தோட்டங்களை தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்க அரசு இணங்கியுள்ளது | தினகரன் வாரமஞ்சரி

தோட்டங்களை தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்க அரசு இணங்கியுள்ளது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன்

உங்களைப் பற்றி அறிமுகம்?  

நான் வட்டகொடை தெற்கு மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த மருதபாண்டி லெட்சுமி அவர்களின் மூன்றாவது புதல்வன் எனது பிறப்பிடமும் வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர தோட்டம் ஆகும்.  

உங்களுடைய அரசியல் பிரவேசம்?  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 2002ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் கொத்மலை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதேசசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டேன். அதன்பின்னர் 2006ம் ஆண்டு நடைப்பெற்ற மத்திய மாகாண சபை தேர்தலிலே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆனேன். 2013ம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் அதே கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் கல்வி அமைச்சர் ஆனேன். நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். பல வருடங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களாக பதவி வகித்த நான் தற்போது அக்கட்சியின் நிதிச்செயலாளராகவும் பதவி வகிக்கின்றேன்.  

உங்களுடைய அரசியல் பிரவேசம் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கிலா ஆரம்பிக்கப்பட்டது? அல்லது எதேச்சையாகவா நீங்கள் அரசியலில் நுழைந்தீர்கள்?  

எனது அரசியல் பயணம் உயரிய நோக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயேதான் நான் அரசியலில் காலடி வைத்தேன். மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகள் செய்தமையினால்தான் இன்று மக்கள் பாராளுமன்றம் வரை அனுப்பியுள்ளார்கள். தொடர்ந்து மக்களுக்காகவே எனது சேவைகளை முன்னெடுப்பேன்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் உறவு முறை இருப்பதாக கூறுகின்றார்களே அது உண்மையா? இ.தொ.காவில் ஈர்ப்பு ஏற்பட காரணம் என்ன?  

அப்படி ஒரு உறவு முறை கிடையாது. எனது பரம்பரையினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள். நானும் எனது சிறுவயது முதலே இ.தொ.காவின் காங்கிரஸின் ஆதரவாளன். இ.தொ.காவின்் முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் துடி துடிப்பும் துணிச்சலும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இ.தொ.காவின் கொள்கைகளும் என்னை ஈர்த்தமையினாலேயே நான் இ.தொ.காவுடன் இணைந்து எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்தேன். இ.தொ.காவின் எம்மை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ வைத்த மாபெரும் ஸ்தாபனம் அதில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமைக் கொள்கின்றேன்.  

மலையக கல்வி அபிவிருத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பங்களிப்பு எப்படியிருக்கின்றது?  

மலையக கல்விக்கு வித்திட்டவர் இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான். அவரின் அயராத முயற்சியினால்தான் இன்று மலையகம் கல்வியில் உயர்வடைந்துள்ளது. அதேபோல் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அதனை இன்று முழு மலையகமே புரிந்துகொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மலையகத்திற்கு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்ட காலத்தை மாற்றியமைத்தவர் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான். இன்று எமது சமூகத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் பல்வேறு துறைசார் அறிவியலாளர்களாகவும் திகழ்கின்றனர். இன்று மலையக பாடசாலைகளிலே கல்வி பெறுபேறுகளை பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருக்கின்றது. அன்று எம்மிடம் இருந்தது ஆசிரியர் தொழில் மட்டுமே. 1982ம் 1983ம் ஆண்டுகளில் செளமியமூர்த்தி தொண்டமான் 500ஆசிரியர் நியமனங்களை மலையகத்திற்கு பெற்றுக்கொடுத்தார். அதில் 402நியமனங்கள் கணித பாடம் சித்தியடையாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு பல்வேறு ஆசிரியர் நியமனங்கள், ஏனைய அரச நியமனங்கள் மலையகத்திற்கு இ.தொ.காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்நியமனங்கள் அரசியல், கட்சி பேதமின்றி அனைவருக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 2007ம் ஆண்டு 3179ஆசிரியர் நியமனம் 2015ம் ஆண்டு உதவி ஆசிரியர் நியமனம் போன்றன இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இ.தொ.கா வின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஊடாக 2017ம் ஆண்டு மத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு மலையக கல்வி வளர்ச்சியில் இ.தொ.கா பெரும் பங்காற்றியுள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானால் பல அரச வேலை வாய்ப்புகள் மலையகத்திற்கென பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தபால் உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பல நியமனங்களை அடுக்கிகொண்டே போகலாம்.  

1970ஆண்டு தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் பாராளுமன்றம் சென்றார் அதன்பிறகே மலையகமெங்கும் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. சீடா நிறுவனத்தின் வேலைத்திட்டங்களை மலையகத்திற்கு கொண்டு வர செளமியமூர்த்தி தொண்டமான் பெரும்பாடுபட்டார். சீடா மலையகத்திற்கு வந்த பின்னரே மலையகத்தில் ஒழுங்கான பாடசாலை கட்டடங்களை காணமுடிந்தது. மலையக சமூகத்தோடு பெரும்பான்மை சமூகம் போட்டி போடுகின்ற அக்கால சூழ்நிலையிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை எமது சமூகத்திற்காக தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் செய்தார். தோட்டப் பாடசாலைகளாக இருந்த சகல பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்டு நாற்பது வருடங்களை கடந்துவிட்டன. பல்வேறு வெளிநாட்டு நிதி உதவியுடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் பெருவாரியாக வழங்கப்பட்டு தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இவ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 75வருட காலப் பகுதியில் மலையகத்தில் பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் இன்று கல்வி வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் இ.தொ.காவே. பெருந்தோட்ட பிள்ளைகளின் கல்விக்காக பங்காற்றிய பெருந்தலைவர்களாக அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுமே திகழ்கின்றார்கள்.  

அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் மலையகத்தில் பலமானதொரு அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?  

தொழிற்சங்க ரீதியில் மலையக மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை இ.தொ.கா செவ்வனே நிறைவேற்றி வருகின்றது. அதன்காரணமாகவே இ.தொ.கா அரசாங்கத்தோடு இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி இவ் இயக்கத்தை எவராலும் அழித்துவிட முடியாது. எமது அரசியல் தலைவர்கள் அனைவரிடமும் இ.தொ.கா மீதும் அதன் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மீதும் மிக உயர்ந்த நன்மதிப்பு உள்ளது. காங்கிரசின் முடிவுகள் அனைத்தும் கொள்கை ரீதியானதாகவும், மக்கள் நலன் சார்ந்ததாகவும் இருப்பதே இதற்குக் காரணம். எவரிடமும் தலைநிமிர்ந்து தைரியமாக பேசக்கூடிய வல்லமை காங்கிரசிற்கு மட்டுமே இருக்கிறது. இலங்கை தொழிலாளா் காங்கிரஸினால் மட்டுமே மலையக மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இ.தொ.கா.வின் சேவை மலையக மக்களுக்கு என்றும் தேவை. எனவே எங்கள் மக்கள் பணி தொடரும். நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.  

தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் இ.தொ.கா என்ற மாபெரும் ஸ்தாபனத்தை கட்டுக்கோப்புடன் கட்டிக்காத்தார். அவரின் இழப்பிற்கு பின்னர் அதன் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் கட்டுக்கோப்புடன் செயற்படுமா?  

நிச்சயமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு ஆலமரம். அதன் கிளைகள் உடையலாம் ஆனால் மரம் சாயப்போவதில்லை. ஒரு கிளை உடைந்தாலும் இன்னொரு கிளை முளைக்கும். இது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு. நாங்கள் அனைவருமே ஸ்தாபகத் தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் வழிநடத்தி அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பாசறையில் வளர்ந்தவர்களே. காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் இங்கு சில சர்ச்சைகள் உருவாகலாம். ஆனால் பிளவுகள் இல்லை. அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருந்தபோது எப்படி கட்டுக்கோப்புடன் இருந்ததோ அதேபோலவே இந்த இயக்கம் நீடித்து நிற்கும்.  

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளவு உயர்வு நிச்சயமாகக் கிடைக்குமா?  

நிச்சயமாக கிடைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.  

அமரர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து செயற்பட்ட நீங்கள் தற்போது நீங்கள் புதிய பொதுச் செயலாளருடன் செயல்படுகிறீர்கள். இந்த இருவருக்கும் இடையே நீங்கள் அவதானிக்கின்ற வித்தியாசங்கள் என்ன? உங்களுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கிடையிலான உறவு எப்படியிருக்கின்றது?  

எங்களுடைய நட்பு சிறப்பாகவே இருக்கின்றது. எனக்கும் ஆறுமுகன் தொண்டமான் ஐயாவுக்கும் இடையே எவ்வாறு ஒரு நட்பு இருந்ததோ அதேபோல பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் எனக்கும் இடையே அதே நட்பு நிலவுகிறது. அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா எப்போதுமே துடிப்பாகவே இருப்பார். எந்த விடயத்தையும் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று செயற்படுவார். துடிப்புடனும் துணிச்சலுடனும சவால்களை எதிர்கொள்வார். அவருடைய துணிச்சலை எண்ணி நான் வியந்து போயிருக்கிறேன்!

ஒரு சரியான முடிவை சரியான நேரத்தில் மலையக சமூகத்துக்காக எடுக்கும் ஒரு துணிச்சல் மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா. அதேபோல அவருடைய புதல்வாரன ஜீவன் தொண்டமானும் அவரை போலவே மிகவும் துடி துடிப்பாகவே செயற்படுகிறார். எந்த விடயத்திற்கும் உடனே தீர்வு காண வேண்டும் என்ற சுறு சுறுப்புடன் பணியாற்றி வருகிறார்.  

மலையக மக்களுக்காக உங்களால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் யாவை?  

அமரர் ஆறுமுகன் தொண்டமான் நினைத்ததுபோலவே பெருந்தோட்டங்கள் கிராமங்களாக உருவாக்கப்படவுள்ளன. லயன் முறை முற்றிலும் நீங்க வேண்டும். தற்போது 28பெருந்தோட்ட கம்பனிகள் இருக்கின்றன. நட்டத்தில் இயங்கும் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம். அத்தோட்டங்களை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசாங்கமும் உடன்பட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மலையகத்தை பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்துடன் இ.தொ.கா மட்டுமேத உள்ளது. எனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயமாக நிறை வேற்றுவோம்.  

பெருந்தோட்ட வீடமைப்பு திட்டங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுடன் மட்டுப்படுத்தப்படுமா?  

நிச்சயமாக இல்லை. அமரர் ஆறுமுகன் தொண்டமான். ஒரு தோட்டத்திற்கு 100வீடுகள் கட்டப்படுமாயின் அதே தோட்டத்தில் பிறந்து வளர்ந்து ஆசிரியராகவும் அரசு உத்தியோகத்தவராகவும் அல்லது பெருந்தோட்ட உத்தியோகத்தராகவும் பணியாற்றுவோர் அனைவரையும் இந்த வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்க வேண்மும் என நினைத்திருந்தார். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம். கடந்த அரசாங்கத்தில் இந்த வீடமைப்பு திட்டங்கள் முறையாக முன்னெடுக்கவில்லை. அதனை இப்போது பேசி எதுவும் ஆகப்போவதில்லை. எனவே நாங்கள் வீடமைப்பு திட்டங்களை முறையாக ஆரம்பித்துள்ளோம். அமரர் ஆறுமுகன் தொண்டமான் கூறியதைப் போலவே லயன்களை இடித்து அவ்விடங்களிலேயே வீடுகளை நிர்மாணிப்போம். மாடி வீடு என்ற போலி கதைகளை மக்கள் நம்பக் கூடாது. வீடுகளையே நாம் அமைப்போம். கூரைக்கு பதிலாக கொங்க்றீட் போடப்பட்டிருக்கும் மிக விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காண முடியும்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சவால்கள் யாவை?

மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கம். அரசாங்கத்தினால் ஏனைய சமூகங்களுக்கு என்னென்ன நல்ல திட்டங்கள் கிடைக்கின்றனவோ அவற்றை எமது சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கமும். இதுவே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நோக்கமாகவும் இருந்தது. ஏனைய கட்சிகளுடன் எமக்கு எந்தவித சவாலும் கிடையாது. இது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு.  

வடக்கு கிழக்கு கட்சிகள் அடிப்படையான விடயங்களில் ஒன்றிணைய வேண்டும் என சம்பந்தன் கூறுகின்றார் அதேபோல மலையக கட்சிகளும் அவ்வாறு குரல் கொடுப்பது நல்லது என நீங்கள் நினைக்கின்றீர்களா?  

அதனை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்காக மட்டும் சேரும் கூட்டணிகளாக நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நாம் ஒன்று சேருவோமாயின் என்றுமே பிரிவு ஏற்படாத ஒரு கூட்டணியாக அது இருக்க வேண்டும். கூட்டணியாக ஆரம்பித்து நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம் என்று போலியாகக் காட்டாமல், தேர்தல் காலங்களில் பிரிந்திருந்தாலும் எமது மக்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போமாயின் அது வரவேற்கத்தக்கது. வடக்கு கிழக்காக இருந்தாலும் சரி மலையகமாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம்தான். பேச்சளவில் இல்லாமல் செயற்பாட்டுக்கு வருவதே எமது வெற்றி.  

புதிய அரசியலமைப்பு நிபுணர்குழுவுக்கு இந்திய வம்சாவளியினர் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?  

இந்தியவம்சாவளியினர் சார்பாக ஒருவரை நாங்கள் நியமித்துள்ளோம். நானும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து இந்திய வம்சாவளியினர் சார்பாக ஒருவரை நியமித்துள்ளோம்.   மாடு அறுத்தல் தடை சட்டம் கொண்டுவரப்படும் என்ற அரசின் கூற்றுக்குக்கு எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது எதேச்சதிகாரமான முடிவாக உங்களுக்குத் தோன்றுகின்றதா? ஒரு மிருகத்தை மட்டும் மத ரீதியான கண்ணோட்டத்துடன் பார்ப்பதும் அதை ஒரு பண்ணை விலங்காக,வர்த்தகமாக பார்ப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டல்லவா? மலையகத்தில் பலர் கால்நடை வளர்ப்பில் உள்ளதால் இந்த கேள்வியை உங்களிடம் முன்வைக்கின்றேன்.  

அரசாங்கத்தினால் இந்த சட்டம் நிறைவேற்றப்படும்போது பார்ப்போம். நாம் சிறுபான்மை மக்கள். இது சிங்கள மக்களை பெரும்பான்மையினமாகக் கொண்ட நாடு. நாட்டை ஆள்பவர்களிடம் நாம் பங்காளிகளாகவே இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

தலவாக்கலை
பி.கேதீஸ்   

Comments