிரதிநிதிகள்? அனைத்து அரசியல் பேதங்களையும் மறந்து, துறந்து ஊர்களின் அழிவுகளைத் தடுக்க ஒன்று பட்டால் பாரம்பரிய மக்களையும் வளங்களையும் பாதுகாத்திடலாமே...?  

பிரார்த்தனைகள். 

இனிப்பு 1

வாருங்கள், அலைகடல் கடந்து, இந்தியக் கரையை அடைவோம் இனிப்பொன்றைச் சுவைக்க...  

இனிப்பு வகைகளுக்கு பஞ்சமில்லாத தமிழகம் வேண்டவே வேண்டாம்! கிருமி ஆக்கிரமிப்புக் குறைந்த வட இந்திய மராட்டிய மாநிலத்தில் ஒரு சிறுகிராமத்திற்குள் நுழைவோம். நமக்கு வேண்டிய இனிப்பை, அதாவது இனிப்பு தகவலை வழங்க ஒரு வஸீமா ஷேக் வரவேற்பு நல்குகிறார். 

நேற்றையப் பொழுது வரையில் அவர் கூலித் தொழிலாளி ஒருவரது மகள்... இன்றோ, ஒரு மாவட்ட துணை அதிபர், ஆட்சியர் இந்தியப் பேச்சு வழக்கில் கலெக்டர்.  

இது எப்படி சாத்தியமாயிற்று ஒரு தொழிலாளியின் பெண்ணுக்கு?  

அவர் பிறந்த, வாழ்ந்த குடும்பமே உறுதுணை.!  

இங்கே ‘தொழிலாளியின் மகள்’ என்று பதியும் பொழுது, அது அவளது தந்தையைக்குறிக்காது. அவர் மனநலம் பாதித்துத் தனிமை வாழ்க்கை வாழும் மனிதர்! தாய்! தான் தொழிலாளி!

அந்த அருமை ‘உம்மா’வும் அவர் பெற்றெடுத்த ஆண்சிங்கம் இம்ரானும் வஸீமாவின் கல்வித் தாகத்தைத் தீர்க்க தீர்க்கமான முடிவெடுத்தனர்.  

அன்பான அன்னையார் விவசாயக் கூலித் தொழிலாளியாக உழைத்தார்.  

அண்ணன் இம்ரான் பி.எஸ்.சி. படிப்பை இடை நிறுத்தி விட்டு வாடகைக்கு முச்சக்கர வண்டி எடுத்து ஓட்டி சம்பாதித்தார். 

எட்டுப் பேர் கொண்ட குடும்பம் அரை வயிறும் கால் வயிறுமாக வாழ்ந்து படிப்புச் செலவைச் சரிகட்ட படாதபாடு பட்டனர். 

மேல்நிலைத் தேர்வில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்த அவர், திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 

மராட்டிய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வே தனது இலக்கு என்பதில் தீர்க்கமாக இருந்த வஸீமாவுக்கு அதற்கான பயிற்சி நிலையக் கட்டணம் தான் பயமுறுத்தியது. 

ஆறே ஆறு மாதங்கள் மட்டுமே போகமுடிந்தது. முயற்சியைக் கைவிடவில்லை. சுயமாகவே கற்கத் தொடங்கினார். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களைத் திரட்டினார். தினமும் நூலகம் சென்று சகல நாளேடுகளின் வாசிப்பிலும் கவனம் செலுத்தினார். 

தனது முதல் முயற்சியில் எழுத்துத் தேர்வில் வென்ற வஸீமா, நேர்முகத் தேர்வில் வெறும் 2மதிப்பெண்களில் வெற்றியை நழுவ விட்டார்.  

மீண்டும் ஓராண்டு காலப் போராட்டம். 

இரண்டாவது முறையில் வென்று, நாக்பூர் விற்பனை வரித்துறையில் இரண்டாம் நிலை அதிகாரியானார். பணிபுரிந்தபடியே தொடர்ந்து படித்து, மறுபடியும் அரசுப் பணியாளர் தேர்வெழுதி, மாநில அளவில் பெண்களில் மூன்றாமிடம் பிடித்தார். 

இப்பொழுது அவர் மாவட்ட துணை அதிபர், ஆட்சியர்!  

ஒரு காலத்தில் தன் பட்டப்படிப்பையே நிறுத்தி தன் உயர்வுக்கு உழைத்த அண்ணன் இம்ரான் மீண்டும் படிப்பைத் தொடர்கிறான். பட்டதாரியாகப் போகிறான்! 

அருமை உம்மா, அவர்கள் தன் உற்ற கணவரைக் கண்காணித்தவாறு ஓய்வில்! 

தியாகங்கள் என்பதே இஸ்லாமியக் கோட்பாடு!  

Comments