கிழக்கிலங்கையில் சுற்றுலாத்துறை: தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்? | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கிலங்கையில் சுற்றுலாத்துறை: தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்?

சுற்றுலா என்பது என்ன? ஒரு அற்புதமான இடத்தை கண்டுகளிப்பது மட்டுமே சுற்றுலாவின் முக்கிய நோக்கமல்ல.... 

நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாததாக அமைந்துள்ளது சுற்றுலாத்துறையாகும். தற்காலப் பொருளாதாரத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுள் ஒன்றாக விளங்குவதும் சுற்றுலாத்துறைதான். சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு அதிகளவு வருமானம் கிடைக்கின்றது. ஆனாலும், சுற்றுலாத்துறையை இலங்கையில் இன்னும் விருத்தியடையச் செய்யவேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது. இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கமும், பல அரச சார்பற்ற அமைப்புக்களும், பல்வேறுபட்ட பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றன. 

சுற்றுலா பல நாடுகளின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கிறது. அது, பாரம்பரியம், கலாசாரம், சுற்றுச்சூழல் போன்றவற்றை மையமாகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டு மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை அறியவும், அதுதொடர்பான தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், செப்.27ஆம் திகதியை “சர்வதேச சுற்றுலா தினமாக” ஐ.நா சபை அங்கீகரித்து, உலக சுற்றுலா தினம் 1980இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 

பொருளாதார சந்தையில் உலக அளவில் 2வது இடத்தை சுற்றுலாத்துறை பெற்றுள்ளது என்பது எடுத்துக்காட்டத்தக்கதாகும். உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்கு, போக்குவரத்து, ஓய்விடம் என 5முக்கிய விடயங்களை உள்ளடக்கி சுற்றுலாத்துறை செயற்படுகிறது. உலக அளவில் சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகளவு ஈட்டிய நாடுகளில் ஸ்பெயின் முதலிடம் பெறுவதோடு, பிரான்ஸ், மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் 2ஆம், 3வது இடங்களைப், பிடித்துள்ளன. இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகள், தற்போதைய நிலையில், சுற்றுலாத்துறையில் படிப்படியாக முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது. 

ஒரு நாட்டின் சுற்றுலாத்துறையை, மேம்படுத்த பல்வேறு விடயங்கள் தேவைப்படுகின்றன. முதலில், “போக்குவரத்து வசதிகள் முறையாக செயற்பட வேண்டும். தங்குமிடம், உணவகம், போன்றனவும், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இயற்கைச் சூழல் இன்றியமையாதுள்ளது” என்றாலும்கூட, செயற்கையான முறையில் உருவாகும் இடங்களில் அடிக்கடி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மாற்றமின்றி ஒரேவிதமாக இருந்தாலும், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் எனலாம். 

இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல், பல சவால்களை எதிர்கொண்டாலும், தொன்மையான விடயங்களைப் பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆசியாவை பொறுத்தவரை பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் தற்போது அது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

வேறு நாடுகளுக்குச் செல்லும், சுற்றுலாப் பயணிகளின் உடல்நலன் மட்டுமல்ல, உயிரையும் காக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உண்டு. பணத்தை செலவழித்து மகிழ்வை தரும் பயணங்கள் வாழ்வில் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் செல்லும் நாடுகளின் பாரம்பரியங்களை அறிந்து கொள்வதும் வாழ்க்கைக்கு அவசியம்தான். 

பாடசாலை பருவங்களில், சுற்றுலா என்ற வார்த்தை நம்மை அதிக அளவில் கவர்ந்திருக்கும். அதற்கு முக்கிய காரணம் பயணமும் நேரமும்தான். இன்று பல இடங்களுக்கு சென்றாலும் பாடசாலை ஊடாக சென்ற சுற்றுலாப் பயணம் என்றும் பசுமை மாறாத நினைவுகளாகதான் அனைவருக்கும் உள்ளது. 

சுற்றுலா, என்பது வெறுமனே கண்களைக் கட்டிக் கொண்டு யானையைத் தொட்டு, தடவி அனுபவிப்பதைப்போல இருக்ககூடாது. அதன் மகத்துவத்தை அனுபவித்தால்தான் விவரிக்கமுடியும் எனலாம். சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், கலாசாரம், வரலாறு என்பதையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கிலும் உலகம் முழுவதும் இன்று (செப்டம்பர் - 27) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 

தற்போது உலகின் மிகப்பெரிய துறையாக விளங்குவது, சுற்றுலாத்துறைதான். அது மட்டுமின்றி உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா என்று சொன்னால் அதனை சிலரால் நம்ப முடியாமலிருக்கும். ஆனால் உண்மையும் அதுதான். போக்குவரத்து, உணவு, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5துறைகளை சார்ந்து விளங்குகிறது இச்சுற்றுலா துறை. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாக சுற்றுலாதான் இருக்கிறது எனலாம். வெறும் பாலைவனத்தை வைத்துக் கொண்டு டுபாய் சுற்றுலாவில் அதிக வருவாயை ஈட்டி வருகிறது. சிறிய நாடான சிங்கப்பூர், எந்தவிதமான பெரிய வளமும் இல்லாமல் சுற்றுலாவில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. 

சில நாடுகளில் சுற்றுலாத் துறையை நம்பித்தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கின்றது. அதனால் சுற்றுலாத்துறை பல உலக நாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருந்து வருகின்றது. 

உலகத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடாக பிரான்ஸ் திகழ்கின்றது. இந்த நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 82.6மில்லியன் வெளிநாட்டவர்கள், சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கின்றனர். இரண்டாவது சுற்றுலா நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. சுமார் 77.5மில்லியன் பேர் வருடத்திற்கு இங்கு வந்து செல்கின்றார்கள். மூன்றாவது நாடான ஸ்பெயினில் வருடத்திற்கு 75.6மில்லியனும், மற்றும் இங்கிலாந்துக்கு 35.8மில்லியன் பணத்தையும் மக்கள் சுற்றுலாவிற்காக செலவு செய்கிறார்கள். 

இது இவ்வாறு இருக்க இலங்கையில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கவும், அது தொடர்பில் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான வளங்கள், சுற்றுலாத்தலங்கள், போன்ற விபரங்களை பரஸ்பரம் விளம்பரப்படுத்தல், இலைமறைகாயாக அமைந்துள்ள பல இடங்களை அடையாளம் கண்டு அவ்வாறான இடங்களையும், சுற்றுலாத்தலங்களாக அடையாளப்படுத்தல், புதிய, புதிய சுற்றுலா வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தல், உள்ளுர் சுற்றுலா போக்குவரத்துக்களை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்களை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. 

அதுபோல் சுற்றுலாத்துறைக்கு கிழக்கில் மிகவும் வளம் மிக்க இடங்களாகவுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை உள்ளிட்ட நாலா பாகங்களிலும், சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேலும் விஸ்தரிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையினை கவரக்கூடிய இடங்களாக பல இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் முக்கியமான இடங்களாகவுள்ள உன்னிச்சை, தொப்பிக்கல் மலை, பொண்டுகள்சேனை, பனிச்சங்கேணி, மட்டக்களப்பு வாயில் மிதக்கும்படகு வீடுகளை அமைத்து, அதில் சிற்றுண்டிச் சாலைகளை அமைப்பது, தொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது, காட்டு விலங்குகளை அவதானிக்கக் கூடிய சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய திட்டங்களை மேற்கொள்வதற்கும், மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வதற்குமான பல முன்மொழிவுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சுற்றுலா மையமாக மாறப்போகும் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை

இந்நிலையில் மட்டக்களப்பில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களில் தற்போது மாவட்டச் செயலகமாக இயங்கிவரும் ஒல்லாந்தர் கோட்டையை வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி கடந்த வார இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து, மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். 

இதன்போது மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாவின் மூலம், வருமானத்தை ஈட்டித் தரும் இடமாக மாற்றியமைப்பதோடு அதன் சரித்திரப் பழமை மாறாமல் பராமரிப்பதென்றும் முடிவெடுக்கப் பட்டதற்கமைவாக தற்போது பழுதுபார்த்துப் புணரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஒல்லாந்தர் கோட்டையில் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள், பண்பாட்டு, கலாச்சார உடைகள், உணவுகள், நூதனசாலை உட்பட பிரதேசத்தின் பண்பாட்டு பின்னணிகளை பிரதிபலிக்கின்ற ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைப்பதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனூடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சுற்றுலாத் தலமாகவுள்ள திருகோணமலை 

இந்நிலையில் கிழக்கின் சுற்றுலாத்துறை மையமாக விளங்கும் திருகோணமலைக்கும் கடந்த வாரம் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்தா பி.வன்னியசிங்க, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் ஹரி, முகாமையாளர் ஞானசேகரன், மற்றும்  மாவட்ட முகாமையாளர் எம்.மதியழகன் அகம் நிறுவன இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். 

திருகோணமலையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காகவும், முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான விடயங்களை அவதானிதத்திருந்தனர். 

இதன் போது சுற்றுலா தகவல் மைய அமைப்பது தொடர்பான இடஆய்வு இடம்பெற்றதுடன், அகம் நிறுவனத்தின் பங்களிப்புடன் இடம்பெறும் சமூக மட்ட சுற்றுலா குழுக்களையும் பார்வையிட்டனர். அத்துடன் குச்சவெளி பிரதேதசத்தில் சுற்றுலா அமைச்சு சொந்தமான காணியில் இடம்பெறும் அபிவிருத்தியையும் அக்குழு பார்வையிட்டிருந்தது.​ 

இயற்கை எமக்குத் தந்த வளங்கள் சூறையாடப்படுவதை எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டு வாழமுடியாது.  

இது இவ்வாறு இருக்க இயற்கை எமக்குத் தந்த வளங்கள்  சூறையாடப்படுவதை எவரும் வெறுமனே பார்த்துக் கொண்டு வாழ முடியாது. அதற்கு  ஏற்றாற்போல் மட்டக்களப்பில் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின்  செயற்பாடுகள் காலத்திற்குப் பொருத்தமானதாக அமைந்துள்ளன. இயற்கை வளங்களைச்  சூறையாடுவோர் எந்தத் தரப்பினராக இருந்தாலும் நாம் சமூகமாக அணிதிரண்டு  அத்தகைய செயற்பாடுகளை எதிர்த்துத்தான் ஆகவேண்டும்.  

இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும்  ஆதரவு வழங்கி உதவி ஒத்தாசை புரியும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கவும் வேண்டும். மக்கள் பலத்தைக் கொண்டு இந்த கருமங்களை ஆற்ற  முடியும். அதற்கு இயற்கை வளங்கள், மனித உரிமைகள். நாட்டின் சட்டதிட்டங்கள்  பற்றி மக்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவைக் கொண்டுதான்  அநியாயங்களைத் தடுத்து நிறுத்த முடியும். என மட்டக்களப்பு மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.   

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மட்டு வாவியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைககள் ஆரம்பம்.  

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இலங்கையின் இரண்டாவது  மிகப்பெரியவாவியான மட்டக்களப்பு வாவியைத் தூய்மைப் படுத்தும் நடவடிக்கைககள்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டதின் கீழ் காத்தான்குடி  வாவிக்கரையோரப் பகுதி சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தபட்டுள்ளது.  

வ.சக்திவேல்

Comments