பெருந்தோட்டங்களுக்கு தபால் சேவை | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களுக்கு தபால் சேவை

தபால் சேவைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த எஸ். வியாழேந்திரன் எம்.பி நியமிக்கப்பட்டதும் அவர் மலையக தோட்டப்புற தபால் சேவைகளின் குறைபாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களில் கூறியிருந்தார். இது மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. 2006இல் இதே சேவைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் மறைந்த எம்.எஸ். செல்லசாமி, தோட்டப்புறங்களுக்கு 344பேர் தோட்ட தபால் அலுவலர்களை நியமனம் செய்த அவரது பங்களிப்பும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.  

இந்நியமனத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் 500பேருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் திறைசேரி 400பேரின் நியமனத்திற்கே நிதி ஒதுக்கீடு வழங்கியிருந்தது. எனவே 344பேர் வரையே நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் கைகூடாத நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மூலம் இது சாத்தியமாகலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அது பற்றிய ஒரு விளக்கத்தை தரவே இக்கட்டுரை முயற்சிக்கின்றது.  

பின்னணி  

மலையக தோட்டப்புறங்களில் தபால் சேவை பல குறைபாடுகளை கொண்டதாகவிருந்தது. அவற்றை நீக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப காலங்களில் தோட்ட மக்களுக்கு வருகின்ற கடிதங்கள் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தோட்ட வீடுகளுக்கு சரியான முகவரி இல்லாததினாலும் தாமதமாக உரியவரிடம் சேர்வதும் சில நேரங்களில் கடிதங்கள் காணாமல் போவதும் குறைபாடுகளாக சுட்டிக்காட்டப்பட்டன. 

 எனவே தபால் சேவைகள் தோட்ட நிர்வாகத்திற்கு ஊடாகவின்றி நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைந்திருந்தது. அரசாங்க சேவைகள் தோட்டப்புறங்களை சென்றடையவில்லை என்ற நிலைப்பாட்டிற்கு ஒரு உதாரணமாகவே தபால் சேவையும் சுட்டிக்காட்டப்பட்டது.  

முகவர் தபால் முறைமை (Agency Postal System)  

2002இல் முகவர் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஏறக்குறைய 125க்கு மேற்பட்ட தோட்டங்களில் தபால் நிலையங்கள் நிறுவப்பட்டு இதற்கு பொறுப்பாக அத்தோட்டத்தை சேர்ந்த ஒருவர் உப தபால் அதிபராக நியமிக்கப்பட்டு அவருக்கு முதல் வருடத்தில் ரூபா 3000மும் இரண்டாம் வருடத்தில் ரூபா 2000மும் மூன்றாம் வருடத்தில் 1000ரூபாவும் கொடுப்பனவாக கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.  

இவர் உப தபால் அதிகாரியைப் போல நடத்துவாரென எதிர்பார்க்கப்பட்டது. முத்திரைகள் விற்பனை, தபால் சேகரிப்பது, கிட்டியுள்ள தபால் கந்தோரிலிருந்து கடித பொதியை கொண்டு வந்து உரியவர்களுக்கு சேகரிப்பது போன்று கடமைகள் அவருக்கு பொறுப்பாக்கப்பட்டது. இதுவரைக்கும் தோட்ட நிர்வாகத்திடம் இருந்த பொறுப்புகள் ஒரு வகையில் பதிலீடு செய்யப்பட்டன. 2005இல் இந்த உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ரூபா 1000போதாது, இந்த தபால் நிலையங்களில் எங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை.

ஆகவே கொடுப்பனவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இந்த 125பேரும் அமைச்சிற்கு அழைக்கப்பட்டு அவர்களோடு அப்போதைய தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. நான் அமைச்சின் செயலாளராக இருந்தேன். கலந்துரையாடலின் இறுதியில் இம்முறைமை பொறுத்தமற்றது. எனவே இதை தொடர முடியாது எனவும் இதற்காக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.  

அமைச்சரவை குழு நியமனம்  

இத்தபால் சேவையை மறுசீரமைப்பதற்காக 2005இல் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு ஒன்று தொலைத்தொடர்பு தபால் சேவை அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டது. நான் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டேன். இக்குழுவின் சிபாரிசுகளில் ஒன்று தோட்டப்புறங்களுக்கு என தோட்ட தபால் அலுவலகர் (Estate Postal Man) என்ற பிரிவினரை தேவைகளுக்கு ஏற்ப நியமிப்பது என்றும் இதன்படி தேவைகள் மாவட்ட ரீதியாக இனங்காணப்பட்டு படித்த தோட்ட இளைஞர்களை நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்து நியமனம் செய்வது என்றும் சிபாரிசு செய்யப்பட்டது.

2005இல் இதற்கான தீர்மானம் பெறப்பட்டிருந்தாலும் இதன் நிறைவேற்றம் உரிய தொடர் நடவடிக்கை இல்லாததால் தாமதமாகியது.  

தபால் அலுவலக நியமனம்  

2007இல் ரவூப் ஹக்கீம்் தபால் அமைச்சராக இருந்த போது 500பேர் தபால் அலுவலகராக நியமிக்க அமைச்சரவை தீர்மானம் பெறப்பட்டு 400பேருக்கே திறைசேரியின் ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் கிடைத்தது. தோட்டப்புற இளைஞர்கள் 344பேர் அளவில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமன முறைமையை கண்காணிப்பு செய்வதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர்களான கே.மாரிமுத்து,சி.நவரட்ண மற்றும் நான் உள்ளிட்ட ஒரு குழு நியமன முறையை கண்காணிப்பு செய்தது.  

தற்போதைய தேவை  

500பேர் அளவில் நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம் இருந்தும் 344பேரே நியமனம் செய்யப்பட்டமையால் ஒரு இடைவெளி ஏற்பட்டது. எனினும் இந்த இடைவெளியை நீக்க தொடர் நடவடிக்கை இன்றி இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியும் உரிய பலனை தரவில்லை. எனினும் இறுதியாக 2019இல் நடுப்பகுதியில் 100பேரை நியமிப்பதற்கு திறைசேரியிர் அங்கீகாரம் பெறப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை.  

புதிய இராஜாங்க அமைச்சரின் முன்னுள்ள பணிகள்  

மறைந்த இராஜாங்க அமைச்சர் செல்லசாமி முன்னெடுத்த பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது புதிய இராஜாங்க அமைச்சரின் கடமையாகும்.   

2002இற்கு முன்னர் தோட்டப்புறங்களுக்கு 1500தபால் அலுவலகர்கள் தேவை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் 500பேருக்கு அமைச்சு அங்கீகாரம் வழங்கியது. இது தொடர்பாக தோட்டப்புறங்களில் ஒரு தேவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

அத்தோடு தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 120உப தபாற் கந்தோர்களின் தற்போதைய உபயோகம் பற்றி கவனம் செலுத்தி,அவற்றை செம்மையாக உபயோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

ஊடகங்களும் சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பிரச்சினை சரியான முகவரி பற்றியது. தோட்ட வீடுகளுக்கு தனித்த ஒரு முகவரி ஒன்றை கொடுக்க முடியாத நிலை உள்ளது. லயத்து வீடமைப்பு முறைமையில் லயக் காம்பராக்களுக்கு முகவரி இடுவதும் சிரமமானது. அத்தோடு பெயர்களும் முதலெழுத்துகளும் ஒரே மாதிரியாக இருப்பதும் பல சிரமங்களை தோற்றுவித்துள்ளது. தோட்ட லய வீடுகளுக்கு முகவரி இடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை முழுமையாக வெற்றியளிக்கவில்லை. தற்போது புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற தோட்டங்களில் இந்த முகவரியிடும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இது நீண்டகாலப் பிரச்சினை. இதனை தோட்ட வீடமைப்பு அமைச்சோடு இணைந்து தீர்வு காண முயலலாம். 

எம். வாமதேவன்
முன்னாள் செயலாளர்,  
தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு

Comments