இரட்டைப் பிரஜாவுரிமை எதிர்ப்பு சுயநல அரசியலின் வெளிப்பாடு! | தினகரன் வாரமஞ்சரி

இரட்டைப் பிரஜாவுரிமை எதிர்ப்பு சுயநல அரசியலின் வெளிப்பாடு!

இலங்கை அரசியல் அரங்கில் அண்மைக்காலமாக இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் கூடுதலாகப் பேசப்படுகிறது. அதனோடு இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய விடயமும் இணைந்துகொள்வதை அடிக்கடி காண முடிகிறது.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்வதற்கு இருபதாவது திருத்தத்தில் வழி ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசியல்வாதிகள் எதிரும் புதிருமாகத் தங்கள் தரப்பில் கருத்துககைளத் தெரிவித்து வருகிறார்கள். அதிலும் கடந்த 2015இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள், தற்போது வேறு அணியில் இருந்தாலும், இரட்டைப்பிரஜாவுரிமைக் கூடுதலாக வழங்கிய அரசாங்கத்தின் பங்காளர்கள் என்பதை மறுக்க முடியாது.

இரட்டைப்  பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பதை  தடுக்கும் வகையில் 19ஆவது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளே 20ஆவது  திருத்தத்தில் நீக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும்.  அதற்குச் சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலில் ஈடுபட  முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.  இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராகப் பதியமுடியாது எனவும்  குறிப்பிட்டிருந்தார். இதற்குக் காரணம் பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பற்றிய வியாக்கியானமாகும். அதேவேளை, இரட்டைப் பிரஜாவுரிமையோ இலங்கைப் பிரஜாவுரிமையோ அல்லாத ஒருவரை நாட்டின் முக்கிய நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு நியமித்ததும் நல்லாட்சி அரசாங்கமே. சிங்கப்பூர் பிரஜாவுரிமையை மாத்திரம் கொண்டிருந்த அர்ஜுன் மகேந்திரனை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்ததன் காரணமாகவே, பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது நடவடிக்ைக எடுக்க முடியாமல் இன்னமும் நீதித்துறை திணறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே கூடுதலானோருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது என்றால் மிகையில்லை. 2016ஆண்டின் இறுதிக்குள்  20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதாவது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதை அப்போதைய அரசு துரிதப்படுத்தியிருந்தது.

மிகவும் நேர்மையான முறையில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அப்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர். எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19, 20மற்றும் 21ஆம்  பிரிவுகளின் கீழ், இலங்கை பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழந்த ஒருவருக்கு  அல்லது இலங்கைப் பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழக்க அண்மித்திருக்கும்  ஒருவருக்கு மட்டுமே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும் என்கிறது குடியுரிமைச் சட்டம்.

குடியுரிமைச்  சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின்  குடியுரிமையை பெற்றுக் கொண்டதன் பேரில், இலங்கைக் குடியுரிமையை இழந்த  ஒருவருக்கு, அல்லது குடியுரிமைச்  சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின்  குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டின் பேரில், இலங்கைக்  குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் குடியுரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டிற்குச் சென்று கல்வித் தகைமையை வளர்த்துக்ெகாண்ட ஓர் இலங்கையர் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்ெகாண்டு அரசியலிலும் வேறு வேறு துறைகளிலும் கோலோச்ச முடிகிறது. அவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் உறுப்பினர்களாக முடிகிறது. அதேபோன்று வெளிநாட்டினர் ஒருவர் இலங்கையில் எந்தப் பணியிலும் ஈடுபட முடியாது என்றாலும், சொந்த நாட்டின் குடிமகன் ஒருவர் வெளிநாட்டுக் குடியுரிமையையும் இலங்கைக் குடியுரிமையையும் பெற்றுக்ெகாண்டிருந்தாலும் அரசியல் ஈடுபட முடியாது என்று சட்டத்தில் தடை விதிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

இருபதாவது திருத்தமானாலும்சரி, புதிய அரசியலமைப்பு என்றாலும் சரி, இந்த விடயங்களையும் ஆழமாகச் சிந்தித்து அதற்கேற்ற வகையில் சட்டத்தை வகுத்தால் நாட்டின் எதிர்காலம் சுபீட்சமாக அமைவதற்கு வழிகோலும்!

Comments