சைக்கோ | தினகரன் வாரமஞ்சரி

சைக்கோ

அந்த பாலத்தினருகே ஒரே கூட்டமாக இருந்தது. அப்போது நேரம் காலை ஏழு மணியிருக்கும். மலைக்கு வேலைக்கு போவதற்காக வந்த தோட்டத் தொழிலாளர்கள் அப்படியே பாலத்தினருகே சென்ற நிலையில் அதிர்ச்சியில் நின்று விட்டார்கள். 

அப்போது வேகமாக வந்த அந்த பொலிஸ் ஜீப்பிலிருந்து ஐந்தாறு பொலிஸ்காரர்களுடன் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கீழே இறங்கி வேகமாக பாலத்தை நோக்கி நடந்தார். பாலத்தினடியிலே மிதந்து கொண்டிருந்த அந்த மனித உடலையே சற்று நேரம் பார்த்தவர் உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். 

பிரேதம் மேலேகொண்டு வரப்பட்டு தரையில் கிடத்தப்பட்டது. அது ஓர் ஆணின் சடலம். தலைஅடையாளம் தெரியாதளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. பார்க்க கொடூரமாக இருந்தது. பார்த்திபன் பொலிஸ்காரரொருவரை விட்டு உடலை பரிசோதனை செய்ய உத்தரவிட்டவர் சட்டென சிந்தனையில் ஆழ்ந்தார். மூன்று மாதங்களுக்கு முன் தலைமட்டும் முற்றாக எரிந்த நிலையில் ஒரு ஆண் பெண்ணின் சடலங்கள் பக்கத்து தோட்டத்தில் மூங்கில் தோப்பு சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்க வில்லை. பிணவறையினுள் இருக்கும் அவர்களை தேடி யாருமே வரவில்லை. இந்த நிலையில் இப்போது அதே முறையில் தலை சிதைந்த அதே பாணியில் மற்றுமொரு சடலம். 

“சேர்... கால்சட்டை பொக்கெற்றுல இந்த துண்டுப்பேப்பர் இருந்தது... நனைஞ்சு ஊறிப்போயிருந்ததாலும் எழுத்துக்கள் ஓரளவு விளங்குது...” 

பார்த்திபன் மிக கவனமாக அந்த பேப்பரை வாங்கினார். அதுவொரு பற்றுச் சீட்டு, சேலை ஒன்று வாங்கப்பட்டதற்கான சீட்டு. 

அதில் புடவைக்கடையின் பெயரும் வாங்கியவரின் பெயரும் இருந்தது. “மனோகர்” இதுதான் வாங்கியவரின் பெயர் – பார்த்திபன் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மனதில் அசைபோட்டவாறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பார்த்தார். 

சுகுமார்- கண்டியிலிருந்து பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த கொழும்பு புகையிரதத்தில் யன்னல் பக்கமாக அமர்ந்திருந்தான். அப்போது நேரம் இரவு மணி பதினொன்று தலவாக்கலை போய்ஸ் டவுனிலிருக்கும் தன் அண்ணன் வீட்டில் தங்கி காலையில் புறப்பட்டு நுவரெலியா போக வேண்டும். அவன் வெளியே தெரியும் இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.  

“என்ன நீங்க எதுக்காக இதெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க.... எனக்காக இவ்வளவு செலவு செய்யிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது... இதெல்லாம் வீண் செலவுத்தானே....” 

“கௌசல்யா நாம எவ்வளவு காலமா பழகுறோம். உங்களுக்கு நான் செய்யாம யார் செய்யிறதாம்.” 

“இல்லையில்லை.... நான் அதுக்காக சொல்லலை. நீங்கல்லாம் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சுருக்கீங்க.... அண்ணா திடீர்ன்னு மரணமான நிலையில என்னசெய்யிறதுன்னு தடுமாறிபோயிருந்த நிலையில் அம்மாவுக்கும் எனக்கும் எல்லாமாயிருந்து காரியங்களை செஞ்சீங்க. இதுக்காக என்ன கைமாறு செய்யிறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருக்கிற நிலையில் நீங்க எனக்காக இவ்வளவுசெலவு செய்யிறதை என்னால் ஏத்துக் கொள்ள முடியலை... என்னால யாருக்கும் நஷ்டம் ஏற்டக்கூடாது....” 

“கைமாறெல்லாம் தேவையில்லை. இது என்னோட கடமை. அதோட உங்களை அறிமுகம் செஞ்சி வச்ச மணிமாறனுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும்..”  

“நானும் கேட்கணும்னு நினைச்சேன். மணிமாறனை ரொம்ப நாளா காண முடியலையே... கடைசியா பார்த்தப்ப ரொம்ப சோர்வா சோகமா இருந்தாரே....” 

“மணிமாறன் என்னோடதான் கண்டியில ஒண்ணா வேலை செஞ்சான். ரெண்டுமூணு மாசமா ஒழுங்கா வேலைக்கு வாரதில்லை. அப்புறம் கொழும்புல இன்னும் அதிகமான சம்பளத்துக்கு வேலைக்குப் போறதா சொல்லிட்டு போனான். இருந்திருந்து போன் போடுவான்...” 

புகையிரதம் சட்டென ஏதோவொரு நிலையத்தில் நிற்கவே சிந்தனை கலைந்தவன் மெதுவாக இருக்கையை விட்டு எழுந்தான். தண்ணீர் போத்தலுடன் கதவருகே சென்றவன் தண்ணீரை மடமடவென குடித்தான். 

மனோகர் மணிமாறனுடன் ஒன்றாக வேலை செய்த நிலையில் தொடர் விடுமுறைகள் வந்தால் அவர்கள் எங்காவது சுற்றுப்பிரயாணம் மேற்கொள்வார்கள். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன் மணிமாறன் அவனின் இன்னொரு நண்பனான செந்திலின் வீட்டிற்கு கூட்டிச் சென்றான். செந்தில் நுவரெலியா மின்சார காரியாலயத்தில் வேலை செய்தான். பகுதி நேரத்தில் வீட்டினருகே இருந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா லட்சுமி. தங்கை கௌசல்யா. அவள் தனியார் வர்த்தக வங்கியொன்றில் வேலை செய்து வந்தாள். நல்ல சிவந்த நிறம்... நீண்ட அடர்த்தியான கூந்தல்... முகத்தில் எந்நேரமும் மலர்ச்சி... உதட்டில் புன்னகை... கலகலப்பான பேச்சு... எளியோருக்கு உதவி செய்யும் குணம்... உண்மையிலேயே அவள் ஒரு நடமாடும் அழகுச் சிலை.... 

செந்திலும், தாய் லட்சுமியும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். கௌசல்யா அவர்களுக்கும் மேலானவள். கலகலவென சிரித்து பேசுவாள். 

மணிமாறனைப் போலவே சுகுமார் மற்றும் மனோகரிடமும் சமமாக பழகியதுடன் விதவிதமாக உணவு தயாரித்து கொடுத்தாள். அந்த இரண்டு நாட்களும் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலமாக இருந்தது. அதற்காக மணிமாறனுக்கு நன்றி சொன்னார்கள். 

மறுபடியும் கண்டிக்கு வேலைக்காக வந்த பின்னும் சுகுமாரினால் கௌசல்யாவை மறக்கமுடியவில்லை. கைபேசியில் தொடர்புகொள்ள யோசித்து அவள் ஏதாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் பேசாமல் இருந்து விடுவான். சில நாட்கள் சென்றபின் தைரியத்துடன் மறுபடியும் தொடர்பு கொண்டான். 

“அட நீங்களா... இப்பத்தான் உங்களுக்கு எங்களை யெல்லாம்... ஞாபகம் வருதாக்கும்...” 

“இல்ல....நீங்க போல வேலை செய்யிறீங்க... என்னத்துக்கு தொந்தரவுன்னு தான் பேசாம இருந்தேன்....” 

“அப்படியெல்லாம் இல்லை... உங்களோட நண்பர் மனோகர் போனவுடனேயே எனக்கு கைபேசியில பேசினாரே... உங்களைப் பற்றி விசாரிச்சேன் சொல்லலையா...? 

சுகுமாருக்கு சற்று அதிர்ச்சியாகத்தானிருந்தது. ஏனென்றால் அவன் இதுவரை எதுவுமே சொல்லவில்லை. அப்படியானால் அவன் அவளை கையகப்படுத்த நினைக்கிறானா... விடக்கூடாது அவள் எனக்குரியவள். எந்தக்காரணம் கொண்டும் யாருக்காகவும் அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன்...” 

அப்புறம் – சுகுமார் அவளிடம் அடிக்கடி பேசினான். நேரம் போவது தெரியாமல் பேசினான். இந்த நிலையில் தான் மனோகர் அவனை காரியாலயம் முடிய மாலை நேரத்தில் லேக் சைடில் உள்ள ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றான். 

“சுகுமார்... உனக்கே தெரியும்... என்னோட ஒரே பாடசாலையில படிச்ச காரணத்துக்காக உன்னை நான் வேலைசெய்யிற இதே கம்பெனியில் உதவி கணக்காய்வாளராக சேர்த்து விட்டதுல இருந்து எவ்வளவுவோ உதவி செஞ்சிருக்கேன். இதுவரையில் நான் உதவின்னு எதுவும் உன்கிட்ட கேட்டதில்லை. இப்ப கேட்கிறேன். நான் கௌசல்யாவை மனசார நேசிக்கிறேன். அதுக்கு நீ தான் உதவி செய்யணும். என் காதலை எடுத்துச் சொல்லணும்..” 

சுகுமார்- அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.  

“கௌசல்யா... உன்னை நேசிக்கிறாளா... இதைப் பத்தி உன் கிட்ட சொன்னாளா? 

“இல்லை... சொல்லலை. ஆனா கைபேசியில நேரம் போவது தெரியால பேசுவா... அவளோட சிரிப்பு இனிமையான குரல் என் மனசுல ஆழமா பதிவாயிடுச்சி. அவ இல்லாம என்னால வாழவே முடியாது. என் ஆசை நிறைவே உன்னோட ஆதரவும் ஆசீர்வாதமும் தேவை...” 

சுகுமாரால் எதுவுமே பேச முடியவில்லை. முடியும் என்றோ முடியாதென்றோ அவனால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் – அவனால் அவளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. 

இரண்டு மாதங்கள் சென்றன. ஒரே காரியாலயத்தில் ஒன்றாக வேலைசெய்தாலும் மனோகரை பார்ப்பதையோ சந்திப்பதையோ சுகுமார் தவிர்த்தான். நாட்கள் செல்லச் செல்ல மனோகர் மேல் சுகுமாருக்கு அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டது. ஏனென்றால் மனோகர் கௌசல்யாவிடம் நாள் தவறாமல் தொடர்ந்து மணிக்கணக்கில் பேசுவதை விடவில்லை. மனோகர் கௌசல்யாவுக்கு இணைப்பை ஏற்படுத்தும் போது அவள் மறைக்காமல் அதைப் பற்றி சுகுமாரிடம் சொல்லி விடுவாள். 

இந்த நிலையில் தான் – அந்த சம்பவம் நடந்தது. கௌசல்யா பதற்றத்துடன் கதறியழுதவாறு சுகுமாருக்கு கைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினாள். அப்போது காலை ஏழு மணி. 

“ஐயோ... என்ன சொல்லுவேன்... என்னோட அண்ணன்... காலையில ஆறுமணிக்கு கிழங்குக்கு மருந்து அடிக்கணும்னு புறப்பட்டுப் போனாரு... நான் தான் தேநீர் ஊற்றி கொடுத்தேன். இப்கொஞ்ச நேரத்துக்கு முன்னாலத்தான் தோட்டத்துல இருந்து பேசினாங்க... அண்ணன் தோட்டத்துல இருக்கிற கிணத்துல விழுந்து கிடக்கிறாராம். அங்க வேலை செய்யிறவங்க வழமையா போறதைவிட கொஞ்சம் நேரம் கழிச்சித்தான் போயிருக்காங்க... 

எனக்கு ரொம்ப பயமாயிருக்கு... நீங்க கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா...” 

சுகுமார், தாமதிக்கவில்லை. அவளோட நெருக்கமாக பழக இதைவிட வேறு வழியில்லை. எனவே அவனுக்கு பழக்கமான நண்பனின் காரை எடுத்துக்கொண்டான் காரியாலயத்துக்கு விடுப்பு அறிவித்து விட்டு உடனடியாக புறப்பட்டான். காரை புயல் வேகத்தில் செலுத்தியவன் மூன்றரை மணித்தியாலயத்தில் நுவரெலியாவை அடைந்தான். வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் வைத்தியசாலைக்கு போயிருப்பதாக கேள்விப்பட்டவன் தாமதமில்லாமல் புறப்பட்டான். அங்கே – கௌசல்யாவின் தாய் மயங்கிய நிலையில் இருந்தாள். கௌசல்யா அழுதழுது முகம் சிவந்து வீங்கியிருந்தது. சுகுமாரைக் கண்டவுடன் ஓடி சென்று அவன் கரங்களை பற்றியவாறு அழத்தொடங்கினாள். 

“ஐயோ... ஐயோ... அண்ணா கிணத்துக்குள்ள விழும் போதுதலை அடிப்பட்டிருச்சாம். கிணறு கொஞ்சம் ஆழம். தண்ணியும் கொஞ்சமா இருந்திருக்கு. வேலைக்கு ஆட்கள் வரநேரமாகவே இவரே நேரடியா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காரு. அப்பத்தான் தவறி விழுந்துட்டதா பேசிக்கிறாங்க தலையில பலமா அடிபட்டதால எதுவும் சொல்ல முடியாதுன்னு டொக்டர்மாருங்க சொல்லிட்டாங்க...” “இங்க பாருங்க சௌசல்யா... இனிமேதான் நீங்க தைரியமாக இருக்கணும். நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. நான் எல்லாம் பார்த்துக்குறேன். எனக்கு தெரிஞ்ச டொக்டர்மாருங்க இருக்காங்க...” 

அன்று இரவு சிகிச்சை பலனின்றி செந்தில் இறந்து விட்டதை விட ஒரு அதிர்ச்சியான விடயம் நடந்தது. விஷயம் கேள்விப்பட்டு மனோகர் வந்து விட்டான். சுகுமாருக்கு முன்னதாக முந்திரி கொட்டை போல ஓடியாடி வேலைசெய்யத் தொடங்கினான். எள் என்பதற்கு முன் எண்ணெய்யாக மாறி சுழன்று சுழன்று வேலை செய்தான். இது சுகுமாருக்கு நிச்சயமாக அதிர்ச்சியான விஷயம்தான். 

முக்கியமாக  அடிக்கடி கௌசல்யாவிடம் போய் ஆறுதல் கூறியதுடன் அவளுக்குத் தேவையான பணிவிடைகளையும் அவனே முன்னின்று செய்தான். சுகுமாரை அவளிடம் நெருங்கவிடாமல் திட்டமிட்டு செயல்படுவதைப் போல சுகுமாருக்கு விளங்கியது. 

சுகுமாருக்கு மனோகர் மேல் ஆத்திரமும் கோபமும் அதிகமானது. அவன் மேல் கொலைவெறி ஏற்பட்டது. சுகுமாரிடம் ஏதாவது பேசுவதற்காக கௌசல்யா வந்தாலும் தூரத்திலிருந்து அவதானித்துக்கொண்டிருக்கும் மனோகர் ஓடோடி வந்து விடுவான். எப்படியோ கௌசல்யா மனதில் மனோகர்தான் இருக்கிறானென்பதை அவளின் நடவடிக்கைகளின் மூலம் சுகுமார் தெரிந்துக்கொண்டாலும் மனோகர் இருக்கும் வரை அவனுக்கு எப்போதுமே ஆபத்துத்தானென்பதையும் மறந்து விடவில்லை. 

செந்திலின் உடல் அடக்கம் செய்யும் போதுதான் மணிமாறன் வந்து சேர்ந்தான். மனோகர் அடுத்த நாள் புறப்பட அதற்கு மறுநாள் சுகுமார் புறப்பட்டான். 

அடுத்தடுத்த நாட்களின் சுகுமாருக்கு கண்டியில் வேலை ஓடவில்லை. வேலைகளுக்கு நடுவே கொளசல்யாவுக்கு கைபேசியின் மூலம் அழைப்பை ஏற்படுத்துவான். ஆறுதல் சொல்லுவான். மனோகரும் அவளுக்கு அழைப்பு எடுப்பதாக கௌசல்யா கூறும் போது அவனுக்கு கோபத்தில் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கும். நாளுக்கு நாள் அவன் மேலுள்ள கோபம் அதிகரிக்கவே அவன் உயிருடன் இருந்தால் கௌசல்யாவை அடைய முடியாது என்பதால் விபரீதமான அந்த முடிவுக்கு வந்தான். மிக கடுமையாக சிந்தித்து திட்டத்தைத் தீட்டினான். இந்த நிலையில்தான் சுகுமாருக்குத் தெரியாமல் வெள்ளிக்கிழமை மனோகர் நுவரெலியாவுக்குப் புறப்பட்டான். சுகுமார். ஏற்கனவே மனதுக்குள் போட்டியிருந்த திட்டத்தை செயல்படுத்த இதுதான் சரியான தருணம் என்று அவன் மனம் எண்ணியது.  

ரயில் மறுபடியும் ஓடத் தொடங்கியது. அவன் தன் இருக்கையை நோக்கி நடந்தான். மனோகர் வெள்ளிக்கிழமை நுவரெலியா புறப்பட்டுப் போனான். சுகுமார் நிதானமாக யோசித்தான். எந்தவித சந்தேகமோ பிரச்சினையோ வரமால் எப்படி காரியத்தை முடிப்பது என்று சிந்தித்து அதற்கேற்றாப் போல திட்டமிட்டான். 

அவன் திட்டமிட்டவாறே மனோகர் வெள்ளிக்கிழமை புறப்பட சுகுமார் அடுத்த நாள் சனியன்று அதிகாலையில் நுவரெலியாவுக்குப் பயணமானான். கௌசல்யாவுக்கு சொல்லவில்லை. அடுத்த வாரம் தொடரும்...

பாலா. சங்குப்பிள்ளை

Comments