சாலை ஒழுக்கமுடைய சமூகத்தை உருவாக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சாலை ஒழுக்கமுடைய சமூகத்தை உருவாக்க வேண்டும்

 இலங்கையிலே பெண்கள் தொழிற்படையில் பங்குகொள்ளும் வீதம் குறைவாக உள்ளமைக்கு  பாதுகாப்பான நம்பகரமான போக்குவரத்து முறைமையொன்று இல்லாமை முக்கிய  காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவேதான் சிறந்த ஒரு போக்குவரத்து  முறைமை ஒரு நாட்டின் பொருளாதார              அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்றாகப்  பார்க்கப்படுகிறது 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வினைத்திறன்மிக்க உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக நேர்த்தியான வினைத்திறன் மிக்க ஒரு போக்குவரத்து முறைமை மிக அத்தியாவசியமான உட்கட்டமைப்பாகும். மூலப்பொருள்களை,  உற்பத்தித் தானங்களை நோக்கி நகர்த்தவும் முடிவுப்பொருள்களை சந்தைகளை நோக்கி நகர்த்தவும் சேவைகளை வினைத்திறனாக உரியகாலத்திற்கு வழங்கவும் பயணிகளையும்   ஊழியர்களையும் சேவை நிலையங்களுக்கு நேரகாலத்துடன் வசதியாக     உடல் உள அழுத்தங்களின்றி கொண்டு செல்லவும் நேரகாலத்திற்கு இயங்கும் சுத்தமான பாதுகாப்பான வசதியான உள்நாட்டுப் போக்குவரத்து முறைமையொன்று இன்றியமையாததாகும்.

இலங்கை போன்றதொரு சிறிய தீவில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆயினும் சிறிய தூரத்தைப் பயணிக்கவும் அதிகநேரம் எடுக்கும் அவலம் இற்றைவரை நிலவுகிறது. இன்றைய தேவைக்கு ஏற்ற முறையான போக்குவரத்து முறைமையொன்று உருவாக்கப்படாமையே இன்றைய அவல நிலைக்கான முக்கிய காரணமாகும்.  

சுத்தமான முறையான நேரசூசிக்கமைய இயங்கும் வசதியான பொதுப்போக்குவரத்து முறைமையொன்று கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலே அறிமுகப்படுத்தப்படுமாயின் தனிப்பட்ட மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டையும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்கலாம்.   

அதன்மூலம் நாளாந்தம் வாகன நெரிசலில் எரியும் எரிபொருளுக்கான செலவையும் விரயமாகும் வேலை மணித்தியாலங்களையும் எரிபொருள் தகனத்தினால் சுற்றாடலுக்கு ஏற்படும் மாசுபாட்டையும் அதேபோல் நெரிசல் காரணமாகப் பயணிகளுக்கும் வாகன சாரதிகளுக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படும் உடல் பாதிப்புகளையும் மன அழுத்தங்களையும் குறைக்கலாம்.

வாகன நெரிசலில் சிக்கி உரியநேரத்திற்கு வேலைக்கு வரமுடியாமல் பிந்திவரும் ஊழியர்களும் நெரிசல்மிகு பொதுப்போக்குவரத்தில் நசுங்கிப் பிதுங்கிக் கசங்கி நொந்து நூலாகி சேவைக்கு வருபவர்களும்  நல்ல மனநிலையில் தத்தமது உத்தியோகக் கருமங்களை வினைத்திறனாகச் செய்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அது உற்பத்தித் திறனைப் பாதித்து பொருளாதார வளர்ச்சிக்குக் குந்தகமாக மாறும்.

அதேபோல் ஒருநாள் வேலை நேரத்தின் பின்னர் அதே போக்குவரத்து நெரிசலில் சிக்கி அயர்ந்து தாமதமாக வீடு திரும்புபவர்களின் குடும்ப வாழ்க்கையும் நீண்டகாலப் பாதிப்புக்களைச் சந்திக்கும். குறிப்பாக இலங்கையிலே பெண்கள் தொழிற்படையில் பங்குகொள்ளும் வீதம் குறைவாக உள்ளமைக்கு பாதுகாப்பான நம்பகரமான போக்குவரத்து முறைமையொன்று இல்லாமை முக்கிய காரணியாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. எனவேதான் சிறந்த ஒரு போக்குவரத்து முறைமை ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.  

மேலை நாடுகளிலும் ஆசியாவில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் காணப்படும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்துச் சேவை அந்நாடுகளின் உற்பத்தித்திறன் அதிகரிப்பிற்கும் நேரமுகாமைத்துவ முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. காலையில் காரியாலயத்திற்கு வருகைதர முன்னர் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் போதே மடிக்கணணியில் அன்றைய நாளுக்குரிய வேலையின் கணிசமான பகுதியை செய்துவிடுபவர்களை நாம் காண்கிறோம். அந்நாடுகளில் காலம் என்பது ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதனை விரயம் செய்ய அவர்கள் விரும்புவதில்லை. ஒருசில நிமிடங்கள் ஒரு பேரூந்தோ அல்லது தொடரூந்தோ    தாமதமானாலும் கூட அது முக்கியமான ஒரு குறைபாடாகக் கருதி உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு முறையிடப்படுகிறது. இலங்கையிலோ எந்தஒரு நிகழ்வுக்கும் காலதாமதமாகச் செல்வது கெளரவத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.  

அப்போதுதான் திடீரென விழித்துக் கொண்டதுபோல் போக்குவரத்தை முன்னேற்றுவதற்காக அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருசில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்படுவதும் அதன் பின் மறந்துபோய் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுவதும் பழகிப்போய்விட்ட ஒரு சேதிதான்.

இப்போது கொழும்பு மற்றும் புறநகர்களின் சில வீதிகளில் மீண்டும் நடைமுறைக்கு வந்திருக்கின்ற வீதி ஒழுங்கை விதிகளும் இத்தகைய வகையினவாகும்.

முன்னர் பேருந்துகள் வீதியின் இடப்புற ஒழுங்கில் பயணிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் பாதையின் இரண்டு ஒழுங்குகளிலும் சமாந்தரமான ஓட்டப்பந்தயம் நடத்தும் பேரூந்துகளை காலி வீதியிலும் ஏனைய பிரதான வீதிகளிலும் காணமுடிந்தது. இப்போது முன்னர் பாதையின் இடதுபுறத்தில் வழங்கப்பட்டிருந்த பேருந்து முன்னுரிமை ஒழுங்கில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் செல்லப் பணிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் தகவல்கள் கசிகின்றன. சிலர் அதனை தனிப்பட்ட மோட்டார் வாகனங்களில் செல்லும் மேட்டுக்குடி வர்க்கத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சித்தரிக்க விரும்புகின்றனர்.  

உண்மையில் போக்குவரத்துச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி உரிய ஒழுங்கில் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் செல்லுமாயின் நெரிசலின் நேரத்தைக் குறைக்க முடியும். உரிய ஒழுங்கில் செல்லாமை ஒழுங்குகளை அடிக்கடி மாற்றி முந்திச் செல்ல முயற்சிக்கின்றமை சமிக்ஞை விளக்குகளின் முன்னே சென்று குவிகின்றமை வீதியின் குறுக்காக நிறுத்துகின்றமை போன்றவை நெரிசல் ஏற்படக் காரணமாகின்றன. முச்சக்கர வண்டிகள் பேருந்துக்கள்    மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களே நெரிசலை பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன. போட்டிக்கு ஓடும் பேருந்துகள் துண்டுகளை  பொறுக்குவதற்காக பேயோட்டம் ஓடுகின்றன. பின்னால் வரும் வாகனம் முந்திச் செல்லாதவாறு குறுக்காக நிறுத்திப் பொறுக்குகின்றன. அவற்றுக்குத் தரித்துச் செல்ல உரிய இடங்களும் முறையான நேரசூசிகைகளும் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் பெரிதாக எவரும் அலட்டிக்கொள்வதில்லை. 

முச்சக்கர வண்டிகளோ மிகச்சிறிய ஒரு இடம் கிடைத்தாலும் முன்னே சென்று செருகுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். அவ்வாறு முன்னே சென்று செருகுவதால் ஏற்படும் நெரிசலையும் காலதாமதத்தையும் ஒருபோதும் சிந்திப்பதில்லை. ஏதோ பிறவிப் பெருங்கடலைத் தாண்ட அவசரமாக ஓடுவதைப்போல உலகம் பிறந்தது எனக்காக இந்த வீதி இருப்பது என் ஒருவனுக்காக என்ற பாணியிலான   முச்சக்கர வண்டிகளின் ஓட்டம் நெரிசலுக்கு முக்கிய பங்களிப்பு செய்கின்றது. பேவ்மன்ட்களிலும் நேக்காக ஓடி சிக்சாக் ஆட்டம் காட்டும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் நெரிசலுக்கு முக்கிய பங்களிக்கும் மூன்றாவது வகை. ஏனைய வாகன வகையறாக்களை அதற்கடுத்தடுத்த கட்டங்களில் சேர்த்துக் கொள்ளலாம். 

முச்சக்கர வண்டிகள் உற்பத்தி செய்யப்படும் இந்தியாவின் டெல்லி நகரத்திலேயே முச்சக்கரவண்டிகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. இலங்கையிலும் கொழும்பு நகருக்குள் அவற்றைத் தடைசெய்தால் நிச்சயம் நெரிசல் குறைவதுடன் கொழும்பு நகரின் வளி மாசுபாட்டை கணிசமானளவு குறைக்கலாம். அவற்றுக்குப் பதிலாக சிறிய மோட்டார் வாகனங்களை பதிலீடு செய்ய ஊக்குவிக்கலாம். மோட்டார் சைக்கிள் சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படலாம்.  

இப்போது அறிமுகமாகியுள்ள இடப்பக்க ஒழுங்கில் செல்லும் நடைமுறையும் வரவேற்கத்தக்கது.

ஒரேயோரு பிரச்சினை யாதெனில் அந்த ஒழுங்கையில் பேயோட்டம் ஓடும் பேருந்துகளில் இருந்து இவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான். பேருந்துக்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தரிப்பிடத்தில் சரியாகத் தரித்துநின்று பயணிகளை ஏற்றுவதை காவல் துறையினர் முறையாகக் கண்காணிக்க வேண்டும். அத்தகைய நிறுத்தங்களில் ஒளிப்படக் கருவிகளை பொருத்துவதன் மூலம் விதிகளை மீறும் பேருந்துகளைத் தண்டிக்க முடியும். தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரிந்தால் சாரதிகளின் விதி மீறலைத் தடுக்கவும் முடியும்.  

எவ்வாறாயினும் வீதியின் முன்னால் ஒரு காவல்துறை அதிகாரி இருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று வாகன சாரதிகள் பொதுவாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். காவல் அதிகாரி இல்லாவிட்டால் எங்காவது புகுந்து வாகனங்கள் முன்னே சென்றுவிடும் என்பதே இதன் பொருள். ஆனால் சாலை ஒழுக்கமுடைய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தச் சிறிய நாட்டில் இதனைச் செய்ய முடியாதாயின் அதை ஒரு பலவீனமாகவே பார்க்கப்பட வேண்டும்.  சட்டங்கள் மூலம் அதனை முற்றாகச் செய்துவிட முடியாது. மனமாற்றமே இங்கு தேவைப்படுகிறது. ஒருபுறம் நாட்டில்  வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. ஆனால் பாதைகளின் அளவோ அவ்வாறு அதிகரிக்கப்பட முடியாதது. 

எனவே நகர்ப்புறங்களிலே பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தி விருத்தி செய்வதும் உப நகரங்களையும் கிராமங்களையும் விருத்தி செய்து பொருளாதார மற்றும் நிருவாக நடவடிக்கைகளைப் பன்முகப்படுத்துவதன் மூலமும் நகரங்களை நோக்கிய மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கலாம். நீண்டகால ரீதியில் நிலைபேறுடைய போக்குவரத்து முறையொன்றின் தேவை முன்னொருபோதுமில்லாதவாறு இப்போது உணரப்பட்டுள்ளது. அதனை சாலைவிதிக் கட்டுப்பாடுகள் மூலம் முற்றிலும் தீர்த்துவிட முடியாது.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

 

Comments