கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

இலங்கையின் ஓர் ஊரும், பெயரும் இன மத பேதமின்றி இன்று அனைவராலும் பேசுபொருள்.  

தேனகமாம் மட்டக்களப்பு மாநகருக்கு அடுத்து முஸ்லிம் சமூகத்தார் செறிந்து வாழும் ‘காத்தான்குடி’ அது. ‘காத்த நகர்’ என்று செல்லமாக அழைப்போர் உள்ளனர். எனக்கும் இந்தப் பெயரே விருப்பு!  

உண்மையில், இப்பொழுது அது காத்த நகர் தானா? காக்கும் நகர் தானா?  

தறுதலை ஸஹ்ரான் என்பானைப் பெற்றெடுத்த மண்ணாக அடையாளமாகிப்போன அது மிக அநியாயமாக, ‘வஹ் சைத்தானால் ஆட் கொண்டு இலங்கையையே ‘ஜிஹாத்’ ஹாபிஸ் காண் வைத்துப் புரட்டியெடுக்கப்போகிற ஊர் எனச் சர்வ சாதாரணமாகப் பெரும்பான்மையினர், அதுவும் தென்னிலங்கை அப்பாவிகள் அச்சப்படுகிற நிலைமையை உருவாக்கி விட்டது.  

அந்த 2019ஏப்ரல் 21க்குப் பிறகு, இன்று ஓராண்டும் ஐந்து மாதங்களும் கடந்துவிட்ட நிலையில் ‘காத்த நகர்” என்கிற காத்தான்குடி காக்கும் நிலையிலிருந்து நிலை தடுமாறி இன்னொரு அபாயத்தில் அல்லல்பட நாளும் நேரமும் பார்த்து விட்டது பார்த்து.  

அந்த மண்ணின் ஒரு நல்ல கவிமணியாகவும், ஓர் அரசியல் சிந்தனையாளராகவும், சமூக சேவையில் சகட்டு மேனிக்குப் பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்தவராகவும், கிழக்கின் சிறந்ததொரு ஊடகவியலாளருமாகவும் திகழ்கின்ற, ‘தினகரன் 'லைட் ரீடிங்’ ஆரம்பகால அதிதீவிர வாசகனுமான டி.எல். ஜௌபர்கான், முகநூல் பக்கத்தில் பின் காணப்படும் பதிவைத் தந்து பதைபதைக்க வைத்துள்ளார்.  

“இன்று (11/09/2020) காலை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்திக்க அவர் அலுவலகத்தில் நுழைகிறேன்.  

சிறு குற்றப் பிரிவில் எனக்குத் தெரிந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரை காவல் நிலையத்தில் காண்பதரிது. நல்ல பண்பான மனிதர். “ஆச்சரியத்தை அள்ளிக் குடித்தவனாக அவர் அருகில் சென்று, “ஏன் இங்கே வந்தீர்கள்” எனக் கேட்க.  

“அத ஏன் கேக்குறிங்க... எண்ட மகனொருவன் படாதபாடு படுத்துறான்” எனச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, அவரது கலக்கத்தின் அல்லது காயப்படுத்தலின் தெளிவை என்மன்சு உள்வாங்கிக் கொண்டது.  

“எந்த நேரமும் படுத்துக்கிட்டே இருக்கான். கதைக்கிறானுமில்லே... தண்ணி கேட்டு எப்பப்பார்த்தாலும் நச்சரிக்கிறான்.  தண்ணி  எடுத்துத் தலையில துப்புறான்...”  

-அவர் முடிப்பதற்குள், “ஐஸ் பாவனையாளரின் செயற்பாடுகள் இவை என்பதை என் மனம் சொல்லிக் கொண்டது. (மேலும், ஐஸ் பாவனையாளர்களுக்கு ஏசியும் தேவையாம்.  

கண்களால் ஜாடை காட்டினார். பயந்த நிலையில் மெதுவாகச் சொன்னார்! இவர் தான் மகன்!”  

அவனை நன்றாகப் பார்க்க முன்னயே அவனது தேகம் சொன்னது, ‘போதை பாவனைக்காரன்' என்று!  

“என்ன செய்ய இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்றபோது, பொலிஸ் அழைத்து வரச் சொன்னதாகவும், எங்கேயோ இவரை அனுப்பப் போவதாகவும் தெரிவித்த போது நான் புரிந்து கொண்டேன்.  

போதைப் பாவனையாளர்களை ஆற்றுப்படுத்துகின்ற (கவுன்சிலிங்) முகாமிற்கு அனுப்பப் போகிறார்கள் என்பது!  

ஒரு தந்தையே தன் மகனை பொலிஸில் குற்றவாளியாக ஒப்படைக்க வந்திருக்கும் சகிக்க முடியாத நிகழ்வைக் கண்ட கனத்த இதயத்துடன் புனித ஜும்ஆத் தொழுகைக்கு விழைகிறேன். தொழுது விட்டுத் துஆக் கேட்க....!  

அபிமானி ஜௌபர்கான் இடுகைக்கு இருவர் வழங்கியுள்ள தகவல்களும் படு பயங்கரமாக இருக்கின்றன.  

மன்சூர் மரைக்கார் பதிவிட்டுள்ளார் இவ்வாறு   "இவ் வியாபாரத்தைச் செய்பவர்களில் அதிகம் எம்மவர்களே! எமது எதிர்கால இளைஞர் சமுதாயம் படுகுழியில் விழப்போகிறது என்பதையும், தங்கள் குடும்ப உறவுகளும் விழுவார்கள் என்பதையும் உணர்ந்த பின்னரே ஒரு வழி பிறக்கும்.”  

ஜௌபர் முஹம்மது என்பாரின் பதிவு இப்படி "இளைஞன் ஒருவனது தொல்லை காரணமாகக் கடந்த ஆறுமாதங்களாக இரு குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில் பாதிக்கப்பட்டதில் என் குடும்பமும் ஒன்று!”  

ஆன்மிகச் சிந்தனைகளும், செயல்பாடுகளும், கலை இலக்கிய ஆற்றுகைகளும் கட்டுக்கடங்காமல் செழித்திருக்கும் ஊரில் நடப்பது என்ன?

உலகளாவிய தகவலொன்றும் எனக்குக் கடந்த  வௌ்ளியில் (18.09.2020) கிடைத்தது. உலகம் முழுமையிலும் இருபது நாடுகள் போதைப்பொருள் உற்பத்தியிலேயே மூழ்கியுள்ளதாம். 'பெரு' என்ற நாடு முதலிடமும் 'இந்தியா' இரண்டாம் இடமுமாம்! ஆக, வெகு லேசாகக் கடல் கடந்து காத்தான்குடி போன்ற நகரங்களில் ஊடுருவுவது கஷ்டமில்லை! நாம் தான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நம் ஆன்மீகம் கைகொடுக்கக் கையேந்த வேண்டும்.

இனிப்பு

என் வயது வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு கால கட்டங்களிலும் தமிழ்த் திரையில் எனக்குப் பிடித்தவர்கள் என்று விரல்விட்டெண்ணக் கூடிய அளவுக்கு நடிக – நடிகையர் இருக்கிறார்கள். அபிமானிகளுக்கும் அவ்வாறே இருக்கும்.  

இன்றையக் காலகட்டத்தில் நான் முதல் நம்பர் நடிகராக வரித்திருப்பது ஒரு ‘ராஜ்கிரண்’ தான்!  

சேரனின் ‘தவமாய்த் தவமிருந்து’ அப்படி ஆக்கியது. இன்றைக்கு நானொரு வயதான தந்தை! அவரும் அப்படியே!  

எனது முகநூல் பக்கத்தில் அவரும் ஒருவராக வலம் வருவது பெரும் பாக்கியம், பெருமை.  

கடந்த 10ல் முகநூல்  பார்த்துக் கொண்டிருந்த போது அவரின் ஒரு பதிவு பரவசப்படுத்தியது. அத்தோடு எந்த நடிகராவது இப்படி வெளிப்படையாக, தான் கடந்து வந்த வாழ்க்கைப்பாதையை வெளிச்சமிடுவாரா என வியப்பிலும் வியப்பு.  

ரசித்து பிரமிக்கச் செய்த அவரது பக்கப் பதிவை இனிப்பாக வழங்கிப் பெருமைப்படுகிறேன்.  

* என் தந்தையாரின் மூதாதையர் வழியால் நான் மறவன்.  

* என் தாயாரின் மூதாதையர் வழியால் நான் மீனவன்.  

* பிறப்பால் நான் இஸ்லாமியன்.  

* என் அன்னை ஊட்டிய பாலினால் நான் தமிழன்.  

* இனத்தால் ஒரு திராவிடன்.  

* தேசத்தால் ஓர் இந்தியன்.  

* தினமும் குறைந்தது ஐந்து வேளை இரு கரங்கள் ஏந்திக் கெஞ்சுவதால் இறைவன் சந்நிதியில் பிச்சைக்காரன்.  

* பதினாறு வயதில் சென்னை வந்து, ஒரு திரைப்பட விநியோக நிறுவனத்தில் தினக்கூலி 4ரூபாய் 50பைசாவுக்குப் படப்பெட்டிகளை சுமந்து ஊர் ஊராகத் தியேட்டர்களுக்குக் கொண்டு சேர்த்ததால்,  

* நான் ‘படத்துக்காரன்’. 

* அதன் பிறகு விநியோகஸ்தன். 

* அதன் பிறகு தயாரிப்பாளன்.  

* அப்புறம் நடிகன் இயக்குநன்.  

* ஊரில் முஹியத்தீன் அப்துல் காதர்.  

* தமிழகத் திரைத்துறையில்

   ‘ராஜ் கிரண்’!  

இப்படி எத்தனையோ பெயர் நாமங்கள் என் உடலுக்கு!  

என் ஆத்மாவுக்கு என்ன பெயர்?  

தெரியவில்லையே, தேடிக் கொண்டிருக்கிறேனே...!  

-இவ்வாறு அருமை அருமையாக தன்னை வெளிச்சமிட்டுக் கொண்டுள்ள ‘ராஜ்கிரண்’ ஒன்றைத் தவறவிட்டு விட்டார்.  

அதை நான் வெளிச்சமிடுகின்றேன்.  

ஆட்சேபிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பில்...

தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் திருத்தலத்திற்கு சுமார் 62கி.மீ. தூரம் முன்னாலேயே இராமநாதபுர சமஸ்தானத்திலிருந்து பிரிந்து போகிறது ஓர் ஊர். ‘கீழக்கரை’ என்பார்கள். ‘கீர்த்திமிகு கீழக்கரை’ என்றே நான் சொல்வேன். கொடைவள்ளல் சீதக்காதி பிறந்த ஊர். இங்கேதான் ‘ராஜ்கிரணும்’ பிறந்தார். கிழக்குத்தெரு அவர் பிறப்பிடம்.  

1955- முதல் 1966வரை அவர் கற்ற இரு கல்விக் கூடங்கள், சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியும், ஹமீதிய்யா மேல் நிலைப்பள்ளியும், (இதன் நிறுவனர் பற்றிய ஒரு வரலாற்று நூலை நான் வழங்கியுள்ளேன் என்பது இடைத்தகவல்) பாடசாலைகளில் செல்வம் அய்யா, ஜோர்ஜ் அய்யா இரு தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டலில் அறிவை வளர்த்துக் கொண்டவர்.

தமிழ்த் திரையுலகம் தவமாய் தவமிருந்து, பெற்ற இந்த நடிகமணி நீடுவாழ்ந்திட படைத்தவன் பாக்கியம் செய்திடுவானாக! அத்தோடு, அவர் தேடும் ஆத்மாவின் பெயரையும் அடையாளப்படுத்துவானாகவும், வேண்டுதல்கள்.

Comments