கரீபியன் பிரிமீயர் லீக் ரி20: சம்பியனானது டிரிபாகோ நைட்ரைடர்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

கரீபியன் பிரிமீயர் லீக் ரி20: சம்பியனானது டிரிபாகோ நைட்ரைடர்ஸ்

கரீபியன் பிரிமீயர் லீக்கின் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரிபாகோ நைட்ரைடர்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றது.

டாஸ் வென்ற டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, செயின்ட் லூசியா சாக்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கார்ன்வெல் மற்றும் மார்க் டியல் களமிறங்கினர். கார்ன்வெல் 8ஓட்டங்களிலும் மார்க் டியல் 29ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சற்று நிலைத்து நின்று ஆடிய ஆன்ரே பிளட்சர் அதிகபட்சமாக 39ஓட்டங்கள் எடுத்தார். டிரிபாகோ அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக செயின்ட் லூசியா சாக்ஸ் அணி 19.1ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கீரன் பொலாட்டு அதிகபட்சமாக 4விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

155ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரிபாகோ நைட்ரைடர்ஸ் அணியின் சிமன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெப்ஸ்டர் 5ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த டிம் செய்ஃப்ரிட் 4ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய டெரன் பிராவோ, சிமன்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரை சதம் கடந்தனர். 18.1ஓவரில் 2விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 157ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது டிரிபாகோ நைட்ரைடர்ஸ்.

சிமன்ஸ் ஆட்டமிழக்காமல் 49பந்துகளில் 4சிக்சர்கள், 8பவுண்டரிகள் உட்பட 84ஓட்டங்களுடனும் டேரன் பிராவோ ஆட்டமிழக்காமல் 47பந்துகளில் 6சிக்சர்கள், 2பவுண்டரிகள் உட்பட 58ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிமன்சுக்கு ஆட்டநாயகன் விருதும் கீரன் பொலாடுக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Comments