தனது நிலையை தெளிவுபடுத்திய சீனா | தினகரன் வாரமஞ்சரி

தனது நிலையை தெளிவுபடுத்திய சீனா

சீனாவின் உலகளாவிய அரசியல் தலையீடு அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அமெரிக்காவுடனான அனைத்து மோதலுக்கும் நியாயத்தை வெளிப்படுத்தும் சீனா  ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையிலும் அமெரிக்காவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் போக்கினை வெளிப்படுத்திய இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதில் அமெரிக்கா வழமையான கொரோனாவை பரவலடையச் செய்தது சீனா தான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன் சீன ஜனாதிபதி ஒரு நாடு உலகத்தை ஆதிக்கம் செய்வதனையும் பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது அரசியல் வைரஸை ஐ.நா சபைவரையும் பரப்புவதாகவும் குற்றம் சாட்டினார். உலகில் எந்தவொரு நாட்டுடனும் சீனா போர் செய்யும் எண்ணம் இல்லை. ஆனால் சில நாடுகள் மோதல்களை தூண்ட முற்படுவதாக குற்றம் சாட்டிய ஜின் இவ்வாறான செயல் வரலாற்றுக்கு எதிரானது என ஐ.நா சபையில் தெரிவித்தார் ஜின்பிங். இக்கட்டுரையும் சீனா தைவான் இடையே ஏற்பட்டுவரும் போக்கினை தேடுவதாகவே அமையவுள்ளது. 

19.09 2020அன்று கீத் கிராஜ்  எனும் அமெரிக்க வெளியுறவு அலுவலகத்தின் அதிகாரியுடன் பல மேல்மட்ட அதிகாரிகள் தைவானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கீத் பொருளாதார வளர்ச்சி எரிசக்தி மற்றும் சுற்றுச் சூழலுக்கான அமெரிக்க துணைச் செயலாளர். இவரது வருகையை கண்டிக்கும் வகையில் சீனா போர் விமானங்களை தைவான் எல்லையை நோக்கி அனுப்பியிருந்தது. இது பற்றி கருத்து வெளியிட்ட சீனா பாதுகாப்பு அமைச்சின் செய்தி த் தொடர்பாளர் ரென் குங்கியான் குறிப்பிடும் போது தைவான்- அமெரிக்க கூட்டினை அடிக்கடி தூண்டிவிட்டு இடையூறினை ஏற்படுத்துவதாகவும் சீனாவை கட்டுப்படுத்த தைவானைப் பயன்படுத்துவதும் அமெரிக்கா தன்னை வளர்த்துக் கொள்ள வெளிநாட்டவரை நம்புவதும் வீணான எண்ணமாகும். நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.  

கீத் கிராஸ்ன் விஜயத்தினை அடுத்து சீனாவின் 06குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 18போர் விமானங்கள் தைவானை அச்சுறுத்தும் வகையில் அதன் எல்லைக்குள் நுழைந்து வெளியேறி தளத்திற்கு திரும்பின. இது தைவானை  பெரியளவில் ஆத்திரமூட்டியுள்ளதாகவும் அதற்கு பதிலடி கொடுக்க தயார் எனவும் தைவான் அறிவித்தது. அதாவது இனி சீன விமானங்கள் தமது எல்லைக்குள் நுழைந்தால் அவை சுட்டு வீழ்த்தப்படும் என தைவான் எச்சரித்துள்ளது. அத்துடன் தைவான் தனது எல்லையில் போர் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. 

அதே நேரம் சீன இராணுவம், கிழக்கு சீனக் கடல் பகுதியில் இராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டது ஏறக்குறைய ஒரு போருக்கான தயாரிப்புகளை சீனா தனது கடற்பரப்பிலும் எல்லைப்பகுதியிலும் தயார் செய்து வருகிறது. ஜனாதிபதி ஜின்பிங் குறிப்பிடுவது போல் சீனா எந்த நாட்டுடனும் போர் செய்யும் எண்ணம் இல்லை என்பதற்கு அமைவாக செயல்பட முனையலாம். ஆனால் சீனா தைவான் தனது நிலப்பரப்பு எனவும் தனது எல்லைக்குட்பட்ட தீவு என வாதிடுவதன் மூலம் ஒரு போரை நிகழ்த்தலாம். ஆனால் சீனாவின் போக்கில் போருக்கான வாய்ப்புக்கள் குறைவாக தென்பட்டாலும் தவிர்க்க முடியாது ஒரு போரை நோக்கி செயல்பட வேண்டிய  நிர்ப்பந்தத்திற்குள் உள்ளது என்பதை காணமுடிகிறது. 

குறிப்பாக சீனா மூன்று பிரதான போர்க்களங்களை திறந்து வைத்துள்ளது எனலாம். ஒன்று தென்சீனக் கடல் பகுதியாகும். இதில் ேபார்ப்பயிற்சி மட்டுமன்றி செயற்கைத் தீவுகளையும் அதனைப் பாதுகாக்கும் ஆயுத தளபாடங்களையும் அப்பகுதியில் குவித்துள்ளதுடன் தனது வலிமைமிக்க போாக் கப்பல்களையும் நிறுத்திவருகிறது. தைவானை சீனா மிரட்டுவது போல் சீனா இப்பகுதியில் அமெரிக்காவை மிரட்டிவருகிறது. இரு அரசுகளும் மாறிமாறி மிரட்டலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் ஒரு போரை எதிர்கொள்ள இரு தரப்பும் தயாராகவில்லை என்றே கூறுதல் பொருத்தமானதாகும். அதே நேரம் போரைத் தூண்டும் கட்டமைப்பினை இரு தரப்பும் தென் சீனக்கடலில் ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்கா சீனாவை போருக்கு அழைப்பது போல் நடந்து கொண்டாலும் போரை நோக்கி நகர விரும்பாத போக்கொன்றினை தனது தந்திரோபாயமாகக் கொண்டுள்ளது. சீனாவை அதிர்ச்சிக்கும் எரிச்சலுக்கும் தூண்டும் உத்தியை பின்பற்றி வருகிறது. அதனால் சீனாவின் வேறு நகர்வுகளை மட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா கணக்குப் போட்டு செயல்படுகிறது. ஆனால் சீனாவோ மீளவும் புதிது புதிதாக போர்க் களங்களை திறந்துவருகிறது. 

இந்திய -சீன எல்லையில் இன்னோர் போர் மூளும் அபாயத்தை அடையாளம் கண்டுள்ள சீனா அனைத்து நாடுகளது கவனத்தையும் இந்திய எல்லையில் குவிய வைத்துவிட்டு தைவான் நாட்டை நோக்கி நகர்கிறது. அவ்வாறே ஹெங்கொங் விடயத்தையும் தனது நாட்டு எல்லைக்குள் அமெரிக்காவை கையாளும் இன்னோர் போர் மையமாக சீனா திறந்து வைத்துள்ளது. இதில் அனைத்திலும் அமெரிக்காவே பிரதான பகை நாடாக உள்ளது. அப்படியாயின் சீனா திட்டமிட்டே அத்தகைய களங்களை போருக்குரிய களங்களாக திறந்துள்ளமையும் அதில் அமெரிக்காவின் ஈடுபாட்டை அதிகரிக்க வைத்துவிட்டு தனது பொருளாதாரத்தையும் கடல்படை மற்றும் இராணுவ முனைப்புக்களிலும் கவனம் செலுத்திவருவதனை காணமுடிகிறது. ஒரு வகையில் இரு தரப்பும் பரஸ்பரம் அவ்வாறு தான் செயல்பட்டாலும் வெளிப்படையாக பார்க்கும் போது அமெரிக்கா அதிக ஈடுபாட்டை எடுப்பதன் வாயிலாக தனது கொரோனா நெருக்கடியைக் கூட சரிவரக் கண்காணிக்க முடியாது நெருக்கடியை சந்தித்து வருகிறது.  

சீனா திறந்துள்ள அனைத்து போர்க் களத்திலும் சீனா பலமாகவே செயல்படுவதாக சீனா உணர்கிறது. இந்திய எல்லையில் சீனாவின் பலம் முதன்மையடைந்துள்ளது. அது மட்டுமன்றி இந்தியத் தரப்பு கூறுவதுபோல் கள நிலவரம் இந்தியாவுக்கு ஆரோக்கியமாக இல்லை என்றே தெரிகிறது. அடிப்படையில் கொரனோ ஒருபக்கமும் பொருளாதார நெருக்கடி இன்னோர் பக்கமுமாக இந்தியா திணறிக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு சீனா லடாக் பகுதியில் கணிசமான போர்  உத்திகளை வைத்து இலக்கினை அடைந்துள்ளது. அதுமட்டுமன்றி இந்தியாவின் பொருளாதார வாய்ப்புக்களை பலவீனப்படுத்திவருகிறது. சீனாவிலிருந்து வெளியேறும் பல்தேசியக் கம்பனிகளை இந்தியாவுக்குள் நுழையவிடாது சீனா போர்  நெருக்கடியை காட்டி குழப்பியுள்ளது. அனேகமான கம்பனிகள் ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா நோேக்கி நகர்கின்றன. சீனாவும் ஆபிரிக்கா நோக்கி அதிக முதலீடுகளை குவித்துவருகிறது.  

எனவே சீனா போருக்கு தயாராகிக் கொண்டு எந்தவொரு நாட்டையும் தாம் தாக்கப் போவதில்லை என்பது தைவானுக்கு பொருந்துமா என்பது பிரதான சந்தேகமாகும். காரணம் தைவான் சீனாவின் பிரதேசமாகவே வரலாற்றுக் காலம் முதல் கருதப்படுகிறது. அது மட்டுமன்றி இலகுவானதும் அண்மையிலுள்ளதுமான போர்க்களம் தைவான் என்பதுடன் தைவான் சீனாவின் நிலம் என்ற எண்ணமும் சீனாவின் பாதுகாப்பும் தைவானில் தங்கியிருப்பதாலும் சீனாவின் நகர்வு தைவானை முதன்மைப்படுத்துவதாகவே அமைய அதிக வாய்ப்புள்ளது. எப்போதும் போர் பலவீனமான எதிரியை நோக்கி மேற்கொள்ளப்படுவதாகவே அமையும் என்பதனால் அத்தகைய சூழல் ஒன்று ஏற்படுமாயின் சீனா தைவான் மோதலே அதிகம் சாத்தியமாகும். சீனா போரை ஒரு உத்தியாகக் கொள்ளாத போதும் ஒரு பனிப்போர் உத்தியை உலகம் தழுவிய விதத்தில் கையாள முனைகிறது.  

இது மட்டுமன்றி உலக விவகாரங்களில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும் பிற நாடுகள் கட்டுப்படுவதையும் அனுமதிக்க முடியாது எனவும் சீன ஜனாதிபதி ஜின் பிங் ஐ.நா. பொதுச்சபையில் காணொளி மூலம் உரையாற்றும் போது தெரிவித்தார். எனவே சீனா ஒரு தெளிவான உபாயத்துடன் செயல்படுகிறதைக் காணமுடிகிறது. அதனையே முதன்மைப்படுத்திக் கொண்டு சீனா அமெரிக்கா மீதும் அதன் நட்பு சக்திகள் மீதும் அதிக நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்க தைவான் நெருக்கத்தின் விளைவுகளை தைவானே அதிகம் சந்திக்கப் போகிறது. 

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்

Comments