அரைத்த மாவையே அரைக்கிறதா தமிழ்த் தரப்பு? | தினகரன் வாரமஞ்சரி

அரைத்த மாவையே அரைக்கிறதா தமிழ்த் தரப்பு?

“புதிய அரசியல் அமைப்பில் அரசியல் தீர்வு அவசியம். சர்வதேசத்தின் மேற்பார்வை அவசியம்” என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் சுமந்திரன் வலியுறுத்தியிருக்கிறார். இது ஒன்றும் புதிய சங்கதியல்ல. ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த வெளிநாடுகளின் பிரதிநிதிகள், தூதுவர்களுடனான சந்திப்புகளின்போதும் இதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கூறி வந்திருக்கிறது. இனியும் இதையே கூறப்போகிறது. எவ்வளவு காலத்துக்கு இதை, இப்படியே கூட்டமைப்புக் கூறிக்கொண்டிருக்கப்போகிறது என்று நீங்கள் சலிப்போடு கேட்கக் கூடும். கூட்டமைப்பு மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் இதையே – இந்த வழிமுறையையே பின்பற்றப்போகின்றன. இதற்கு மாறான சிந்தனையும் மாற்றுப் பொறிமுறையும் இவற்றிடம் உருவாகும் வரையில் இதுதான் நடக்கும். 

“இனப்பிரச்சினைக்கான தீர்வைக்குறித்துச் சரியான – நியாயமான சிந்தனை அரசாங்கத்திடம் (தற்போதுள்ள அரசாங்கத்திடம் மட்டுமல்ல, முன்பு இருந்த அரசாங்கங்களிடமும் இனி அமையப்போகும் அரசாங்கத்திடமும்) உருவாகாத வரையில் வெளியுலகத்திடம் நியாயம் கோருவதைத் தவிர வேறு வழியென்ன? உள்வீட்டில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், வெளித்தரப்பிடம்தானே நியாயத்தைக் கேட்க வேண்டும்?” என்று பதிலுக்கு நீங்கள் கூறக்கூடும். 

மேலோட்டமாகப் பார்த்தால் இதைத் தவிர்க்க முடியாது. இது சரியான நியாயம் என்றே தோன்றும். ஆனால், அரசியல் நடைமுறையில், யதார்த்தச் சூழலில் இது தவறானது. ஏனென்றால் இதன் விளைபயன்கள் நமக்குச் சாதகமாக அமைந்ததும் இல்லை. இனி அமையப்போவதுமில்லை. மாறாக எதிர்விளைவுகளை – பாதிப்புகளையே உண்டாக்கும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. நம்முடைய வரலாற்றுப் படிப்பினைகளும் இதையே சொல்கின்றன. 

இதுவரையிலான காலப்பகுதியில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உச்சமான பங்களிப்பை வழங்கியது அல்லது ஆதரவை வழங்கியது இந்தியாவே. அதிலும் தமிழ்த்தரப்பின் சார்பாக நின்று இந்தியா இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இறுதி விளைவாக இந்தியா தமிழ்த்தரப்பிடமிருந்து கசப்பான அனுபவத்தையே பெற்றது. இப்பொழுது தமிழ்த்தரப்பையும் விட அரசாங்கத்துடனேயே  இந்தியாவின் உறவு வலுவடைந்திருக்கிறது. இது தமிழ்த்தரப்பின் தவறன்றி வேறென்ன. இதற்குத் தனியே புலிகளை மட்டும் குற்றம் சாட்டி விட்டு ஏனையோர் தப்பி விட முடியாது. புலிகள் இல்லாதிருக்கும் 2009க்குப் பிந்திய சூழலிலும் இந்தியாவை வென்றெடுக்கக் கூடிய அரசியல் வேலைத்திட்டம் எதையும் தமிழ்த்தரப்புக் காத்திரமாக முன்னெடுக்கவில்லை. 

இன்னொரு கட்டத்தில் நோர்வே ஊடாக மேற்குலகம் இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்காக பங்களிப்புகளில் ஈடுபட்டதுண்டு. அதுவும் தமிழ்த்தரப்புக்கே பாதிப்பை உண்டாக்கியதாக முடிவடைந்தது. பதிலாகக் கொழும்பே இன்று அதன் பயன்களைப் பெற்றிருக்கிறது. இப்பொழுது சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த எரிக் சூல்கெய்ம் தமிழர்களால் சந்தேகிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதுவும் இன்னொரு கசப்பான வளையத்தையே தமிழ்த்தரப்புக்கு உருவாக்கப்போகிறது. அதாவது இந்தப் போக்கு நல்ல சமிக்ஞையல்ல. 

வெளியுலகத்தின் மூன்றாவது கட்ட அனுசரணை என்பது கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் இருந்தது. அது வெளிப்படையும் மறைமுகத்தன்மையும் இணைந்த ஆதரவு. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது பொறுப்புக்கூறுதல், பகை மறப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் வழியாகவே சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தியது வெளியுலகம். மட்டுமல்ல, அதற்கென நிதி மற்றும் உலகளாவிய கற்கை என அனைத்து வகைப் பங்களிப்புகளையும் செய்திருந்தது. இதிலும் தமிழ்த்தரப்புக்கே கூடுதலான நன்மைகளிருந்தன.  

ஆனாலும் இதை தமிழ்த்தரப்பு எந்தளவுக்குச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பதிலாக அரசாங்கமே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டு, குற்றம் சாட்டிக் கொண்டு இதையும் பொறுப்பற்றுக் கடந்து செல்ல முற்பட்டது தமிழ்த்தரப்பு. இனப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்காதிருக்கும் அரசாங்கத்திடமிருந்து இந்த வேலைகள் எல்லாம் நடக்கும், அப்படி நடக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இவற்றை தமிழ்த்தரப்புக் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 

விளைவு இதுவும் துயரத்தோடு கடந்து போனது.  

இப்படி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வெளித்தரப்பின் ஆதரவும் பங்களிப்பும் தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது. அதை இலங்கைச் சமூகங்கள் தொடர்ச்சியாகவே தவறாகக் கையாண்டே வந்திருக்கின்றன. அரசுக்கும் இதில் பங்குண்டு. தமிழ்த்தரப்புக்கும் பங்குண்டு. தமிழ்த்தரப்பின் தவறுகளே இதில் கூடுதலானது என்று கூறவேண்டும். ஏனெனில் இனப்பிரச்சினையினால் கூடுதலான பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருப்பது, தமிழ்த்தரப்பே. அதோடு இன்னொரு சாரார் சொல்வதைப்போல, அரசற்ற தரப்பினராகவும் தமிழர்கள் உள்ளனர். ஆகவே இந்தப் பாதிப்பிலிருந்து மீள வேண்டும். அதற்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளை உச்சமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிரத்தை தமிழ்த்தரப்புக்கு இருக்க வேண்டும். 

ஆனால், இந்தச் சிரத்தை இல்லாமல் போனது மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்க முன்வந்த தரப்புகளை எதிர்நிலைக்குத் தள்ளியதே நடந்தது. இப்படிச் செய்து விட்டு வெளியுலகின் (சர்வதேச சமூகத்தின்) ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்? 

இதில் தமிழ்த்தரப்பு இன்னும் சற்று அழுத்தமாகக் கவனிக்க வேண்டியது, முதலில் இருந்த அளவுக்கு வெளியுலகத்தின் கவனம் இந்தப் பிரச்சினையில் இல்லை என்பதை. அத்துடன் 1980களில் இந்தியா கொண்டிருந்த கரிசனையின் அளவுக்கு அதற்குப் பிறகு நிகழ்ந்த பங்களிப்புகளில் நேரடித்தன்மையோ அழுத்த நிலையோ இல்லை. 

இனி இது வரவரக் குறைவடைந்தே செல்லும். அகச்சூழலும் புறநிலைகளும் இதை நன்றாகத் தெளிவுறுத்துகின்றன. 

ஆனால் இதை மதிப்பிடாமல் அல்லது விளங்கியும் விளங்காததைப்போல தமிழ்த்தரப்பு நடந்து கொண்டிருக்கிறது. எளிய உதாரணம், 2009க்குப் பிறகு வெளிநாடுகளின் தலைவர்கள், தூதுவர்கள், பிரதானிகள் எனப் பல தரப்புகளோடு பல சந்திப்புகளை கூட்டமைப்பும் பிற தமிழ்த்தரப்புப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசியுள்ளனர். அரசாங்கத்தின் போக்கைப் பற்றி முறையிட்டிருக்கின்றனர். புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தரப்பினர்களின் முயற்சிகள் இந்த வகையில் நடந்திருக்கின்றன. இதெல்லாம் எந்தளவுக்கு தமிழ் இராஜதந்திரமாக மாற்றமடைந்துள்ளது? எந்தளவுக்குத் தமிழ்ச்சமூகத்துக்கு நற்பயன்களை விளைத்திருக்கின்றன? ஒரு சிறிய அளவுக்கேனும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளை உண்டாக்கியிருக்கிறதா? அப்படியென்றால் அது எது? அல்லது எந்த வகையில் அது அமைந்திருக்கிறது? 

இவ்வளவுக்கும் இந்தச் சக்திகளின் ஒரே அரசியல் வேலைத்திட்டம் இது மட்டும்தான். ஆனால், இதைக்கூட இவை ஒழுங்காக, வெற்றிகரமாகச் செய்யவில்லை. இது குற்றச்சாட்டல்ல. உண்மை.  

ஆகவே எதைப்பற்றிய சுயமதிப்பீடும் இல்லாமல், அரசியல் சிரத்தையில்லாமல் தமிழ் அரசியல் மேற்கொள்ளப்படுகிறது என்றே நாம் சொல்ல வேண்டும். பழகியதொரு ஆரம்ப வாய்ப்பாட்டைப்போல திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்பத்திரும்ப ஒரே சரக்கை திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கிறோமா? என்றே கேட்கத் தோன்றுகிறது. 

வெளித்தரப்பின் அனுசரணையையோ அல்லது பங்களிப்பையோ நாம் பெற வேண்டும் என்றால், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் நாம் கேட்க வேண்டும். அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அதில் அவர்களுடைய நலன் எவ்வளவிருக்கிறது? நமக்கான நலன் எவ்வளவுண்டு? பொது நலன் எத்தகையது? என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஆகவே, முதலில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக்கேட்பது அவசியம். அது அவர்களை நம்பக்கமாகத் திருப்புவதற்கு உதவும். 

அவர்கள் சொல்வதில் நம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியவற்றை உடனடியாகவே வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அது அவர்களுக்கு நம்மீதான கவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். நம்மை நோக்கி அவர்களை வரவைக்கும். நாம் மற்றவர்களை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். 

ஆனால், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நமக்குச் சொல்லப்படுவதையெல்லாம் கவனத்திற் கொள்வதே இல்லை.

அல்லது அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறோம். அல்லது ஏதாவது சாட்டுப்போக்குகளைச்சொல்லி அரசின் மீது எல்லாவற்றுக்கும் பழிசுமத்துகிறோம். நமது பொறுப்புப் பற்றியும் பங்களிப்புப் பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை. 

இது நம்மீதான வெளியாரின் நம்பிக்கையைச் சிதைக்கும். நம்மைப் பற்றி தவறான அபிப்பிராயத்தையே உருவாக்கும். இதனால்தான் சந்திக்கின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமெல்லாம் தமிழ்த்தலைவர்கள் எவ்வளவோ முறைப்பாடுகளைச் செய்தாலும், பார்க்கலாம் என்ற தலையை ஆட்டிப் புன்னகைக்கிறார்களே தவிர, ஒரு சிறிய அளவிலான நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை. ஒரு சிறிய அழுத்தத்தைக் கூட அரசுக்கோ சிங்களத் தரப்புக்கோ உண்டாக்கவில்லை. 

இருந்தும் நமது தலைவர்கள் தங்களுடைய முறைப்பாட்டை முடிக்கவில்லை. தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். எப்படித்தான் அழுதுபுரண்டாலும் அரசியலில் செயற்பாடே விளைவுகளை உண்டாக்கும். செயற்படாத அரசியல் உருப்படாது. 

இதேவேளை தொடர்ந்தும் வெளிச்சக்திகளிடமே இனப்பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், அது சிங்கள மக்களிடமிருந்து தமிழ்த் தரப்பை மேலும் மேலும் தூரத்துக்கே தள்ளும். இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற உணர்வே இந்தியாவைக் குறித்து சிங்கள மக்கள் அச்சமடையக் காரணம். அப்படித்தான் அவர்கள் நோர்வேயையும் பார்த்தனர். எனவே வெளிச்சக்திகளை நெருங்க நெருங்க சிங்கள மக்கள் விலகிவிலகித் தூரமாகிக் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களைத் தூரத்தில் வைத்துக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவே முடியாது. ஏனென்றால், யாரோடு பேசினாலும் இறுதியில் அரசாங்கத்தோடும் சிங்கள மக்களோடும்தான் தீர்வைக் காண முடியும். 

எனவே முதலில் பேச வேண்டியது சிங்கள மக்களோடே. அந்தத் தரப்புகளோடு. அதைச் செய்யாமல் உலகமெல்லாம் ஓடியோடிப் பேசினாலும் ஆகப்போவதொன்றுமில்லை. யாரையும் தேடித்தேடிப் போய் கெஞ்சிக் கூத்தாடினாலும் நடப்பது எதுவுமில்லை. வேண்டுமால் ஊடகங்களுக்குச் செய்திகளை மட்டும் வழங்கலாம். நமது திருப்திக்காக ஏதோ மற்றவர்களுக்குச் சொல்லக் கூடியதைச் சொல்லிவிட்டோம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். 

இதெல்லாம் எரியும் பிரச்சினைக்கு தீர்வாகாது. நெருப்பைத் தணிக்காது.   

கருணாகரன் 

Comments